நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

கவலை இல்லாத ஓய்வுக்காலம்... 60 வயதில் ரூ.5 கோடி... சுலபமாகச் சேர்க்க சூப்பர் பிளான்!

சூப்பர் பிளான்...
பிரீமியம் ஸ்டோரி
News
சூப்பர் பிளான்...

தற்போதைய நிலையில், ரூ.65 லட்சம் இருந்தால் பணி ஓய்வுக்காலத்தை நிம்மதியாக கழிக்க முடியும் எனப் பலரும் கூறியிருக்கிறார்கள்!

இன்றைய நிலையில், அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரிடம், ‘‘உங்கள் ஓய்வுக்காலத்தில் இப்போது நீங்கள் அனுபவிக்கும் வசதிகள் எதுவும் குறையாதபடிக்கு நல்லதொரு வாழ்க்கை முறையை (Lifestyle) நீங்கள் வாழ நினைத்தால், உங்களிடம் மொத்தமாக எவ்வளவு பணம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்’’ என்று கேட்டால், ஆளுக்கு ஒரு தொகையைக் குறிப்பிடுவார்கள். ஒருவர், ரூ.30 லட்சம் இருந்தால் போதும் என்பார்; மற்றொருவர், ரூ.50 லட்சம் இருக்க வேண்டும் என்பார்; இன்னொருவர் ரூ.75 லட்சம் வேண்டும் என்பார்.

சிவகாசி மணிகண்டன் 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

இவையெல்லாம் ஒரு குத்துமதிப்பான கணக்குதான். பெரும்பாலானவர்கள் தங்கள் ஓய்வுக்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், எவ்வளவு தொகையை வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள் என்பது குறித்து இந்தியா முழுக்க ஆயிரக்கணக்கான வர்களிடம் ஒரு சர்வே செய்யப்பட்டது. ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம், குவான்டம் கன்ஸ்யூமர் சொல்யூசன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த சர்வேயை செய்தது.

கவலை இல்லாத ஓய்வுக்காலம்...
60 வயதில் ரூ.5 கோடி... சுலபமாகச் சேர்க்க சூப்பர் பிளான்!

வசதிகள் எதுவும் குறையக் கூடாது...

இந்த சர்வேயில் பங்கேற்றவர்களில் 83% பேர் தற்போதைய வாழ்க்கை முறையைத் தொடர்வதே. அதாவது, தற்போது அனுபவிக்கும் எந்த வசதியும் குறையக் கூடாது என்பதே தங்களது ஓய்வுக்கால முன்னுரிமை என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சுமார் 75% பேர் வாழ்க்கையை சுகமாக அனுபவிப்பது, நண்பர்கள் / தோழிகளுடன் காலை, மாலை பொழுதைப் போக்குவது, வெளிநாடு சுற்றுலா செல்வது, பண விஷயத்தில் பாதுகாப்பாக இருப்பது, மன நிம்மதி, கோயில்களுக்குச் செல்வது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்க்கை யின் புதிய அத்தியாயமான ஓய்வுக் காலத்துக்குத் திட்டமிடும்போது பணவீக்கம் (விலைவாசி உயர்வு) மற்றும் மருத்துவச் செலவுகள் அதிகரிப்பு ஆகியவை குறித்து கவலை தெரிவித்திருக்கிறார்கள். சிலர், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை (Standard of Living) விலைவாசி உயர்வு பாதிக்கும் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

ஓய்வுக்கால தொகுப்பு நிதி எவ்வளவு..?

இந்த சர்வேயில் பங்கேற்றவர்களில் 66% பேர் பணவீக்கம், தங்களின் சேமிப்பு, வாழ்க்கைமுறையை பாதிப்பதாக இருக்கிறது எனக் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதே சதவிகிதம் பேர் அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க போதிய அளவுக்கு அதிகமாக ஓய்வுக்கால தொகுப்பு நிதி (RetirementCorpus) சேர்த்து வைக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்து உள்ளார்கள்.

தற்போதைய நிலையில், சராசரியாக ரூ.65 லட்சம் இருந்தால், பணி ஓய்வுக்காலத்தை நிம்மதியாகக் கழிக்க முடியும் எனப் பெரும்பாலானோர் சொல்லியிருக்கிறார்கள். இந்தத் தொகையை ஆண்டுக்கு 8% வட்டி வருமானம் கிடைக்கும் திட்டம் ஒன்றில் முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.5.20 லட்சம் அதாவது, மாதத்துக்கு ரூ.43,330 கிடைக்கும். இந்தத் தொகையைக் கொண்டு இன்றைக்கு இருவர் தாராளமாக செலவு செய்ய முடியும். இந்த ரூ.65 லட்சம் என்பது விலைவாசி உயர்வால் வரும் ஆண்டு களில் இன்னும் அதிகமாகத் தேவைப்படும். அதற்கேற்ப அதிக தொகுப்பு நிதியைச் சேர்ப்பது அவசியமாகும்.

