
சந்தைக்குப் புதுசு
சசி ரேகா
அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
ஐ.டி.எஃப்.சி மல்ட்டி கேப் ஃபண்ட் (IDFC Multicap Fund)
ஐ.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களில் கலந்து முதலீடு செய்யும் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தில் நவம்பர் 26-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை தொடங்கலாம். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது.
முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடன்ட் எஸ் அண்ட் பி பி.எஸ்.இ 500 இ.டி.எஃப் ஃபண்ட்ஸ் ஆஃப் ஃபண்ட் (ICICI Prudent S&P BSE 500 ETF FoF)
ஐ.சி.ஐ.சி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பி.எஸ்.இ 500 இன்டெக்ஸில் முதலீடு செய்யும் பேசிவ் வகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் நவம்பர் 26-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும்.
இந்த இன்டெக்ஸில் 500 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளதால், ரிஸ்க் அதிக அளவில் பரவலாக்கப்பட்டுள்ளது இந்தத் திட்டத்தின் சிறப்பாகும். குறைந்தபட்சம் 5,000 ரூபாயில் இருந்து இந்தத் திட்டத்தில் முதலீட்டை தொடங்கலாம்.
முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

சிறுவர்களுக்கான ஜூனியோ ரூபே கார்டு
டீன் ஏஜ் சிறுவர்கள் சுலபமாக ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வகையில் ரூபே நிறுவனம் இந்தப் புதிய டெபிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது.
பொதுவாக, ஹாஸ்டல்களில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு பணம் அனுப்புவதில் பெற்றோர்களுக்கு சிரமம் இருக்கும். அவர்களுக்கு உதவிடும் வகையில் இந்தப் புதிய அட்டை அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இந்த அட்டையைப் பயன்படுத்தி சுலபமாக ஏ.டி.எம்-களில் பணம் பெற்றுக் கொள்ள முடியும். ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் பொருள்கள் வாங்க முடியும்.
இந்த அட்டைக்கு ஆண்டுக் கட்டணம் எதுவுமளில்லை. இந்த அட்டை தேவைப்படும் பெற்றோர்கள் ரூபே வழங்கும் இந்தப் புதிய அட்டைக்கு விண்ணப்பம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
மேக்ஸ் லைஃப் ஸ்மார்ட் வெல்த் இன்கம் பிளான் (Max Life Smart Wealth Income Plan)
காப்பீட்டுத் துறை சார்ந்த மேக்ஸ் லைஃப் நிறுவனம் இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம் மூன்று வகையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நிரந்தர மற்றும் நிச்சய வருமானம், குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிகளில் மணி பேக், பிரீமியம் செலுத்தும் காலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, மூன்று வகை திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. காப்பீடு வேண்டும் வாடிக்கையாளர்கள் இந்த மூன்று திட்டங்களில் நமக்குத் தோதான திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.