பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

சொத்து வாங்கப் போகிறீர்களா..? கவனிக்க வேண்டிய 4 முக்கிய அம்சங்கள்..!

ரியல் எஸ்டேட்
பிரீமியம் ஸ்டோரி
News
ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

ஆர்.குமார், நிறுவனர், https://navins.in/

நம்மில் பெரும்பாலானோர் வீடு வாங்கும் போது வீட்டின் கட்டுமானம் தொடர்பான பல விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பது இல்லை. இப்படிக் கவனிக்காமல் விடும் கட்டுமானம் தொடர்பான பிரச்னைகள் பிற்காலத்தில் பெரிதாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது.

ஆர்.குமார் 
நிறுவனர், 
https://navins.in/
ஆர்.குமார் நிறுவனர், https://navins.in/

1. கட்டுமானத்தில் விதிமுறை மீறல் இருக்கக் கூடாது...

பில்டர் விதிமுறை மீறல் இல்லாமல் வீடு களைக் கட்டியிருக்கிறாரா என்பதை உறுதிப் படுத்திக்கொள்வது வீடு வாங்குபவர்களின் கடமை மற்றும் உரிமையாகும். அப்ரூவல் பிளான்படிதான் வீடு கட்டப்படுகிறதா / கட்டப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அப்ரூவல் பிளானில் இருப்பது போல் வீட்டைச் சுற்றி காலி இடம் எதுவும் விடாமல் விதிமுறையை மீறி சில பில்டர்கள் வீடு கட்டுகிறார்கள். அதிக கட்டடப் பரப்பு கிடைக்கும் என்பதற்காகவும் கூடுதல் லாபம் பெறவும் விதிமுறைக்குப் புறம்பாக அவர்கள் இப்படி வீட்டைக் கட்டுகிறார்கள். அது போன்ற புராஜெக்ட்டில் வீடு வாங்காமல் இருப்பது நல்லது.

மேலும், பக்கவாட்டு இடங்களைச் சரியாக விட்டிருக்கிறார்களா எனப் பார்க்க வேண்டும். வீட்டைச் சுற்றி 5 அடி விட வேண்டிய இடத்தில் 2 அடி மட்டுமே விட்டுவிட்டு, மீதி இடத்தில் கட்டடம் கட்டி அதையும் சேர்த்துக் கூடுதல் விலைக்கு விற்பது நடக்கிறது. இதுவும் விதிமுறை மீறலுக்குக் கீழ் வருகிறது.

சில பில்டர்கள் ஆரம்பத்தில் ஒருவிதமான சதுர அடி கணக்கு சொல்வார்கள். வீடு கட்டுமானம் நிறைவு பெறும் நேரத்தில் சதுர அடியை அளந்து பார்த்தோம். கூடுதலாக 110 சதுர அடி இருக்கிறது. அதற்கும் சேர்த்து பணம் தர வேண்டும் எனக் கூடுதல் தொகை கேட்பார்கள்.

இப்படிச் சொன்னால் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு கட்ட அனுமதி வாங்கியபடிதான் அதைக் கட்ட வேண்டும். 110 சதுர அடி அதிகம் வந்துவிட்டது என்று சொன்னால், அந்தத் தவறு எப்படி நடந்தது என்று கேட்க வேண்டும்.

எல்லா பில்டர்களும் இந்தத் தவற்றை செய்பவர்கள் அல்லர். என்றாலும் வீடு வாங்குபவர்கள் இந்த விஷயத்தில் எப்போதும் உஷாராக இருப்பது நல்லது.

2. கட்டுமான வேலையைக் கவனியுங்கள்...

நீங்கள் வாங்கப்போகும் அடுக்குமாடிக் குடியிருப்பு அல்லது வீட்டு வேலை நடந்து கொண்டிருக்கும்போது நேரில் சென்று பாருங்கள். முடிந்தால் உங்களுக்குத் தெரிந்த பொறியாளரையும் அழைத்துச் சென்று கட்டு மானப் பணிகளைப் பார்வையிடுங்கள். தர மாகக் கட்டுகிறார்களா என்பதை அவ்வப்போது சோதனை செய்யுங்கள். கம்பி, சிமென்ட், மணல் கலவை எல்லாம் எப்படிப் போடுகிறார் கள் என்பதைப் பாருங்கள். அந்த உரிமை வீட்டை முன்பதிவு செய்தவர்களுக்கு இருக்கிறது. கட்டி முடிக்கப்பட்ட வீட்டையும் நல்ல பொறியாளரைக் கொண்டு சோதித்துப் பார்த்து முடிவுக்கு வருவது நல்லது.

தரமான மற்றும் சரியான பொருள்களைக் கொண்டு கட்டடம் கட்டப்படவில்லை எனில், அதன் ஆயுள் குறைவதுடன், வெயில், புயல், மழை பாதிப்பால் ஆபத்தாக மாற வாய்ப்பிருக்கிறது. சரியான சிமென்ட் கலவை போடவில்லை எனில், கட்டடத்தின் சில பகுதிகள் பெயர்ந்துவர வாய்ப்பிருக்கிறது. கட்டடம் இடிந்துகூட விழவும், மொட்டை மாடித் தளத்தின் வழியாக வீட்டுக்குள் தண்ணீர் கசிந்து வரவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, கட்டடத்தைத் தரமாகக் கட்டுவது மிக முக்கியம். அந்த வகையில் இடையிடையே கட்டுமானப் பணிகளைச் சென்று பாருங்கள்.

