நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஃபண்டின் வருமானத்துக்கேற்ப செலவு விகிதம்... செபியின் அதிரடித் திட்டம் என்ன..?

செலவு விகிதம்...
பிரீமியம் ஸ்டோரி
News
செலவு விகிதம்...

கடந்த 10 ஆண்டுகளில் 40% ரெகுலர் பிளான்களே பெஞ்ச்மார்க்கைவிட அதிக வருமானம் தந்துள்ளன!

பாலாஜி வெங்கட்

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை லாபகரமாக மாற்றும் முயற்சியில் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி களமிறங்கியுள்ளது. ரூ.40 லட்சம் கோடிக்குமேல் நிர்வகிக்கப்படும் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையை நெறிப் படுத்தும் செபி, அண்மையில் ஆலோசனை அறிக்கை (Consultation Paper) ஒன்றை முன்மொழிந்துள்ளது. அதில், மொத்தம் 15 ஆலோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

மொத்த செலவு விகிதம்...

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் மொத்த செலவு விகிதம் (Total Expense Ratio - TER) குறித்த வரையறை எளிமையாக்கப்பட்டுள்ளது. இது அனைத்து புறச் செலவுகளையும் உள்ளடக்கிய தாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. தற்போது பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்டுக்கு அந்த ஃபண்டில் நிர்வகிக்கப்படும் தொகைக்கேற்ப செலவு விகிதம் அனுமதிக்கப் படுகிறது. முதல் ரூ.500 கோடிக்கு அதிகபட்சம் 2.25%, அடுத்த ரூ.250 கோடிக்கு அதிகபட்சம் 2% செலவு விகிதம் இருக்கலாம். அடுத்த ரூ.1,250 கோடிக்கு 1.75%, அதற்கு அடுத்த ரூ.3,000 கோடிக்கு 1.60%, அடுத்த ரூ.5,000 கோடிக்கு 1.5% எனப் படிப்படியாகச் செலவு விகிதம் குறைந்து வருகிறது. இந்த சதவிகிதத்துக்கு மேல் இதர செலவுகளையும் சேர்த்து ஒரு ஃபண்டில் செலவு விகிதம் நிர்ணயம் செய்யப்படலாம் எனத் தற்போது உள்ளது.

ஃபண்டின் வருமானத்துக்கேற்ப செலவு விகிதம்... செபியின் அதிரடித் திட்டம் என்ன..?

தற்போது பங்குத் தரகு மற்றும் பரிமாற்றக் கட்டணமாக வர்த்தகமாகும் பங்கு மதிப்பில் 0.12% வரை அனுமதிக்கப்படுகிறது. பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அனுமதிக் கப்பட்ட செலவு விகிதத்துக்கும் மேல் இரண்டு மடங்குக்கு அதிகமாக வசூலிப்பதை செபி கண்டுபிடித்துள்ளது. மேலும், முதலீட்டுக்கான பங்குகளை வாங்குவதற்காக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குத் தரகு நிறுவனங் களிடம் பணம் கொடுத்து ஆய்வு அறிக்கை வாங்குகின்றன. இந்தச் செலவு, நிதி மேலாளருக் கான கட்டணம் இரண்டும் முதலீட்டாளர் களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.

செபியின் புதிய முன்மொழிவுபடி, ரூ.2,500 கோடி வரைக்கும் நிர்வகிப்படும் ஈக்விட்டி ஃபண்டில் மொத்த செலவு விகிதம் 2.55 சதவிகித மாக இருக்கலாம். மொத்த செலவு விகிதத்தில் முதலீட்டு மீதான ஜி.எஸ்.டி உள்ளிட்ட எல்லா செலவுகளும் சேர்க்கப்பட வேண்டும். அப்போது தான் ஒரு ஃபண்டின் முழுமையான செலவு விகிதம் எவ்வளவு என வெளிப்படையாக முதலீட்டாளர்களுக்குத் தெரியும் என செபி கருதுகிறது.

டாப் 30 நகரங்களைத் தாண்டி...