கவலை இல்லாத ஓய்வுக்காலம்...
60 வயதில் ரூ.5 கோடி... சுலபமாகச் சேர்க்க சூப்பர் பிளான்!

எவ்வளவு தொகை தேவை..?

ஓய்வுக்கால செலவுகளுக்கான முதலீட்டை ஆரம்பிக்கும் முன், பணி ஓய்வு பெறும் போது எவ்வளவு தொகுப்பு நிதி (Corpus) இருக்க வேண்டும் என்பதை முதலில் கணக்கிட வேண்டும். இதை ஓர் உதாரணம் மூலம் பார்ப் போம். ஒருவரின் இன்றைய வயது 30 என வைத்துக் கொள்வோம். அவர் மற்றும் அவர் துணையின் (கணவன்/மனைவி) தற்போதைய மாதச் செலவு ரூ.30,000 என்றும் வைத்துக்கொள்வோம். இது, முதலீடு, கடன் தவணை ஆகியவை தவிர்த்த செலவாகும்.

இவரின் பணி ஓய்வு வயது 60 என்றும், அவர் 80 வயது உயிர் வாழ்வார் என்றும் வைத்துக்கொள்வோம். பணிக் காலத்தில் ஆண்டு சராசரி பணவீக்க விகிதம் 5% என வைத்துக்கொள்வோம்.

இதன்படி, இப்போது மாதம்தோறும் செய்யும் செலவு ரூ.30,000, 60 வயதில் மாதச் செலவு ரூ.1,29,660-ஆக இருக்கும்.

இந்த முதலீட்டின் மூலம் எதிர்பார்க்கும் வருமானம் 12% எனவும், ஓய்வுக்காலத் தொகுப்பு நிதி மூலம் எதிர் பார்க்கும் ஆண்டு வருமானம் 8% எனவும், பணி ஓய்வுக் காலத்தில் விலைவாசி உயர்வு ஆண்டுக்கு 5% எனவும் வைத்துக்கொண்டால், தேவையான தொகுப்பு நிதி ரூ.2.35 கோடியாக இருக்கும்.

பணவீக்க விகிதம் அதிகரிக் கும்பட்சத்தில் ஓய்வுக் காலத்தில் தேவைப்படும் தொகுப்பு நிதியும் அதிகமாக இருக்கும். முதலீடு செய்ய வேண்டிய மாதத் தொகை யும் அதிகமாக இருக்கும். இப்போதைய மாதச் செலவு ரூ.30,000 என்றும், பணவீக்க விகிதம் 7% எனில், 60 வயதில் மாதச் செலவு தொகை ரூ.2,28,370-ஆக இருக்கும். இதற்கு தொகுப்பு நிதி ரூ.4.98 கோடி சேர்க்க வேண்டும். அதாவது, கிட்டத்தட்ட ரூ.5 கோடி தேவை.

என்னது, ரூ.2.35 கோடி, ரூ.5 கோடி என்று சொல்லிக் கொண்டே போகிறீர்களா? இவ்வளவு பணத்தை என்னால் சேர்க்க முடியுமா என்கிற மலைப்பே உங்களுக்கு வேண்டாம். ரூ.2.35 கோடி 30-வது வயதில் இருந்து மாதம்தோறும் சுமார் ரூ.6,650 வீதம் 30 ஆண்டு களுக்கு முதலீடு செய்து வர வேண்டும். ரூ.5 கோடி வேண்டுமெனில், 30-வது வயதில் இருந்து மாதம் தோறும் ரூ.14,100 முதலீடு செய்துவந்தால் (முதலீட்டுக்கு ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைத்தால்), ரூ.4.98 கோடி உங்கள் தொகுப்பு நிதியில் சேர்ந்துவிடும்! கொஞ்சம் திட்டமிட்டு செயல்பட்டால், பலராலும் இந்தத் தொகையை சேர்க்க முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

கவலை இல்லாத ஓய்வுக்காலம்...
60 வயதில் ரூ.5 கோடி... சுலபமாகச் சேர்க்க சூப்பர் பிளான்!

