‘‘எங்கள் குடும்பமே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறது...’’ நம்பிக்கையூட்டும் முதலீட்டாளர்!

‘‘குறைந்தபட்சம் நூறு பேரையாவது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் சேர்க்க வைத்து பயன் அடைய செய்ய வேண்டும்’’ என்கிறார் கணேஷ்..!
தமிழகத்தில் இன்றைக்குப் பலரும் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகின்றனர். பல வீடுகளில் அதிகபட்சம் மூன்று முதல் நான்கு பேர் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகின்றனர். ஆனால், கடலூரில் இருக்கும் கணேஷ், தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வைத்திருக்கிறார். கணேஷின் அண்ணன் கிருஷ்ணகுமாரின் 70-வது வயது பூர்த்தி விழாவன்று மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று திரள, நாமும் அங்கு ஆஜராகி, கணேஷுடன் பேசினோம்.
‘‘2007-ல் சென்னையில் இருந்தபோது என் சித்தப்பாவை சந்தித்தேன். அவர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவருவதாகவும், ஓய்வுக் காலத்துக்கான பணம் சேர்க்க அது உதவியாக இருப்பதாகவும் சொன்னார். மியூச்சுவல் ஃபண்ட் பற்றி அவர் சொன்னது எதுவும் எனக்குப் பெரிதாகப் புரியவில்லை. அவர் மீதிருந்த மரியாதை காரணமாகவும், அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கை காரணமாகவும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்கினேன். கொஞ்ச காலம் பணம் போடுவேன்; வேண்டும் என்கிறபோது எடுத்துவிடுவேன்.
இப்படி என் முதலீடு போய்க்கொண்டிருந்த வேளையில், என்னுடன் பள்ளியில் படித்த வெங்கட்ராமனை 2014-ல் சந்தித்தேன். அவர் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தராக இருப்பதாகச் சொன்னவுடன், என்னுடைய மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி அவரிடம் சொன்னேன். நான் செய்திருந்த முதலீடுகளை எல்லாம் பார்த்த பின், ஓர் ஒழுங்கில்லாமல் நான் முதலீடு செய்துவருவதைப் பார்த்தார். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் அடிப்படைகள் எல்லாவற்றையும் எனக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லி, நீண்ட காலத்துக்கு ஏன் முதலீடு செய்ய வேண்டும், அப்படிச் செய்வதால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை எல்லாம் எனக்குப் புரியும்படி எடுத்துச் சொன்னார். அவர் பேச்சைக் கேட்ட பிறகுதான், முதலீட்டை ஏனோதானோவென்று நான் செய்துவந்தது புரிந்தது. இனி, அவர் சொல்கிறபடிதான் முதலீட்டை மேற்கொள்வது என்று முடிவெடுத்தேன்.

அதன்பிறகுதான், எஸ்.ஐ.பி மூலம் மாதம்தோறும் 1000, 2000 என்று முதலீடு செய்யத் தொடங்கி, ஒவ்வோர் ஆண்டும் தொகையை உயர்த்திக்கொண்டே வந்தேன். 2014 முதல் இன்று வரை நான் இந்த எஸ்.ஐ.பி-யை நிறுத்தவில்லை. ஆனால், என் மகளுக்குக் கல்லூரியில் ஃபீஸ் கட்ட வேண்டும் என்கிறபோது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருந்த தொகையில் ஒரு பகுதியை எடுத்துக் கட்டினேன். என் மகளுக்குத் திருமணம் நிச்சயத்தபோது, மியூச்சுவல் ஃபண்டில் இருந்து பணம் எடுத்து, கல்யாண ஹால் செலவு, சாப்பாட்டுச் செலவை சமாளித்தேன். சமீபத்தில் என் மகளுக்கு வளைகாப்பு நடந்தது. அதற்கும் மியூச்சுவல் ஃபண்டில் இருந்து பணத்தை எடுத்துச் செலவு செய்தேன். அவ்வப்போது வரும் செலவு களுக்கெல்லாம் தேவைப்படும் பணத்தை எடுத்து செலவு செய்தாலும், மியூச்சுவல் ஃபண்டில் போதிய அளவு பணம் இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு ஒரே குஷி.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் இவ்வளவு லாபம் கிடைத்ததை நானே உணர்ந்த பின், அதை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். முதலில் என் மனைவியிடம் எடுத்துச் சொல்லி, அவள் பெயரில் ஒரு எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடங்கினேன். பிறகு, என் மகள்கள் இருவருக்கும் எஸ்.ஐ.பி ஆரம்பித்துக் கொடுத்தேன். மகளுக்குத் திருமணமான பின் என் மாப்பிள்ளையிடம் எடுத்துச் சொல்லி, அவரை எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்ய வைத்தேன். என் சம்பந்தியையும் எஸ்.ஐ.பி முதலீட்டுக்கு அழைத்து வந்திருக் கிறேன். என் அண்ணன்கள், அண்ணன் மகள்கள், அக்கா, அக்கா கணவர், அக்காவின் மகள்கள் என என் குடும்பத்தில் 20 பேரிடம் எஸ்.ஐ.பி மூலம் கிடைக்கும் நன்மைகளை எடுத்துச் சொல்லி, அவர்களை முதலீடு செய்ய வைத்திருக்கிறேன்.
குடும்பத்தில் மட்டுமல்ல, நான் வேலை பார்க்கும் பள்ளி யில் என்னுடன் பணிபுரிகிறவர் களுக்கும் எஸ்.ஐ.பி முதலீட்டின் மூலமான பலன்களை எடுத்துச் சொல்லி, அவர்களையும் முதலீடு செய்ய வைத்திருக்கிறேன்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி அவர்களிடம் சொல்லும் போது, முதலில் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள். அவர்களிடம் என் முதலீட்டு ஸ்டேட்மென்டைக் காட்டு வேன். முதலீடு செய்த பணம் கூட்டு வட்டி வளர்ச்சியின் அடிப்படையில் எப்படி வளர்ந் திருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லும்போது, அவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்கு வார்கள். முதலில் கொஞ்சம் பணத்தை முதலீடு செய்யத் தொடங்கி, அதை நன்கு புரிந்து கொண்டபின், என்னை விட அதிக பணத்தை முதலீடு செய்வார்கள். இப்படிப் பள்ளி ஆசிரியர்களாக இருக்கும் 15 பேரை நான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வைத் திருக்கிறேன். நான் சொன்னதைக் கேட்காமல் விட்டவர்கள் இன்றைக்கு என்னிடம் வந்து வருத்தப்படுவதைப் பார்க்கும் போது எனக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். குறைந்தபட்சம் நூறு பேரையாவது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் சேர்க்க வைத்து பயன் அடைய செய்ய வேண்டும் என்பதே என் லட்சியம்’’ என்று சொன்ன கணேஷ், கண் பார்வை குறைபாடு உள்ள தன் அண்ணன் ஒருவருக்கும், ஓய்வு பெற்ற இன்னொரு அண்ணனுக்கு மியூச் சுவல் ஃபண்ட் மூலம் தொகுப்பு நிதியை உருவாக்கித் தந்தது பற்றியும் எடுத்துச் சொன்னார்.