சொத்து வாங்கப் போகிறீர்களா..?
கவனிக்க வேண்டிய 4 முக்கிய அம்சங்கள்..!

3. ஒப்படைப்புக் காலம்

நீங்கள் வீடு வாங்கப்போகும் பில்டர் ஏற்கெனவே சொன்ன தேதியில் வீடுகளைக் கட்டி முடித்திருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். வங்கிக் கடன் வாங்கி பில்டருக்குத் தந்துவிட்டோம் அவர் சரியான நேரத்தில் கட்டித் தந்துவிடுவார் என்பதற்கு எந்த உத்தர வாதமும் கிடையாது.

சில பில்டர்கள் இரண்டு வருடத்தில் கண்டிப்பாக வீட்டை ஒப்படைத்துவிடுவோம் என்பார்கள். எப்போது உங்கள் வங்கிக் கணக்கில் வீட்டுக் கடன் வரவு வைக்கப் படுகிறதோ, அப்போதே கடனுக்கான மாதத் தவணை ஆரம்பித்துவிடும். சில இடங்களில் மூன்று வருஷமாகிறது; நான்கு வருஷமாகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் வாடகை வீட்டில் நீண்ட நாள்களாக இருந்துகொண்டிருப் பீர்கள்; கடன் தவணையும் கட்டிக்கொண்டிருப்பீர்கள். இதனால், உங்களுக்குத் தேவையில்லாத பண இழப்பாகும்.

இதனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது வீட்டின் சதுர அடி விலைதானே கூடிவிடுகிறது. சதுர அடி விலை குறைவு என நினைத்து தவறான பில்டரிடம் வீடு வாங்கியதன் பலன்தான் இது. கையில் வீடு வரும்போது, கடன் தொகை பாக்கி, இதுவரைக்கும் கட்டிய கடன் தவணை எல்லாம் சேர்த்தால் வீட்டின் சதுர அடி விலை எங்கோ சென்றுவிடும். இன்றைக்கு ‘ரெரா’ அமைப்பு பில்டருக்குத் தண்டனை எல்லாம் கொடுக்கிறது. ஆனால், நீங்கள் படுகிற அவஸ்தையை நீங்கள் பட்டுத்தானே ஆக வேண்டும்?

சொன்ன தேதியில் வீட்டை ஒப்படைத்திருக்கிறாரா என்பதைக் கவனியுங்கள். சரியான நேரத்தில் கட்டித் தரவில்லை எனில், ஒருபுறம் இப்போது இருக்கும் வீட்டுக்கு வாடகை கொடுப்பது, கடனுக்கான மாதத் தவணை கட்டுவது உங்களைத் தேவையில்லாத நிதிச் சிக்கலில் மாட்ட வைக்கும் விஷயமாக இருக்கும். எனவே, பில்டரின் நம்பகத் தன்மை மற்றும் சரியான நேரத்தில் வீட்டை ஒப்படைப்பாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த விஷயங்கள் எல்லாம் வாய் வார்த்தையாக இல்லாமல், ஒப்பந்தத்தில் எழுத்தில் குறிப்பிட வேண்டும். வீட்டை ஒப்படைப்பது தாமத மானால், கடன் மாதத் தவணைக் கான தொகையை பில்டர் கொடுக்க வேண்டும் என்கிற ஷரத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

4. கட்டமைப்பு

எந்தத் தூணுக்கு எவ்வளவு கனம் உள்ள ஸ்டீல் கம்பிகளைப் பயன்படுத்த வேண்டும் எனத் தேசிய கட்டுமான விதிமுறை இருக்கிறது. இதற்குக் குறைவான கனத்தில், தரத்தில் கம்பிகளைப் பயன்படுத்தும்போது செலவு குறைந்து வீட்டின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால், அது கட்டுமானத்தின் வலிமையைக் குறைத்துவிடும்.

வீடு கட்ட உதவும் பல்வேறு பொருள்களின் தரத்தையும் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டும். வீட்டை அவசர அவசரமாகக் கட்ட அனுமதிக்கக் கூடாது. நிதானமாகக் கட்டி, நன்றாகத் தண்ணீர் ஊற்றி நனைத்து க்யூரிங் செய்தால்தான் கட்டடம் வலிமையாக இருக்கும்.

மேலும், வீட்டின் அனைத்து இடமும் பயன்படுத்தக்கூடிய தாக இருக்க வேண்டும். பல வீடு களில் வழிகளே பாதி இடத்தை வீணாக்கிவிடும். அந்த இடத்தில் எந்தப் பொருளையும் வைக்க முடியாது.

வீடு வாங்கும்போது இந்த விஷயங்களை எல்லாம் கவனித் தால், நீங்கள் மட்டுமல்ல, உங்கள் தலைமுறையினரும் அந்த வீட்டில் பிரச்னை இல்லாமல் இருப்பார்கள்!