தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

தனி வீடு... வில்லா... அப்பார்ட்மென்ட்... உங்களுக்கு எது பெஸ்ட் சாய்ஸ்? ப்ளஸ் - மைனஸ் டிப்ஸ்

வீடு...
பிரீமியம் ஸ்டோரி
News
வீடு...

மக்களின் தேவை, பொருளாதாரம், விருப்பம் சார்ந்து தனி வீடுகள், அப்பார்ட்மென்ட்டுகள், வில்லாக்கள், பங்களாக்கள் கிடைக்கின்றன!

சொந்த வீடு என்பது எல்லா காலத்திலும் எல்லா தலைமுறையினருக்குமே முக்கியத் துவம் வாய்ந்த ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக, இன்றைய நிலையற்ற பொருளாதாரச் சூழலில், வருமானத்தின் பெரும்பகுதியை வீட்டு வாடகைக்குக் கொடுக்க வேண்டிய சூழலில்தான் மக்கள் உள்ளனர். கடன் வாங்கி யாவது சொந்தமாக வீடு வாங்கி விட வேண்டும் என்று துடிப்பதும் இதனால்தான்.

‘வீடு என்பது வெறும் கல், மணல், கான்கிரீட் மட்டும் அல்ல, அது உணர்வோடு கலந்தது’ என்று சொன்னாலும், வீடு வாங்கும்போது உணர்வுபூர்வமாக முடிவெடுக்கக் கூடாது என்பதை நாம் மறந்துவிடுகிறோம் அல்லது பல விஷயங்களைக் கவனிக்காமலே வீடு வாங்கிவிடுகிறோம்.

தனி வீடு... வில்லா... அப்பார்ட்மென்ட்... உங்களுக்கு எது பெஸ்ட் சாய்ஸ்? ப்ளஸ் - மைனஸ் டிப்ஸ்

இன்று ரியல் எஸ்டேட் துறை அபரிமிதமான வளர்ச்சி கண்டுவிட்டது. மக்களின் தேவை, பொருளாதாரம், விருப்பம் சார்ந்து தனி வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், வில்லாக்கள், பங்களாக்கள் எனப் பல வகை யான வீடுகள் வந்துவிட்டன. இவற்றில் எது யாருக்கு சரியாக இருக்கும் என்பதை பல பாசிட்டிவ் நெகட்டிவ் அம்சங்களை ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டியது அவசியம். சொந்த மாக வீடு வாங்கும்முன் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி எடுத்துச் சொன்னார் நவீன்ஸ் ஹவுஸிங் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆர்.குமார்.

தனி வீடு... வில்லா... அப்பார்ட்மென்ட்... உங்களுக்கு எது பெஸ்ட் சாய்ஸ்? ப்ளஸ் - மைனஸ் டிப்ஸ்

வீடு வாங்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்...

“சொந்த வீடு எல்லாருக்குமே மிகவும் அவசியமான ஒன்று. ஆனால், ஒரு வீட்டை வாங்கும்முன் நமக்கு நாமே கேட்டுக்கொள்ளக் கூடிய கேள்விகள் சில உள்ளன. நாம் வாங்கப் போகும் வீட்டின் தேவை என்ன, நாம் அந்த வீட்டை வாங்குவதன் மூலம் அடையப் போகும் நன்மைகள் என்னென்ன, வீட்டை வாங்குவதற்கான பட்ஜெட் என்ன, வீடு வாங்குவதன் மூலம் நம்முடைய வருமானத்தில் வரப்போகும் செலவுகள் என்னென்ன, கடன் வாங்கி வாங்கப்போகிறோமா, வீடு அமைந்துள்ள இடம் பணிபுரியும் அலுவலகம், பிள்ளைகளின் பள்ளிக்கூடம், கல்லூரி ஆகியவற்றுக்கு அருகில் இருக்கிறதா, நம்முடைய வாழ்க்கை முறைக்கு ஏற்றதாக இருக்குமா என்கிற கேள்விகளை முதலில் நீங்களே கேட்டுக்கொண்டு, அதற்கான பதிலைப் பெற வேண்டும்.

வீடு என்பது ஒரு தனிநபர் செய்யும் மிகப் பெரிய முதலீடு. தனிநபரின் பொருளாதாரத்தையே மாற்றக்கூடிய ஒன்று. எனவே, இந்த விஷயங்களை எல்லாம் யோசித்த பிறகே வீடு வாங்கும் முடிவை எடுக்க வேண்டும்.

