பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

வீட்டுக் கடனை நிர்ணயிக்கும் கிரெடிட் ஸ்கோர்..!

கிரெடிட் ஸ்கோர்
பிரீமியம் ஸ்டோரி
News
கிரெடிட் ஸ்கோர்

கைகொடுக்கும் வீட்டுக் கடன்! - 8

வீட்டுக் கடன் கிடைப்பது மற்றும் வீட்டுக் கடனுக்கான வட்டியை நிர்ணயம் செய்வதில் ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் (Credit Score) மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஓர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் இருவர் ஒரே சம்பளம் வாங்கினாலும் அதிக கிரெடிட் ஸ்கோர் இருப்பவருக்கு குறைவான வட்டியும், குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருப்பவருக்கு அதிக வட்டியும் விதிக்கப்படும். அதாவது, வட்டி விகிதம் வெறும் 0.5% எனில்கூட, வட்டிக்குக் கூடுதலாகச் செல்வது ரூ.2.55 லட்ச மாக இருக்கும். எனவே, வங்கியில் வாங்கியக் கடனை சரியாகத் திருப்பிச் செலுத்தி அதிக கிரெடிட் ஸ்கோரைக் குறையாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.

எஸ்.கார்த்திகேயன், நிதி ஆலோசகர், 
https://winworthwealth.com/
எஸ்.கார்த்திகேயன், நிதி ஆலோசகர், https://winworthwealth.com/

கிரெடிட் ஸ்கோர் வரலாறு...

சிபில் (Credit Information Bureau (India) Limited - CIBIL) என்பது இந்தியாவின் முதல் கடன் தகவல் நிறுவனமாகும். இது பொதுவாக, கடன் அமைப்பு என்று அழைக்கப் படுகிறது. கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் தொடர்பான தனிநபர்கள் மற்றும் தனிநபர்கள் அல்லாதவர்களின் (வணிக நிறுவனங்கள்) தகவல்களை கிரெடிட் ஸ்கோர் நிறுவனங்கள் சேகரித்துப் பராமரித்து வருகின்றன. இந்தப் பதிவுகள் மாதம்தோறும் வங்கிகள் மற்றும் கடன் வழங்குபவர்களால் கிரெடிட் ஸ்கோர் நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்தத் தகவலைப் பயன்படுத்தி கடன் தகவல் அறிக்கை (Credit Information Report- CIR) மற்றும் கிரெடிட் ஸ்கோர் உருவாக்கப்படுகிறது. இதன் அடிப்படை யில், கடன் வழங்குபவர்கள், கடன் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து கடன் ஒப்புதல் அளிக்க உதவுகிறது.

இந்தக் கடன் தகவல் அமைப்புகள் ரிசர்வ வங்கியிடம் உரிமம் பெற்றவை. 2005-ம் ஆண்டின் கடன் தகவல் நிறுவனங்கள் (ஒழுங்கு முறை) சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ வங்கி, அனைத்துக் கடன் தகவல் அமைப்புகளும் ஆண்டுக்கு ஒருமுறை அனைத்து நுகர்வோருக்கும் இலவச முழுக் கடன் அறிக்கையை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் டிரான்ஸ்யூனியன் சிபில் (Transunion CIBIL), கிரிப் ஹை மார்க் கிரெடிட் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் (CRIF High Mark Credit Information Services), எக்ஸ்­பீ­ரியன் கிரெடிட் இன்ஃபர்மேஷன் கம்பெனி (Experian Credit Information Co), ஈக்­யூபேக்ஸ் கிரெடிட் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் (Equifax Credit Information Services) உள்ளிட்ட அமைப்­புகள் இந்த கிரெடிட் அறிக்­கையை வழங்கி வரு­கின்­றன.

கிரெடிட் ஸ்கோர் 1 - 5 என இருந்தால், ஒருவருக்கு கடன் வரலாறு ஆறு மாதங்களுக்கும் குறைவாக இருக்கிறது என அர்த்தம். ஒருவருக்கு கிரெடிட் ஸ்கோர் -1 என இருந்தால், அவருக்கு கடன் வரலாறு எதுவும் இல்லை என்று அர்த்தம். அதாவது, இவர்கள் இதுவரை கடன் எதுவும் வாங்காதவர்கள், முதல்முறையாகக் கடன் வாங்க விண்ணப்பித்திருக்கிறார்கள்.

