பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

அடுக்குமாடி வீடு வாங்கப் போறீங்களா? அவசியம் கவனிக்க வேண்டிய ஐந்து அம்சங்கள்..!

அடுக்குமாடி வீடு...
பிரீமியம் ஸ்டோரி
News
அடுக்குமாடி வீடு...

42% பேர் 3 படுக்கை அறை அடுக்குமாடி வீடுகளையும், 40% பேர் 2 படுக்கை அறை வீடுகளையும் தேடுவதாகச் சொல்கிறார்கள்!

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் போன்ற பெரும் நகரங்களில் வீட்டுமனைகளின் விலை மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது. நகர்ப்புறத்தில் அரை கிரவுண்ட் (1,200 சதுர அடி) மனை வாங்க வேண்டும் எனில்கூட, ரூ.50 லட்சத்துக்குமேல் செலவாகிறது. மேலும், நகருக்குள் காலி மனை கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதில் 800 சதுர அடியில் வீடு கட்ட எல்லா செலவுகளும் சேர்த்து ரூ.30 லட்சம் ஆகிவிடு கிறது. அரை கிரவுண்ட் இடம் வாங்கி வீடு கட்ட எப்படியும் சுமார் ரூ.1 கோடி தேவைப் படுகிறது.

எஸ்.கார்த்திகேயன் 
நிதி ஆலோசகர். 
https://winworthwealth.com/
எஸ்.கார்த்திகேயன் நிதி ஆலோசகர். https://winworthwealth.com/

இந்த நிலையில், பலரும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளை வாங்க ஆரம்பித்திருக் கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம், இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டை ரூ.35 லட்சம் முதல் ரூ.55 லட்சத்துக்குள் வாங்க முடிவதுதான்.

மக்களின் தேடுதல் விருப்பம்...

ரியல் எஸ்டேட் ஆராய்ச்சி நிறுவனமான அனராக் (ANAROCK) சுமார் 4,600 பேரிடம் நடத்திய கருத்துக்கேட்பில் 42% பேர் மூன்று படுக்கை அறை அடுக்குமாடி வீடுகளையும், 40% பேர் இரு படுக்கை அறை வீடுகளையும் தேடுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். 12% பேர்தான் ஒரு படுக்கை அறை வீடுகளைத் தேடுகிறார்கள். மூன்று படுக்கை அறைக்கு மேற்பட்ட வீடுகளை 6% பேர் விரும்புவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அடுக்குமாடி வீடுகளைத் தேடிக்கொண்டிருப்பவர்கள் ஐந்து முக்கியமான அம்சங்களை அவசியம் கவனிக்க வேண்டும்.

1. சதுர அடி விலை எவ்வளவு?

அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை ஒரு சதுர அடிக்கு இவ்வளவு எனக் குறிப்பிடப்படுகிறது. ஒரே பகுதியில் அமைந்திருக்கும் இரு குடியிருப்புத் திட்டங்களை எடுத்துக்கொண்டாலும் விலை வித்தியாசம் கட்டாயம் இருக்கும். அடுக்குமாடி வீட்டின் அளவை தரைவிரிப்பு பகுதி (Carpet Area) அடிப்படையில்தான் குறிப்பிட வேண்டும் என ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் (RERA) சொன்னாலும், பொதுப் பயன்பாட்டு இடங்கள், வீட்டின் சுவர் அளவு, நடைபாதை எல்லாம் சேர்ந்த சூப்பர் பில்டப் ஏரியாவின் அடிப்படையில்தான் சதுர அடி விலை சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் வீட்டின் அளவும் சொல்லப் படுகிறது.

மேலும், இந்த விலையில் கார் பார்க்கிங், மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு உள்ளிட்ட செலவு கள் சேராது. மேலும், வீட்டின் உள் அலங்கார செலவுகளும் சதுர அடி விலையில் சேராது. இவை எல்லாம் சேர்த்து மொத்த விலை எவ்வளவு எனப் பார்த்து ஃபிளாட்டை வாங்க வேண்டும்.

உதாரணமாக, ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் சூப்பர் பில்டப் ஏரியா 1,005 சதுர அடியாக உள்ள நிலையில், கார்ப்பெட் ஏரியா என்பது 643 சதுர அடி உள்ளது. இந்த வீட்டை வாங்குபவர் வீட்டுக்குள் புழங்கப்போகும் அளவு வெறும் 643 சதுர அடிதான். மீதி எல்லாம் பொதுவான பகுதியாகும். அனைவருக்கும் அதில் உரிமை உள்ளது.

