நம் நாட்டில் இன்னும் பெரும்பாலான மக்கள் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்காமல்தான் இருக்கிறார்கள். இதனால் லைஃப் இன்ஷூரன்ஸ் கவுன்சில் ஆயுள் காப்பீட்டின் அவசியத்தை வலியுறுத்தி, `எல்லாவற்றுக்கும் முதலில் - ஆயுள் காப்பீடு’ (Sabse Pehle Life Insurance) என்ற பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.
ஆயுள் காப்பீடு (Life Insurance) செய்த தனிநபர் ஒருவர் இறந்துபோனால், அவரை சார்ந்துள்ள குடும்பத்தினருக்கு ஏற்படும் நிதி சார்ந்த இழப்புகளை காப்பீடு ஈடுகட்டும். எனவே, இது குடும்ப பாதுகாப்பு அம்சமாக விளங்குகிறது.
எனவே, குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் ஆயுள் காப்பீடு செய்வதன் மூலம், அவரை சார்ந்திருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கு நிதிப் பாதுகாப்பு கிடைகிறது.

எல்லாவற்றுக்கும் முதலில் - ஆயுள் காப்பீடு.!
முதலீட்டைவிட ஆயுள் காப்பீடு முக்கியம். காரணம், முதலீடு என்பது அதன் திட்டமிட்ட காலம் முழுக்க முதலீடு செய்தால் மட்டுமே அதன் முழுப் பலனை தரும். உதாரணத்துக்கு பொது சேமநல நிதி (பிபிஎஃப்) திட்டத்தில் 15 ஆண்டுகள் முழுமையாக முதலீடு செய்தால்தான் அதன் முழுமையான பலன் கிடைக்கும். ஆனால், ஆயுள் காப்பீடு அப்படி அல்ல. ஓரிரு பிரீமியம் கட்டியிருந்தாலும், பாலிசிதாரருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதன் முழு கவரேஜ் தொகையும் குடும்பத்துக்கு இழப்பீடாகக் கிடைக்கும்.
முதலீட்டை ஆரம்பிக்கும் முன்..!
முதலீட்டை ஆரம்பிக்கும் முன் செய்ய வேண்டிய முக்கிய விஷயம் ஆயுள் காப்பீடு எடுப்பதாகும். அப்போதுதான் குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் இல்லை என்றாலும் அவர் நினைத்தது போல், பிள்ளைகளின் கல்வி, கல்யாணம் போன்றவை நடக்கும். இதற்கு ஆயுள் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை கைகொடுப்பதாக இருக்கும்.
ஆயுள் காப்பீட்டு பாலிசிகளில் பலவகைகள் உள்ளன. காப்பீடு மற்றும் சேமிப்பு பலனை இணைந்து வழங்கும் எண்டோவ்மென்ட் பாலிசிகள், யூலிப் பாலிசிகள் இருக்கின்றன. இந்த பாலிசிகளில் முதிர்வு தொகை இருப்பதால் ஆயுள் காப்பீடு கவரேஜ் தொகை குறைவாக இருக்கும். அதாவது, கட்டும் ஆண்டு பிரீமியத்தில் சுமார் 7 மடங்கு அல்லது 10 மடங்கு தொகைதான் கவரேஜ் ஆக இருக்கும். உதாரணத்துக்கு, ஒருவர் ஆண்டுக்கு ரூ.50,000 பிரீமியம் கட்டுகிறார் என்றால் ரூ.3.5 லட்சம் அல்லது ரூ.5 லட்சம்தான் கவரேஜ் இருக்கும். குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் இறந்தால் இன்றைய விலைவாசியில் இந்தத் தொகை பெரிதாக உதவிகரமாக இருக்காது.

Also Read
முழுமையான காப்பீடு..!
டேர்ம் இன்ஷூரன்ஸ் (Term Insurance) என்கிற காப்பீட்டுத் திட்டம் இருக்கிறது. இதில், பாலிசி எடுத்தவர் பாலிசி காலத்தில் இறந்தால் இழப்பீடு வழங்கப்படும். காப்பீடு எடுத்தவர் பாலிசி காலம் வரை உயிருடன் இருந்தால், எந்தவொரு தொகையும் வழங்கப்படாது. இந்த பாலிசியில் பிரீமியம் மிகக் குறைவாக இருக்கும். ஆனால், இழப்பீட்டுத் தொகை மிக அதிகமாக இருக்கும். உதாரணத்துக்கு, 30 வயதுள்ள ஒருவர் அவரின் 60 வயது வரை அதாவது 30 ஆண்டுகளுக்கு ரூ.1 கோடிக்கு டேர்ம் பிளான் எடுக்கிறார் என்றால், ஆண்டு பிரீமியம் சுமார் 14,000 தான். அதாவது மாதம் ரூ.1,170 தான். மற்ற வயதினருக்கு எவ்வளவு பிரீமியம் என்பதைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
ஒரு கோடி டேர்ம் பிளான்: ஆண்டு பிரீமியம் எவ்வளவு?

