மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஊர் ஜாதகம் - திருச்சிராப்பள்ளி

ஊர் ஜாதகம் - திருச்சிராப்பள்ளி

ஊர் ஜாதகம் - திருச்சிராப்பள்ளி

ஒருபக்கம் காவிரி ஆறு, அதை நம்பி இருக்கும் விவசாய பூமி, இன்னொரு பக்கம் பெரிய தொழிற்சாலைகள் என கலவையான பிரதேசமாக இருக்கிறது திருச்சி நகரம். பழங்காலத்து சோழ நகரம் என்றாலும், 1801-ல் ஆங்கிலேயர்கள்தான் திருச்சி மாவட்டத்தை அமைத்தனர்.  இந்நகரத்தில் என்னென்ன உள்கட்டமைப்பு வசதி வந்தால் இன்னும் வேகமாக வளரும் என்பதை அறிய பலரையும் சந்தித்தோம். நாம் முதலில் சந்தித்தது திருச்சி டிரெக் ஸ்டெப் நிர்வாக இயக்குநரும், ஏசியன் அசோசியேஷன் ஆஃப் பிஸினஸ் இன்குபேஷன் தலைவருமான ஜவஹரை.  

##~##
''தி
ருச்சி ஒரு தொழில் நகரம். தமிழ்நாட்டின் தென் பகுதியையும், வட பகுதியையும் இணைக்கும் முக்கிய பகுதி. எனினும், இன்று படித்த இளைஞ்ர்கள் வேலை தேடி சென்னையை நோக்கி படையெடுக்கும் சூழ்நிலைதான் காணப்படுகிறது. நாற்பது வருடங்களுக்கு முன்பு இப்படி சென்னைக்கு வேலை தேடி ஓடியது கிடையாது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்தபிறகுதான் சென்னையை நோக்கி செல்வது அதிகரித்துள்ளது.  

முன்பு தொழில் தொடங்க மின்சாரம், துறைமுக வசதி என பல விஷயங்கள் தேவைப்பட்டது. ஆனால், இப்போது அறிவுசார் தொழில்களை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கிறது. இந்த அறிவுசார் தொழில்களை திருச்சியில் ஊக்குவிக்க அரசு முன்வர வேண்டும்'' என்றார்.

அடுத்து நாம் சந்தித்தது திருச்சி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீதரனை. ''மின்சாரத் துறையின் முக்கிய இடமாக திகழ்கிறது திருச்சி. பி.ஹெச்.இ.எல். இந்நிறுவனத்தை நம்பி இங்கு ஏராளமான தொழில்கள் இருக்கின்றன. சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்து திருச்சி தொழில் நகரமாகத் திகழ இன்னும் தொழில் நிறுவனங்கள் அதிகமாக வரவேண்டும். தற்போது தொழில் தொடங்கு வதற்குத் தேவையான நிலம் சொல்லிக்கொள்ளும் விலையில் கிடைக்கிறது. வேலையாட்களும் திறனுள்ளவர்கள் என்பதால் இப்போதே பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஊர் ஜாதகம் - திருச்சிராப்பள்ளி

இந்திய அரசின் உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சகத்திலிருந்து கிடைக்கும் மானியம் நம் மாவட்டத்திற்கு கிடைக்க நிறைய பிரச்னை இருக்கிறது. இந்த மானியங்களை பெற பிராந்திய அலுவலகம் ஒன்றை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும்.

கரும்பு இங்கு அதிகளவில் விளைகிறது. ஆனால், சர்க்கரை ஆலைகளுக்கு எல்லா கரும்பையும் தந்துவிடுவதால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைப்பதில்லை. கரும்பை  வெல்லம் தயாரிக்கப் பயன்படுத்தலாம். இதற்கான சந்தை வாய்ப்பும் நன்றாக இருக்கிறது. தவிர, திருச்சியில் ஓட்டல் வசதி அவ்வளவாக இல்லை. மூன்று நட்சத்திர ஓட்டல்தான் இருக்கிறது. ஐந்து நட்சத்திர ஓட்டல் வந்தால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கலாம்'' என்றார்.

மாவட்ட தொழில் துறை மையத்தின் பொதுமேலாளர் கந்தசாமியுடன் பேசினோம். ''தற்போது எங்கள் அமைப்பின் சார்பில் புதிய தொழில்முனைவோர் வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளோம். இத்திட்டத்தின் மூலம் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழில் துவங்குபவர்களுக்கு ரூ.25 லட்சம் மானியமும், வங்கி வட்டி விகிதத்தைவிட 3 சதவிகிதம் குறைந்த வட்டியிலும் தொழில் துவங்க உதவுகிறோம். இத்திட்டத்தின் கீழ் சூரிய மின்சக்தி பொருட்கள், உணவுப் பொருட்கள், மதிப்புக் கூட்டு பொருட்கள் உற்பத்தி என எந்தத் தொழிலையும் செய்யலாம்'' என்றார்.

ஊர் ஜாதகம் - திருச்சிராப்பள்ளி

அடுத்து, காபி தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் பத்மா காபி நிறுவனத்தின் ரமேஷை சந்தித்தோம். ''திருச்சியைச் சுற்றி யுள்ள பகுதிகளில் பழங்கள் அதிகளவில் விளைகிறது. அதனை குளிர்பதன முறையில் பாதுகாக்க வேண்டுமெனில் தனியார் குளிர்பதன கிடங்குகளைத்தான் நாடிச் செல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க, அரசு ஒரு குளிர்பதனக் கிடங்கு அமைப்பது அவசியம். நகரத்தில் பல இடங்களில் ஆங்காங்கே பாலங்கள் கட்டும் பணி நிறைவேறாமல் இருக்கிறது. இதனையும் விரைந்து முடிக்க வேண்டும்'' என்றார்.