ஓய்வுக்காலத்துக்காக 10% முதலீடு...

ஒருவர் மாதம்தோறும் ஈட்டும் சம்பளத்தில் /வருமானத்தில் குறைந்தபட்சம் 30 சதவிகிதத்தை சேமிக்க வேண்டும். இதில் 10% தொகையை ஓய்வுக் காலத்துக்காக சேமிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், அவர் முதுமையிலும் மகிழ்ச்சியாக வாழலாம்.

கவலை இல்லாத ஓய்வுக்காலம்...
60 வயதில் ரூ.5 கோடி... சுலபமாகச் சேர்க்க சூப்பர் பிளான்!

கைகொடுக்கும் டாப்அப் எஸ்.ஐ.பி முதலீடு...

ஓய்வுக்காலத்தில் ரூ.5 கோடி தொகுப்பு நிதி வேண்டும் எனில், 30 வயதிலிருந்து மாதம்தோறும் ரூ.14,100 முதலீடு செய்வது எல்லோராலும் முடியாது. அது போன்றவர்களுக்கு டாப்அப் எஸ்.ஐ.பி முதலீடு கைகொடுக்கும்.

வேலைக்குச் சேர்ந்தவுடன் முதல் சம்பளத்திலிருந்து 10% தொகையை முதலீடு சேர்த்து வந்தாலே அவர் களின் 60 வயதில் கோடி களில் ரூபாய் சேர்ந்து விடும். அதாவது, சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க முதலீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும். இதைத்தான் ‘டாப்அப் முதலீடு’ என்கிறோம்.

டாப்அப் மூலம் அதிக தொகுப்பு நிதி...

ரூ.15,000, ரூ.30,000 மற்றும் ரூ.50,000 என மாதச் சம்பளம் வாங்கு பவர்கள் தங்களின் ஓய்வுக்காலத்துக்கு ‘டாப்அப் எஸ்.ஐ.பி’ முறையைப் பயன்படுத்தி எப்படி அதிக தொகுப்பு நிதியைச் சேர்ப்பது எப்படி எனப் பார்ப்போம்.

25 வயதில் மாதச் சம்பளம் ரூ.15,000 வாங்கும் ஒருவர், அதில் 10% அதாவது, ரூ.1,500-ஐ ஓய்வுக்காலத்துக்காக முதலீடு செய்ய ஆரம்பிக்கிறார். அவரின் சம்பளம் உயர உயர ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை முதலீட்டுத் தொகையை ரூ.500 அதிகரிக்கிறார். அவர் தன் பணி ஓய்வுக்காலமான 60 வயது வரைக்கும் 35 வருடம் மொத்தம் சுமார் ரூ.12.5 லட்சம் முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அதற்கு ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைத்திருந்தால், அவரிடம் தொகுப்பு நிதியாக ரூ.1.32 கோடி சேர்ந்திருக்கும்.

25 வயதில் மாதம் ரூ.30,000 சம்பளம் வாங்குபவர் ஆரம்பத் தில் ரூ.3,000 முதலீடு செய்கிறார். சம்பளம் உயர உயர ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை முதலீட்டை ரூ.1,000 அதிகரிக்கிறார். இவர் செய்திருக்கும் மொத்த முதலீடு ரூ. 25.20 லட்சம் ஆகும். இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைத்தால், தொகுப்பு நிதி ரூ.2.65 கோடி சேர்ந்திருக்கும்.

இதேபோல், ஆரம்ப மாதச் சம்பளம் ரூ.50,000 வாங்குபவர், 10% பணத்தை அதாவது, 5,000 ரூபாயுடன் ஓய்வுக்காலத் தொகுப்பு நிதியைச் சேர்ப்பதற்கான முதலீட்டை ஆரம்பிக்கிறார். சம்பளம் உயர உயர ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை முதலீட்டை ரூ.2,000 அதிகரிக்கிறார். இவர் செய்திருக்கும் மொத்த முதலீடு ரூ.46.20 லட்சம் ஆகும். இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைத்தால் தொகுப்பு நிதி ரூ.4.65 கோடி சேர்ந்திருக்கும். (பார்க்க, அட்டவணை-1)

ஆண்டுதோறும் முதலீடு அதிகரிப்பு...

இப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிட்ட தொகையை அதிகரித்து முதலீடு செய்வதற்குப் பதில், ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை அல்லது குறிப் பிட்ட சதவிகிதத்தை சம்பளத் தில் அதிகரித்து வந்தால், ஓய்வுக்காலத் தொகுப்பு நிதி கணிசமாகச் சேரும்.