ஏனெனில், நாம் வசிக்கிற இடம் நம்மை மேலும் மேலும் உயர்த்தக்கூடியதாக இருக்க வேண்டும். மனை வாங்கி வீடு கட்டுவதில் பொருளாதார ரீதியாக லாபம் இருக்கிறது. ஆனால், மனை வாங்கி வீடு கட்டுவது நகரங்களில் சாத்தியமில்லை என்பதால், கட்டப்பட்ட வீடுகளை வாங்கவே மக்கள் விரும்பு கிறார்கள். எல்லாத் தரப்பு மக்களும் வாங்கும் விலையில் வீடுகள் கிடைக்கின்றன.

பெரும்பாலானோர் நடுத்தர பொருளாதார நிலையில் இருப்பதால், பட்ஜெட் வீடுகளையே விரும்புகிறார்கள். இதனால் பட்ஜெட் வீடுகள் அதிகமாகக் கட்டப் படுகின்றன. அதே சமயம், பொருளாதாரத்தில் நன்றாக மேம்பட்ட நிலையில் இருப்பவர்கள் தனி வீடு, வில்லாக்களில் கவனம் செலுத்துகிறார்கள். ஏனெனில், தங்களுக்கென தனி இடம், தனி வீடு என்பதில் பலருக்கும் ஒரு பெருமை இருக்கிறது.

எந்த வீடாக இருந்தாலும் சரி, வீடு வாங்கும்போது பில்டரின் டிராக் ரெக்கார்டைப் பார்க்க வேண்டியது கட்டாயம். எத்தனை வருடங்கள் தொழிலில் இருக்கிறார்கள், அவர்களுடைய முந்தைய வீட்டுத் திட்டங்கள் எப்படி இருக்கின்றன, குறிப் பிட்ட காலத்தில் வீடுகளைக் கட்டி ஒப்படைத்திருக் கிறார்களா, வீட்டின் தரம் சார்ந்து ஏதேனும் பிரச்னை கள் பில்டர் மீது இருக் கின்றனவா என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். தாய்ப் பத்திரம், அரசின் ஒப்புதல் ஆவணங்களைப் பார்க்க வேண்டும். அப்ரூவல் வாங்கிய பிளான்படி வீட்டைக் கட்டியிருக்கிறார் களா என்பதையும் பார்க்க வேண்டும். வீடு மிகப் பெரிய முதலீடு என்பதால், எல்லா விஷயங்களையும் பார்த்து விட்டுதான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

தனி வீடு... வில்லா... அப்பார்ட்மென்ட்... உங்களுக்கு எது பெஸ்ட் சாய்ஸ்? ப்ளஸ் - மைனஸ் டிப்ஸ்

வில்லா வீடு வாங்கலாமா?

தனி வீடு, வில்லா, அடுக்கு மாடிக் குடியிருப்பு என இவற்றிலுள்ள நன்மை களையும், பிரச்னைகளையும் பற்றி கட்டடவியல் நிபுணர் ஜி.கணேஷிடம் கேட்டோம். அவர் சொன்னதாவது...

‘‘வில்லாக்கள் போன்ற வீடுகள் இப்போது சந்தையில் அதிகரித்துவருகின்றன. இவற்றுக்கு மக்களிடமும் வரவேற்பு இருக்கவே செய் கிறது. காரணம், இவற்றின் அழகும் வசதிகளும்தான். (சுற்றிலும் தோட்டம், நடுவே பங்களா போன்ற வீடு, நீச்சல் குளம் என இருப்பதை வில்லா என்று கூறுவார்கள். ஆனால், இப்போது பொதுவான ஒரு காம்பவுண்டுக்குள் வரிசை யாக ஒன்று போலவே இருக்கும் தனி வீடுகள் வில்லாக்கள் எனச் சந்தையில் மார்க்கெட் செய்யப்படு கின்றன) இதை ‘கேட்டட் கம்யூனிட்டி’ என்றும் அழைப் பார்கள். இந்த வீடுகள் பார்க்க தனி வீடுகள் போலவே இருக்கும். காம்பவுண்டு, கார்டன், பார்க்கிங் வசதி என அனைத்தும் இருக்கும். அதே சமயம், பொதுவான நீச்சல்குளம், விளையாட்டு மைதானம், பூங்கா, ரிலாஸ்க் செய்வதற்கான பொழுது போக்கு அம்சங்கள் ஆகியவை நிறைந்திருக்கும். வில்லாக்களின் விலை நகரத்துக்கு நகரம் மாறுபடு கிறது. ரூ.50 லட்சம் தொடங்கி கோடிகளில் வில்லாக்களின் விலை இருக்கிறது.

