
புதிய பகுதி

ஏ.டி.எம் கார்டு 16 நம்பர் சொல்லுங்க..!
சமீபத்தில் எனக்கு பிரபல வங்கியில் இருந்து மேனேஜர் பேசுவதாகச் சொல்லி ஒரு நபர் போனில் பேசினார். ‘எனது ஏ.டி.எம் கார்டை அப்டேப் செய்ய வேண்டும்’ எனக் கூறி, என் டெபிட் கார்டில் உள்ள 16 இலக்க எண்ணைச் சொல்லச் சொன்னார். என் நண்பனின் அப்பாவுக்கு இது போல் போன்கால் வந்து 20,000 பணத்தைப் பறிகொடுத்த கதையைக் கடந்த வாரம் தான் என்னிடம் சொல்லி யிருந்தான். எனவே, நான் உஷாராகிவிட்டேன். “நீங்கள் குறிப்பிட்ட வங்கியில் எனக்கு சேமிப்புக் கணக்கே இல்லை” எனச் சொன்னேன். ஆனால், எல்லா வங்கி கார்டுகளுக்கும் அவர்தான் அப்டேட் செய்வதாகச் சொன்னார். எப்படியாவது என் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துவிட வேண்டும் என்ற அந்த ஆசாமியின் பிளானைப் புரிந்துகொண்ட நான், வாய்க்கு வந்தபடி 16 நம்பர்களைச் சொன்னேன். கொஞ்சம் குழப்பமான அந்த நபர், மீண்டும் சொல்லுங்கள் என்றார். முதலில் சொன்ன நம்பர்களை நான் குறித்து வைத்துக்கொள்ளவில்லை என்பதால், மறுபடியும் வேறு நம்பர்களைச் சொன்னேன். கடுப்பாகிப்போன அவர், என்னை மிக மோசமான கெட்டவார்த்தை சொல்லி திட்டிவிட்டு போனை வைத்துவிட்டார். வங்கியில் இருந்து போன் மூலமாக சேமிப்புக் கணக்கு, ஏ.டி.எம் கார்டு உள்ளிட்ட அப்டேட் எதுவும் செய்வதாக யார் சொன்னாலும் உஷார் மக்களே உஷார்!
- தே.மாணிக்கம், நாமக்கல்.

கல்யாண ஜவுளிகளுக்குக் கைகொடுத்த மொத்த விலை கடை!
என் தம்பி மகளுக்குக் கடந்த வருஷம் திருமணம் செய்தோம். பணச் சிக்கல் காரணமாக சரியான பட்ஜெட்டுக்குள் எல்லா செலவுகளையும் அடக்க வேண்டிய நிர்ப்பந்தம். முக்கியமான சொந்தபந்தங்களுக்கு எல்லாம் ஜவுளி எடுக்க வேண்டிய நிலையில் கல்யாணத்துக்கான ஜவுளி செலவுகள் மட்டுமே பட்ஜெட்டில் 80,000 ரூபாய் ஒதுக்க வேண்டியிருந்தது. சென்னையில் உள்ள என் சித்தப்பாவுக்குப் பத்திரிகை வைக்கச் சென்றபோது ஜவுளி எடுக்க வேண்டிய தகவலைச் சொன்னேன். பாரி முனையில் உள்ள மொத்த விலை கடைக்கு என்னை அழைத்துச் சென்றார். கல்யாணத்துக்குத் தேவையான அனைத்துத் துணிமணிகளையும் 50,000 ரூபாய்க்குள் எடுத்து முடித்தோம். 20, 30 சேலைகள் வாங்க வேண்டிய நிலையில் மொத்த விலை கடையைத் தேடிச் சென்றால், 30 - 35% வரைக்கும் பணத்தை மிச்சப் படுத்த முடியும் என அப்போது தான் தெரிந்துகொண்டேன். மொத்த விலைக் கடை என்றதும் சென்னைக்கு தான் வர வேண்டும் என்பதில்லை. எல்லா பெரிய நகரங்களிலும் மொத்த விலைக் கடைகள் இருக்கவே செய் கின்றன. திட்டமிட்டுப் பயன்படுத்திக்கொள்வது நம் கைகளில்தான் இருக்கிறது.
- சி.ரேணுகா, கடலூர்