உதாரணமாக, ஒருவர் அவரின் 25 வயதில் முதல் ஆண்டு மாதம்தோறும் 3,000 ரூபாயைத் தன் ஓய்வுக்காலத் துக்கு ஆரம்பிக்கிறார் என வைத்துக்கொள்வோம். இவர் ஆண்டுதோறும் எஸ்.ஐ.பி தொகையை 3% அதிகரிக்கிறார். இப்படி அவரது 60 வயது என மொத்தம் 35 ஆண்டுகள் முதலீடு செய்து வருகிறார். இவர் செய்திருக்கும் மொத்த முதலீடு ரூ.21.76 லட்சமாக இருக்கும் அவரின் முதலீட்டுக்கு ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைத்தால், அவரிடம் சேர்ந்திருக்கும் மொத்த தொகுப்பு நிதி ரூ.2.48 கோடியாக இருக்கும்.

இதுவே அவர் எஸ்.ஐ.பி தொகையை ஆண்டுதோறும் 5% அதிகரித்தால், முதலீடு செய்யப்பட்ட மொத்த தொகை ரூ.32.51 லட்சமாகவும் தொகுப்பு நிதி ரூ.2.99 கோடியாகவும் இருக்கும்.

இதுவே ஆரம்ப முதலீட்டுத் தொகை ரூ.5,000 ஆகவும் ஆண்டுதோறும் அதிகரிக்கும் தொகை 5 சதவிகிதமாக இருந்தால், முதலீடு செய்யப் பட்ட தொகை ரூ.54.19 லட்ச மாகவும் தொகுப்பு நிதி ரூ.4.98 கோடியாகவும் இருக்கும்.

ரூ.5 கோடி இலக்கு...

இன்றையிலிருந்து 35 ஆண்டுகள் கழித்து ரூ.5 கோடி என்பது விலைவாசி உயர்வால், அப்போது பெரிய தொகை யாக இருக்காது. இப்போது 25 வயதுள்ள ஒருவர் அவரின் 60-வது வயதில் ரூ.5 கோடி தொகுப்பு நிதி வைத்திருக்க வேண்டும் எனில், அவர் மாதம்தோறும் ரூ.7,698 முதலீடு செய்துவந்தால் போதும். அவர் மொத்தம் ரூ.32.33 லட்சம் முதலீடு செய்திருப்பார். இதுவே ஐந்து ஆண்டுகள் தாமதமாக அவரின் 30-வது வயதில் முதலீட்டை ஆரம்பித் தால் அவர் மாதம் ரூ.14,165 முதலீடு செய்துவந்தால்தான் 60 வயதில் ரூ.5 கோடி சேரும். இதுவே பத்தாண்டுகள் கழித்து அவரின் 35-வது வயதில் முதலீட்டில் ஆரம்பித்தல் மாதம் ரூ.26,349 முதலீடு செய்தால்தான் 60 வயதில் ரூ.5 கோடி சேரும். (பார்க்க, அட்டவணை-2)

முதலீடுகள் பலவிதம்... வருமானமும் பலவிதம்...

30 வயதான ஒருவர் ஒருவர் மாதம் ரூ.5,000 வீதம் 30 ஆண்டுகளுக்கு அவரின் 60 வயது வரைக்கும் 30 ஆண்டு களுக்கு முதலீடு செய்து வருகிறார் என வைத்துக் கொள்வோம். அவர் மொத்தம் ரூ.18 லட்சம் முதலீடு செய்திருப்பார்.

முதலீட்டாளர் முதலீட்டில் கொஞ்சம்கூட ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அவர் ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணத்தை முதலீடு செய்து வந்து, அதற்கு ஆண்டுக்கு சராசரியாக 8% வளர்ச்சி அடைந்தால், அவருக்கு 60-வது வயதில் ரூ.75 லட்சம் கிடைக்கும்.

முதலீட்டாளர் சற்று ரிஸ்க் எடுத்து கன்சர்வேட்டிவ் ஹைபிரிட் ஃபண்டில் முதலீடு செய்து, அதற்கு ஆண்டுக்கு சராசரியாக 10% வருமானம் கிடைத்தால், அவருக்கு 60 வயதில் ரூ.1.14 கோடி கிடைக்கும். இதுவே அதிக ரிஸ்க் எடுத்து பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து ஆண்டுக்கு 12% வருமானம் ரூ.1.77 கோடி கிடைக்கும்.