வில்லா வீடுகளை வாங்கு வதால் பல நன்மைகள் கிடைக்கும்.

1. வில்லாக்கள் நமக்கு உறுதியான எதிர்கால மதிப்பைத் தரும் வகையில் இருக்கும். விற்க வேண்டும் என்றாலும்கூட நல்ல மதிப்புக்கு விற்பனை செய்ய முடியும்.

2. வில்லாக்களின் அம்சமே பாதுகாப்பான, பல்வேறு வசதிகள் நிறைந்த தனிவீடு என்று சொல்லலாம். மற்றவர் களின் குறுக்கீடுகள் பெரிதாக இருக்காது. உங்களுடைய வீட்டில் நீங்கள் சுதந்திரமாக இருக்கலாம். பொதுவான இடங்களில் மட்டும் அதற் குரிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும்.

3. வில்லா வீடுகளில் லிவிங் ரூம், பெட் ரூம், கிச்சன் அனைத்துமே வீட்டின் கட்டமைப்புக்கேற்ப பக்காவாக கட்டப்பட்டிருக்கும்.

4. வீட்டைச் சுற்றிலும் காம்பவுண்டுக்குள் உள்ள இடம் உங்களுடையது என்பதால், உங்கள் விருப்பப் படி, அந்த இடத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் சுதந்திரமும் உங்களுக்கு உள்ளது.

5. இதிலுள்ள முக்கியமான அம்சம், செக்யூரிட்டி முதல் சிசிடிவி வரையிலான வசதிகள் இருப்பதால், பாதுகாப்புக்குப் பெரிய குறை எதுவும் இருக்காது.

பிரச்னைகள்: 1. அழகாகவும் சொகுசாகவும் இருக்கும் வில்லாக்கள்தான் மக்களை சுண்டி இழுக்கின்றன. வில்லா வீடுகளை வாங்கும்போது எப்படி இருக்கிறதோ, அதே அழகுடன் அவற்றைப் பராமரித்தால்தான் அவற்றின் பொலிவு எப்போதும் கெடாமல் இருக்கும். எனவே, மற்ற வீடுகளைவிட வில்லா வீடுகளில் பராமரிப்புச் செலவு கூடுதலாகவே இருக்கும்.

2. வில்லாக்கள் அமைக்க பெரிய அளவில் இடம் தேவை என்பதால், நகரத்திலிருந்து சற்று தள்ளிதான் இருக்கும். வில்லா அமைந்திருக்கும் இடம் அலுவலகம் செல்வதற்கும் குழந்தை களின் பள்ளி, கல்லூரி களுக்கும் வசதியாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். பயணத்துக்கு அதிக நேரம் எடுக்கு மெனில், எவ்வளவு அழகான வில்லாவாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க போதிய நேரம் கிடைக்காது. பிறகு, அதுவே மன உளைச்சலை உருவாக்கும்.

4. வில்லா வீடுகள் ஃபிக்ஸட் செய்யப்பட்ட ஃபுளோர் பிளானாக இருக்கும். இவற்றில் கூடுதலாக ஒரு தளத்தைக் கட்ட அனுமதி மறுக்கப் பட வாய்ப்புள்ளது.

5. வில்லா வீடுகளில் எல்லா வசதிகளும் இருந்தாலும், அந்த வசதி களை நாம் எந்தளவுக்குப் பயன் படுத்துகிறோம் என்பது முக்கியம். வீட்டில் யாருமே எந்த வசதியையும் பயன் படுத்தவில்லை எனில், வில்லாக்களைத் தேர்வு செய்யத் தேவை இல்லை.

தனி வீடு வாங்கலாமா?

நகரங்கள் முழுவதும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் நிறைந் திருந்தாலும் பெரும்பாலானவர்களுக்குத் தனி வீடு மீது பெரிய விருப்பம் உண்டு. காரணம், நிலத்தின் மதிப்பு, தேவைப்பட்டால் கூடுதல் தளங்களைக் கட்டி வாடகைக்கு விடுவது எனப் பல வசதிகள் அதில் இருக்கின்றன. தனி வீட்டில் யாருடைய தொல்லையும் இருக்காது என்பதால் நாம் நிம்மதியாக இருக்கலாம் என்பதுடன் இன்னும் பல வசதிகள் உண்டு.