சம்பாதிக்கும் 60 வயது வரை, தோராய பிரீமியம் எவ்வளவு தொகைக்கு ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும்?
சம்பாதிக்கும் நபரின் பெயரில்தான் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்க வேண்டும். எவ்வளவு தொகைக்கு பாலிசி எடுக்க வேண்டும் என்பதற்கு பொதுவான விதிமுறையாக ஒருவரின் ஆண்டு சம்பளத்தைப் போல் சுமார் 15 மடங்கு என்பதாக உள்ளது. 20 மடங்கு தொகைக்கும் ஆயுள் காப்பீடு எடுத்துக்கொள்ளலாம். ஆனால், குறைந்தது ஆண்டு சம்பளத்தைப் போல் 10 -12 மடங்காவது எடுத்துக்கொள்ள வேண்டும்.

உதாரணத்துக்கு, ஒருவரின் மாதச் சம்பளம் ரூ. 50,000 என வைத்துக்கொள்வோம். அவரின் ஆண்டு சம்பளம் ரூ.6 லட்சம் என்கிறபோது அதன் 15 மடங்கு ரூ.90 லட்சத்துக்கு டேர்ம் பிளான் ஆயுள் காப்பீடு எடுத்துக்கொள்வது நல்லது. இந்த நிலையில் இவர் ரூ.40 லட்சத்துக்கு வீட்டுக் கடன் வாங்குகிறார் என்றால், இந்தத் தொகைக்கும் சேர்த்து ரூ.1.30 கோடிக்கு டேர்ம் பிளான் கவரேஜை அதிகரித்துக்கொள்வது அவசியமாகும்.
இந்த அளவுக்கு அதிக தொகைக்கு காப்பீடு எடுத்துவிட்டு பிரீமியம் கட்ட கஷ்டமாக இருக்கும்பட்சத்தில் வீட்டுக் கடனுக்கு கடன் தொகை குறைய குறைய இன்ஷூரன்ஸ் கவரேஜ் குறையும் விதமான டேர்ம் பிளான் எடுத்துக்கொண்டால் பிரீமியம் குறைவாகக் கட்டினால் போதும். மேலும், சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க, குடும்ப பொறுப்பு அதிகரிக்க அதிகரிக்க இந்தத் தொகையை சுமார் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையை அதிகரித்து வருவது அவசியமாகும்.
இழப்பீடு வழங்கும் விகிதம்..!
ஆயுள் காப்பீடு எடுக்கும்போது இன்னொரு பொதுவான விதிமுறையையும் கவனிக்க வேண்டும். அது இழப்பீடு வழங்கிய விகிதம் (Claim Settlement Ratio) ஆகும். இந்த விகிதம் 95% மற்றும் அதற்கு அதிகமாக இருப்பது நல்லது.
க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதம் = இழப்பீடு வழங்கப்பட்ட பாலிசிகள் எண்ணிக்கை / மொத்தம் இழப்பீடு கோரப்பட்ட பாலிசிகளின் எண்ணிக்கை.

உதாரணத்துக்கு ஓர் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 100 பேர் இழப்பீடு கேட்டு விண்ணப்பித்திருக்கும்பட்சத்தில் சுமார் 95 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டிருந்தால் அந்த நிறுவனத்தில் பாலிசி எடுப்பது நல்லது. இந்த இழப்பீட்டு விகிதத்தை ஆண்டுக்கு ஒரு முறை இந்திய ஆயுள் காப்பீட்டுத் துறையை நெறிமுறைப் படுத்தி வரும் ஐ.ஆர்.டி.ஏ.ஐ அமைப்பு வெளியிட்டு வருகிறது.
நிதி ஆண்டு (1 ஏப்ரல் முதல் மார்ச் 31) முடிந்து சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு ஐ.ஆர்.டி.ஏ.ஐ ஆண்டு அறிக்கையை தயாரிக்கும். அதில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு கொடுத்த விகிதம் இருக்கும்.
க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதம்: 2020-21
ஒருவர் 40, 45, 50 வயது வரைக்கும்தான் வேலை பார்க்க போகிறேன். அதற்குள் குடும்பத்தின் நிதித் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டு சுதந்திரப் பறவையாக மாறிவிடுவேன் எனத் திட்டமிட்டால், அந்த வயது வரைக்கும் டேர்ம் பிளான் எடுத்தால் போதும். அப்போதுதான் பிரீமியம் குறைவாக இருக்கும்.

பலர் 70, 75, 80 வயது வரைக்கும்கூட ஆயுள் காப்பீடு பாலிசியை எடுத்து தேவையில்லாமல் அதிக பிரீமியத்தைக் கட்டி வருகிறார்கள். இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். ஆயுள் காப்பீட்டின் பிரதான நோக்கமே, ஒருவர் எவ்வளவு காலம் சம்பாதிக்கப் போகிறாரோ, வேலை பார்க்கப் போகிறாரோ அது வரைக்கும் குடும்பத்துக்கு நிதி ரீதியான பாதுகாப்பை அளிப்பதாகும்.
நீங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் வேலை பார்க்கப் போகிறீர்கள் என்பதைக் கணக்கிட்டு, ஆண்டு சம்பளத்தைப் போல் அத்தனை மடங்குக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது சரியாக இருக்கும்.
குடும்பத்தில் மருத்துவச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்..!