
பஞ்சாயத்து மனை... அப்ரூவல் சிக்கல்... என்னதான் தீர்வு?
ஏறக்குறைய கோமா நிலையில் இருக்கிறது தமிழக ரியல் எஸ்டேட். அதிக விலை காரணமாக மனைகளை விற்க முடியாமல் தவிப்பது ஒருபக்கம் என்றால், உரிய அங்கீகாரம் இல்லாத காரணத்தினால் மனைகளைப் பதிவு செய்ய முடியாமலும், பதிவு செய்த மனைகளை விற்க முடியாமலும் தவிப்பது இன்னொரு பக்கம் என பல பிரச்னைகள் தமிழக ரியல் எஸ்டேட்டை சுற்றிச் சுற்றி வருவதால், தமிழகத்தின் பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்கள் தூங்கிக் கொண்டிருக் கின்றன. வீட்டு மனைகளைப் பதிவு செய்ய முடியாததால், பல லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர்.

பொதுவாக, வீட்டு மனை லே அவுட்கள் உருவாக்கப்படும்போது, நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) அல்லது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திடம் (CMDA) அங்கீகாரம் (அப்ரூவல்) பெற வேண்டும். இந்த அனுமதி இல்லாமல் சென்னையின் புறநகர் பகுதிகள் மற்றும் தமிழகத்தின் கிராமப்புறங்களில் பஞ்சாயத்து அப்ரூவல் லே அவுட்கள் என்கிற பெயரில் விவசாய விளைநிலங்கள் கூறுபோட்டு விற்பனை செய்யப்பட்டன. பஞ்சாயத்துத் தலைவருக்குப் புதிய வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் உரிமை சட்டப்படி கிடையாது. அவரிடம் தடையில்லாச் சான்று மட்டும் வாங்கிவிட்டு, வீட்டு மனைகளை ரியல் எஸ்டேட் அதிபர்கள் விற்பனை செய்துவந்தார்கள். இதனை எந்தவொரு மறுப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு, பத்திரப் பதிவுத் துறையும் பதிவு செய்து தந்தது. அரசாங்கம், தனக்கு முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் வந்தால் போதும் என்று நினைத்து சும்மா இருந்துவிட்டது.
இப்படி விற்பனையான லே அவுட்களில் மனை வாங்கிய மக்கள், அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் பெரிதும் பாதிக்கப் பட்டனர். இந்தச் சூழலில், அங்கீகாரமில்லாத மனைகளைப் பத்திரப் பதிவு செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப் பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றிப் பத்திரப்பதிவு செய்யவும், அங்கீகாரமில்லாத மனைகளைப் பத்திரப்பதிவு செய்யவும் 9.9.2016 முதல் தடை விதித்தது. இதனால், மாதத் தவணை மூலம் பணம் கட்டிய பல லட்சம் ஏழைகள், பணத்தை முழுமையாகக் கட்டிய பின்பும் மனையைப் பத்திரம் செய்துகொள்ள முடியாமல் தவித்துவருகின்றனர்.

