
டிஜிட்டல் கரன்சி
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்த கத்தை அனுமதிப்பதா, கூடாதா என பலமாக யோசித்து வந்தது மத்திய அரசாங்கம். ஆனால், கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், கிரிப்டோகரன்சிக்கு 30% வரி விதித்ததன்மூலம் இனி கிரிப்டோகரன்சி வர்த்தகத்துக்கு தடை வராது என்று நினைத்து, அதில் வர்த்தகம் செய்யும் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.
அதேபோல, ஆர்.பி.ஐ வாயிலாக இந்தியாவுக்கென்று பிரத்யேகமாக டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படும் எனவும் மத்திய அரசு இந்த பட்ஜெட் மூலம் சொல்லியிருக்கிறது. சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (CBDC) என்கிற கரன்சியை ஆர்.பி.ஐ நடப்பு நிதி ஆண்டுக்குள் வெளியிடும் என பட்ஜெட் உரையில் சொல்லியிருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கிரிப்டோகரன்சிக்கும், இனி மத்திய அரசாங்கம் வெளியிட இருக்கும் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சிக்கும் என்ன வித்தியாசம், இந்த சி.பி.டி.சி வெளியீட்டால் ஏற்படப்போகும் நன்மைகள் என்ன, கிரிப்டோகரன்சியைப் போலவே, சி.பி.டி.சி-யும் டிரேட் ஆகுமா, அதன் மதிப்பு தினமும் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாகுமா என்கிற பல்வேறு கேள்விகளுடன் ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ அர்ஜுன் விஜய்யிடம் பேசினோம். அவர் தெளிவான விளக்கத்தைத் தந்தார்.

“இந்திய அரசால் வெளியிடப்படும் டிஜிட்டல் கரன்சிதான் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி. ஆர்.பி.ஐ-யின் கட்டுப்பாட்டின்கீழ் இந்த கரன்சி செயல்படும். பொதுவாக, பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சியை யார் வெளியிடு கிறார்கள் என்றோ, யார் அதை நிர்வகிக்கிறார்கள் என்றோ தெரியாது. பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் சப்ளை, டிமாண்டுக்கேற்ப மதிப்பு மாறக்கூடியவை. ஆனால், மத்திய அரசாங்கம் இப்போது வெளியிட இருக்கும் சி.பி.டி.சி-யானது கிரிப்டோகரன்சியைப் போல வர்த்தகம் ஆகாது. இது உண்மையான ரூபாய் நோட்டுகளுக்கான டிஜிட்டல் வடிவம் மட்டுமே. 100 ரூபாய் நோட்டின் மதிப்பு எப்படி மாறாதோ அதேமாதிரி, இந்த சி.பி.டி.சி-யின் மதிப்பும் மாறாது. தொழில்நுட்பம் வளர வளர அந்தந்த நாட்டின் கரன்சி தொடர்பான, பணப்பரிமாற்றம் தொடர்பான தொழில்நுட்பங்களும் வளர்ச்சியைச் சந்திக்கின்றன. இது காலம் காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படியான ஒரு நிகழ்வுதான் இப்போதும் நடக்கிறது. ஆர்.டி.ஜி.எஸ் போல, என்.இ.எஃப்.டி போல, சமீபத்தில் அறிமுகமாகி, தற்போது மக்களிடையே மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கும் யு.பி.ஐ தொழில்நுட்பம் போலத்தான் இந்த சி.பி.டி.சி-யும். பிட்காயின் வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படும் பிளாக் செயின் தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்த டிஜிட்டல் கரன்சியை இந்திய அரசாங்கம் தயாரிக்க இருக்கிறது.
ரூபாய் நோட்டுகளைக் கொண்டு தேவையானதை நிறை வேற்றிக்கொள்வது போல, இந்த டிஜிட்டல் கரன்சியைக் கொண்டும் நமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். அதேபோல், முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடியவை என்பதால், இந்த டிஜிட்டல் பணத்தை 100% பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும்.

இந்தியாவைப் போல சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் பிளாக்செயின் தொழில்நுட்பத் தின் அடிப்படையில் அந்தந்த நாடுகளின் கரன்சிகளை டிஜிட்டல் முறையில் வெளி யிடத் தயாராகி வருகின்றன. பிட்காயின் உருவாக்கத்துக்கு அடிப்படையாக இருக்கும் பிளாக்செயின் தொழில்நுட்பத் தில் இதுவரை எந்தப் பிரச்னை யும் வந்ததில்லை. பிளாக்செயின் தொழில்நுட்பத்துகான பராமரிப்பு குறைவு என்பதால், பராமரிப்பு செலவுகளும் குறைவு.
