ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வீட்டிலிருந்தே பெருங்காயம் தயாரிப்பு... மாதம் ஒரு லட்சம் வருமானம்!

ஈரோடு நித்யா
பிரீமியம் ஸ்டோரி
News
ஈரோடு நித்யா

ஈரோடு நித்யாவின் அசத்தல் பிசினஸ்

உணவுக்கு மணமூட்டுவதோடு, செரி மானத்துக்கு உதவும் சேர்மானமாகவும் பயன்படுத்தப்படுகிறது பெருங்காயம். இதைத் தயாரிப்பவர்களையும், பிரதான தொழிலாக விற்பனை செய்பவர்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் ஒருவர் நித்யா சுப்ரமணியம்.

ஈரோடு மாவட்டம் சிங்கிரிபாளையத் தைச் சேர்ந்த நித்யா தயாரிக்கும் பெருங் காயம், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனையாகி, மணம் வீசுகிறது. இல்லத் தரசி டு தொழில்முனைவோர் பரிமாணம் குறித்துப் பேசுபவரின் பேச்சிலும் முகத் திலும் தன்னம்பிக்கை பிரகாசம்.

“இல்லத்தரசியா இருந்த நான், நேரத்தைப் பயனுள்ளதா அமைச்சுக்க மசாலாப் பொருள்கள் தயாரிப்புல இறங்கினேன். மசாலாக்கள் தயாரிப்புக்குப் பெருங்காயம் முக்கியமான மூலப்பொருள். சில நிறுவனங் களோட பெருங்காயத்தைப் பயன்படுத்தின போது மசாலாக்களின் தரம் மாறுபட்டுச்சு. அதனால, ஆரோக்கியமான முறையில் நாமே பெருங்காயம் தயாரிச்சுக்கலாம்னு பயிற்சியும் எடுத்தேன். சில ஆயிரம் ரூபாய் முதலீட்டுல, குறைவான அளவுல பெருங் காயம் தயாரிச்சு, பலருக்கும் கொடுத்தேன். நல்ல வரவேற்பு கிடைச்சதால, மசாலாக்கள் தயாரிப்புடன், பெருங்காய பிசினஸையும் கெட்டியா பிடிச்சுகிட் டேன்” - சுயதொழிலுக்குள் நுழைந்தவர், பெருங்காயத் தின் தயாரிப்பு முறையை விவரித்தார்.

வீட்டிலிருந்தே பெருங்காயம் தயாரிப்பு... மாதம் ஒரு லட்சம் வருமானம்!

“ஆப்கானிஸ்தான்ல வளரும் பெருங்காய மரத்தின் (Ferula Foetida Asafoetida tree) பால்லேருந்து கிடைக்கிற பிசின்தான் `காபுலி' (Kabuli). இதுதான் பெருங்காயம் தயாரிப்புக் கான மூலப்பொருள். தமிழ்நாட்டுல பெரு நகரங்கள்ல மட்டும்தான் காபுலி சுலபமா கிடைக்குது. காபுலியை உணவுல நேரடியாகப் பயன்படுத்தக் கூடாதுனு சொல்வாங்க. எனவேதான், மைதா மற்றும் கடுகு எண்ணெய் உள்ளிட்ட சில உணவுப் பொருள்களையும் சேர்த்து பெருங்காயம் தயாரிப்பாங்க. தேவை யான மூலப்பொருள்களை ஒண்ணா சேர்த்து, அந்தக் கலவையை புட்டு மாவுபோல உதிரியா மாத்தி, சுமார் அரை மணி நேரம் உலர வெச்சு அரைச்சா பெருங்காயத்தூள் தயாராகிடும். மைதாவுக்குப் பதிலா கோதுமை மாவு அல்லது பலவிதமான சிறுதானியங்களை ஒண்ணா சேர்த்து அரைச்சுப் பயன்படுத்து றேன். ஒன்பது விதமான பொருள்களைச் சேர்த்து பெருங்காயம் தயாரிக்கிறேன்” என்கிற நித்யா, மூன்று விதமான பெருங்காயம் தயாரிக்கிறார்.

“பெருங்காயத்தூள் மற்றும் கெட்டிப் பெருங்காயத்துடன், பால் பெருங்காயம்னு ஒண்ணு தயாரிக்கிறேன். இதை மூலிகை மருந்துகள் தயாரிக்கிறவங்க ரெகுலரா என்கிட்ட வாங்கிறாங்க. சுவை, மணம் மற்றும் நீண்டகால பயன்பாடுனு எதுக்காகவும் பெருங்காயத்துல ரசாயன பொருள்கள் எதையுமே நான் சேர்க்கிறதில்லை. பெருங் காயத்தை வருஷக்கணக்குல வெச்சிருந்து சிலர் பயன்படுத்துவாங்க. ஆனா, பெருங்காயத்தை சில மாதங்களுக்குள் பயன் படுத்திடுறது நல்லதுங்கிறதை என் வாடிக்கையாளர் களுக்கு வலியுறுத்துறேன். ஆர்டரை பொறுத்து குறை வான அளவுலதான் கெட்டிப் பெருங்காயம் தயாரிக்கிறேன். கெட்டிப் பெருங்காயம் செய்றதுக்கு, மூலப்பொருள்களை யெல்லாம் சேர்த்து, காலால மிதிச்சுதான் கெட்டித்தன்மைக்கு மாத்துவாங்கன்னும், அந்த வேலையை ஆண்கள்தான் செய்வாங்கன் னும் சொல்லப்படுது. ஆனா நான் அதையும் கையாலதான் தயாரிக்கிறேன்” என்பவர், பெருங்காய விற்பனையில் மாதம் ஒரு லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார்.

“மூணு வருஷத்துக்கு முன்பு பெருங்காய தயாரிப்பைத் தொடங்கினப்போ, ஈரோடு சிந்தாமணி கூட்டுறவு சங்கம் மூலமா விற்பனை செஞ்சேன். அப்புறமா வாட்ஸ்அப் குழுக்கள் மூலமா ஆர்டர்கள் அதிகரிச்சது. ‘என்.எம் பெருங்காயம்’ங்கிற பிராண்டு பெயர்ல,

10 கிராம், 25 கிராம், 50 கிராம் டப்பாக்கள்ல நிரப்பி, இயற்கை அங்காடிகள் மற்றும் மளிகைக்கடைகள்ல விற்பனை செய்றேன். பெருங்காய விற்பனையில செலவுகள்போக நிலையான லாபம் கிடைக்குது. ஆர்டர்களைப் பொறுத்து, ஒருநாளைக்கு இரண்டு மணி நேரம் வீதம், வாரத்துல நாலு நாள்கள்தான் வேலை இருக்கும். உதவிக்கு யாரையும் வச்சுக்கறதில்லை. பெண்களுக்குப் பெருங் காயம் தயாரிப்பு நல்ல தொழில் வாய்ப்பு. முறையான பயிற்சியுடன், விற்பனை வாய்ப்பை உறுதிபடுத்திட்டு இந்தத் தொழி லுக்கு வந்தா, நிச்சயமா வெற்றி பெறலாம்” என்று நம்பிக்கையூட்டுகிறார் நித்யா.