அருகருகே இரு புராஜெக்ட்கள் இருக்கும்பட்சத்தில் அவற்றில் கார்ப்பெட் ஏரியா அடிப்படையில் ஒரு சதுர அடி விலை எனக் கணக்கிட்டுப் பார்க்கவும். அதன் அடிப் படையில் எந்த வீட்டை வாங்குவது என்கிற முடிவை எடுக்கவும்.

சென்னை புறநகரில் அருகருகே இரு அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன; இரண்டிலும் ஒரேமாதியான அடிப்படை வசதிகள் மற்றும் கூடுதல் வசதிகள் இருக் கின்றன; இரு புராஜெக்டுகளிலும் 1,000 சதுர அடி வீட்டின் விலை ரூ.60 லட்சம் என வைத்துக்கொள்வோம். ஒரு புராஜெக்ட்டில் கார்ப்பெட் ஏரியா 700 சதுர அடியும், ஒரு புராஜெக்டில் கார்ப்பெட் ஏரியா 650 சதுர அடியும் கிடைப்பதாக வைத்துக்கொள்வோம்.

இங்கே 700 சதுர அடி கார்ப்பெட் ஏரியா உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புதான் லாபகரமாக இருக்கும். இந்த வீட்டின் விலை, கார்ப்பெட் ஏரியா அடிப்படையில் ஒரு சதுர அடி ரூ.8,571 ஆகும். இதுவே, 650 சதுர அடி கார்ப்பெட் ஏரியா கொண்ட வீட்டின் சதுர அடி விலை ரூ.9,231 ஆகும். இங்கே விலை வித்தியாசம் ஒரு சதுர அடிக்கு ரூ.660 வருகிறது. எனவே, கார்ப்பெட் ஏரியாவுக் கான சதுர அடி விலை என்ன என்பதைக் கணக்கிட்டு, அடுக்குமாடிக் குடியிருப்புக்கு உள்ளே மற்றும் அதைச் சுற்றி இருக்கும் வசதிகளை அலசி ஆராய்ந்து முடிவு எடுப்பது சரியாக இருக்கும்.

அடுக்குமாடி வீடு வாங்கப் போறீங்களா? அவசியம் கவனிக்க வேண்டிய ஐந்து அம்சங்கள்..!

2. முக்கியமான அடிப்படை வசதிகள் என்னென்ன?

அடுக்குமாடிக் குடியிருப்பு அமைந்திருக்கும் இடத்துக்குச் செல்வதற்கான பொதுப் போக்குவரத்து வசதிகள் (ரயில், பஸ், ஷேர் ஆட்டோ) அடிக்கடி இருப்பது மிக முக்கியம் ஆகும். அடுத்து, வீட்டின் அருகில் ஓரிரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் மருத்துவமனைகள், வங்கிகள், பள்ளிக் கூடம், கல்லூரி வசதிகள் இருந்தால் நல்லது.

3. சரியான நேரத்தில் வீட்டை ஒப்படைப்பது...

வீட்டைக் கட்டித் தரும் பில்டர் சொன்னபடி, சரியான நேரத்தில் வீட்டைக் கட்டித் தருபவரா என்பதைக் கவனித்து முன்பணம் கொடுக்கவும். காரணம், பெரும் பாலான வீடுகள் வீட்டுக் கடன் மூலம்தான் வாங்கப்படுகின்றன. ஒரு பக்கம், வீட்டுக் கடனுக்கு மாதத் தவணை மற்றும் வட்டி கட்டிக்கொண்டிருக்க, மற்றொரு புறம் தற்போது குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை கொடுக்க வேண்டும். வீட்டை ஒப்படைக்கும் காலம் ஆண்டுக் கணக்கில் நீண்டு கொண்டு போனால் தேவை இல்லாமல் வாடகை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

இதுவரைக்கும் கட்டடப்பணி எதையும் ஆரம்பிக்காத இடத்தில் வீடு வாங்குவதைவிட, கட்டடப் பணி நடந்துகொண்டிருக்கும் திட்டத்தில் முன்பதிவு செய்வது நல்லது. தற்போதைய நிலையில், ஆரம்பத்தில் முன்பதிவு செய்தவர் களுக்கும் இப்போது புதிதாக முன்பதிவு செய்பவர்களுக்கும் விலையில் பெரிய வித்தியாசம் இல்லை. காரணம், வீட்டுக் கடன் வட்டி வேகமாக உயர்ந்திருப்பது, பொருளாதார மந்தநிலை போன்ற பாதிப்புகளால் வீடு வாங்கும் திட்டத்தை சிலர் தள்ளி வைத்திருப் பதால், பேரம் பேசி விலையைக் குறைக்க முடியும்.