முதலீட்டின் மூலம் எந்தளவுக்கு அதிக வருமானம் கிடைக்கிறதோ, அந்த அளவுக்கு அதிக தொகுப்பு நிதி சேரும். எனவே, முதலீட்டாளர்கள் ரிஸ்க்கைக் குறைக்கவும் அதிக வருமானம் பெறவும் அஸெட் அலொகேஷன்படி தங்கம், ரியல் எஸ்டேட், கடன் சந்தை சார்ந்த திட்டங்கள் (ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்டுகள்), பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் (நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள்) பிரித்து முதலீடு செய்துவருவது அவசியமாகும்.

கவலை இல்லாத ஓய்வுக்காலம்...
60 வயதில் ரூ.5 கோடி... சுலபமாகச் சேர்க்க சூப்பர் பிளான்!

முதலீட்டுக் காலமும் முதலீட்டுத் திட்டங்களும்...

ஓய்வுக்காலத்துக்கு எவ்வளவு ஆண்டுகள் இருக்கின்றன என்பதைப் பொறுத்து சரியான முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வது அவசியம்.

ஓய்வுக்காலத்துக்கு இன்னும் சுமார் 10 ஆண்டுகளுக்குமேல் இருக்கிறது எனில், பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு களிலும் ஓய்வுக்காலத்துக்கு 5 முதல் 10 ஆண்டுகள்தான் இருக்கிறது எனில், ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்து வரலாம். இன்னும் ஐந்து ஆண்டுக்குள் ஓய்வு பெறப் போகிறார் எனில், கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் களில்தான் முதலீடு செய்ய வேண்டும்.

முதலீட்டுத் திட்டங்கள்...

ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்ய லாம். ரிஸ்க் எடுக்க விரும்பாத வர்கள் சம்பளத்தில் பி.எஃப் பிடிக்கப்பட்டால் அதில் விருப்ப பி.எஃப் (VPF) மூலம் கூடுதல் தொகையைச் சேர்த்து வரலாம். வி.பி.எஃப் முதலீட்டுக்கும் வருமான வரிச் சலுகை இருக்கிறது.

சம்பளத்தில் பி.எஃப் பிடிக்கப் படவில்லை எனில், பொது மக்களுக்கான பி.எஃப் (PPF) திட்டத்தில் முதலீடு செய்யலாம். இது 15 ஆண்டுத் திட்டம். இதை மேற்கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு (மொத்தம் 20 ஆண்டுகள்) நீட்டித்துக் கொள்ளும் வசதி இருக்கிறது. இந்த முதலீட்டில் முதலீடு மற்றும் வட்டி வருமானத்துக்கு வரிச் சலுகை இருக்கிறது. முதலீட்டில் ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள் ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வரலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களின் பென்ஷன் பிளான்கள் மற்றும் என்.பி.எஸ் திட்டத்தில், வயதுக்கேற்ப பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், அனைவரும் அவற்றில் முதலீடு செய்து வரலாம்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

1. மாதச் சம்பளக்காரர்களுக்கு பணியாளர் பிராவிடென்ட் ஃபண்ட் (EPF) இருக்கும். சட்டப் படியான பி.பி.எஃப் மாதம் தோறும் பணியாளர் சம்பளத்தில் பிடிக்கப்படுவது ரூ1,800 மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு ரூ.1,800 என மொத்தம் ரூ.3,600 முதலீடு செய்யப்படுகிறது. இப்படி 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப் பட்டால் மொத்தம் முதலீடு செய்யப்பட்ட பி.எஃப் தொகை ரூ.13 லட்சமாக இருக்கும். அதற்கு ஆண்டுக்கு சராசரியாக 8% கூட்டு வட்டி வருமானம் கிடைத்திருந்தால், அந்தத் தொகை ரூ.54 லட்சமாகப் பெருகியிருக்கும். அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12% பி.எஃப் பிடிக்கப்படுபவர்களுக்கு இன்னும் அதிக தொகை சேர்ந்திருக்கும். எனவே, சம்பளத்தில் பி.எஃப் பிடிக்கப்பட்டு, அந்தத் தொகையை வேறு காரணங் களுக்காக இடையில் எடுக்காதவர்கள் பணி ஓய்வுக்காலம் பற்றிப் பதற்றம்கொள்ளத் தேவையில்லை. மேலும், இந்தத் தொகைக்கு வருமான வரி எதுவும் கிடையாது.