இதையடுத்து, சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி. அமைப்புகளில் ஒப்புதல் பெறாத வீட்டு மனைகள் அனைத்தையும் அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகள் என்று தமிழக அரசு அறிவித்தது. அத்துடன், அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை சி.எம்.டி.ஏ / டி.டி.சி.பி ஒப்புதல் பெற்று அங்கீகாரம் பெற்ற வீட்டு மனை களாக மாற்ற, 2017-ம் ஆண்டில் அரசாணை வெளியிட்டது. 2016 அக்டோபருக்குமுன் பதிவு செய்த பஞ்சாயத்து அப்ரூவல் மனை களைக் கட்டணம் செலுத்தி, ஒழுங்குமுறைபடுத்தி, அங்கீகாரம் பெற்ற மனைகளாக மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட் டது. அதன்படி, வீட்டு மனை அங்கீகாரம் பெற புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன. சி.எம்.டி.ஏ. மற்றும் டி.டி.சி.பி. இரண்டும், புதிய அரசாணையைப் பின்பற்றிக் களமிறங்கியுள்ளன. இதனைச் செய்துமுடிப்பதற்காக முதலில் ஆறு மாத கால அவகாசம் தரப்பட்டிருந்தது. பின்னர், இது ஒரு வருடமாக மாற்றப்பட்டது. அப்படியும் பணிகள் மந்தமாக நடந்துவந்தால், தற்போது இன்னும் ஆறு மாதங்களுக்குக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஆணையில் என்னென்ன தெரிவிக்கப்பட்டுள் ளன, ஏன் இந்தக் காலதாமதம், பொதுமக்களுக்கு இதனால் விளையும் தீமைகள் குறித்து வழக்குரைஞர் எம்.சுந்தர பாண்டிய ராஜாவிடம் கேட்டோம்.
“தமிழகத்தில் போடப்படும் லே அவுட்டுகள் ‘நகர் ஊரமைப்பு சட்டம்-1971’-ன்கீழ் வருகின்றன. இதன்படி, ஒரு நிலத்தை லே அவுட்டுகளாக மாற்றம் செய்ய, டி.டி.சி.பி-க்கு அதிகாரம் அளிக்கப் பட்டது. நகர் ஊரமைப்புத் துறை, புதிய விதிமுறைகளை இயற்றி, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், நில உரிமையாளருக்கு அனுமதி அளிக்கிறது.
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்
தமிழகத்தில் சுமார் 27,000 அங்கீகாரமில்லாத லே அவுட்டுகளில் சுமார் 13.5 லட்சம் மனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 20.10.16-க்குமுன் மனையைப் பதிவு செய்திருந்தால், மனைகளின் உரிமையாளர்கள், அதனை இப்போது யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். இந்த மனைகளை வாங்கு பவர்களும் யாருக்கு வேண்டுமானலும் விற்பனை செய்யலாம். ஆனால், பிற்காலத்தில் வீடு கட்டும்போது, அப்ரூவல் மனை என்கிற அங்கீகாரம் தேவைப்படும். அப்போது, மனையின் உரிமையாளர் அல்லது லேஅவுட் போட்டிருப்பவர், தங்களுடைய மனையை முறைப்படுத்தக் கோரி விண்ணப்பிக்கலாம். இதற்கு அந்த லே அவுட்டின் உரிமையாளர், 20.10.16-க்கு முன் ஒரு மனையையாவது பதிவு செய்து தந்திருக்க வேண்டும்.
அங்கீகாரம் பெறாத மனைகளுக்கு அங்கீகாரம் கொடுக்க அந்த மனை யானது அனைவருக்கும் உரிமையுள்ள பொதுச் சாலையில் அமையப் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையைத் தளர்த்தி, பொதுச் சாலையிலிருந்து மனையை இணைக்கும் வழிப்பாதையைப் பயன்படுத்த மனை உரிமையாளருக்கு உரிமை இருந்தால் போதும் என இப்போது மாற்றப் பட்டுள்ளது.
அங்கீகாரம் பெறாத லே அவுட்டு களில், ஏற்கெனவே 20.10.16 தேதிக்குள் பத்திரப் பதிவு செய்தது, அந்த லே அவுட்டில் மூன்றில் இரண்டு பங்காக இருக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் விதிமுறை வகுக்கப்பட்டது. அது 20.10.16-க்குள் ஒரு லே அவுட்டில் ஒரே ஒரு மனை கிரயம் செய்யப்பட்டிருந்தால் கூட முழுமையாக அந்த மனைப் பிரிவையே டி.டி.சி.பி மூலம் முறைப் படுத்தலாம் என விதிமுறை மாற்றப் பட்டிருக்கிறது. மேலும், திறந்தவெளி ஒதுக்கீட்டுக் கட்டணம் நீக்கப்பட்டு உள்ளது.