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அதன் லாபத்தில் குறிப்பிட்ட தொகையை முதலீட்டாளர் கல்வி நிதியில் (Investor Education Fund) சேர்க்கிறது. இந்த நிதியை சரியாகப் பயன்படுத்த செபி அமைப்பு விரும்புகிறது. அது சில முக்கியமான செலவுகளுக்கான தொகையை முதலீட்டாளர் களிடமிருந்து பெறுவதற்குப் பதிலாக அதை முதலீட்டாளர் கல்வியிலிருந்து செலவிட வேண்டும் என விரும்புகிறது. குறிப்பாக, டாப் 30 நகரங்களைத் தாண்டி (Beyond the Top 30 towns- B30 towns) உள்ள மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்டுகளுக்குத் தரப்படும் ஊக்க கமிஷன் இனி முதலீட்டாளர் கல்வித் தொகையிலிருந்து வழங்கப்பட வேண்டும். தற்போது, முதல் ஆண்டு மட்டும் கூடுதல் கமிஷன் வழங்கப்படுகிறது. இதை அடுத்து வரும் ஆண்டுகளுக்கும் வழங்கலாம் என செபி முன்மொழிந்து உள்ளது.

பெண் முதலீட்டாளர்கள்...

மேலும், அதிக பெண்களை முதலீட்டாளர்களாக மாற்ற, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் விநியோகஸ்தர் களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் செபி முன்மொழிந் துள்ளது. இதற்கான கமிஷன் தொகையை முதலீட்டாளர் கல்வி நிதியிலிருந்தும் பயன் படுத்தலாம் எனச் சொல்லி இருக்கிறது. இதுவரை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யாத பெண் ஒருவரை (பான் எண் அடிப்படையில்) முதலீடு செய்ய வைக்கும்பட்சத்தில் அந்த விநியோகஸ்தர் இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவருக்கு அதிகபட்சம் ரூ.2,000 சன்மானம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் பெயரில் முதலீடு அதிகரிக்கும்; அவர் களுக்கு நிதிப் பாதுகாப்பு கிடைக்கும் என செபி அமைப்பு எதிர்பார்க்கிறது. விநியோகஸ்தர் களை ஊக்கப்படுத்தும் அதே நேரத்தில் பெண் முதலீட்டாளர் களுக்கு மொத்த செலவு விகிதத்தில் சலுகை அல்லது விலக்கு அளிப்பது மூலம் அதிக மான பெண்களை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வைக்கலாம்.

ஃபண்ட் பிரிவுக்கேற்ப செலவு விகிதம்...

தற்போது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், ஒவ்வொரு ஃபண்ட் திட்டத்துக்கும் தனித் தனியே வேறுபட்ட செலவு விகிதத்தைக் கொண்டிருக் கின்றன. இனி ஃபண்ட் பிரிவு வகைக்கேற்ப செலவு விகிதத்தை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் கள் பின்பற்ற வேண்டும் என செபி முன்மொழிந்துள்ளது.

அனைத்து ஈக்விட்டி ஃபண்டு களுக்கும் ஒரேமாதிரி செலவு விகிதம் இருக்க வேண்டும். இதே போல, அனைத்துக் கடன் ஃபண்டுகளுக்கும் ஒரே செலவு விகிதம் இருக்க வேண்டும். ஹைபிரிட் ஃபண்டுகளுக்கு இவை இரண்டும் கலந்ததாக இருக்க வேண்டும். இப்படி ஃபண்ட் பிரிவுக்கேற்ப கொண்டுவரும்போது நீண்ட காலமாகச் செயல்பாட்டில் இருக்கும் பழைய ஃபண்டுகளுக்கும் புதிய ஃபண்டுகளுக்கும் செலவு விகிதம் ஒரேமாதிரிதான் இருக்கும்.

புதிய ஃபண்ட் வெளியீடு...

பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவ னங்கள், புதிய ஃபண்ட் வெளியிடும் போது (New Fund Offer - NFO) அதிக தொகையைத் திரட்டி இருப்பதாக அறிவிக்கின்றன. இது உண்மை இல்லை என செபி அமைப்பு கண்டுபிடித்துள்ளது. 2021 ஏப்ரல் முதல் 2022 செப்டம்பர் வரை திரட்டப்பட்ட என்.எஃப்.ஓ முதலீடு என்பது, அந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் பழைய ஃபண்டுகளிலிருந்து சுமார் 30% தொகை வந்துள்ளதாகச் சொல்லப் படுகிறது.