ஒவ்வொரு பிட்காயின் பரிமாற்றத்தின்போதும் யார், யாருக்கு விற்கிறார் / வாங்குகிறார் என்பதை சோதிக்கும் ஆடிட்டிங் நடக்கும். இந்த டிராக்கிங் செய்வது மிகவும் சுலபம். இதே தொழில்நுட்பத்தின் மூலம் டிஜிட்டல் பணத்தை உருவாக்கும்போது, ரூபாய்த் தாள்களை அச்சிடும் செலவுகள், நிர்வாகம் செய்யும் செலவுகள் அரசுக்குப் பெரிய அளவில் குறையும். கள்ள நோட்டு உருவாவது முற்றிலும் தடுக்கப்படும். பணப்பரிமாற்றம் தொடர்பான விஷயங்கள் வெளிப்படையாக இருக்கும். மேலும், உள்நாட்டுப் பரிமாற்றம் முதல் வெளிநாட்டுப் பரிமாற்றம் வரையில் 24 மணி நேரமும் தங்குதடை யில்லாமல் செய்ய முடியும். ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு சி.பி.டி.சி மிகவும் பாதுகாப்பாகவும் அதே சமயம், பணத்தைப் பரிமாறிக் கொள்ள எளிமையாகவும் இருக்கும்.
டிஜிட்டல் கரன்சி பயன்பாடு அதிகரித்தால், ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு இணைந்து நாட்டின் பணப் புழக்கத்தை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். இதேபோல், இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் கறுப்புப் பணத்தை மத்திய அரசால் எளிதாக ஒழிக்க முடியும். ஏனெனில், கடந்த பத்து வருடங்களாக யாராலும் கள்ள பிட்காயினை உருவாக்க முடியவில்லை. அந்த அளவுக்கு பிளாக் செயின் தொழில்நுட்பம் மிக நேர்த்தியாகவும் பாதுகாப்புடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே தொழில்நுட்பத்தை டிஜிட்டல் கரன்சியை உருவாக்க பயன்படுத்தும்போது, கள்ள டிஜிட்டல் கரன்சியை யாராலும் உருவாக்க முடியாது. ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திய மக்கள், சி.பி.டி.சி பயன்படுத்த ஆரம்பிக்கும்போது, ரூபாய்த்தாள்களின் தேவை குறைந்துகொண்டே வரும்.
தற்போதுள்ள யு.பி.ஐ, ஆர்.டி.ஜி.எஸ் தொழில் நுட்பத்தைவிட, பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் சி.பி.டி.சி பயன்படுத்துவதற்கு எளிமையாக இருந்து, யு.பி.ஐ பயன்படுத்துபவர்களே இந்தத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த ஆரம்பித் தால், அது டிஜிட்டல் பணத்துக்கான வெற்றியாக இருக்காது. ரூபாய்த்தாள்களைப் பயன்படுத்துபவர்கள் இந்த சி.பி.டி.சி-யைப் பயன்படுத்தும் அளவுக்கு அது எளிமையாக இருந்தால் மட்டுமே அது உண்மையான வெற்றியாக இருக்கும்.
இந்த டிஜிட்டல் கரன்சியை இணையப் பயன்பாடு இல்லாமல் ஆஃப்லைனில் பயன்படுத்தும் வகையில் உருவாக்க முடியுமா என்பதையும் இந்திய அரசாங்கம் முயற்சி செய்துவருகிறது. ஆஃப்லைனில் இதைப் பயன்படுத்துவது சாத்தியமானால் பட்டிதொட்டி எங்கும் டிஜிட்டல் கரன்சி பயன்படுத்தப்படும்; இணைய பயன்பாடு இல்லாத கிராமங்கள் வரையிலும் இந்த சி.பி.டி.சி போய்சேரும்.
இந்த சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சியை நடப்பு நிதி ஆண்டுக்குள் வெளியிடுவோம் என அரசாங்கம் சொல்லியிருக்கிறது. இருப்பினும், இந்த கரன்சிக்கான பயன்பாட்டுக் கணக்கை வங்கிகள் நிர்வகிக்குமா அல்லது ஆர்.பி.ஐ நேரடியாக நிர்வகிக்குமா அல்லது இதற்கென்று தனியாக ஓர் அமைப்பை உருவாக்கி அந்த அமைப்பு இந்த கரன்சி கணக்கு களை நிர்வகிக்குமா என்பது குறித்த விவரங்களை இன்னும் மத்திய அரசு முழுமையாக வெளியிடவில்லை.
இந்த கரன்சி செயல் பாட்டுக்கான முழு விதிமுறைகளையும் அரசாங்கம் வெளியிட்ட பிறகே, சி.பி.டி.சி பயன்பாட்டுக்கு வரும்” என்றார் தெளிவாக.