அதிகக் கட்டணங்கள்
தற்போதைய நிலையில், மேம்பாட்டுக் கட்டணம் (Development charge), ஒழுங்குமுறைக் கட்டணம் (Regularisation Charge) மற்றும் சீராய்வுக் கட்டணம் (Scrutiny Fees) ஆகிய மூன்று கட்டணங் களைச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.
மேம்பாட்டுக் கட்டணம்
மேம்பாட்டுக் கட்டணம், மனை அமைந்திருக்கும் பகுதியைப் பொறுத்து ஒரு சதுர மீட்டருக்கு மாநகராட்சி எனில் ரூ.500-ம், சிறப்பு மற்றும் தேர்வுநிலை மாநகராட்சி எனில் ரூ.250, முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை மாநகராட்சி எனில் ரூ.150-ம், நகரப் பஞ்சாயத்து எனில் ரூ.75-ம், கிராமப் பஞ்சாயத்து ரூ.25-ம் வசூலிக்கப்படுகிறது.

இப்படி வசூலிக்கப்படும் மேம்பாட்டுக் கட்டணம் அந்த உள்ளாட்சி அமைப்புகளின் தனிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு, குடிநீர், சாலை, தெரு விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்க செலவிடப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒழுங்குமுறைக் கட்டணம்
இந்தக் கட்டணமும் மனை அமைந்திருக்கும் பகுதியைப் பொறுத்து, சதுர மீட்டருக்கு மாநகராட்சி எனில் ரூ.100-ம், சிறப்பு மாநகராட்சி எனில் ரூ.60-ம், முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை மாநகராட்சி எனில் ரூ.60, நகரப் பஞ்சாயத்து எனில் ரூ.30, கிராமப் பஞ்சாயத்து எனில் ரூ.30-ம் கட்ட வேண்டும்.
சீராய்வுக் கட்டணம்
சீராய்வுக் கட்டணமாக மனை ஒன்றுக்கு ரூ.500 செலுத்த வேண்டும். ஒருவர் ஒரு லே அவுட்டில் மூன்று சென்ட் வீதம் 10 மனைகள் என மொத்தம் 30 சென்ட் வாங்கியிருந்தால், அவர் சீராய்வுக் கட்டணமாக மட்டுமே ரூ.5,000 செலுத்த வேண்டும்.
மாநகராட்சி பகுதியில் ஒருவர், 1,200 சதுர அடி மனையை டி.டி.சி.பி அப்ரூவல் மனையாக மாற்ற ரூ.67,700-யைக் கட்டணமாக செலுத்த வேண்டிவரும். இதுவே கிராமப் பஞ்சாயத்து என்றால் ரூ.6,500 கட்ட வேண்டும். இதுதவிர, அதிகாரிகளை மனை இருக்கும் இடத்துக்கு அழைத்துவரும் செலவுகளும் இருக்கின்றன.

விலை குறைவு என்பதாலும், பிற்காலத்துக்குத் தேவைப்படும் என்பதாலும், முதலீட்டு நோக்கிலும் புறநகர்ப்பகுதிகளில் பல லட்சம் பேர் மனைகளை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். இப்படி மனை வாங்கிப் போட்டவர்களில் 90 சதவிகிதத்துக்கு மேற்பட்டவர்கள் மனை இருக்கும் ஊரில் இல்லை. உதாரணமாக, சென்னையில் வேலை பார்க்கும் பலர் திருநெல்வேலி, தேனி, சத்தியமங்கலம் என பல இடங்களில் மனை வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் மனைகளுக்கு அப்ரூவல் வாங்க அதிகம் அலைய வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, பலரும் மனையைப் பதிவு செய்ய முடியாமல் தவிக்கிறார்கள்.
ஒழுங்குமுறைப்படுத்தவில்லை என்றால்...