நன்மைகள்: 1. தனி வீடு எனில், முழுக்க முழுக்க அந்த வீடு சார்ந்து எந்த முடிவையும் நாமே எடுக்கலாம். நம் தேவைக் கேற்ப, நம் வசதிக்கேற்ப பராமரித்துக்கொள்ளலாம்.

2. தனி வீட்டைப் பொறுத்தவரை, நாம் மனை வாங்கி முழுக்க முழுக்க நம் விருப்பப்படி வீட்டை வடிவமைத்துக் கொள்ளலாம். ஆனால், நகரங்களுக்குள் மனை வாங்கி வீடு கட்டுவது அவ்வளவு சாத்தியமான காரியமில்லை. எனவே, நகரத்துக்கு கொஞ்சம் வெளியே மனை வாங்கி வீடு கட்டலாம். ஏற்கெனவே கட்டப்பட்ட தனி வீடுகளை வாங்குகிறீர்கள் எனில், அதில் தேவையான மாற்றங்களை நாம் விருப்பப் பட்டால் செய்துகொள்ளலாம்.

3. தனி வீடுகளில் நம்முடைய தேவைக்குப் போக மீதமுள்ள தளங்களை வாடகைக்கு விடலாம். இதன்மூலம் வருமானத் தையும் ஈட்டலாம்.

பிரச்னைகள்: 1. தனிவீடு என்றாலே பட்ஜெட் அதிக மாகவே இருக்கும். குறைந்த பட்சம் 1,000 சதுர அடி அளவு என்று வைத்துக்கொண்டாலுமேகூட தனி வீடுகளின் மதிப்பு ரூ.60 லட்சம் முதல் ரூ.1 கோடி அளவுக்கு வந்துவிடும்.

2. நகரங்களில் பெரும்பாலும் தனி வீடுகள் புதிதாகக் கட்டப்பட்டு விற்பனைக்கு வருவதில்லை. பழைய வீடுகளே விற்பனைக்கு வருகின்றன. அவற்றின் மதிப்பு ஏற்கெனவே அதிகமாக இருக்கும்பட்சத்தில், அவற்றை மீண்டும் சீரமைக்கும் செலவும் சற்று அதிகமாக இருக்கும்.

3. தனி வீடுகளைப் பராமரிக்க அதிகம் செலவாகும். தண்ணீர் வசதி, கழிவுநீர் வசதி, எலெக்ட்ரிக் கனெக்‌ஷன் போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.

4. வில்லாக்களில் இருப்பது போன்ற வசதிகளும் பொழுது போக்கு அம்சங்களும் தனி வீடுகளில் கிடைக்காது.

5. அடுக்கு மாடிக் குடியிருப்புகள், வில்லாக்கள் ஆகியவற்றைக் காட்டிலும் தனி வீடுகளில் பாதுகாப்பு மிகவும் குறைவு. தனி வீடுகளில் திருட்டு, கொள்ளை நடவடிக்கைகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. வீட்டைத் தனியாக விட்டுவிட்டு, அதிக நாள்கள் எங்கும் செல்ல முடியாது. யாராவது வீட்டில் எப்போதும் இருக்க வேண்டி யிருக்கும். அதுவும் வளர்ச்சி அடையாத பகுதிகளில் தனி வீடுகளில் ஆள்கள் இருந்தாலும் ஆபத்து வர வாய்ப்புண்டு.

தனி வீடு... வில்லா... அப்பார்ட்மென்ட்... உங்களுக்கு எது பெஸ்ட் சாய்ஸ்? ப்ளஸ் - மைனஸ் டிப்ஸ்

அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள்...

நகரங்களில் மனை வாங்கி வீடு கட்டுவதோ, ஏற்கெனவே கட்டிய தனி வீடுகளை வாங்குவதோ எல்லோருக்கும் சாத்தியமில்லை. ஏனெனில், அவை இரண்டுமே சாதாரண நடுத்தர மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விலை அதிகரித்துவிட்டன. ஆனாலும், நமக்கென ஒரு சொந்த வீடு, அளவாக, அழகாக நகரங்களின் முக்கிய இடங் களில் கிடைக்குமெனில், அது அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள்தான். பட்ஜெட்படியும், லொகேஷன்படியும் பார்த்தால், அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெரும்பாலும் சரியான தேர்வாக இருக்கும். முதலீட்டு ரீதியாகவும் அப்பார்ட்மென்ட் வீடுகள் நல்ல வருமானத்தைத் தரக்கூடியவைதான்.