2. வீட்டு வாடகைச் செலவு இல்லை என்பதால், சொந்த வீடு இருப்பவர்களும் ஓய்வுக்காலம் பற்றி அதிக கவலை கொள்ளத் தேவையில்லை. இவர்கள் வீட்டுக் கடன் மாதத் தவணை கட்டிவந்த நிலையில், ஓய்வுக்கால முதலீட்டைத் தாமதமாக ஆரம்பித்தாலும் குறைவான தொகுப்பு நிதி இருந்தாலும் நிலைமையை சமாளிக்க முடியும். வீடு பெரிதாக இருக்கும்பட்சத்தில் ஒரு பகுதியை வாடகைக்கு விடுவது மூலம் செலவை சுலபமாகச் சமாளிக்க முடியும்.

3. ஓய்வுக்கால முதலீட்டுக்காக பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் பணத்தை முதலீடு செய்து வரும்போது, இடையில் சந்தை இறங்கினால் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தக் கூடாது. பங்குகளின் விலை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் என்.ஏ.வி மதிப்பு குறைந்திருக்கும்போது கூடுதலாக முதலீடு செய்வது பின்னர் லாபகரமாக இருக்கும்.

பணி ஓய்வுக்காலத்துக்கு அதிக தொகுப்பு நிதி சேர பல்வேறு வருமானப் பிரிவினர் எப்படியெல்லாம் முதலீடு செய்யலாம் என்பதை விளக்கிச் சொல்லியிருக்கிறோம். உங்களுக்கு ஏற்ற வழிமுறையை நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள். எதிர்காலத்துக்குத் தேவைப்படும் தொகையைக் கணக்கிடும்போது பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டே கணக்கிடப்பட வேண்டும்; திட்டமிட்டு முதலீடு செய்தால் நம்மால் ரூ.5 கோடியைச் சேர்க்க முடியும் என்பது நிச்சயம்!

அதிகரிக்கும் வயதானவர்கள் எண்ணிக்கை..!

இந்தியாவில் பணி ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது சுமார் 14 கோடியாக உள்ளது. வயதானவர்களின் எண்ணிகையில் 16.5 சதவிகிதத்துடன் முதல் இடத்தில் கேரள மாநிலம் உள்ளது. இரண்டாவது இடத்தில் 13.6 சத விகிதத்துடன் நம் தமிழகம் உள்ளது.

வரும் 2031-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் வயதானவர்களின் எண்ணிக்கை 40% அதிகரித்து 19.4 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஓய்வுக்காலத்துக்கு ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

பணி ஓய்வுக்குப் பிறகு சுமார் 20, 25 ஆண்டுகள் எந்த வருமானமும் இல்லாமல் வாழ வேண்டியிருக்கிறது என்பதால், ஒருவர் கட்டாயம் முதலீடு செய்து பணம் சேர்த்து வைத்திருக்க வேண்டும். 1960-ல் இந்தியர்களின் சராசரி ஆயுள் 42 வயது என இருந்தது, இப்போது சுமார் 70-ஆக உள்ளது. இது வருங்காலத்தில் 80, 85 வயதாக உயர அதிக வாய்ப்புள்ளதால், ஓய்வுக் காலத்துக்கு இளமையிலேயே கட்டாயம் முதலீடு செய்துவருவது அவசியம்.

இந்தியாவில் 2004-க்குப் பிறகு, அரசுப் பணியில் சேர்பவர்களுக்கு அரசு பென்ஷன் கிடையாது. பங்களிப்பு பென்ஷன் மற்றும் என்.பி.எஸ் (நியூ பென்ஷன் ஸ்கீம்) மூலம்தான் பென்ஷன் பெற முடியும். 2014, செப்டம்பர் 1 -ம் தேதிக்கு பிறகு முதன் முதலாக பணியில் சேர்ந்தவருக்கு அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி சேர்த்து ரூ. 15,000-க்கு மேல் இருந்தால் அவர் குடும்ப ஒய்வூதியம் பெற தகுதி பெறமாட்டார். சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப் மூலம் சேரும் தொகை போதுமானதாக இல்லை என்பதால், ஓய்வுக்காலத்துக்காகத் தனியாக முதலீடு செய்து வருவது அவசியம். விலைவாசி உயர்வு, தனிக் குடும்பங்கள் அதிகரிப்பு, வயதான காலத்தில் மருத்துவச் செலவு அதிகமாக இருப்பதும் ஓய்வுக்கால முதலீட்டை அவசியமாக்கியுள்ளது.