நடப்பு
தொடர்கள்
Published:Updated:

விவசாய நிலம் வாங்கப் போறீங்களா? உஷாரய்யா உஷாரு!

விவசாய நிலம் வாங்கப் போறீங்களா? உஷாரய்யா உஷாரு!
பிரீமியம் ஸ்டோரி
News
விவசாய நிலம் வாங்கப் போறீங்களா? உஷாரய்யா உஷாரு!

சேனா சரவணன்

மிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் மந்தநிலையில் இருக்கிறது. புதிதாக வந்திருக்கும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம்,  அங்கீகாரம் இல்லாத மனை மீதான விதிமுறைகள், விவசாய நிலங்களை லேஅவுட் போடத் தடை போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

லேஅவுட் புரமோட்டர்களிடம் தற்போது ஏராளமான மொத்த நிலங்கள் விற்காமல் கிடக்கின்றன. டி.டி.சி.பி/சி.எம்.டி.ஏ அங்கீகாரம் பெற்றுத்தான் விற்பனை செய்ய முடியும். அப்படிச் செய்ய, சாலையின் அகலம் குறைந்தது 23 அடி இருக்க வேண்டும்.

மேலும் பூங்கா, சமுதாயக் கூடத்துக்கு இடம் ஒதுக்குவதுடன், அவற்றை உருவாக்கியும் தரவேண்டும். இதற்கான செலவுகளைச் சேர்த்தால், மனையின் விலை அதிகரித்துவிடும். யாரும் வாங்க மாட்டார்கள். 

இந்தப் பிரச்னைக்குச் தீர்வாக சில லே அவுட் புரமோட்டர்கள் புது வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த வழி, கைவசம் இருக்கும் மொத்த இடங்களை 25 சென்ட் (கால் ஏக்கர்) என்கிற கணக்கில் பிரித்து ‘விவசாயம் நிலம்’ (அக்ரி லேண்ட்) என்று விற்கத் தொடங்கியிருக்கிறார்கள். 

விவசாய நிலம் வாங்கப் போறீங்களா? உஷாரய்யா உஷாரு!

சொந்த இடம் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்கள், கால் ஏக்கர் சில லட்சத்தில் கிடைக்கிறது என்பதற்காக வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது போன்ற விளம்பரத்தைப் பார்த்து, நிலம் வாங்கப்போன ஒருவர், நம்முடன் தன் அனுபவத்தை ஆரம்பம் தொடங்கி விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

‘‘செங்கல்பட்டு அருகே 10,910 ச.அடி மனை ரூ.3 லட்சம் மட்டுமே! தவணை வசதி உண்டு’ன்னு கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்துக்குப் பக்கத்துல விளம்பர நோட்டீஸ் பார்த்தேன். கூடுதல் விவரங்களுக்கு என ஒரு செல்போன் நம்பர் தந்திருந்தாங்க. அந்த நம்பருக்கு போன் செஞ்சேன்.  

‘செங்கல்பட்டு படாளம் கூட்டு ரோட்டிலிருந்து 8 கிலோ மீட்டரில் சைட் இருக்கு.  ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு  ஆபீஸுக்கு வந்துடுங்க... போக்குவரத்துச் செலவுக்காக ஆளுக்கு 100 ரூபாய் கொடுக்கணும்’ என்று ஒரு பெண் சொன்னார்.

‘உங்க கம்பெனியோட பேர் என்ன?’ என்று கேட்டேன்.  மூன்று எழுத்து பெயரைச் சொன்னார். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அந்த ரியல் எஸ்டேட் கம்பெனிக்குப் போனேன். வேனில் அழைத்துச் செல்வார்கள் என எதிர்பார்த்த எனக்கு அதிர்ச்சி.

 சின்னதாக ஒரு கார் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. நான்கு பேர் சேர்றதுகே 11.15 மணி ஆயிடுச்சு. பிறகு கார் கிளம்பி, செங்கல்பட்டு தாண்டி, படாளம் கூட்டு ரோடில் திரும்பி 8 கிலோ மீட்டரில் ஓர் இடத்துல நின்னுது.  

‘900 சதுர அடி வீட்டுடன் 25 சென்ட் நிலம் ரூ.25 லட்சம்’ என டிரைவராக வந்தவரு, திடீர்னு ரியல் எஸ்டேட் புரோக்கராக மாறி, ஒரு வெட்டவெளியைக் காட்டினார். எல்லோரும் 25 சென்ட் ரூ.3 லட்சம் இடம் என்ற எதிர்பார்ப்பில் வந்ததால், யாரும் இதனை ஆர்வமாக கேக்கல. 

‘ரூ.3 லட்சம் இடத்தைக் காட்டுங்க’ என டிரைவரிடம் எல்லோரும் சொல்ல, அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் பிரதான சாலையிலிருந்து விலகி, வயல்வெளிக்குள் கார் ஓடிச்சு. ஆடு, மாடுகள் மேஞ்சுக்கிட்டிருந்த இடத்துல சிமென்ட் கல்கள் பதிக்கப்பட்டு, லே அவுட் போடப் பட்டிருந்தது.

‘அந்தப் பெரிய நாலு கல்லுக்கு இடைப்பட்ட இடம்தான் 25 சென்ட். சின்ன கல்லுங்க நட்டிருக்கிற இடத்துல ரோடு 20 அடி வரும்’ என்றார் டிரைவர். அவர் கையிலிருந்த லே அவுட் பிரதியில் ரோடு எதுவும் காட்டவில்லை.