இன்னும் 10, 12 மாதங்களில் வீடு ஒப்படைக்கப்படும் என்கிற திட்டங்களில் அல்லது கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்கு வது லாபகரமாக இருக்கும்.

4. படிப்பறை வசதி...

அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் படுக்கை அறையை பகலில் அலுவலக அறையாக மாற்றும் வசதி இருப்பதுபோல் வடிவமைப்பது நல்லது. மேலும், பிள்ளைகள் படிப்பதற்கேற்ப படிப்பறை (Study Room) ஒன்று இருப்பதும் நல்லது.

கோவிட் 19 பாதிப்புக்குப் பிறகு வீட்டிலிருந்தே படிப்பு, வீட்டி லிருந்தே வேலை என்பது அவசிய மாகி இருக்கிறது. பொருளாதார மந்தநிலை மற்றும் கோவிட் 19 போன்ற பாதிப்பால் எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் வீட்டிலிருந்தே படிப்பு, வீட்டி லிருந்தே வேலை வரலாம். அதற்கேற்ற வசதியுள்ள வீட்டை வாங்குவதே சரி.

சில அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்களில் ஒரு பெரிய படுக்கை அறை, ஒரு சிறிய படுக்கை அறை வீடுகள் அல்லது இரு பெரிய படுக்கை அறை, ஒரு சிறிய படுக்கை அறை வீடுகள் வைத்திருக்கிறார்கள். இவற்றில் சிறிய படுக்கை அறையை அலுவலக அறை அல்லது பிள்ளைகளுக்கு படிப்பறையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

5. நல்ல வெளிச்சம், காற்றோட்டம்...

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகளைத் தேர்வு செய்யும்போது வெளிச்சம் மற்றும் காற்றோட்டமான வீடுகளைத் தேர்வு செய்வது முக்கியம். இப்போதெல்லாம் பெரிய நிறுவனங்கள் மூன்று திசைகளில் காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் வீடுகளுக்குக் கிடைக்கும்படி வடிவைத் திருக்கிறார்கள். அப்படி இருக்கும் வீடுகளைத் தேர்வு செய்வது மூலம் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத் தைப் பேணும் அதே நேரத்தில் மின்சார செலவையும் கணிசமாக மிச்சப்படுத்த முடியும்.

நம் வாழ்க்கையில் வீடு வாங்குவது ஓரிரு முறை மட்டுமே நடக்கக்கூடிய செயலாக இருக்கிறது. இப்படி வாங்கும் வீட்டை கண்ணும் கருத்துமாக அலசி ஆராய்ந்து தேர்வு செய்தால், நமது முடிவை நினைத்து என்றைக்கும் வருத்தப்பட வேண்டிய தேவை இருக்காது. அடுக்குமாடி வீடு தேடும்போது இந்த ஐந்து விஷயங்களை மனதில் கொண்டு செயல்படுங்கள்!

இந்த விஷயங்களையும் கட்டாயம் கவனியுங்கள்..!

1. எவையெல்லாம் பொதுப் பயன்பாட்டுப் பகுதிகள் என்பதைப் பட்டியல் போட்டு வாங்கிக் கொள்ளுங்கள். இதனால், பிற்பாடு அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகளிடையே பிரச்னை வராமல் தடுக்க முடியும்.

2. கார் பார்க்கிங் என்பது இப்போது கட்டாயமாக மாறிவிட்டது. எனவே, கார் பார்க்கிங் வசதி உள்ள வீடாக வாங்குவது நல்லது. இன்றைக்கு உங்களிடம் கார் இல்லாமல் இருக்கும். எதிர்காலத்தில் கார் வாங்கினால் அதை நிறுத்த இட வசதி வேண்டும் என்பதால், கார் நிறுத்தும் வசதி இருப்பது கட்டாயமாகும்.

3. வீட்டின் அளவு சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். சுமார் 10 சதுர அடி குறைந்தால்கூட, சதுர அடி விலை ரூ.6,000 எனில், இழப்பு ரூ.60,000 ஆகும்.

4. கட்டட அனுமதியானது திட்டத்தில் உள்ளபடிதான் கட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். விதிமுறை மீறல் இருந்தால், பிற்பாடு வீட்டை விற்கும்போது நல்ல விலைக்குப் போகாது. இவை எல்லாவற்றையும்விட, கட்டுமான நிறுவனத்தின் நம்பகத் தன்மையையும் உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும்.

5. மின் இணைப்புக்கான வயர்கள் எப்படிச் செல்கின்றன என்கிற வரைபடத்தை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பிற்பாடு ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் எனில், அதிக செலவில்லாமல் சுலபமாகச் செய்ய முடியும். இல்லை எனில், சுவரைக் கண்டபடி உடைக்க வேண்டி வரும்.