ஒருவர் கடன் வாங்கி, அதை முறையாகச் செலுத்தும்போது தான் அவரது கிரெடிட் ஸ்கோர் உயரும். அந்த வரலாற்றைப் பார்த்துதான் அவருக்குக் கடன் தரலாமா, அப்படித் தந்தால் முறையாகத் திருப்பிச் செலுத்துவாரா என்று பரிசீலிக்க முடியும்.

வீட்டுக் கடனை நிர்ணயிக்கும் கிரெடிட் ஸ்கோர்..!

கிரெடிட் ஸ்கோர் 750-க்கு மேல்...

பொதுவாக, கிரெடிட் ஸ்கோர் 750-க்குமேல் இருந்தால் வீட்டுக் கடனுக்கான வட்டி, மற்றவர்களைவிட குறைவாக இருக்கும். நம் நாட்டின் முன்னணி வங்கிகள், வீட்டுவசதி நிறுவனங்கள் வீட்டுக் கடனுக்கான வட்டியை கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் நிர்ணயம் செய்துள்ளது. சிபில் ஸ்கோர் 700 - 750 வரை இருந்தால் அதிக வட்டியும், 750 - 800 வரை இருந்தால் குறைவான வட்டியும் நிர்ணயம் செய்துள்ளன. மேலும், வீட்டுக் கடன் வழங்குவதற்கான முக்கியமான காரணியாக பல வங்கிகள், வீட்டு வசதி நிறுவ னங்கள், நிதி நிறுவனங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பயன்படுத்து கின்றன. கிரெடிட் ஸ்கோர் மிகவும் மோசமாக இருந்தால், பல நேரங்களில் நடைமுறையில் கடனுக்கான வட்டி அதிகரிக் கப்படுவதற்கு பதில் கடன் கொடுப்பது மறுக்கப்படுகிறது. அதே நேரத்தில், அதிக வருமானம், வேலை பார்க்கும் நிறுவனத்தின் தன்மை, கடன் வாங்குபவரின் வயது மற்றும் கடன் வாங்குபவருக்கும் வங்கிக்கும் உள்ள உறவு ஆகியவற்றின் அடிப்படையில் குறைவான கிரெடிட் ஸ்கோர் இருந்தாலும் கடன் கொடுக்கப்படலாம்.

கிரெடிட் ஸ்கோரை உயர்த்த...

வழங்கப்பட்ட 80% கடன்கள் 750-க்குமேல் கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்களுக்குதான் வழங்கப்பட்டிருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. குறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற, ஏற்கெனவே வாங்கியிருக்கும் அவர் பெயரில் உள்ள கடன்களை எல்லாம், வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் அடைத்துவிட வேண்டும்.

உங்களின் வருமானத்தை அதிகரிப்பது மூலம் கடனைத் திரும்பச் செலுத்தும் திறன் அதிகரிக்கும். வேலை மாறுவது மூலம் அல்லது நிறுவனத்தில் சம்பள உயர்வு பெறுவது மூலம் வருமானத்தை அதிகரிக்க முடியும். இந்தச் சம்பள அதிகரிப்பு ஒருவரின் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தும்.

மிகக் குறைவாக கிரெடிட் ஸ்கோர் இருந்தால்...

சில நேரங்களில் ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் தவறுதலாக குறைவாகக் காட்டப்படலாம். அதாவது, அவர் கடனை அடைத்த விவரம் அல்லது அவரின் அதிகரித்த சம்பளம் அவரின் கிரெடிட் அறிக்கையில் சேர்க்காமல் விடுபட்டிருக்கலாம்.

கிரெடிட் ஸ்கோர் மிகக் குறைவாக இருந்தால் வீட்டுக் கடன் கிடைக்கவே கிடைக்காது. என்று சொல்ல முடியாது. வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள், கிரெடிட் ஸ்கோர் சுமார் 750-க்கு மேல் இருந்தால் சுலபமாக வீட்டுக் கடன் வழங்குகின்றன. இதை விட அதிகமாக இருக்கும்பட்சத்தில் குறைவான வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்கும். அடுத்து, குறைவான ஸ்கோர் இருக்கும்பட்சத்தில் கூடுதல் ஜாமீனும் கேட்கப்படும்.

பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறு வனங்கள் குறைவான கிரெடிட் ஸ்கோர் இருந்தால், அதிக வட்டி விதிக்கின்றன. கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் கிரெடிட் ஸ்கோர் மிகக் குறைவாக இருந் தாலும் வீட்டுக் கடன் வழங்கு கின்றன. ஆனால், இந்தக் கடனுக்கான வட்டி மிக அதிக மாக இருக்கும். வங்கிகள் புதிய வீட்டுக் கடனை சுமார் 7.5 சதவிகிதத்துக்கு வழங்கி வரும் நிலையில், தனியார் நிறுவனங்களின் வட்டி விகிதம் 10 - 12% என மிக அதிகமாக இருக்கும்.

மேலும், கிரெடிட் ஸ்கோர் மிகக் குறைவாக உதாரணமாக, 600 ஆக இருந்து அவர் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்தால் அவருக்கு வீட்டின் மதிப்பில் வழக்கமான 80 சதவிகிதத்துக்கு பதில் சுமார் 60% தொகைதான் கடனாக வழங்கப்படும். அதாவது, கையிலிருந்து அவர் போடும் முன்பணம் 40 சதவிகிதமாக இருக்கும்.

ஏதாவது ஒரு கடனை வாங்கி விட்டு அதை கடைசிவரைக்கும் கட்டாமல் இருந்து, கிரெடிட் ஸ்கோர் குறைந்திருந்தால் வீட்டுக் கடன் கிடைப்பது மிக கடினமாகும்.

வீட்டுக் கடனை நிர்ணயிக்கும் கிரெடிட் ஸ்கோர்..!

மிக அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தால்...

மிக அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தால் வீட்டுக் கடன் நிச்சயம் கிடைக்கும் என்று எந்த உத்தரவாத மும் கிடையாது. கடன் கிடைப் பதற்கு கிரெடிட் ஸ்கோர் முக்கிய மானது. ஆனால், கடன் ஒப்புதல் அளிக்க கடனைத் திரும்பக் கட்டுவதற்கான தகுதி, கடன் வாங்குபவரின் வயது, மாத வருமானம், வேலையின் தன்மை (அரசு / தனியார் வேலை / நிரந்தர வேலை), ஏற்கெனவே வாங்கிய கடன்களுக்குக் கட்டிவரும் மாதத் தவணை, சொத்துப் பத்திரங்கள் வில்லங்கம் எதுவும் இல்லாத தாகவும், லே அவுட் மற்றும் கட்டட அனுமதி பெற்றதாகவும் இருக் கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவரால் கடனைக் கட்ட முடியாத சூழ்நிலையில் அந்தச் சொத்தை சட்டப்படி கைப்பற்றி, அதை சுலபமாக விற்று பணமாக்க என்னென்ன ஆவணங்கள் தேவையோ, அவற்றையெல்லாம் வீட்டுக் கடன் வாங்குபவரிட மிருந்து வங்கிகள் / வீட்டு வசதி நிறுவனங்கள் கேட்டுப் பெற்றுக் கொள்ளும்.

கிரெடிட் ஸ்கோர் என்பது நடத்தைச் சான்றிதழ் (Conduct certificate0) தருவது மாதிரிதான். கிரெடிட் ஸ்கோரை வைத்து ஒருவரை முழுக்க முழுக்க நல்லவர் என்றோ, கெட்டவர் என்றோ சொல்ல முடியாது. அது கணிப்பு அவ்வளவுதான். அதே நேரத்தில், கிரெடிட் ஸ்கோருக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்தி கடன் வாங்கும் நிலை இன்றைக்கு இல்லை. இதனால் வீட்டுக் கடன் தொடங்கி பல கடன்களைக் கொடுப்பதற்கு வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்களுக்கு இது முக்கிய அளவுகோலாக இருக்கிறது.

(சொந்த வீட்டை வாங்குவோம்)