மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஊர் ஜாதகம் - கிருஷ்ணகிரி

ஊர் ஜாதகம் - கிருஷ்ணகிரி

ஊர் ஜாதகம் - கிருஷ்ணகிரி
ஊர் ஜாதகம் - கிருஷ்ணகிரி

மிழகம், கர்நாடகம் என்னும் இரு மாநில எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் மாவட்டம் கிருஷ்ணகிரி. பெரும்பகுதி நிலப்பரப்பை வனமாகக்கொண்ட மாவட்டமும்கூட. மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம்தான். காய்கறி, கீரைகள், பூ, மாம்பழம், கரும்பு, நெல் என்று மாவட்டம் முழுக்கப் பல்வேறு பயிர்களின் சாகுபடி நடக்கிறது. தவிர, தொழிற்சாலைகளின் வரவும் படிப்படியாக கிருஷ்ணகிரிக்கு நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இப்படிப்பட்ட கிருஷ்ணகிரி நகரின் வளர்ச்சி மேலும் மேம்படவும், மாவட்ட மக்களின் பொருளாதாரம் உயரவும் என்னென்ன திட்டங்களும், தேவைகளும் அவசியம் என்று அறிய மாவட்டத்தில் பலதரப்பினரையும் சந்தித்து, கருத்து கேட்டோம். என்னென்ன மாற்றங்களையும் வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டு வந்தால் கிருஷ்ணகிரி இன்னும் வளரும் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள் அவர்கள்.

கிருஷ்ணகிரி மாவட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கத் தலைவரும், பல்லவன் கிராம வங்கியின் இயக்குநருமான ஏகம்பவாணனை முதலில் சந்தித்தோம். ''ஓசூரில் மட்டுமே ஓஹோவென இருந்த தொழில் வளர்ச்சி இப்போது கிருஷ்ணகிரியிலும் தலைகாட்டத் தொடங்கி இருக்கிறது. ஆங்காங்கே தொழிற்சாலைகள் உருவாகி, வேறு மாநிலத்தவர்கள் நிறையபேர் இங்கே வந்து தங்களுடைய தொழிலை நிர்மானம் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு  அதிகரித்ததோடு, கிருஷ்ணகிரியின் மதிப்பும் உயர்ந்துள்ளது. ஆனாலும், அரசு இங்கே 'இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்’ ஒன்றை உருவாக்க முன்வரவேண்டும். இப்படி செய்யும்போது பிரதான உற்பத்தி மட்டுமன்றி, பெரிய தொழிற்சாலைகளுக்கான உதிரிபாகங்களைத் தயார் செய்து தரும் சிறிய நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

ஊர் ஜாதகம் - கிருஷ்ணகிரி
ஊர் ஜாதகம் - கிருஷ்ணகிரி

அதேநேரம் இன்றைய நிலவரப்படி, ரயில் சேவை இல்லாத மாவட்ட தலைநகரம்னு பார்த்தால் அது கிருஷ்ணகிரி மட்டும்தான். தொழில் துறையைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய குறையாக இருக்கிறது. தொழிலுக்குத் தேவையான மூலப் பொருளை கொண்டுவரவும், உற்பத்திப் பொருட்களை எடுத்துச் செல்லவும் ரயில் சேவை மிக அவசியம். ஓசூர் - கிருஷ்ணகிரி - ஜோலார் பேட்டை வழியாக ரயில் தடம் அமைத்து பெருநகரங்களுடன் கிருஷ்ணகிரியை இணைக்கும் திட்டத்தை மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள். கடந்த பட்ஜெட்டில்கூட திட்ட கமிஷன் பார்வைக்கு வைக்கப்பட்ட இந்த கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு ஒரு நிபந்தனைப் போட்டது. அதாவது, ரயில் சேவைக்கான நிலமும், திட்டத்தின் மதிப்பீட்டில் ஐம்பது சதவிகித செலவையும் மாநில அரசு ஏற்றால் உடனே செயல்படுத்தலாம் என்று சொன்னது மத்திய அரசு. சுமார் 95 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த லிங்க் லைன் ரயில் சேவையை இரு அரசுகளும் முன்வந்து செயல்படுத்தினால் கிருஷ்ணகிரி எதிர்காலத்தில் பிரமிப்பூட்டும் வளர்ச்சியை எட்டும்'' என பல விஷயங்களைச் சொன்னார் அவர்.  

##~##
அடுத்து, மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளரான மதியழகனிடம் பேசினோம். அவர், ''சிறப்பான ஓர் அமைவிடம் கொண்ட நகரம் கிருஷ்ணகிரி. தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் கிருஷ்ணகிரிக்கு வர பிரதான சாலை வசதி இருக்கிறது. கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கும் சிறந்த சாலை இணைப்பு வசதி இருக்கிறது. அதேபோல் கிருஷ்ணகிரி அதிக வெப்பமும், அதிக குளிரும் இல்லாத அழகிய நகரமாக இருக்கிறது. தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் இருந்து வருவோருக்கும் இந்த கிளைமேட் பிடித்துவிடும்.