அங்கீகாரமில்லாத லே அவுட்களை, தமிழ்நாடு அங்கீகாரமற்ற லே அவுட்டுகள் ஒழுங்குமுறை விதி, 2017-ன்கீழ் முறைப்படுத்த விண்ணப்பிக்க வில்லை எனில், அவருக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விதிமுறை 15, பின்வருமாறு குறிப்பிடுகிறது.
1. மின்சாரம், குடிநீர், கழிவு நீர் வடிகால் அமைப்பு வழங்கப்பட மாட்டாது; 2. அனுமதியற்ற மனையைப் பதிவுச் சட்டம், 1908-ன்படி பதிவு செய்ய இயலாது; 3. அந்த மனையில் எந்தவொரு கட்டடமும் கட்ட அனுமதி வழங்கப்படமாட்டாது.
விண்ணப்பிக்கும் முறை
மனைக்கான அங்கீகாரத்தைக் கோரும் விண்ணப்பத்தினை www.tnlayoutreg.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாகப் படிவம்-1-யைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது சீராய்வுக் கட்டணமாக ரூ.500-யை இணையம் மூலம் செலுத்த வேண்டும். இப்படி விண்ணப்பித்தபின், நாம் விண்ணப்பித்தற்கான பதிவுச் சீட்டு சான்று இணையத்தில் வழங்கப்படும். அந்தப் பதிவுச் சீட்டினைப் பெற்று, அதிலிருந்து 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் பின்வரும் ஆவணங் களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
1. விண்ணப்பதாரரின் பெயரில் உள்ள கிரயப் பத்திரம்.
2. விண்ணப்பதாரரின் பெயரில் பெறப்பட்ட பட்டா அல்லது முந்தைய உரிமையாளரின் பெயரில் பெறப்பட்ட பட்டா.
3. விண்ணப்பம் செய்யப்படும் நாளன்று, ஒரு வார காலத்திற்கு முன்பு வரை உள்ள நிலை தொடர்பாக சார்பதிவாளரிடமிருந்து பெறப் பட்ட வில்லங்கச் சான்று.
4. மனையானது விவசாயப் பகுதிக்குள் அமைந்திருந்தால், சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் நீர்வழிப் போக்குவரத்து, வெள்ளம் போன்ற பாதிப்புக் குறித்து சான்று பெறப்பட வேண்டும்.
5. மனைப் பிரிவைச் சுற்றி பொது உபயோகச் சாலையை இணைக்கும் மற்றும் சுற்றியுள்ள அபிவிருத்திகள் குறிப்பிட்டு, சுற்றுச்சார்பு வரைபடம் (Topo Sketch) இணைக்கப்பட வேண்டும்.
6. லே அவுட்டின் வரைபடம்.
7. எல்லை அளவுகள் குறிப்பிடப்பட்டு, மனையின் உட்பிரிவு காட்டப்பட்டு, மனையைச் சுற்றியுள்ள சாலையின் அளவுகள் குறிப்பிடப்பட்டு, லைசென்ஸ் பெற்ற சர்வேயர் கையொப்பமிட்டு வழங்கும் இடஅமைப்பு வரைபடம் (FMB - Field Measurement Book) இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
நமது லே அவுட் அரசின் விதிகளுக்கு உட்பட்டுச் சரியாக இருந்தால், முறைப்படுத்தும் அதிகாரி அதற்கான ஒப்புதலை வழங்கி, பிற கட்டணங்களைச் செலுத்துவதற்காக உத்தரவிடு வார். அதிலிருந்து 30 நாள்களுக்குள் அனைத்துக் கட்டணங்களையும் நாம் செலுத்தியபின், முறைப்படுத்திய தொடர்பான ஆணை வழங்கப்படும்.
