ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் இனி ட்விட்டர் சுதந்திரமாக செயல்படும் என்பது போலவே பேசினார். ஆனால், ட்விட்டரை வாங்கிய கையோடு 4,000 பேரை வேலையை விட்டு நீக்கினார். அதைத் தொடர்ந்து வெரிஃபைட் ப்ளூ டிக் பயன்பாட்டுக்கு கட்டணம் வசூலிக்கப்போவதாக அறிவித்தார். இந்நிலையில் ட்விட்டரில் சிலரது கணக்குகளையும் முடக்கத் தொடங்கியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.
சமீபத்தில் அமெரிக்க ராப் பாடகர் கன்யே வெஸ்டின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. காரணம் கன்யே வெஸ்ட் பதிவிட்ட ஒரு சர்ச்சைக்குரிய பதிவுதான் என்று சொல்லப்படுகிறது.

பல முறை கிராமி விருதுகளை வென்ற கன்யே வெஸ்ட்டுக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹிட்லர், நாசிசவாதம் குறித்து சர்ச்சையான கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். மேலும், இதுதொடர்பாக எலான் மஸ்க்குக்கும் தனக்கும் இடையிலான உரையாடலையும் அவர் ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
`எலான் பாதி சீனராக இருக்கலாம் என்பது எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா? அவருடைய சிறுவயது புகைப்படங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா, ஒரு சீன மேதையை தென்னாப்பிரிக்க சூப்பர் மாடலுடன் இணைத்தால் எலான் மஸ்க் கிடைப்பார்' என்றெல்லாம் கன்யே வெஸ்ட் பதிவிட்டு கிண்டலடித்துள்ளார்.
அதற்குப் பதிலளித்த எலான் மஸ்க் `நல்லது இதை நான் காம்ப்ளிமென்டாக எடுத்துக்கொள்கிறேன்' எனப் பதிவிட்டார். அதன்பிறகு நான் பொறுமையாக இருந்துவிட்டேன். இனிமேலும் பொறுக்க முடியாது, மீண்டும் மீண்டும் விதிமுறைகளை மீறியதால் கன்யே வெஸ்ட் ட்விட்டர் கணக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறது என்று எலான் மஸ்க் கூறினார்.

கன்யே வெஸ்டின் பதிவுகள் வன்முறையைத் தூண்டும் விதமாக இருப்பதாகவும், ட்விட்டர் விதிமுறைகளை மீறியதாகவும் கூறி அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது. கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பேன் என்று சொல்லி ட்விட்டரை வாங்கியவுடன் முழக்கமிட்டார் எலான் மஸ்க். இப்போது அவரே கருத்து சுதந்திரத்துக்கு எதிராக செயல்படுகிறாரே என்ற கேள்வியைப் பலரும் முன்வைத்து விமர்சித்து வருகிறார்கள்.
அரசியல்வாதிகளைப் போலவே, `சொல்றது ஒண்ணு, செய்றது ஒண்ணு' என எலான் மஸ்க் இயங்குகிறார் அவருடைய திட்டம்தான் என்ன என்பதையே புரிந்துகொள்ள முடியவில்லை எனப் பலரும் கூறிவருகிறார்கள்.