நன்மைகள்: 1. அப்பார்ட் மென்ட் வீடுகள் தனி வீடு, வில்லா போன்றவற்றுடன் ஒப்பிடுகையில், மிகவும் பாதுகாப்பானவை. வீட்டைப் பூட்டிவிட்டு தாராளமாக பயணம் போகலாம். அப்பார்ட் மென்ட் வீடுகளில் ஒரு வீட்டார் இன்னொரு வீட்டாருடன் அதிகம் பழகுவதில்லை என்றாலும், தங்களுக்குத் தெரிந்து எந்த அந்நியரையும் கேள்வி எழுப்பாமல் அனுமதிக்க மாட்டார்கள்.

2. பராமரிப்புச் செலவு மிகக் குறைவாகவே இருக்கும். பொதுவான பராமரிப்புச் செலவுகளைத் தவிர்த்து, வேறு எதுவும் பெரிய செலவுகள் இருக்காது. பராமரிப்பு செலவு களுக்கான பணத்தைத் தந்து விட்டால், அது தொடர்பான வேலைகளை அசோசியேஷன் செய்துவிடும் என்பதால், நீங்கள் கவலை இல்லாமல் இருக்கலாம்.

3. அப்பார்ட்மென்டுகள் பட்ஜெட் ஃபிரெண்ட்லியாகவும் இருக்கும். நல்ல பட்ஜெட்டில் சிறப்பான அப்பார்ட்மென்ட் வீடுகள் நிறையவே கிடைக்கின்றன. நம்முடைய நிதிநிலை, தேவைக்கேற்ப இரண்டு பெட்ரூம், மூன்று பெட்ரூம் வீடுகளைக்கூட தேர்வு செய்யலாம்.

பிரச்னைகள்: 1. அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில் அக்கம்பக்கத்தார் பிரச்னை கொடுக்க அதிக வாய்ப்புள்ளது. பார்க்கிங், மொட்டை மாடி, வராண்டா, லிஃப்ட், படிக் கட்டுகள் போன்ற பொதுவான இடங்களில் சில நேரங்களில் பிரச்னைகள் உண்டாகலாம்.

2. அப்பார்ட்மென்டுகளில் சில விதிமுறைகள் இருக்கும். அதன்படி நடந்துகொள்ள வேண்டும். நம் இஷ்டத்துக்கு இருக்க முடியாது. வீட்டுக்கு நண்பர்களை அழைத்து பார்ட்டி பண்ணுவது போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் இருக்கும். யார் வருகிறார்கள், போகிறார்கள் என்பதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.

3. தண்ணீர் பயன்பாடு, மோட்டார் பயன்பாடு, அதற்கான மின்சாரப் பயன்பாடு ஆகியவற்றில் பிரச்னைகள் வரலாம்.

4. செல்லப் பிராணிகள் வளர்க்கவோ, செடிகள் வளர்க்கவோ கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

முக்கியமாகக் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்...

எந்த வகையிலான வீடு வாங்கினால் உங்களுக்கு என்ன ப்ளஸ் என்ன மைனஸ் எனப் புரிந்து கொண்டிருப்பீர்கள். வீடு வாங்கும்போது இன்னும் சில முக்கியமான விஷயங்களை அவசியம் கவனிக்க வேண்டும்.

கட்டுமானத் திட்டங்களில் வீடு வாங்கும்போது கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்குவது மிகவும் நல்லது. ஏனெனில், கட்டி முடிக்கப்படாத வீடுகளுக்கு நாம் பணத்தைச் செலுத்திவிட்டால் சொன்ன தேதிக்குள் வீட்டை முடித்து டெலிவரி கொடுக்காமல் போகலாம். கடன் வாங்கி நாம் பணத்தைச் செலுத்தி இருந்தால் வீடு கட்டி முடிக்கும் காலம் வரை அதற்கு இ.எம்.ஐ கட்ட வேண்டியிருக்கும்.

சில நேரங்களில் கட்டி முடிக்கப்படாத வீட்டுத் திட்டங்கள் பல காரணங்களால் பாதியிலேயே நின்றுவிடவும் வாய்ப்புள்ளது.