மேல்முறையீடு
எந்தவொரு நபரும் தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், மனை அமைந்திருக்கும் பகுதி சி.எம்.டி.ஏ-வின் வரும்பட்சத்தில், சி.எம்.டி.ஏ மேலதிகாரிகளிடம் முறையிடலாம். மற்ற பகுதிகளில் இருந்தால், டி.டி.சி.பி மேலதிகாரிக்கு 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
தமிழ்நாடு அங்கீகாரமற்ற லே அவுட்டுகள் ஒழுங்குமுறை விதி-2017 நடைமுறைக்கு வந்து ஓராண்டு காலமாகியும், சாதாரணமானவர்்களுக்கு இந்தத் திட்டம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்பட வில்லை. இந்தத் திட்டத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கான விழிப்பு உணர்வுப் பிரச்சாரங்களை உள்ளாட்சி அமைப்புகள் தீவிரப்படுத்த வேண்டும்.
அதேபோல, இதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்களும், வழிமுறைகளும் மிகக் குழப்பமாக உள்ளன. சார்பதிவாளர், தாசில்தார், சர்வேயர் எனப் பல அதிகாரிகளிடம் சான்றிதழ்கள் பெறவேண்டியிருப்ப தால், அதிகப் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடம் நிலவுகிறது.
மேலும், இணையம்மூலம் விண்ணப்பித்தபின், சம்பந்தப் பட்ட மனையின் உள்பிரிவு காட்டப்பட்டு, சுற்றியுள்ள சாலைகள் மற்றும் அருகிலுள்ள மனைகளின் எல்லை அளவுகளுடன் லைசென்ஸ் பெற்ற சர்வேயரால் தயார் செய்யப்படும் இட அமைப்பு வரைபடம் தயார் செய்வதிலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அருகிலுள்ள மனையின் எல்லை அளவுகளை அளக்க, உரிமையாளர்கள் சம்மதிப்பதில்லை. எனவே, இட அமைப்பு வரைபடம் தயார் செய்யும் வேலையை அரசே செய்தால் கஷ்டப்படத் தேவையில்லை.
அரசின் பிற துறைகளில் இருக்கும் எஃப்.எம்.பி போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க பொதுமக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இந்தத் திட்டம் குறித்து நகர் ஊரமைப்பு இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் இயக்குநர் செயலர் நடைமுறை வழிகாட்டிகளை வழங்க வேண்டும்.
இந்த அரசாணையின் மூலம் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மட்டுமே மிகத் துரிதமாக தங்களிடமுள்ள, அனுமதியற்ற லே அவுட் மனைகளை முறைப் படுத்தி விற்பனை செய்து பத்திரப் பதிவு செய்து வருகின்றன. அரசு அதிகாரிகளும், பொதுமக்களின் விண்ணப்பங்களைவிட ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விண்ணப்பங்களுக்கே அதிக முக்கியத்துவம் தருவதாகப் புகார்கள் வந்துகொண்டிருக் கின்றன. ஒரு லே அவுட்டில் ஒரே ஒரு மனை 20.10.16-க்குள் விற்பனை செய்து பத்திரம் பதிவு செய்திருந் தால் போதும், மீதமுள்ள அனைத்து மனைகளும் முறைப் படுத்தி அனுமதியளிக்கப்படும் என்ற விதிமுறை, ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கே அதிகம் பயனளிக்கின்றன” என்றார்.
அரசின் அதிக அளவிலான கட்டண விதிப்புகள் மற்றும் ஏராளமான ஆவணங்களைச் சமர்பிக்கச் சொல்வதால், இந்தத் திட்டத்தின் மூலம் ஒழுங்குமுறைப் படுத்த விண்ணப்பித்திருப்பவர் களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது.
இனி போடப்படும் லே அவுட்டுகளை முறைப்படுத்து வதைக் குறிக்கோளாகக் கொண்டு புதிதாக எளிய அரசாணையைக் கொண்டுவருவதே சரியான எளிய தீர்வாக இருக்கும்.
- தெ.சு.கவுதமன்
டி.டி.சி.பி: எந்த அதிகாரியைத் தொடர்புகொள்ள வேண்டும்?
