யூலிப் Vs மியூச்சுவல் ஃபண்ட்... உங்களுக்கு எது சரியாக இருக்கும்? - மியூச்சுவல் ஃபண்ட் ரிசர்ச் - 17

முதலீடும் காப்பீடும் கலந்த யூலிப் திட்டத்தையும், முதலீடு மட்டுமேயான மியூச்சுவல் ஃபண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எது சரியாக இருக்கும்..?
பவித்ரா ஜெய்வந்த், Primeinvestor.in
பொதுவாக ஒரே முயற்சியில் பல பலன்களைப் பெற வேண்டும் என்ற விருப்பம் நமக்கு உண்டு. ஆனால், அது எல்லா விஷயங்களிலும் சரியாக இருப்பதில்லை. குறிப்பாக, முதலீட்டு விஷயத்தில் ஒரே திட்டத்தில் எல்லா பலனும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒரு தவறான பார்வை ஆகும்.

நம்முடைய ஒவ்வொரு நிதி தேவைக்கும் ஏற்ப பரவலான முதலீட்டுத் திட்டங்களையே நாம் தேர்வு செய்ய வேண்டும். ஆனால், யூலிப் என்ற முதலீடும் காப்பீடும் கலந்த கலவையான திட்டங்களைப் பலரும் ஆர்வமுடன் தேர்ந்தெடுப்பது உண்டு. அவர்களில் பெரும் பாலானோருக்கு அதுபற்றி போதிய தெளிவு இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணம்.
முதலீடும் காப்பீடும் கலந்த யூலிப் திட்டத்தையும், முதலீடு மட்டுமேயான மியூச்சுவல் ஃபண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எது சரியாக இருக்கும் என்ற தெளிவு கிடைக்கும். அதற்கு யூலிப் மற்றும் மியூச்சுவல் ஃபண்டு களின் செயல்பாடு, லிக்வி டிட்டி, செலவுகள் மற்றும் வருமான வரி போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

யூலிப் Vs மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட் ஒரு தொகுப்பு முதலீட்டு திட்டமாகும். பல முதலீட் டாளர்களின் பணத்தைத் திரட்டி நிபுணத்துவம் கொண்ட முதலீட்டு மேலாளர்கள் நிர்வகித்து முதலீடு செய்து வருமானம் ஈட்டுவார்கள். இந்தத் தொகை முழுவதையும் குறிப்பிட்ட ஃபண்ட் நிறுவனம் நிர்வகிக்கும். இது முழுக்க முழுக்க முதலீட்டுத் திட்டம் மட்டுமே. இதில் எந்தவித காப்பீடு பலனும் வராது. ஆயுள் காப்பீடு வேண்டு மெனில் தனியாக ஒரு டேர்ம் இன்ஷூரன்ஸ் பிளானை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதேசமயம் யூலிப் என்பது முதலீடும், ஆயுள் காப்பீடும் சேர்ந்த திட்டமாகும். இதில் செலுத்தப்படும் கட்டண மானது பிரீமியம் என அழைக்கப்படும். இதில் நாம் எடுத்துக்கொள்கிற திட்டத்தின் வகையைப் பொறுத்து, அதாவது மாதாந்தரம், காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என்பதன் அடிப்படையில் பிரீமியம் தொகையானது மாறுபடும். ஒவ்வொரு முறை யூலிப் திட்டத்தில் பிரீமியம் செலுத்தப்படும்போதும் அதில் கணிசமான பகுதி ஆயுள் காப்பீட்டுக்காக எடுக்கப்படும். மீதமுள்ள பகுதி பணம் முதலீடு செய்யப் படும். இதில் குறைந்தபட்ச முதலீட்டுக் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
காப்பீடும், முதலீடும் கலந்த இந்தக் கலவையானது பாசிட்டிவ்வான ஒன்றாகத் தோன்றினாலும், நம்முடைய நிதி இலக்குகளைத் திட்டமிடுவதற்கான சரியான வழியாக இது இருப்பதில்லை. காப்பீடு மற்றும் முதலீட்டைக் கலவையாக மேற்கொள்வதைவிட தனித்தனியாக வைத்திருப்பதே அதிக பலனைத் தரக்கூடியதாக இருக்கிறது. மேலும், உங்களுக்கு ஆயுள் காப்பீடு தேவையில்லை எனும்பட்சத்தில் யூலிப் திட்டம் அவசியமே இல்லை.
