Published:Updated:

நீங்களும் இந்த ட்ரெண்டிங்கில் இருக்கீங்களா? மியூச்சுவல் ஃபண்டில் அதிகம் முதலீடு செய்யும் இளைஞர்கள்!

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

27 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது 50 சதவிகிதமாக உள்ளது. இந்தியாவில் சுமார் 4 கோடி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களில் 76.5 லட்சம் பேர் இளைஞர்கள். இதை ஆரோக்கியமான மாற்றமாகவே நாம் கருதவேண்டி இருக்கிறது.

Published:Updated:

நீங்களும் இந்த ட்ரெண்டிங்கில் இருக்கீங்களா? மியூச்சுவல் ஃபண்டில் அதிகம் முதலீடு செய்யும் இளைஞர்கள்!

27 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது 50 சதவிகிதமாக உள்ளது. இந்தியாவில் சுமார் 4 கோடி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களில் 76.5 லட்சம் பேர் இளைஞர்கள். இதை ஆரோக்கியமான மாற்றமாகவே நாம் கருதவேண்டி இருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

இளம் தலைமுறையினரில் ஒரு பிரிவினர் ஆப்பிள் போன் வாங்குவது, புதிய பைக்குகளை வாங்குவது, பிடித்தமான ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிடுவது என தாங்கள் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை செலவு செய்துகொண்டு இருந்தாலும், இன்னொரு பிரிவினர் சேமிப்பது, முதலீடு செய்வது என்று செய்துகொண்டு இருக்கின்றனர். இளம் வயதினர் தற்போது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அதிகளவில் முதலீடு செய்துவருவது பற்றிய கேம்ஸ் (CAMS) நிறுவனம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

இளைஞர்கள் செய்ய வேண்டியவை...
இளைஞர்கள் செய்ய வேண்டியவை...

இந்த அறிக்கையின்படி, நாளுக்கு நாள் இளம் தலைமுறையினர் பங்குகளில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது வெகுவாக அதிகரித்து வருகிறது. 38 வயதிலிருந்து 42 வயதுக்கு உட்பட்டவர்களில் 20% பேர் மட்டும் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்துவரும்போது, 33 முதல் 37 வயதுக்கு உட்பட்டவர்கள் 30% செய்து வருகின்றனர்.

இது ஆச்சரியம் தரும் விஷயம் என்றால், 27 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது 50 சதவிகிதமாக உள்ளது. இதை ஆரோக்கியமான மாற்றமாகவே நாம் கருதவேண்டி இருக்கிறது.

இளம் வயதில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்போது மாதந்தோறும் முதலீடு செய்யும் எஸ்.ஐ.பி முறையையே தேர்வு செய்கின்றனர். இந்த வயதில் உள்ளவர்களில் சுமார் 67% பேர் எஸ்.ஐ.பி முறையைத் தேர்வு செய்துள்ளனர். மாதந்தோறும் சேமிக்கும் பழக்கம், சம்பளம் கிடைத்தவுடன் முதலீடு செய்யும் சௌகரியம் மற்றும் பங்கு சந்தையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு எனப் பல பலன்கள் எஸ்.ஐ.பி முதலீட்டில் இருப்பதால், இளம் வயதில் இருப்பவர்கள் இந்த முறையை தேர்வு செய்கின்றனர்.

எஸ்.ஐ.பி முறையின் மூலம் முதலீடு செய்யும் இளம் வயதினர் 2019 நிதியாண்டில் 19 சதவிகிதமாக இருந்தனர். அது 2023 நிதியாண்டில் 33 சதவிகிதமாக உள்ளது. அதாவது ஏறக்குறைய 90% அளவுக்குக் கணிசமாக உயர்ந்திருந்தது.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

2019 நிதியாண்டில் ரூ.9,907 கோடி மட்டுமே மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்திருந்த இளம் தலைமுறையினர், 2023 நிதியாண்டில் மூன்று மடங்குக்கும் மிகுதியாக ரூ.31,668 கோடி முதலீடு செய்திருப்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விஷயமாகும்.

இளம் தலைமுறையினர் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டை அதிகரித்தது மட்டுமின்றி, அந்த முதலீட்டை அவர்களே ஏதோ ஒரு ஃபண்டில் முதலீடு செய்ய நினைக்காமல், 95% பேர் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றே முதலீடு செய்வதும் ஆரோக்கியமான விஷயமாகும்.

பெருநகரங்களில் வாழும் இளைஞர்களே மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அதிகளவில் முதலீடு செய்தாலும் (86%), சிறு நகரங்களில் வசிக்கும் இளைஞர்களும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது குறிப்பிடத்தகுந்த அளவு அதாவது, 14% அளவுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறிப்பிடத்தகுந்த அளவு முன்னேற்றம் என்றாலும், சிறு நகரத்தினர் இன்னும் அதிகளவில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யவேண்டி இருப்பதை நாம் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும்.

இளம் வயதினரில் ஆண்கள் மட்டுமல்ல, இளம் பெண்களும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது அதிகரித்திருக்கிறது. 2019-ஆம் நிதியாண்டில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த இளம் பெண்களின் பங்களிப்பு 27 சதவிகிதமாக இருந்த நிலையில், 2023-ஆம் நிதியாண்டில் அது 30 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

இளம் வயதில் முதலீடு
இளம் வயதில் முதலீடு

இந்தியாவில் சுமார் 4 கோடி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களில் 76.5 லட்சம் பேர் இளைஞர்கள். இவர்களில் 17.6 லட்சம் அதாவது, சுமார் 32% பேர் முதலீட்டில் நஷ்டம் கண்டதால் இப்போது முதலீடுகளை முழுவதுமாக விற்றுவிட்டனர். பங்கு சந்தை என்பதே ஏற்ற, இறக்கமாகத்தான் எப்போதும் இருக்கும்; குறுகிய காலத்தில் அது நஷ்டத்தைத் தந்தாலும் நீண்ட காலத்தில் அது பணவீக்கத்தைவிட அதிக வருமானம் தர நிறையவே வாய்ப்புண்டு என்பதை இளைஞர்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்.

தவிர, தங்கள் எதிர்கால இலக்குகளை நிறைவேற்றும்படியான ஃபண்டுகளைத் தேர்வு செய்ய வேண்டுமே தவிர, சரியான புரிந்துகொள்ளல் இல்லாத செக்டார் ஃபண்டுகளைத் தேர்வு செய்வது சரியான முடிவாக இருக்காது என்பதை இன்றைய இளைஞர்கள் நன்கு புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்!