விவசாயம் இந்த மாவட்டத்தில் முக்கியமாகத் திகழ்வதால் அதிலிருக்கும் பிரச்னைகளும், வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் அய்யாக் கண்ணுவிடம் பேசினோம்.

''சுமார் இரண்டு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கரும்பு, வாழை, கிழங்கு வகைகள், அரிசி அதிகளவில் விளைகிறது. கோரைப் பாய் பின்னுவது அதிகளவில் நடைபெறுகிறது. இதற்கு வெளிநாடுகளில் நல்ல தேவை இருக்கிறது. ஆனால், ஏற்றுமதி செய்ய தேவையான வசதிகளை செய்து தரவேண்டும். வாழை அதிகளவில் பயிரிடப்படுவதால் அதிலிருந்து கிடைப்பவற்றைக் கொண்டு பொருட்களை உற்பத்தி செய்ய தொழில் நிறுவனங்களை திருச்சியில் உருவாக்க வேண்டும்.

ஊர் ஜாதகம் - திருச்சிராப்பள்ளி

திருச்சியைச் சுற்றி கரும்பு அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு சுமார் 30-லிருந்து 50 டன் வரை கரும்பு கிடைக்கும். ஒரு டன் கரும்புக்கு 2,350 ரூபாய் அரசு விலையாக நிர்ணயம் செய்திருக் கிறார்கள். ஒரு டன் கரும்பை உற்பத்தி செய்ய கிட்டத்தட்ட 2,000 ரூபாய் வரை செலவாகிறது. ஆனால், விவசாயிகளிடமிருந்து வாங்கும் ஒரு டன் கரும்பில் நூறு கிலோ சர்க்கரை எடுக்கிறார்கள். ஒரு கிலோ சர்க்கரை 25 ரூபாய் என்றால் நூறு கிலோவிற்கு 2,500 ரூபாய் கிடைக்கிறது. சர்க்கரையைத் தயாரிக்கும்போது 50 லிட்டர் மொலாஸஸ் கிடைக்கிறது. விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டுமெனில் எத்தனால் தொழிற்சாலையை அரசு திருச்சியில் தொடங்க வேண்டும். புல்லம்பாடி, லால்குடி உள்ளிட்ட இடங்களில் பருத்தி அதிகளவில் விளைவதால் இந்த இடத்தில் பருத்தி தொழிற்சாலை கொண்டுவர வேண்டும்'' என்றார்.

அடுத்து, தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலுவுடன் திருச்சியின் வளர்ச்சி பற்றி பேசியபோது, ''வளர்ந்து வரும் மாவட்டத்தில் திருச்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது போக்குவரத்து நெருக்கடி அதிகளவில் ஏற்படுகிறது. ஜங்ஷன் மேம்பாலத்தைக் கடக்க வெகுநேரம் ஆகிறது. அரியமங்கலம் பாலம் பணிகளை வெகு விரைவாக முடிக்கவேண்டும். இங்கு மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் இருக்கிறது. இதற்கு மாற்றாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கொண்டு வரவேண்டும்.

தமிழகத்தின் மையப் பகுதியாக திகழும் இங்குதான் சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் வருவதாக இருந்தது. ஆனால், என்ன காரணத்தாலோ மதுரைக்கு சென்றுவிட்டது. மதுரைக்கு மேல் பக்கம் இருக்கும் மக்களின் வசதிக்காக திருச்சியிலும் ஓர் உயர்நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும். மேலும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் இங்கு கொண்டு வரவேண்டும்' என்றார்.

கல்வி வளர்ச்சியைப் பொறுத்தவரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி,  ஐ.ஐ.எம்., பாரதிதாசன் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக்கழகம் என முக்கிய கல்வி நிறுவனங்கள், பல தனியார் பொறியியல் கல்லூரிகள் இருக்கிறது. போதுமான கல்வி நிறுவனங்கள் திருச்சியைச் சுற்றி இருப்பது இந்நகரத்திற்கு தனிச் சிறப்பு. கல்வி முறையில் இன்னும் உலகத்தரத்திற்கு ஈடான மாற்றங்களைச் செய்தால் இந்தியாவிலேயே மிகப் பெரிய கல்வி நகரமாக திருச்சி மாறும் என்பதில் ஐயமில்லை.

திருச்சி நகரத்திற்கு இன்றும் பெயர் தந்து கொண்டிருக்கும் பி.ஹெச்.இ.எல்., ஹெவி அலாய் பெனிட்ரேட்டர் புராஜெக்ட், ஆர்டினன்ஸ் ஃபேக்டரி போன்றவை ஐம்பது ஆண்டு களுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வந்தவை. அதன்பிறகு பெயர் சொல்லும் திட்டங்கள் எதுவுமே திருச்சியில் தலைகாட்டவில்லை. இதோ, அதோ என்று சொல்லிக்கொண்டிருந்த நாவல்பட்டு ஐ.டி. பார்க்-கும் அப்படியே கிடப்பில் கிடக்கிறது.

மலைக்கோட்டை நகரை மிகப் பெரிய தொழில் கோட்டையாக மாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இந்நகரம் பிழைக்கும்.

- பானுமதி அருணாசலம்,
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்.