முதலீடு எங்கே..?
மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரை நம்முடைய நிதி இலக்குக்கு ஏற்பவும், ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டுக் காலம் ஆகியவற்றைப் பொறுத்து ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்கிறோம். ஏனெனில், ஒவ்வொரு ஃபண்டும் ஒவ்வொரு முறையில் முதலீடுகளை மேற்கொள்கின்றன. அந்தந்த வகை ஃபண்டுகளின் ரிஸ்க்குக்கு ஏற்ப வருமானம் கிடைக்கும்.
ஒருவேளை நீங்கள் முதலீடு செய்துவரும் ஃபண்டின் செயல்பாட்டில் திருப்தி இல்லையெனில், அதிலிருந்து யூனிட்டுகளை உங்களுடைய விருப்பம் போல் விற்றுவிட்டு, முதலீட்டை வேறொரு ஃபண்டுக்கோ, வேறொரு முதலீட்டுத் திட்டத்துக்கோ மாற்றிக்கொள்ளலாம். முக்கியமாக ஒரு நிறுவனத்தின் ஃபண்டுகளிலிருந்து வெளியேறி, வேறொரு நிறுவனத்தின் ஃபண்டுகளில்கூட முதலீடு செய்து கொள்ளலாம். ஒரே நிறுவனத்துக்குள்தான் முதலீட்டை மாற்ற வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை.
யூலிப் விஷயத்திலும் எந்த ஃபண்ட் ஆப்ஷனில் பணத்தை முதலீடு செய்யலாம் என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம். ஆனாலும், இதில் குறிப்பிட்ட ஃபண்டுகள் மட்டுமே உதாரணத்துக்கு பாண்ட் ஆப்ஷன், ஈக்விட்டி ஆப்ஷன் போல் இருக்கும். மியூச்சுவல் ஃபண்டில் இருப்பதுபோல பல்வேறு முதலீட்டு உத்திகள் கொண்ட பல வகையான திட்டங்கள் இதில் இல்லை. குறிப்பிட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கக்கூடிய ஃபண்டுகளுக்குள் நீங்கள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து முதலீடு செய்யலாம் என்றாலும், ஒப்பீட்டளவில் மியூச்சுவல் ஃபண்டைவிட யூலிப் திட்டங்களில் ஃபண்டுகளின் தேர்வுகள் மிகவும் குறைவு. மேலும், யூலிப் திட்டத்தில் இண்டெக்ஸ் ஃபண்ட், இ.டி.எஃப், செக்டார் அல்லது தீமெட்டிக் ஃபண்ட் போன்ற வெவ்வேறு தேர்வுகள் இல்லை. மேலும் லார்ஜ்கேப், மிட்கேப் போன்ற ஃபண்டுகளும் இல்லை.
மேலும் யூலிப் திட்டத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்ததில் உங்களுக்குத் திருப்தி இல்லையெனில் வேறொரு திட்டத்துக்கு உங்களால் மாற்றம் செய்ய முடியாது. யூலிப் திட்டத்தை சரண்டர் செய்து அல்லது பகுதி பணத்தை எடுத்து மாற்ற வேண்டியிருக்கும். இதனால் நீங்கள் எடுத்திருந்த யூலிப் திட்டத்தின் காப்பீட்டு பலன் மற்றும் அதன் மதிப்பு குறைந்துவிடும்.
லிக்விடிட்டி...
செபியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள ஒரு பாசிட்டிவ் அம்சம் லிக்விடிட்டி. ஒரு முதலீட்டாளராக நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மியூச்சுவல் ஃபண்டுகளின் யூனிட்டுகளை வாங்கவும் விற்கவும் செய்யலாம். (இ.எல்.எஸ்.எஸ் போன்ற சில திட்டங்களுக்கு மட்டும் 3 வருட ‘லாக்இன்’ காலம் இருக்கும்). குளோஸ்டு எண்டெட் திட்டங்களான எஃப்.எம்.பி போன்ற வற்றையும்கூட பங்குச் சந்தையில் வாங்கவும் விற்கவும் செய்யலாம்.
