ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

கலர்ஃபுல் பூக்கள்... கைநிறைய காசு... வீட்டிலிருந்தே சக்சஸ் பிசினஸ்!

ஜீவா கிருஷ்ணமூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜீவா கிருஷ்ணமூர்த்தி

பூ கட்டத் தெரிஞ்சவங்க இதை ஈசியா பண்ண முடியும். ஃபிளவர் டிசைனிங்குக்கு அடிப்படையான இரண்டு மூன்று மாடல் களை மட்டும் கத்துக்கிட்டா போதும்

பெரும்பாலான பெண்களுக்கு கைவந்த கலை பூ கட்டுவது. கொஞ்சம் கிரியேட்டிவிட்டியைக் கலந்து இதையே வெற்றி கரமான ஒரு பிசினஸாக மாற்றியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஜீவா கிருஷ்ணமூர்த்தி. தன்னை `பார்ட்டி ஃப்ளாரிஸ்ட்' (Party Florist) என அறிமுகம் செய்து வரவேற்கிறார்

“தமிழகத்துலேயே கல்வியில பின்தங்கிய, குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடக்குற கிருஷ்ணகிரிதான் என் சொந்த ஊர். என் அம்மா நான் படிக்கணும்னு ரொம்ப உறுதியா இருந்தாங்க. எங்க குடும்பத்துலயே முதல் பட்டதாரி நான்தான். திருமணத்துக்குப் பிறகு கணவர் எம்.எஸ்ஸி படிக்க வெச்சாரு. சின்ன வயசுல, விளையாடுறதுக்கு பதிலா எங்கம்மா கிராஃப்ட் பொருள்கள் வாங்கிக் கொடுப்பாங்க. இலைகளைப் பறிச்சுக்கொடுத்து பூ மாதிரி கட்டிப் பார்க்கச் சொல்லுவாங்க.

கணவர் ஊர் ஈரோடு. அந்த ஊர்ப்பக்கம் சின்ன ஃபங்ஷனுக்குப் போறவங்ககூட அவங்க சேலை, டிரஸ் கலருக்கு மேட்ச்சிங்கா இயற்கையான பூக்கள்ல வேணி (ஆரம்) கட்டி வெச்சிட்டுப் போவாங்க. நான் ஊருக்குப் போகும்போதெல்லாம் கணவர் வீட்ல எனக்கு வெவ்வேற நிறங்கள்ல வேணி செஞ்சு கொடுத்தனுப்புவாங்க. சென்னையில நான் அதை வெச்சுட்டுப் போகும்போது பார்க்கு றவங்க எல்லாம் ‘நிஜமான பூவா... ரொம்ப நல்லா இருக்கே... நீங்களே ரெடி பண்றீங் களா’ன்னெல்லாம் கேக்க ஆரம்பிச்சாங்க. அப்பதான் இதை ஏன் பிசினஸா ஆரம்பிக்கக் கூடாதுன்னு தோணுச்சு”

- ஜீவாவின் ‘பார்ட்டி பெட்டல்ஸ்’ பிசினஸ் இப்படித்தான் தொடங்கியது.

கலர்ஃபுல் பூக்கள்... கைநிறைய காசு... வீட்டிலிருந்தே சக்சஸ் பிசினஸ்!
கலர்ஃபுல் பூக்கள்... கைநிறைய காசு... வீட்டிலிருந்தே சக்சஸ் பிசினஸ்!

“பிசினஸ் தொடங்கலாம்னு முடிவு செஞ்சதும் பக்கத்துல இருக்குற பியூட்டி பார்லர்கள்ல போய் ஆர்டர் கேட்க ஆரம்பிச்சேன். சிலர் நல்லா இருக்கு ஆர்டர் வந்தா தரோம்னு சொன்னாங்க. சிலர் இதெல்லாம் இப்போ யாரு வெச்சுக்குறாங்க... பழைய ஃபேஷன்னு கேலியா பாத்தாங்க. ஒரு விஷயத்துல இறங்கிட்டோம், அதுல வெற்றியைப் பார்த்துடணும்கிற வைராக் கியத்துல 2014-ம் வருஷம் பிசினஸை ஆரம்பிச்சிட்டேன்” எனும் ஜீவாவின் முதல் வருமானம் சொற்பம்தான்.