வீடு வாங்கும்போதே தண்ணீர் வசதி, மின் இணைப்பு, மெட்ரோ வாட்டர் இணைப்பு, பராமரிப்பு போன்ற அனைத்தையும் தீர விசாரித்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கட்டி முடிக்கப்பட்டு நீண்ட காலமாக விற்காமல் இருந்த வீடுகளை வாங்குகிறீர்கள் எனில், அந்த வீட்டுக்கு சொத்து வரி, தண்ணீர் வரி செலுத்தப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

வரியை பில்டரோ, வீட்டுக்காரரோ செலுத்தாமல் இருந்தால் அவையும் உங்கள் தலையில் விழும்.

ஏற்கெனவே கட்டிய வீட்டில் கூடுதலாக தளத்தைக் கட்டி எழுப்ப விரும்பினால், அதைத் தாங்கும் சக்தியுடன் வீட்டின் அடித்தளம், பில்லர்கள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். எந்த வீடாக இருந்தாலும் சரி, ஆவணங்கள் அனைத்தையும் சட்ட நிபுணரிடம் கொடுத்து ஆலோசனை பெறுவது கட்டாயம்.

இப்போதெல்லாம் ஒரே வீட்டைப் பலருக்கு விற்பது, ஏற்கெனவே வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் அடமானத்தில் இருக்கும் வீட்டை விற்பது எனப் பல மோசடிகள் நடக் கின்றன” என்று எச்சரிக்கை யுடன் முடித்தார் ஜி.கணேஷ்.

தனி வீடு, வில்லா, அடுக்கு மாடி என எது உங்கள் சாய்ஸாக இருந்தாலும் உங்கள் பட் ஜெட்டுக்கும் வசதிக்கும் ஏற்ப உங்களுக்குத் தோதான வீட்டைத் தேர்வு செய்ய வேண்டியது நீங்கள்தான்!

வீடு... கடன்... இ.எம்.ஐ..!

1. வாங்கும் வீடு, அலுவலகம், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் 5 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருக்க வேண்டும்.

2. முடிந்தவரை கடன் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

3. வீட்டின் மதிப்பு குடும்ப ஆண்டு வருமானத்தில் 5 மடங்கு அளவுக்குத்தான் இருக்க வேண்டும்.

4. மாதம்தோறும் செலுத்தும் இ.எம்.ஐ மாத வருமானத்தில் 30 சதவிகிதம் அளவுக்கு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

5. இ.எம்.ஐ செலுத்தும் காலம் 20 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.

”பழைய வீடு... பார்க்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்!‘‘

“பட்ஜெட்டை பற்றி மிகவும் கவலைப்படுபவர்கள் பழைய வீடுகளையே தேடுகிறார்கள். ஆனால், பழைய வீடு வாங்கும்போது அந்த வீடு கட்டப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு, கட்டுமானப் பொறியாளரிடம் வீட்டை ஒருமுறை காட்டுவது நல்லது. வீடு கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்குள் இருந்தால் வாங்கலாம். அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரையிலும் இருக்கும் பழைய வீடுகளை வாங்கலாம். ஆனால் வீட்டின் தரத்தைப் பார்த்து முடிவு செய்ய வேண்டும். வீட்டைச் சரியாகப் பராமரித்து வந்திருக்கும்பட்சத்தில் 20 ஆண்டு பழைய வீடுகளை வாங்கி, மேலும் 20 ஆண்டுகளுக்கு அந்த வீட்டில் தாராளமாக வசிக்கலாம். வீடு விரிசல் விடாமலும் தண்ணீர் ஓதம் அடிக்காமலும் பராமரிக்க வேண்டும்.

பழைய வீடு அடுக்குமாடி வீடாக இருக்கும்பட்சத்தில் அந்த வீடு அமைந்துள்ள இடம், கட்டடத்தின் வயது, கட்டடத்தின் வலிமை, பராமரிப்பு, வீட்டைக் கட்டிய கட்டுமான நிறுவனம் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்த பிறகே அந்த வீட்டின் விலையை மதிப்பிட வேண்டும். பழைய வீடு வாங்கும் பகுதியில் புதிய வீடுகளின் விலையையும் பார்த்து, எவ்வளவு சதவிகிதம் லாபம் என்பதைப் பொறுத்தே முடிவு செய்ய வேண்டும். பழைய வீடுகளை சரிசெய்ய ஆகும் செலவுகளைப் பார்க்கும்போது, புது வீட்டையே வாங்கியிருக்கலாமே என்று எண்ணம் வர வாய்ப்புள்ளது. எனவே, முன்கூட்டியே தீர ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்” என்றார் கட்டடவியல் நிபுணர் ஜி.கணேஷ்.