அதேபோல் இ.டி.எஃப் திட்டமும் பங்குச் சந்தையில் வர்த்தகமாகும். ஃபண்டிலிருந்து யூனிட்டுகளை விற்று வெளியேறும்போது அந்த ஃபண்டின் விதிமுறைகளின்படி வெளியேறு கட்டணம் இருக்கும். ஷார்ட் டியூரேஷன் ஃபண்டு களுக்கு வெளியேறு கட்டணம் இல்லை அல்லது மிகவும் குறைவாகவே இருக்கும்.
யூலிப் திட்டங்கள் ஐ.ஆர்.டி.ஏ.ஐ கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இந்தத் திட்டங்களுக்கு குறிப்பிட்ட ‘லாக்இன்’ காலம் உண்டு. அதாவது, குறைந்தது 5 வருட காலம் இந்தத் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்க வேண்டும். இந்தக் காலத்துக்குள் திட்டத்தைத் தொடர முடியாமல் போனால் காப்பீடுதாரர் பாலிசிதாரருக்கு எந்தக் காப்பீட்டுத் தொகையும் செலுத்த வேண்டியதில்லை. அவருடைய காப்பீடு கவரேஜ் ரத்து செய்யப்பட்டு, ஃபண்ட் மதிப்பு தொகை மட்டும் இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஃபண்டுகளின் கணக்கில் ‘லாக் இன்’ வரையில் இருப்பு வைக்கப்பட்டு, லாக்இன் காலம் நிறைவுபெற்ற பிறகே வழங்கப்படும். அதுவும் லாக்இன் காலத்துக்குப் பிறகு ஃபண்ட் நிர்வகிப்பு கட்டணங்கள் பிடித்தம் செய்யப்பட்ட பிறகே வழங்கப்படும்.
அதாவது அவசரத் தேவைக்கு 5 ஆண்டுகளுக்குள் யூலிப் திட்டத்தில் இருந்து பணத்தை எடுக்க முடியாது. பாலிசிதாரர் இறந்தால் அல்லது திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வேறு ஏதேனும் காரணங்களால் திட்டத்தை தொடர முடியாமல் போனால் மட்டுமே கவரேஜ் தரப்படும்.
வரி...
மியூச்சுவல் ஃபண்டில் வருமான வரி விதிப்பு மிகவும் நேரடியானதாக இருக்கும். ஃபண்டிலிருந்து வெளியேறும் போது மட்டுமே வருமான வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப் படும். ஓராண்டுக்குள் விற்கப் படும் ஈக்விட்டி ஃபண்டுகளின் வருமானத்துக்கு 15 சதவிகிதமும், ஓராண்டுக்குப் பிறகு விற்கப் படும் ஃபண்டுகளின் வருமானம் ரூ.1 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் அந்த வருமானத் துக்கு 10 சதவிகிதமும் வரி விதிக்கப்படும்; ரூ.1 லட்சம் வரை வரி இல்லை.
கடன் ஃபண்டுகளுக்கு 3 ஆண்டுகள் குறைந்தபட்ச கால வரம்பாக உள்ளது. இதில் குறுகிய கால மூலதன ஆதாயம் ஆண்டு மொத்த வருமானத் தோடு கணக்கிடப்பட்டு வரி விகித வரம்பின்படி வரி விதிக்கப்படும். நீண்ட கால மூலதன ஆதாய வரி இண்டெக் சேஷனுக்குப் பிறகு 20 சதவிகித மாகக் கணக்கிடப்படும்.
யூலிப் திட்டங்களில் செலுத் தப்படும் பிரீமியம் தொகைக்கு வருமான வரி சட்டத்தின்படி 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு உள்ளது. இந்தச் சலுகை இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டு களுக்குத்தான் பொருந்தும்.மேலும், 80சி பிரிவின் மொத்த சலுகை ரூ.1,50,000க்குள்தான் இந்தச் சலுகை கிடைக்கும்.
கட்டும் பிரீமியம், மொத்த கவரேஜ் தொகையில் 10 சதவிகிதத்துக்கு மேல் இருக்கும்பட்சத்தில் 80சி பிரிவின் கீழ், 10சதவிகிதத்துக்கு மேல் இருக்கும் பிரீமியத்துக்கு வரிச் சலுகை கிடையாது. மேலும், இதில் சமீபத்தில் செய்யப் பட்டுள்ள மாற்றத்தின்படி மேற்குறிப்பிட்ட வரி விலக்கு சலுகைகள் 2021, பிப்ரவரி 1-க்கு முன்பு எடுக்கப்பட்ட திட்டங்களுக்குதான் பொருந்தும். இந்தத் தேதிக்குப் பின்னர் எடுக்கப்பட்ட யூலிப் திட்டங்களில் ஆண்டு பிரீமியம் தொகை 2,50,000 ரூபாய்க்குள் இருந்தால், முதிர்வு தொகைக்கு வரி விலக்கு சலுகை பொருந்தும். இந்த வரம்புக்குமேல் பிரீமியம் கட்டும்பட்சத்தில், அதன் மூலம் கிடைக்கும் வருமானத் துக்கு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளைப் போலவே மூலதன ஆதாய வரிக் கணக்கீடு செய்யப்படும்.
