கட்டுரைகள்
Published:Updated:

முதன்முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களுக்கு... ஒரு வழிகாட்டல்!

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட்

முதன்முறையாகப் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் மொத்தமாக லட்சக்கணக்கான தொகையை முதலீடு செய்யக்கூடாது.

இந்தியாவில் சமீபகாலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. புதிதாக முதலீடு செய்பவர்கள், குறிப்பாக இளைஞர்கள் இதில் ஆர்வம் காட்ட, இது தரும் அதிக வருமானம் மற்றும் வருமான வரி அனுகூலம் ஆகியவையே முக்கியக் காரணங்கள். அவர்களுக்கான வழிகாட்டல் இங்கே...

இண்டெக்ஸ் ஃபண்டுகள், லார்ஜ் கேப் ஃபண்டுகள்

முதன்முறையாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் அதிக வருமானம் கிடைக்கும் என பெரும்பாலும் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களையே தேர்வு செய்கிறார்கள். அப்படிச் செய்யும்போது, சமீப காலத்தில் அதிக வருமானம் கொடுத்த, ஆனால் ரிஸ்க் அதிகமான திட்டங்களில் பணத்தைப் போட்டு விடுகிறார்கள். சிறிது காலம் கழித்துதான், தவறான ஃபண்ட்களைத் தேர்வு செய்துவிட்டதைப் புரிந்துகொள்கிறார்கள். சிலர், பங்குச்சந்தை ஏறும்போது இந்த ஃபண்டுகளும் நல்ல லாபம் கொடுக்கும் எனக் காத்திருக்கிறார்கள். பெரும்பாலானோர், ‘இன்னும் மதிப்பு இறங்கிவிட்டால் என்ன செய்வது’ என்று பயந்து அதிக இழப்பில் பணத்தை எடுத்துவிடுகிறார்கள்.

முதன்முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களுக்கு... ஒரு வழிகாட்டல்!

எனவே மியூச்சுவல் ஃபண்டில் முதன்முதலில் முதலீடு செய்பவர்கள் முக்கியப் பங்குச்சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ், நிஃப்டி போன்றவற்றின் அடிப்படையில் இண்டெக்ஸ் ஃபண்டுகள் அல்லது லார்ஜ் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. முதலீட்டுக் காலம் குறைந்தது 3 ஆண்டு தொடங்கி 5, 7, 10 ஆண்டுகள் என நீண்ட காலமாக இருக்க வேண்டும். இந்த ஃபண்டுகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே முதலீட்டுத் தன்மையைக் கொண்டிருக்கின்றன. இந்த ஃபண்டுகளில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் தொகையில் குறைந்தபட்சம் 80% மிகப் பெரிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படும். இந்தப் பங்குகள், இந்தியப் பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் முதல் 100 பெரிய நிறுவனங்களிலிருந்து தேர்வு செய்யப்படும். இந்தப் பெரிய நிறுவனங்களின் நிர்வாகம், நிதி நிலை போன்றவை மிகவும் வலிமையாக இருக்கும். மேலும் இந்நிறுவனங்களுக்குக் கடன் என்பது பெரிதாக இருக்காது. இந்தக் காரணங்களால் இந்நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்கு அதிக டிவிடெண்ட் வழங்கிவருகின்றன. எனவே சென்செக்ஸ் இண்டெக்ஸ் ஃபண்ட், நிஃப்டி இண்டெக்ஸ் ஃபண்ட், லார்ஜ் கேப் ஃபண்ட் பங்குகளின் விலையில் மிகப்பெரிய ஏற்றமோ, இறக்கமோ இருக்காது; நீண்ட காலத்தில் நிதானமாக அதிகரித்துவரும்.

முதன்முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களுக்கு... ஒரு வழிகாட்டல்!

லட்சக்கணக்கில் பணம் இருக்கிறதா?

முதன்முறையாகப் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் மொத்தமாக லட்சக்கணக்கான தொகையை முதலீடு செய்யக்கூடாது. பங்குச்சந்தை மிகவும் இறங்கிவிட்டால் இழப்பு மிக அதிகமாக இருக்கும். மாறாக, குறைந்த அளவு பணத்தைச் சீரான கால இடைவெளியில் முதலீடு செய்வதற்கான சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி (SIP - Systematic Investment Plan) முறையைத் தேர்ந்தெடுப்பதே லாபகரமாக இருக்கும். லட்சக்கணக்கில் பணம் இருக்கிறது என்றால், ரிஸ்க் குறைவான லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்து, ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து இன்னொரு திட்டத்துக்கு ஆட்டோமேட்டிக்காக மாற்றும் சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான் என்கிற எஸ்.டி.பி (STP - Systematic Transfer Plan) முறையில், பணத்தைப் பங்குச்சந்தை சார்ந்த ஃபண்டுகளுக்கு 7 நாள்கள், 15 நாள்கள், மாதம் ஒரு முறை எனக் குறிப்பிட்ட காலத்துக்கு முதலீடு செய்யும்போது ரிஸ்க் குறையும்.

இது முக்கியம்

முதன்முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது, ஒரு நிதி இலக்கை இணைக்கவும். அப்போதுதான் அதுவரை இந்தப் பணத்தைத் தொடமாட்டீர்கள். இல்லையென்றால் பங்குச்சந்தை இறங்கினால் பயத்தில் பணத்தை எடுத்துவிடுவீர்கள். அதே நேரத்தில், நீங்கள் எதிர்பார்க்கும் இலக்குத் தொகை அல்லது லாப சதவிகிதம் கிடைத்துவிட்டால், அந்த இண்டெக்ஸ் ஃபண்ட்/லார்ஜ் கேப் ஃபண்டிலிருந்து வெளியேறி அந்தத் தொகையைப் பாதுகாப்பான கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து வைக்கலாம். அல்லது குறைந்தபட்சம் லாபத்தை மட்டுமாவது எடுத்துக் கடன் சார்ந்த திட்டங்களில் பாதுகாக்கலாம்.

முதன்முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களுக்கு... ஒரு வழிகாட்டல்!

பெருகும் முதலீட்டாளர்களின் ஆதரவு

கடந்த ஓராண்டுக் காலத்தில் இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ. 42,880 கோடியிலிருந்து ரூ.1.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஓராண்டுக் காலத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய இண்டெக்ஸ் ஃபண்டுகளின் எண்ணிக்கை 62-லிருந்து 137 ஆக அதிகரித்துள்ளது. ஓராண்டில் மட்டும் இண்டெக்ஸ் ஃபண்டுகளின் முதலீட்டுக் கணக்குகள் எண்ணிக்கை 50% உயர்ந்து 30 லட்சமாக அதிகரித்துள்ளது. இண்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் லார்ஜ் கேப் பிரிவில் சுமார் 155 திட்டங்கள் உள்ளன.

வருமானம் எப்படி?

கடந்த பத்தாண்டுக் காலத்தில் (ஜனவரி 9, 2023 நிலவரப்படி) டாப் 10 ஃபண்டுகள் ஆண்டுக்கு சராசரியாகக் கொடுத்த வருமானம் 15% - 17%. கடந்த ஐந்தாண்டுகளில் 13% - 14%, மூன்றாண்டுகளில் 16% - 18% வருமானம் கொடுத்திருக்கின்றன. டாப் ஃபண்டுகளின் வருமானம் அனைத்துக் காலகட்டத்திலும் பணவீக்க விகிதத்தைவிட 4% - 8% சதவிகிதம் அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் புதியவர்கள் மட்டுமல்ல, அனைவரும் இவ்வகை ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.