இந்தப் பணத்தில் 93% தொகை மியூச்சுவல் ரெகுலர் பிளான் களிலிருந்து வந்துள்ளது. ரெகுலர் பிளான்களில் சுமார் 72% முதலீடானது, முதலீட்டை ஆரம் பித்த இரண்டு ஆண்டுகளுக்குள் எடுக்கப்பட்டுவிடுகிறது. பழைய திட்டத்திலிருந்து புதிய திட்டத் துக்கு முதலீட்டை மாற்றினால், பழைய திட்டத்தின் குறைவான கமிஷனே புதிய ஃபண்டுக்கும் தர வேண்டும் என செபி முன் மொழிந்துள்ளது.

ஃபண்டின் வருமானத்துக்கேற்ப செலவு விகிதம்... செபியின் அதிரடித் திட்டம் என்ன..?

செயல்பாட்டுடன் இணைந்த கட்டணம்...

சில நேரங்களில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் மூலம் முதலீட்டாளர் வருமானம் எதுவும் ஈட்டியிருக்க மாட்டார். இதற்கு ஒட்டுமொத்தப் பங்குச் சந்தையின் இறக்கம் அல்லது அந்த ஃபண்டின் மோசமான செயல்பாடாக இருக்கலாம். ஆனால், அதன் நிதி மேலாளருக்குரிய சம்பளம் தரப் பட்டிருக்கும். இந்த ஃபண்டில் முதலீட்டாளரின் பணத்திலிருந்து செலவு விகிதம் கழிக்கப்பட்டிருக்கும். செபியின் ஆராய்ச்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 40% ரெகுலர் பிளான்களே அவற்றின் பெஞ்ச்மார்க் குறியீட்டை விட அதிக வருமானம் ஈட்டி இருக்கின்றன. இது கடந்த ஐந்து ஆண்டுக் காலத்தில் வெறும் 27 சதவிகிதமாக உள்ளது.

இதுபோன்ற தவறுகளையும், குளறுபடிகளையும் களையெடுக்கத்தான், செயல்திறன் - இணைக்கப்பட்ட மொத்த செலவு விகிதத்தை (Performance-Linked TER) செபி முன்மொழிந்து உள்ளது. இந்தத் திட்டம் முதலீட்டாளர் மட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது, முதலீட்டாளர் யூனிட்டுகளை விற்றுப் பணமாக்கும்போது, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், முதலீட்டாளரிடமிருந்து நிதி மேலாளர் கட்டணம் உள்ளிட்ட மேலாண்மைக் கட்டணங் களை வசூலிக்கும்; ஃபண்ட் அதிக வருமானம் தந்திருந்தால், அதிக செலவு விகிதம் கழிக்கப்படும்.

பங்குச் சந்தை இறக்கத்தின்போது, அவசரத் தேவைக்காக முதலீட்டாளர் யூனிட்டுகளை விற்கும்போது, அவருக்குக் குறைவான தொகையே கிடைக்கும். இந்த நிலையில், முதலீட்டின் மதிப்பு குறைவதற்கு ஃபண்ட் மேனேஜர் மட்டுமே காரணமாக இருக்க மாட்டார். பங்குச் சந்தையின் இயற்கை குணமே, ஏற்ற இறக்கம்தான். எனவே, இந்த விஷயத்தில் செபியானது வருமான செயல்பாடு அடிப்படையிலான செலவு விகித நடைமுறையை எப்படி சாத்தியப்படுத்தப்போகிறது என்பதைப் பொறுத்தே இந்த முன்மொழிவின் வெற்றி இருக்கும்!

செபிக்கு உங்கள் கருத்தை அனுப்புங்கள்..!

இந்த முன்மொழிவு அறிக்கை மொத்தம் 40 பக்கங்களைக் கொண்டுள்ளது. இது தொடர்பாக செபியின் ஆலோசனை அறிக்கையை முழுமையாகத் தெரிந்துகொள்ள https://bit.ly/3MmjWdL தளத்தை பார்வையிடவும். 2023 ஜூன் 1-ம் தேதிக்குள் மியூச்சுவல் ஃபண்ட் துறையைச் சார்ந்தவர்கள், முதலீட்டாளர்கள் என அனைவரும் தங்களின் கருத்துகளை செபிக்கு அனுப்பி வைக்கலாம்.