‘‘என் அண்ணன் பகவன் பிரசாத் கண் பார்வை குறைபாடு உள்ளவர். அவர் கஷ்டப்பட்டு 2 லட்சம் ரூபாய் சேர்த்து வைத்திருந்தார். இன்னொரு அண்ணன் கிருஷ்ணகுமார் ஓய்வு பெற்றவர். இந்த இருவருக்கும் எங்களால் முடிந்த அளவுக்கு கொஞ்சம் பணம் தந்து உதவுவோம். இந்தப் பணம் வேறு எங்காவது இருப்பதைவிட, மியூச்சுவல் ஃபண்டில் இருப்பது நல்லது என்று யோசனை தந்தார் மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகரான வெங்கட்ராமன். அவர் சொன்ன படி, எங்கள் அண்ணன் இருவர் பெயரிலும் மியூச்சுவல் ஃபண்டில் பணத்தை முதலீடு செய்தோம். இன்றைக்கு அவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த தொகையில் இருந்து மாதம்தோறும் ரூ.500, ரூ.1000 என அவர்களுக்குத் தேவைப்படும் பணத்தை எஸ்.டபிள்யூ.பி (Systematic withdrawal Plan) முறையின் மூலம் எடுத்து வருகிறார்கள். அவர்களுக்குத் தேவைப்படும் மாதச் செலவுக்கான தொகை, அவர்களின் வங்கிக் கணக்கிலேயே வந்து விழுந்துவிடுவதால், அவர்கள் கவலை இல்லாமல் இருக்கிறார்கள்’’ என்று முடித்தார்.
கணேஷ் போன்று ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் இருந்தால், பல லட்சம் பேர் மியூச்சுவல் பண்ட் முதலீட்டுக்குள் வந்து, பயன் அடைவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை!

‘‘எங்கள் குடும்பம், ஃபண்ட் விநியோகஸ்தர் குடும்பம்!’’
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை சரியாகச் செய்ய வேண்டும் என்று கணேஷுக்கு வழிகாட்டிய ஃபண்ட் விநியோகஸ்தர் வெங்கட்ராமனுடன் பேசினோம். ‘‘கடலூரில் நான் ஒரு மெடிக்கல் & பாலி கிளினிக்கை நடத்தி வந்தேன். மியூச்சுவல் ஃபண்ட் மேல் இருக்கும் ஆர்வத்தால் பகுதி நேரமாக விநியோகஸ்தராக மாறினேன். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை சரியாகப் புரிந்துகொள்ளாமல் பயப்படுகிறவர்கள், குறிக்கோள் இல்லாமல் முதலீடு செய்கிறவர்களை எல்லாம் சரியாக முதலீடு செய்ய வைப்பதுதான் என் வேலை. பணக்காரர்களைவிட நடுத்தர வர்க்கத்தினரையும், ஏழை களையும் முதலீடு செய்ய வைக்க வேண்டும் என்று ஆர்வமாக இருப்பேன். இன்றைக்கு என்னிடம் 1,100 பேர் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள் இதில் 900 பேர் முதல்முறை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் ஆவார்கள். எல்லா வாடிக்கை யாளர்களையும் நான் மட்டுமே நேரடியாகப் பேசி நிர்வாகம் செய்ய முடியாது என்பதற்காக என் மனைவி, என் மகள், என் சகோதரர், அவரின் மனைவி என எங்கள் வீட்டிலேயே ஐந்து விநியோகஸ்தர்களை உருவாக்கிவிட்டேன்.
என் வாடிக்கையாளர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் கணேஷ். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம், தான் மட்டும் பயன் அடைந்தால் போதாது; தன்னுடன் இருக்கும் அனைவரும் பயன் அடைய வேண்டும் என்கிற அவருடைய நல்லெண்ணம் பாராட்டத்தக்கது. அவர் மட்டுமே 35 வாடிக்கையாளர்களை எனக்குத் தேடித் தந்திருக்கிறார். இன்னும் பல முதலீட்டாளர்களை மியூச்சுவல் ஃபண்டில் கொண்டு வருவேன் என்றும் சொல்கிறார். அவரைப் போன்ற மனிதர்கள் இன்று குடும்பத்துக்கு ஒருவர் தேவை’’ என்று முடித்தார்.