நல்லா தெரிஞ்சு பண்ணணும் ஆன்லைன் பர்ச்சேஸ்!
என் மகள் பிறந்த நாளுக்காக பிரபல ஆன்லைன் தளத்தில் அவள் விரும்பிய ஆடையைத் தேர்வு செய்து ஆர்டர் செய்தேன். போட்டோ வியூவ் பார்த்தால், மிகப் பிரமாண்டமாக இருந்து. ஆனால், விலை குறை வாகத்தான் குறிப்பிட்டிருந்தார்கள். இரண்டு நாள்களில் பிறந்த நாள் என்பதால், டெலிவரி தேதியெல்லாம் பார்த்துதான் ஆர்டர் செய்தேன். ஆர்டர் செய்த மறுநாளே மாலை 6 மணிக்கு பார்சல் வந்துவிட்டது. பிரித்துப் பார்த்த எனக்கு அதிர்ச்சி. செமி ஸ்டிச்சிங், அதாவது பாதி தைக்கப்பட்ட, மீதியை நாம் தைத்துக்கொள்ள வேண்டிய ஆடையாக இருந்தது. என் மகள் முகம் வாடிவிட்டது. எனக்கு குழப்பமாக இருக்கவே, மறுபடி அதே ஆன்லைன் தளத்தில் சென்று நான் செலக்ட் செய்த ஆடை குறித்த குறிப்புகளை உன்னிப்பாகப் படித்துப் பார்த்தேன். அனைத்து விளக்கங்களுக்கும் கீழே மிகச் சிறிய எழுத்தில் செமி ஸ்டிச்சிங் எனக் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த அளவுக்கு லுக் உள்ள ஆடை ஏன் இவ்வளவு குறைவான விலை போடப்பட்டுள்ளது என்ற சந்தேகம் வந்தபோதே கூடுதல் கவனம் எடுத்திருந்தால் அப்போதே தவிர்த்தி ருக்கலாம். ஆன்லைனில் பர்ச்சேஸ் செய்யும்போது பல விஷயங்களை உன்னிப்பாகக் கவனிக்காவிட்டால் மன உளைச்சலும், பண இழப்பும் நிச்சயம். பெரிய தொகைக்கு ஆர்டர் செய்யும்போது ஆன்லைனில் நன்கு பழக்கப்பட்ட ஒருவரை உடன் வைத்துக்கொண்டு செய்வது நல்லது.
-ஆ.தாரிணி, திருச்சி- 34

நாலு இடத்துல விசாரிச்சு வாங்கினா பணத்தை மிச்சப்படுத்தலாம்!
என் மகனுக்கு திருமணம் உறுதியாகி உள்ளது. கலசப் பானைகள் வாங்க வேண்டும் என புரோகிதர் சொல்லி இருந்தார். அதற்காக மண்பானை விற்கும் கடைக்குச் சென்று விலை விசாரித்தேன். திருமணப் பானைகள் செட்டாகச் சேர்த்து ரூ.3,000 கேட்டார்கள். மண்பானை வாங்கிப் பழக்கம் இல்லாததால், என்னால் விலையைக் கணிக்க முடியவில்லை. ஓகே, பிறகு வந்து வாங்குகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தேன். அடுத்த நாள் சோம்பேறித்தனப்படாமல் அந்தப் பகுதியில் உள்ள நான்கு, ஐந்து கடைகளுக்குச் சென்று விலையை விசாரித்தேன். 2,500, 2,300, 2,000 என விலையில் கடைக்குக் கடை வித்தியாசம் இருந்தது. முடிவில் 2,000 சொன்ன கடையில் பேரம் பேசி 1,700 ரூபாய்க்கு வாங்கினேன். எனக்கு நான்கு ஐந்து கடைக்கு அலைந்து திரிந்து விசாரிக்க இரண்டு மணி நேரம் ஆனது. ஆனால், 1,300 ரூபாய் மிச்சம். எப்போதுமே எந்தப் பொருளாக இருந்தாலும் நான்கு கடை ஏறி இறங்கினால்தான் அதன் நிஜமான விலையை ஓரளவுக் கணிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டேன்.
- மகேந்திரன், சென்னை - 24
பண அனுபவங்களைப் பகிருங்கள்..!
சேமிப்பு, முதலீடு, ஏமாற்றம், இழப்பு, ஷாப்பிங், லாபம், நஷ்டம் என எல்லாவிதமான பண அனுபவங்களையும் இங்கே பகிர்ந்துகொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட அனுபவங்களுக்கு தகுந்த சன்மானம் உண்டு. அனுப்ப வேண்டிய மெயில் முகவரி: navdesk@vikatan.com