செலவுகள் என்னென்ன?
முதலீட்டுத் திட்டங்களில் ஆகும் செலவினங்களும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். மியூச்சுவல் ஃபண்டுகளில் செலவினங்கள் வெளிப்படை யானவையாக இருக்கின்றன. ஒன்று முதலீட்டை வெளியே எடுக்கும்போது பிடித்தம் செய்யப்படும் கட்டணம். இன்னொன்று மியூச்சுவல் ஃபண்ட் செலவின விகிதம். சொத்து நிர்வகிப்புக் கட்டணம், விளம்பர மற்றும் விற்பனைதாரர் கட்டணம் உள்ளிட்டவை இதில் அடங்கும். இது ஒவ்வொரு நாளும் அன்றைய என்.ஏ.வி மதிப்பில் பிடித்தம் செய்யப் படும். டைரக்ட் திட்டங்களை விடவும் ரெகுலர் திட்டங் களில் இந்த செலவின விகிதம் அதிகமாக இருக்கும். ஏனெனில், விநியோகஸ்தர் களுக்குக் கொடுக்கப்படும் கமிஷன் தொகை உள்ளது.
யூலிப் விஷயத்தில் 2010-க்கு முன் பல மறைமுகக் கட்டணங்கள் இருந்தன. மேலும், இது ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மாறுபடும். ஆனால், ஐ.ஆர்.டி.ஏ.ஐ நடவடிக்கைகளுக்குப் பிறகு ஒரே சீரான கட்டணம், வெளிப்படைத்தன்மை உள்ளிட்டவை யூலிப் திட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இருப்பதுபோல இன்னும் எளிமையாகவில்லை. திட்ட ஆவண விதிமுறைகளை முறையாகப் படித்து கட்டணங்கள், செலவுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் கட்டணங்கள் அனைத்துக்கும் ஜி.எஸ்.டி-யும் உண்டு.
வருமானம் எப்படி?
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் முழுமையான முதலீட்டுத் திட்டங்கள் என்பதால் அவற்றில் வரவு செலவு கணக்கீடுகள் தெளிவாக இருக்கின்றன. எனவே, வருமானம் எவ்வளவு என்பதைக் கணக்கிடுவது எளிது. மேலும், இதில் வருமான முடிவுகளை ஃபண்ட் வகைகளுடனும், பல்வேறு நிறுவனங்களின் ஃபண்டுகளின் வருமானத்துடனும் சந்தை வருமானத்துடனும் ஒப்பிடலாம். மியூச்சுவல் ஃபண்டில் அனைத்துச் செலவுகளுக்குப் பிறகான மதிப்பே என்.ஏ.வி-யில் பதிவாகும். எனவே, வருமானத்தைக் கணக்கிடுவது எளிது. ஆனால் யூலிப் விஷயத்தில் வருமானத்தைக் கணக்கிடுவது கொஞ்சம் கடினமான செயல். ஆரம்பக் காலங் களில் தோராயமான கணக்கீட்டின்படி 4 சத விகிதத்திலிருந்து 8 சத விகிதம் வரை வருமானம் இருக்கும். நிகர வருமானம் தோராயமான வருமானத் திலிருந்து கட்டணங்கள் கழித்த பிறகே கணக் கிடப்படும். பெரும்பாலும் வருமான விஷயத்தில் யூலிப் திட்டத்தையும் மியூச்சுவல் ஃபண்டையும் ஒப்பிடுவது சரியான நடைமுறை இல்லை.
மொத்தத்தில் முதலீடு தனியாகவும், காப்பீடு தனியாகவும் இருப்பதுதான் முதலீட்டாளர்களுக்குச் சிறந்தது.
(ஆய்வு தொடரும்)
தமிழில்: ஜெ.சரவணன்