நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வேண்டாம் ஊரடங்கு... ஒமிக்ரானை சமாளிக்க ‘மைக்ரோ கான்செப்ட்’ உத்திகள்!

ஊரடங்கு...
பிரீமியம் ஸ்டோரி
News
ஊரடங்கு...

கவர் ஸ்டோரி

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து, டெல்டாவாக மாறி, தற்போது ஒமிக்ரான் வடிவில் புது அவதாரமெடுத்து அச்சுறுத்திக்கொண்டிருக் கிறது. கிட்டத்தட்ட 86 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஒமிக்ரான் வைரஸ் அதிக ஆபத்தை உருவாக்கக்கூடியதல்ல என்றாலும், டெல்டா வைரஸைவிட மூன்று மடங்கு வேகமாகப் பரவக்கூடியது என்று எச்சரித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். தற்போதுவரை உலக அளவில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங் களில்தான் என்றாலும், அடுத்த சில வாரங் களிலேயே இந்தப் புதிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவே பலரும் கருதுகின்றனர்.

கடந்த சில நாள்களில் மட்டும் அமெரிக்கா வில் 6.5 லட்சம் பேருக்கு கொரோனா நோய் தாக்கியிருக்கிறது. இங்கிலாந்திலும் கடந்த ஒரு மாத காலமாக கோவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகிறவர்களின் எண்ணிக்கை ஏகத்துக்கும் அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் 79,000 பேர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைக்குப் பிறகு, தினசரி பாதிப்பு ஒரு லட்சம் பேராக இருக்கலாம் என்கிறார்கள். கோவிட் பரவலைத் தடுக்க தற்போது ஆஸ்திரியாவில் மட்டும் ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் கோவிட் நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருவதைக் கட்டுப்படுத்த அந்த நாடுகளிலும் மீண்டும் ஊரடங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டாலும் ஆச்சர்யம் இல்லை என்பதே தற்போதைய நிலை. இதை எச்சரிக்கிற மாதிரி உலக சுகாதார மையமும் எச்சரிக்கைவிடத் தொடங்கியுள்ளது. ‘‘எந்தவிதமான பொது நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அதை உடனே கேன்சல் செய்துவிடுங்கள். இல்லாவிட்டால் உயிரை இழக்க வேண்டியிருக்கும்’’ என்று எச்சரித்திருக்கிறார் உலக சுகாதார மையத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ்.

வேண்டாம் ஊரடங்கு... ஒமிக்ரானை சமாளிக்க ‘மைக்ரோ கான்செப்ட்’ உத்திகள்!

நம் நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகிறவர்களின் எண்ணிக்கை தற்போது 6,000 - 7,000 என்ற அளவில் இருக்கிறது. ஒமிக்ரான் வைரஸால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை தினம்தோறும் அதிகரித்து வருகிறது. தற்போது 300 என்கிற எண்ணிக்கைக்குள் இருந்தாலும், அடுத்த சில நாள்களில் ஆயிரத்தையும், சில வாரங்களில் கணிசமான அளவிலும் உயரும். இந்தப் பரவல் கட்டுக்கடங்காமல் செல்லும்பட்சத்தில் வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிறைய பேர் இந்த நோயில் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டு களில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில்தான் இந்தியாவில் அதிக பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதை ஆதாரமாக எடுத்துச் சொல்கிறார்கள் அவர்கள்.

இந்த நிலையில், மாநில அரசாங்கங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது. என்றாலும், நிலைமை கட்டுக்கடங்காமல் செல்லும்பட்சத்தில் மூன்றாவது முறையாக ஊரடங்கை மேற்கொள்ள வேண்டிய நிலை வருமா என்ற முக்கியமான கேள்வி இப்போது எழுந்துள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்படுவதை யாருமே விரும்பவில்லை என்றாலும், அது மாதிரியான ஒரு நிலை வந்தால், அதை எப்படிச் சமாளிப்பது, அதற்கு நாம் எந்தெந்த வகையில் தயாராக இருக்க வேண்டும் என்று பலரும் யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மூன்றவதாக இன்னொரு ஊரடங்கா, அது வேண்டவே வேண்டாம் எனப் பலரும் விரும்பினாலும், அப்படியொரு நிலை ஏற்படும்பட்சத்தில், அதற்காக மனம் உடைந்து நிற்பதைவிட, அதை எதிர்கொள்ளத் தயாரான வழிகள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து, நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ளும்பட்சத்தில், நாம் அதிக பாதிப்பு இல்லாமல் நிச்சயம் தப்பிக்க முடியும்.