இதைப் பார்த்துவிட்டு, ‘ரோட்டுக்கான 20 அடியை பத்திரத்தில பதிவு செஞ்சு தருவீங்களா?’என்று ஒருவர் சந்தேகத்தை எழுப்பினார்.  

‘பத்திரத்துல ரோடு எல்லாம் வராது சார். உங்க 25 சென்டோட, உங்க இடத்துக்கு முன்னாடி கூடுதலா 10 அடி நீளத்துக்கு இடத்தையும் பதிவு செஞ்சு தந்திடுவோம். இதேமாதிரி, எதிர்ல உள்ள மனைக்கும் செஞ்சு தருவோம். அப்ப 20 அடி ரோடு வந்துவிடும். தாராளமா பெரிய காரே வந்து போகலாம்’ என்று லாஜிக்காக ஒரு விளக்கம் தந்தார் டிரைவர்.     

உடனே இன்னொருத்தர், ‘சார், லே அவுட்ல கடைசியில எதிரெதிர்ல இருக்கிற இரண்டு பிளாட்டை நான் வாங்கிக்கிறேன்’ என்றார். என்ன கணக்கு அவர் இப்படி சொல்றார்னு ஆச்சர்யமா இருந்துச்சு.

15 நிமிஷம் அங்கே சுத்திப் பார்த்தபிறகு, அடுத்து மதுராந்தகம் அருகே 25 சென்ட் நிலம், ரூ.13 லட்சம், வேடந்தாங்கலுக்குச் செல்லும் வழியில் 25 சென்ட் நிலம் ரூ.10 லட்சம் என பல வெட்டவெளிகளை காட்டினாங்க.

மதியம் 1.30 மணிக்கு காரை டிரைவர் கூடுவாஞ்சேரியில ஒரு பெரிய பிரியாணி கடைக்கு முன்னாடி நிறுத்தினார். ‘நான் சாப்பிட்டுட்டு வந்திடுறேன். நீங்க யாராவது சாப்பிடணும்னா சாப்பிடுங்க... டீ, காபி குடிக்கணும்னா ரோட்டை கிராஸ் பண்ணினா ஒரு கடை வரும்’ ன்னு சொல்லிட்டுப் போனாரு.

நாங்க யாரும் காபி குடிக்கப் போகாம எங்களுக்குள்ள பேச ஆரம்பிச்சோம். 

‘சார், நீங்க இடம் வாங்க முடிவு செஞ்சீட்டிங்களா?’ன்னு முன்சீட்டுக்காரரிடம் நான் கேட்டேன்.

‘ஆமா சார், கடைசி எதிரெதிர் பிளாட் வாங்கிட்டா மொத்தமா நமக்கு இடம் கிடைச்சுடும். ஒரே வேலி போட்டுடா அதிக இடம் கிடைக்கும்ல’ என்றார்.

‘உங்களுக்கு முன்னால இருக்கிறவங்களுக்கும் ரோட்டுக்கான இடத்தையும் அவங்க பேர்லதானே பதிவு செஞ்சு கொடுத்திருப்பாங்க. அவங்களும் வேலி போட்டுட்டா, எப்படி உங்க இடத்துக்கு வருவீங்க..?’ன்னு கேட்டப்ப, முன்சீட்டுக்காரரு யோசிக்க ஆரம்பிச்சுட்டாரு.

வீட்டுக்கு வந்தபிறகு, இந்த இடத்தை வாங்கலாமான்னு ஒரு லாயரைப் பார்த்துக் கேட்டேன்.

‘சார், நல்லாத் தெரிஞ்சுக்குங்க. இந்த  அக்ரி லேண்டில் வீடு கட்ட அப்ரூவல் கிடைக்காது. பம்ப் செட் போடவேண்டுமானால், மின்சார இணைப்புத் தருவாங்க. வீட்டுக்கு மின் இணைப்பு தரமாட்டாங்க. ரோட்டுக்கான இடத்தைப் பத்திரத்துல காட்டமாட்டாங்க என்கிறதால, பிற்காலத்துல பல சிக்கல்கள் வரும்’ என்று சொன்னவுடன், அந்த இடத்தை வாங்குற முடிவை அப்பவே கைவிட்டுட்டேன்’’ என்று சொன்னார் அந்த மனிதர்.

மலிவான விலையில் விவசாய நிலங்கள் எனத் தமிழ்நாடு முழுக்க  விற்பனை இப்போது வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.  

உஷார்,  மக்களே உஷார்...!

விவசாய நிலம் வாங்கப் போறீங்களா? உஷாரய்யா உஷாரு!

வாராக் கடன்...

எந்தத் துறையில் அதிகம்?


வங்கிகளுக்குத் திரும்ப வராமல் கிடக்கும் கடன் களின் அளவு சுமார் ரூ.10 லட்சம் கோடியை எட்டும் நிலையில் இருந்தாலும், ரூ.1.28 லட்சம் கோடி அளவுக்கான வாராக் கடன் திவால் சட்டத்தின்படி பதிவாகியுள்ளது.

இதில் இரும்புத் துறையில் 5,700 கோடி ரூபாயும், ரீடெய்ல் துறை யில் 1,270 கோடி ரூபாயும் முடங்கிக் கிடக்கின்றன. ஜவுளி, வர்த்தகம், ரசாய னம், கப்பல் கட்டுதல், கட்டுமானம் போன்ற பல்வேறு துறைகளிலும் தலா 400 கோடி ரூபாய் அளவுக்கு வாராக் கடன்கள் உள்ளன. இந்த வாராக் கடன்களெல்லாம் வசூலானால்தான் வங்கிகள் இனி நிம்மதிப் பெருமூச்சு விட முடியும்.