தர்மபுரியில் இருந்து 2004-ல் பிரிக்கப்பட்டபிறகு கிருஷ்ணகிரி வேகமாக வளர்ந் துள்ளது. மற்ற மாவட்டங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் எட்டிய வளர்ச்சியைக் காட்டி லும் கிருஷ்ணகிரி பத்து சதவிகிதம் கூடுதல் வளர்ச்சி அடைந்துள்ளது. ரியல் எஸ்டேட் நிலவரம் சென்னைக்கு நிகராக இங்கே எக்ஸ்பிரஸ் வேகம் காட்டுகிறது.

ஊர் ஜாதகம் - கிருஷ்ணகிரி
ஊர் ஜாதகம் - கிருஷ்ணகிரி

அதேநேரம், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து பெங்களூருக்குச் செல்வோர் கடந்துபோகும் நகரமாக கிருஷ்ணகிரி இருக்கிறது. அதற்கேற்ப இங்கே தரமான ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் வந்தால் நல்லது. பூ, புளி, கிரானைட், மாம்பழக்கூழ் தொழில்கள் ஏற்கெனவே நன்றாக நடந்து வருகிறது. இது இன்னும் வளர்ச்சியை எட்ட, அதனதன் தேவைகளுக்கு ஏற்ப அரசு புதுத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். தவிர, மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ப அதிநவீன வசதிகள்கொண்ட மருத்துவமனைகள் அவசியமாக இருக்கிறது'' என்றார் அவர்.  

'ரோட்டரி மாநகர் கிருஷ்ணகிரி சங்கம்’ சேவைகள் மட்டுமின்றி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், இயற்கை வளங்களை பாதுகாத்தல் போன்றவற்றுக்காகக் குரல் கொடுத்து வரும் அமைப்பு. இதன் தலைவர் ராமச்சந்திரன், ''இடைவெளி விடாமல் தொடர்ச்சியாக நகர வளர்ச்சி ஏற்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும் இந்த நகரத்தில் ஆங்காங்கே இடைவெளி விட்டுவிட்டு குடியிருப்புகள் உருவாவதால் நகரின் வளர்ச்சி பெரிய அளவில் வெளிப்படாமல் இருக்கிறது. கிருஷ்ணகிரி நகரத்தைச் சுற்றி நான்கு ஏரிகள் இருக்கின்றன. அவை எல்லாமே பல ஆண்டுகளாக வறண்டுதான் கிடக்கிறது. இதேநிலை நீடிக்கும்போது நகரப் பகுதியில் நிலத்தடி நீர் வற்றிவிடும். இதனால் எதிர்காலத்தில் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாக நேரிடும். இப்போதே அதை உணர்ந்து சம்பந்தப்பட்ட துறையினர் அந்த ஏரிகளுக்கு நீர்வரும் பாதைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார வேண்டும். ஆறுவழிச் சாலை பணிக்குத் தேவையான மண் எடுப்பதற்கு இந்த நீர்நிலைகளில் அனுமதி வழங்கினால் அதன் கொள்ளளவு அதிகரிக்கும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தவிர்க்கவே முடியாத தொழில் கிரானைட் என்றபோதிலும், மாவட்டம் முழுக்க உள்ள வரலாற்று சின்னங்கள் இந்தத் தொழில் மூலம் அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. பெருநகரங்களுக்கு நிகராக இங்கே நிலமதிப்பு கூடியுள்ளது. இதனால் சிறு தொழில் தொடங்க பலரும் பயப்படுகிறார்கள். ஆனால், கிருஷ்ணகிரி நகரின் பல பகுதி களில் அரசுக்குச் சொந்தமாக நிறைய இடம் காலி நிலமாக உள்ளது. இதை புதிதாகத் தொழில் தொடங்குவோருக்குக் குத்தகை அடிப்படையில் அனுமதித்தால் தொழில் வளம் பெருகும். இதையெல்லாம் செய்தாலே கிருஷ்ணகிரி தமிழகத்தின் முன்மாதிரி மாவட்டமாக வளரும்'' என்றார்.

ஆக, ஏற்கெனவே நிறைய அடிப்படை வசதிகளைக் கொண்டிருக்கும் கிருஷ்ணகிரியை மேம்படுத்த மேலும் சில மேம்பாட்டுப் பணிகள் அவசியமாக இருக்கிறது.

- எஸ்.ராஜாசெல்லம்,
படங்கள்: வி.ராஜேஷ்.