கேசவ பாண்டியன்,  ரமேஷ் பாபு
கேசவ பாண்டியன், ரமேஷ் பாபு

மூன்றாவது ஊரடங்கு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்வியை சிறுதொழில் ஆலோசகரான கேசவ பாண்டியனிடம் கேட்டோம்.

‘‘நாம் இதுவரை கொரோனாவை அணுகி வந்த விதத்தைத் தீர்க்கமாக ஆராய்ந்து பார்த்தோமானால், பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

கொரோனா பரவல் இரண்டாவது முறையாக உலகம் முழுக்கப் பரவியபோது, பல நாடுகள் ஊரடங்கு நடவடிக்கை எடுக்கவில்லை. ஜப்பான், பெலாரஸ், ஸ்வீடன், தென் கொரியா, அமெரிக்காவிலேயே பல மாகாணங்களில் ஊரடங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை. ஆனால், நாம் நாடு முழுவதும் ஊரடங்கு கொண்டு வந்தும், நம்மால் கோவிட் பரவலையோ, உயிரிழப்பையோ தடுக்க முடியவில்லை. பல லட்சம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதுதான் மிச்சம். இனி மீண்டும் ஊரடங்கு வந்தால் நிச்சயமாக மிகப் பெரிய பாதிப்பு உண்டாகும். எனவே, ஊரடங்கு நடவடிக்கை எடுக்காமல் மாற்றுத் தீர்வுகளை மட்டுமே அரசு முன்னெடுக்க வேண்டும்.

ஒருவேளை, இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்து, ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், எல்லா ஊர்களிலும் ஒரே நேரத்தில் கடை அடைப்பு என்ற முடிவை எடுக்காமல், எந்தப் பகுதியில் அதிக பிரச்னை இருக்கிறதோ, அந்தப் பகுதியில் மட்டும் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப் படுத்தும் வகையில் ‘மைக்ரோ ப்ளாக்கிங்’ செய்யலாம். இதன் மூலம் ஒரு பெரிய பகுதியே அடைப்புக்குள் வராமல், அதன் ஒருபகுதி மட்டுமே அடைப்புக்கு உள்ளாகி, பாதிப்பில் இருந்து தப்பிக்கும். இதனால் அந்தப் பகுதியில் இருக்கும் தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து தொழில் செய்து சம்பாதிக்க முடியும்’’ என்றவர், மூன்றாவது அலையை எதிர் கொள்ள ஒவ்வொரு துறைசார்ந்த நிறுவனமும் பின்பற்ற வேண்டிய மைக்ரோ கான்செப்ட் உத்திகளை எடுத்துச் சொல்லி விளக்கினார்.

“பொதுவாக, பெருந்தொற்றுக் காலங்களில் கூட்டங்களைத் தவிர்ப்பதே ஊரடங்கின் முதல் நோக்கமாக இருக்கும். எனவே, கூட்டங்களைக் குறைக்கும் மாற்று வழிமுறைகளைத் தொழில் நிறுவனங்கள் செயல்படுத்தினாலே ஊரடங்குக்கு அவசியம் இருக்காது.

நகைக் கடைகள்

முன்னணி நகைக் கடைகள் பலவும் ஊரடங்கு சமயத்தில் விர்ச்சுவல் மார்க்கெட்டிங் உத்திகளைப் பயன்படுத்தி ஆன்லைன் புக்கிங் மூலம் விற்பனையைச் செய்யலாம். ஜி.ஆர்.டி நிறுவனம் இந்த உத்தியைப் பயன்படுத்தி, நல்ல முறையில் வளர்ச்சி கண்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் நம்மிடம் இருக்கும் செல்போனிலேயே எந்த நகையை வேண்டுமானாலும் நாம் அணிந்து பார்க்கும் வசதிகளெல்லாம் வந்துவிட்டன. நகைக் கடையின் இணையதளத்தில் உள்ள நகைகளை க்ளிக் செய்து அவற்றை விர்ச்சுவல் முறையில் நாம் அணிந்து பார்த்து தேர்வு செய்யலாம். இந்த முறையைப் பெருவாரியான மக்கள் பின்பற்றும்பட்சத்தில், ஊரடங்கால் விற்பனை பாதிப்பு என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது.