அங்கீகாரம் பெறாத மனைகள் தொடர்பாக சென்னையில் உள்ள டி.டி.சி.பி தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டோம். பெயர் குறிப்பிட விரும்பாத உயரதிகாரி நம் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.
‘‘தமிழத்தில் உள்ள லட்சக்கணக்கான மனைகளுக்கு ஒரே நேரத்தில் அப்ரூவல் கொடுப்பது சாதாரண விஷய மில்லை. அந்த அளவுக்கு எங்கள் துறையில் ஆள்கள் இல்லை. இப்போது, ஆன்லைனில் விண்ணப்பம் செய்த பிறகு, எந்த அதிகாரியைத் தொடர்புகொள்ள வேண்டும் என்கிற விவரத்தை எங்களின் இணையதளத்தில் http://www.tnlayoutreg.in/ContactNo.pdf என்கிற முகவரியில் பார்க்க முடியும். அடுத்து, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்களைப் பெறவும், இந்த அதிகாரிகள் உதவி செய்துவருகிறார்கள். மேலும், ஆங்காங்கே ஒரு நாள் சிறப்பு முகாம்களையும் நடத்தி வருகிறோம்” என்றார் அவர்.
- சேனா சரவணன்

எந்த மனைகளுக்கு அப்ரூவல் கிடைக்காது?
அனுமதியற்ற மனை களை முறைப்படுத்த அரசு பின்வரும் கட்டுப் பாடுகளை வழங்கியுள்ளது.
ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் அமைக்கப் பட்ட மனைகள்
அரசுப் புறம்போக்கு நிலங்களில் அமையப்பட்ட மனைகள்
திறந்தவெளி ஒதுக்கீடு இடங்கள் (Open Space Resorvation - OSR)
பூங்காக்களில் அமையப் பெற்ற மனைகள்.
அடுத்த நிலத்திற்கு வழியாக அமையும் காலிமனை.
மேற்குறிப்பிட்ட மனைகளுக்கு முறைப் படுத்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
கட்டணங்களைக் குறைக்க வேண்டும்!
மாதத் தவணையில் மனைகளை விற்பனை செய்துவரும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றின் பங்குதாரர்களில் ஒருவரான சங்கர், ‘‘டி.டி.சி.பி-யில் விண்ணப்பித்தபின் அவர்களிடமிருந்து ஓகே ஆனதும் பி.டி.ஓ எனப்படும் தொகுதி மேம்பாட்டு அதிகாரியைத் தொடர்புகொண்டு, நில அளவை வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை வழங்க வேண்டும். ஆனால், தற்போது வரை பி.டி.ஓ அலுவலகத்தில் இது குறித்த விவரம் எதுவும் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள். எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லையென்றே சொல்கிறார்கள். அதேபோல, டி.டி.சி.பி. விண்ணப்பங்கள் அனைத்தும் சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு அவர்கள் சரிபார்த்து அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்தத் தாமதம் ஏன் என்று விளங்கவில்லை.

கிராமப்புறங்களில் பெரும்பாலான வீட்டு மனைகள் பரம்பரைச் சொத்தாக இருக்கின்றன. அவற்றை வாரிசுகளுக்குப் பிரித்துப் பதிவு செய்வதென்றால், அப்போது அப்ரூவலுக்குப் போக வேண்டியிருக்கும். அங்கீகாரமில்லாத காரணத்தால் எதுவும் செய்ய முடியவில்லை. புதிதாகப் போடப்படும் லே-அவுட்கள், அங்கீகாரம் இருந்தால் மட்டுமே பத்திரப் பதிவு செய்ய முடியும் என்கிற விதிமுறையைக் கொண்டுவர வேண்டும். ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட மனைகளை, வீடு கட்டும்போது ஒழுங்குமுறைப்படுத்தினால் போதும் என விதிமுறைகளை மாற்ற வேண்டும். கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன. அவற்றை வெகுவாகக் குறைக்க வேண்டும்” என்றார்.