தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் வருமான வரி செலுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தித்து விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தினர். இந்த கூட்டம் மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடந்தது.

இதில் தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ஆர்.ரவிச்சந்திரன், மதுரை மண்டல தலைமை ஆணையர் சீமாராஜ், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான வருமான வரித்துறை தலைமை ஆணையர் எம்.ரத்தினசாமி உட்பட பல அதிகாரிகள் மற்றும் வரிசெலுத்துவோர்கள் பலர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்கு பின் மதுரை வருமானவரித்துறை அலுவலகத்தில் வருமானவரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
``தமிழ்நாடு, புதுச்சேரியில் வசூலாகும் வருமான வரி குறித்து இந்த கூட்டத்தில் ஆய்வு செய்தோம். வருவமான வரி கட்டியவர்களிடம், அவர்களுக்கு வரி செலுத்துவதில் உள்ள சிரமங்கள் என்ன?, அவர்களுடைய கோரிக்கைகளை என்ன என்பதை கேட்டு அறிந்து கொண்டோம். மதுரை மண்டலத்தில் TDS பைலில் உள்ள குழப்பம் பற்றி கூறினார்கள், அவர்களுக்கு TDS ரிட்டன் குறித்து ஆலோசனைகளை வழங்கினோம்.

வருமானவரித்துறையின் வரி செலுத்துவோருக்கான சேவையை சிறப்பாக செய்துவருகிறோம். தற்போது வருமானவரியில் ரீஃபண்ட் பிரச்னை இல்லை, வரி செலுத்துவோரின் புகார்கள் மீது 30 நாட்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை மண்டலத்தில் இந்திய அளவில் வரிவசூல் மிகக்குறைவு. ரூ.4 ஆயிரம் கோடி வருமான வரி வசூலாக வேண்டிய மதுரை மண்டலத்தில், 2 ஆயிரத்து 100 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் காலாண்டில் கூடுதலாக வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. விவாஸ்வே விஸ்வாகி என்ற முகாம் மூலமாக மதுரை மண்டலத்தில் 600 பேர் பயனடைந்துள்ளனர். FORM -5 -ஐ வழங்கி வரிபாக்கி குறித்த பிரச்னைகளுக்கான முடிவுகளை வழங்கி வருகிறோம்.
இந்திய அளவில் ஒப்பிடும்போது வருமான வரி வசூலில் தமிழ்நாடு வருவாய் சிறப்பாக உள்ளது. தமிழகம் புதுச்சேரிக்கு 1லட்சத்து 8ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 70 சதவிதம் வரி வசூலித்துள்ளோம். இந்திய அளவில் வரி வசூலில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது.

கடந்த காலங்களை ஒப்பிடும்போது தற்போது 28 சதவீதம் வளர்ச்சி விகிதத்தை அடைந்துள்ளோம். வரும் நிதியாண்டில் 1.25ஆயிரம் கோடி வசூலிக்கவுள்ளோம்.
கடந்த ஆண்டில்தான் முதல் முறையாக ஒரு லட்சம் கோடி என்ற இலக்கை நிர்ணயம் செய்தோம். நிறைய பேர் ஆர்வமாக முன்வந்து வரி கட்டுகிறார்கள். இதுவரை தமிழகத்தில் 67 லட்சம் பேர் வரி கட்டியுள்ளனர். மதுரை மண்டலத்தில் மட்டும் 9 லட்சம் பேர் வருமான வரி கட்டுகிறார்கள். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் பேர் புதிதாக வருமான வரி செலுத்துகின்றனர். இந்த எண்ணிக்கை அகில இந்திய அளவிலும் அதிகமாகியுள்ளது. அதனால், வருமான வரி கட்டும் விழிப்புணர்வை மேலும் அதிகமாக்கவே இதுபோன்ற கருத்தரங்கை நடத்துகின்றோம்.
வருமான வரி கட்டுவதில் நிறைய மாற்றம் வந்துள்ளது. அதை எப்படி செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் பொதுமக்கள், தனியார் நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு செய்கிறார்கள். டிரஸ்ட் வரி விலக்கு கொடுப்பது பற்றியும் விழிப்புணர்வு செய்கிறோம். அதனால், இதுபோன்ற கருத்தரங்கு வரி கட்டுகிறவர்களுக்கு உதவியாக இருந்துள்ளது. வருமான வரி கட்டுவோர்கள் கோரிக்கைகளுக்கு 30 நாளில் தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளோம்.

வரிபாக்கி வைத்துள்ளவர்கள மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வரி கட்டாதவர்கள் சொத்துகளை அடையாளம் கண்டு அதனை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கிறோம். அவர்கள் பற்றிய டேட்டா பேஸ் விவரங்களை வைத்து அவர்கள் எங்கெல்லாம் சொத்துகளை வைத்துள்ளார்கள் என்று கண்டறிந்து ஆய்வுசெய்து வருகிறோம். அவர்களது சொத்துகளை ஏலம் விட்டு, அதன் வழியாக வரியை வசூலிக்க திட்டமிட்டுள்ளோம், என்று தெரிவித்தார்.