தவிர, நகைக்கடை, ஜவுளிக் கடை என எதுவாக இருந்தாலும் அந்தக் கடைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த டோக்கன் சிஸ்டத்தைக் கொண்டு வரலாம். ஒரு மணி நேரத்தில் 100 பேர் மட்டும் பர்ச்சேஸ் செய்ய அனுமதி தரலாம். இந்த டோக்கனை ஆன்லைன் மூலம் ரிஜிஸ்டர் செய்தும் பெறலாம்; நேரில் வந்தும் வாங்கலாம் என்ற நிலை இருந்தால், வியாபார நிறுத்தம் தேவை இருக்காது.

உணவகங்கள்

கொரோனா காலத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்டது உணவகங்கள்தான். ஆனால், அந்தச் சமயத்தில் பல முன்னணி உணவகங்கள் வித்தியாசமாக யோசித்து செயல்பட்டன. நேரடியாக உணவளிக்கும் ஃப்ளோர் ஸ்பேஸை வெகுவாகக் குறைத்து, ஆன்லைன் மூலம் உணவுக்கான ஆர்டரைப் பெற்று வீடுகளுக்கே சென்று உணவு வழங்கின. வாடிக்கையாளர்கள் விரும்பும் உணவை, அதே சுவையுடன் சூடாக உணவகத்தில் வழங்குவது போலவே வீடுகளிலும் வழங்கும் வகையிலான பேக்கிங் உத்திகளை உருவாக்கி டெலிவரி செய்தன. ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற மல்ட்டி ரெஸ்டாரன்ட் செயலிகள் மட்டுமல்லாமல், உணவகங்களே பிரத்யேக செயலி உருவாக்கி அதிலும் ஆர்டர்களை எடுத்து டெலிவரி செய்தன. இந்த நடைமுறையை எல்லா உணவகங்களும் பின்பற்ற அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்.

ஜவுளிக் கடைகள்

ஜவுளித்துறையிலும் விர்ச்சுவல் ஷாப்பிங் உத்திகளைப் பயன்படுத்தலாம். பிளானட் ஃபேஷன் போன்ற அவுட்லெட்டுகள் கொரோனாவுக்கு முன்பிருந்தே விர்ச்சுவல் ஷாப்பிங் வசதிகளைப் பயன்பாட்டில் வைத்திருந்தன. இந்த வசதி கொரோனா ஊரடங்குக் காலத்தில் பல நிறுவனங் களுக்கு உதவியாக இருந்தது. நமக்கு எந்த உடை, எந்த நிறம் சரியாக இருக்கும் என்பதை விர்ச்சுவல் முறையிலேயே பார்த்து நாம் தேர்வு செய்யலாம். தமிழகத்தின் அனைத்து ஜவுளிக்கடைகளும் இந்த முறையைப் பயன்படுத்தினால், மக்கள் நெருக்கடி ஏற்படாது. மேலும், விர்ச்சுவல் ஷாப்பிங் உத்திகள் மூலம் செலவுகளையும் வெகுவாகக் குறைக்க முடியும். கடைகளில் வேலை பார்ப்பவர்கள், டெலிவரி வேலைக்கு மாறுவார்கள். இதனால் பிசினஸ் பாதிப்படையாது.