“ஒரு கல்யாணத்துக்கு சம்பங்கிப்பூ வெச்சு சின்ன வேணி பண்ணிக் கொடுத்தேன். 250 ரூபாய் கிடைச்சுது. அதுதான் என் முதல் ஆர்டர். என்னுடைய தயாரிப்புகளை வாங்கினவங்க மத்தவங்கிட்ட சொல்லி வாய்வழி விளம்பரமா ஆர்டர்கள் கிடைச்சுது. ஒரு ஃபங்ஷனுக்கு ஆர்டர் வந்துச்சுன்னா அது மூலமா புதுசா இரண்டு முதல் ஐந்து ஆர்டர்கள் வரை வரும். சிலர் அவங்க வீட்ல நடக்குற எல்லா ஃபங்ஷனுக் கும் தொடர்ந்து ஆர்டர் கொடுப்பாங்க. ஃபேஸ்புக், வாட்ஸ்அப்னு சோஷியல் மீடியா மூலமும் ஆர்டர் வருது” என்பவர் திருமணம், ரிசப்ஷன், பிறந்தாள், சீமந்தம் என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஃபிளவர் டிசைனிங் செய்து கொடுக்கிறார்.

கலர்ஃபுல் பூக்கள்... கைநிறைய காசு... வீட்டிலிருந்தே சக்சஸ் பிசினஸ்!
கலர்ஃபுல் பூக்கள்... கைநிறைய காசு... வீட்டிலிருந்தே சக்சஸ் பிசினஸ்!

“பூ கட்டத் தெரிஞ்சவங்க இதை ஈசியா பண்ண முடியும். ஃபிளவர் டிசைனிங்குக்கு அடிப்படையான இரண்டு மூன்று மாடல் களை மட்டும் கத்துக்கிட்டா போதும். கொஞ்சம் பூக்கள், அதுக்கு அடிக்கிற கலர் ஸ்பிரே, சிறிய கம்பின்னு 2,000 ரூபாய் முதலீட்டுல இதைத் தொடங்கிடலாம். ஒரு ஆர்டருக்கான வேலைகளை மூணு நாலு மணி நேரத்துல முடிச்சிடலாம். கொஞ்சம் கிரியேட்டிவிட்டியோடு டிரெண்டுல உள்ள பூக்கள், டிசைன்களையும் அப்டேட் பண்ணி கிட்டா போதும். சராசரியா ஒரு மாசத்துக்கு 25,000 - 30,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்” என்றவரிடம் இதிலுள்ள சவால்கள் பற்றிக் கேட்டோம்.

“முகூர்த்த நாள்களும் பண்டிகை, விசேஷ நாள்களும் ஒண்ணா வந்தா பூக்களுக்குத் தட்டுப்பாடு இருக்கும். அதனால அதிகாலை மூணு மணிக்கு கோயம்பேடு மார்கெட்டுக்குப் போய் பூக்கள் வாங்கிட்டு வருவோம்.

கலர்ஃபுல் பூக்கள்... கைநிறைய காசு... வீட்டிலிருந்தே சக்சஸ் பிசினஸ்!
கலர்ஃபுல் பூக்கள்... கைநிறைய காசு... வீட்டிலிருந்தே சக்சஸ் பிசினஸ்!
கலர்ஃபுல் பூக்கள்... கைநிறைய காசு... வீட்டிலிருந்தே சக்சஸ் பிசினஸ்!
கலர்ஃபுல் பூக்கள்... கைநிறைய காசு... வீட்டிலிருந்தே சக்சஸ் பிசினஸ்!

ஒவ்வொரு பூவையும் ஒவ்வொரு விதமா கையாளணும். சில பூக்கள் ரொம்ப மிருதுவா இருக்கும். அதன் தன்மையும், நிறமும், அழகும் மாறாம டிசைன் செய்யுறது சவாலான காரியம். ஒரே நாள்ல நிறைய ஆர்டர் வந்துட்டா எல்லாருக்கும் ஃப்ரெஷ்ஷா செய்து கொடுக்குறது சிரமமா இருக்கும். எத்தனை ஆர்டர் வந்தாலும் எல்லாருக்கும் ஒரே தரத்துல ஃப்ரெஷ்ஷா பண்ணிக் கொடுக்கிறது பெரிய சவால்” என்பவருக்கு பொட்டிக் வைப்பதுதான் கனவு.

``வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு, ரெண்டு குழந்தைகளையும் தூங்க வெச்சிட்டு ராத்திரி பத்து மணிக்கு வேலையைத் தொடங்கி நடுராத்திரி ரெண்டு மணி வரை வேலை பார்த்த நாள்களை மறக்க முடியலை. அதுக்குள்ளே ஏழு வருஷங்கள் ஓடிருச்சு” என்பவர் வீட்டிலிருந்தே பிசினஸ் தொடங்க விரும்புவோருக்கு கொடுக்கும் ஆலோசனை இதுதான்.

“மனுஷங்க எல்லாருக்குமே ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான் இருக்கு. அந்த நேரத்தை எப்படி பிளான் பண்றோம் என்பதுலதான் நம்முடைய சக்சஸ் இருக்கு!”

வெற்றி நிச்சயம்!.

கலர்ஃபுல் பூக்கள்... கைநிறைய காசு... வீட்டிலிருந்தே சக்சஸ் பிசினஸ்!

வீட்டிலிருந்தே ஸ்டார்ட்அப் பிசினஸ்... பிரைடல் ஃபிளவர் மேக்கிங் பயிற்சி!

அன்பார்ந்த வாசகிகளே...

பெண்களில் பலருக்கு பூ கட்டுவது கைவந்த கலை. அந்தக் கலையுடன் சிறிது கிரியேட்டி விட்டைக் கலந்தால் அழகான ஸ்டார்ட்அப் பிசினஸ் தொடங்கி விடலாம். இந்த பிசினஸ் மூலம் வீட்டிலிருந்தபடியே ஒரு நாளைக்கு 3-4 மணி நேரம் மட்டுமே செலவழித்து மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்க முடியும். அவள் விகடன் வாசகிகளுக்காக ‘பிரைடல் ஃபிளவர் மேக்கிங்’ பயிற்சி நேரடியாகவும் ஆன்லைனிலும் நடை பெறவுள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த பிசினஸை வெற்றிகரமாக நடத்தி வரும் Party Florist ஜீவா கிருஷ்ணமூர்த்தி பயிற்சியை அளிக்கவிருக்கிறார். ஃபிளவர் டிசைனிங் மாடல்கள், டிசைனிங்குக்குத் தேவையான பொருள்களைக் குறைந்த விலையில் எங்கு வாங்கலாம், மார்கெட்டிங் உத்திகள் உள்ளிட்டப் பல்வேறு விஷயங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை நிறைவு செய்தவர்கள் திருமணம், ரிசப்ஷன், சீமந்தம், பூப்பெய்துதல், பிறந்தநாள் விழா, பார்ட்டிக்கள், விளம்பர ஷூட் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு விதவிதமான பூ அலங்காரங்கள் செய்து கொடுத்து வருமானம் ஈட்டலாம்.

கட்டணம்: நேரடிப் பயிற்சி ரூ.1,000

ஆன்லைன் பயிற்சி ரூ.500

நேரடிப் பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு அடிப்படை டிசைனிங்குக்குத் தேவையான கிட், பூக்கள் ஆகியவை வழங்கப்படும். பங்கேற்பவர்கள் பயிற்சி அரங்கிலேயே ஓரிரு மாடல்களை பயிற்சியாளரின் கண்காணிப்பில் செய்து காண்பித்து, அதிலிருக்கும் சந்தேங்களுக்குத் தீர்வைப் பெறலாம். ஆன்லைனில் பங்கேற்பவர்களுக்கு பிசினஸ் தொடர்பான அனைத்து விவரங்கள், ஃபிளவர் மேக்கிங் செயல்முறை, மார்கெட்டிங், டிசைனிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விடை ஆகியவை அளிக்கப்படும்.

நாள்: நவம்பர் 13 (சனிக்கிழமை) நேரம்: காலை 10.30 மணி முதல் நேரடிப் பயிற்சிக்கு மொத்தம் 30 இடங்கள் மட்டுமே உள்ளன. முன்பதிவுக்கு முந்துங்கள்!

முன்பதிவு செய்ய... க்ளிக் செய்யவும்