ஐ.டி துறை

ஐ.டி துறையில் முழுமையாக வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையைப் பல நிறுவனங்கள் செயல்படுத்தி உள்ளன. அனைத்து வேலைகளும் கணினியில்தான் எனும் பட்சத்தில் அதை எங்கிருந்து செய்தால் என்ன என்ற நிலைக்கு ஐ.டி துறை வந்துவிட்டது. டி.சி.எஸ் நிறுவனம் 2025-க்குப் பிறகு பெருவாரியான வேலையை வீட்டிலிருந்தே செய்யும் முறையையே பின்பற்றப் போவதாக அறிவித்திருக்கிறது. ஐ.டி. துறையில் பின்பற்றப்படும் இந்த நடைமுறையைப் பின்பற்றி சேவை தரும் நிறுவனங்கள் அனைத்துமே வீடுகளில் இருந்து செயல்பட முடியுமா என்று பார்க்கலாம். அதற்கு வாய்ப்புள்ள நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை முறையை நடைமுறைப் படுத்துவதன் மூலம் பலவிதமான செலவுகளைக் குறைத்து, பணத்தை மிச்சப்படுத்துவதுடன், பிசினஸை சரியாகச் செய்யவும் முடியும்.

ரீடெய்ல் கடைகள்

கொரோனா காலத்தில் அத்தியாவசிய பொருள்களான மளிகை, காய்கறி போன்றவற்றை வண்டிகளில் வீடுகளுக்குக் கொண்டு சென்று விற்க அரசு அனுமதி அளித்தது. இந்த நடைமுறையை அனைத்து ரீடெய்ல் நிறுவனங்களும் பின்பற்றலாம். உதாரணமாக, காதி கிராப்ட் கடைக்கு மக்கள் வராமல், மக்கள் புழங்கும் இடங்களுக்கு ஒரு வேன் அல்லது பஸ் மூலம் கொண்டு சென்று விற்பனை செய்வதால், விற்பனையில் களைகட்ட முடியும்’’ என்று தொழில் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய மைக்ரோ கான்செப்ட்டு களை எடுத்துச் சொன்னார் கேசவ பாண்டியன்.

மூன்றாவது முறையாக ஊரடங்கு என்று ஒன்று வரும் பட்சத்தில், அதை எதிர்கொள்ள சிறுதொழில் நிறுவனங்கள் எப்படித் தயாராக வேண்டும் எனக் கோவை கொடீசியா தலைவர் ரமேஷ் பாபுவிடம் கேட்டோம்.

‘‘ஏற்கெனவே எம்.எஸ்.எம்.இ தொழில்துறை பெரும் நெருக்கடி யில் இருக்கிறது. கடன் வாங்கி முதலீடு செய்தவர்கள் திருப்பிச் செலுத்த முடியாமல் உள்ளனர். 10 - 20% நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்பட்டு, தொழில் செய்வதில் இருந்தே வெளியேறிவிட்டன. இதிலிருந்து மீண்டுவரும் நேரத்தில் மூலப்பொருள்களின் விலை உயர்வு பாடாய்படுத்தி எடுக்கிறது. இந்த நிலையில், மீண்டும் ஊரடங்கு வந்தால் சிறு தொழில்முனைவோர்கள் பாடு படுதிண்டாட்டமாகிவிடும். பெரும்பாலும் ஊரடங்கு வராது என்றே நம்புகிறோம். இருந்தாலும், சிறுதொழில் நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிற தகவலை சிறுதொழில் முனைவோர்கள் அனைவருக்கும் சொல்லியிருக்கிறோம். அதாவது, ஆர்டர் இருந்தால் மட்டுமே மூலப்பொருள் கொள்முதல், உற்பத்தி செய்யத் திட்டமிட வேண்டும். சந்தையில் நிலைத்தன்மை உண்டாகும் வரை மூலதனத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். அதிகமாகக் கடன் வாங்கி முதலீடு செய்வதைத் தற்காலிகமாகத் தவிர்க்க வேண்டும். இருப்பில் உள்ள பொருள்களை விற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டும். இ-காமர்ஸ், ஏற்றுமதி உள்ளிட்ட சந்தை வாய்ப்புகளை நோக்கி நகர வேண்டும். அவசரகால நிதியைத் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

கொரோனா முதல் அலையை மத்திய, மாநில அரசாங்கங்கள் பதற்றத்துடன் கொண்டுவந்ததைப் போல, இனிவரும் காலத்தில் கொண்டுவரக் கூடாது. இரண்டாம் அலை காலத்தில் மத்திய, மாநில அரசாங்கங்கள் பெரிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தாமலே, நிலைமையை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவந்தது போலவே இந்த முறையும் செய்ய வேண்டும். புதுமையாக யோசித்தால், ஊரடங்கைச் சமாளிக்க உதவும் ஓராயிரம் வழிகள் பிறக்காதா என்ன?

விக்கிரமராஜா
விக்கிரமராஜா

“வாட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளர்களை ஒருங்கிணைத்து வருகிறோம்..!"

வியாபாரிகள் ஊரடங்கைத் தவிர்க்க என்னென்ன தயார் நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்கள் என்பது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் விக்கிரமராஜாவிடம் கேட்டோம்.

‘‘தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின்கீழ் மொத்தம் 6,800 கிளைச் சங்கங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 600, 700 வணிகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். புத்தாண்டுக்கு காலண்டர் கொடுக்க கணக்கெடுத்தபோது ஒவ்வொரு கிளைச் சங்கத்திலும் சராசரியாக 70 உறுப்பினர்கள் தொழிலி லிருந்து வெளியேறியுள்ளது தெரிந்தது. கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை தாக்கத்தால் எடுக்கப்பட்ட ஊரடங்குக் காலத்தில் வியாபாரம் பாதிக்கப்பட்டு இவர்களுடைய வாழ்வாதாரத்தையே இழந்துள்ளனர். எனவே, இன்னொரு ஊரடங்கு வரக்கூடாது என்பதற்கான எல்லா முன்தயாரிப்புகளையும் நாங்கள் திட்டமிட்டுக்கொண்டே இருக்கிறோம். தொற்று பரவாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்த வியாபாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

மறுபக்கம், தொழில் பாதிக்காமல் இருக்க வாடிக்கையாளர்களின் விவரங்களைத் தொகுத்து வாட்ஸ்அப் மூலம் ஒருங்கிணைத்து, அதன் மூலம் ஆர்டர்களை எடுக்கவும், டோர் டெலிவரி செய்யவும் தயார்படுத்தியுள்ளோம். அரசுத் தரப்பிலும் ஒமிக்ரான், மூன்றாவது அலை குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. இன்னொரு ஊரடங்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்லி இருக்கிறோம்.’’

எம்.தினேஷ்குமார்
எம்.தினேஷ்குமார்

டோர் டெலிவரி செய்வோம்..!

“தேனியில் சூர்யா டிபார்ட் மென்ட் ஸ்டோரை நடத்தி வரும் எம்.தினேஷ்குமார் சொன்னதாவது... ‘‘மீண்டும் ஊரடங்கு வந்தால், மக்கள் நெரிசலைத் தவிர்ப்பதற்காக பெரிய அளவில் டோர் டெலிவரி செய்யத் திட்டமிட் டிருக்கிறோம். இதன்மூலம் விற்பனை குறையாமல் பார்த்துக்கொள்வோம்.”

-ர.பரத வர்ஷினி

ராஜேந்திரன்
ராஜேந்திரன்

“உள்ளூர் ஆள்களை வைத்து சமாளிப்போம்..!’’

புதுச்சேரியில் ஹைஃபேஷன் துணிக்கடை நடத்திவரும் ராஜேந்திரனிடம் மூன்றாம் ஊரடங்கை எதிர்கொள்ள எப்படித் தயாராகி இருக்கிறீர்கள் என்று கேட்டோம். அவர் கூறியதாவது... “எங்கள் கடைக்கு வரும் வாடிக்கை யாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, சானிடைசர் போன்றவற்றைக் கொடுத்து வருகிறோம். கடையில் பணிபுரியும் ஆள்களும் எப்போதும் முகக்கவசம் அணிந்துகொண்டும், கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்து கொண்டிருக்கிறோம். கடைக்கு வரும் அனைவரும் ஒருமுறையாவது தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். மீண்டும் ஊரடங்கு வந்தால், வெளியூர் ஆள்களைத் தவிர்த்து, உள்ளூரில் உள்ள பணியாள்களை மட்டுமே வைத்துக்கொண்டு கடையை நடத்துவோம்’’ என்றார்.

-கீர்த்தி ராஜா