நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

சொந்த வீடு கனவு... சுலபமாக நிறைவேற சூப்பர் டிப்ஸ்!

சொந்த வீடு
பிரீமியம் ஸ்டோரி
News
சொந்த வீடு

சொந்த வீடு

நம்மில் பலரின் வாழ்நாள் லட்சியம், ஆசை, விரும்பம் எல்லாம் சொந்த வீடு வாங்குவதுதான். இது ஒரு சமூக அந்தஸ்தாகப் பார்க்கப்படுவதால் பலரும் சொந்த வீட்டுக்கு ஆசைப்படுகிறார்கள். சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி போன்ற பெரும் நகரங்களில் நகருக்குள் வீடு வாங்குவது என்பது சாதாரணமானவர்களுக்கு கஷ்டமானது. காரணம், மனை விலை மிகவும் அதிகமாக இருப்பதுடன் கட்டுமான செலவும் உயர்ந்திருப்பதாகும்.ஆனால், புறநகர்களில் சரியாகத் திட்டமிட்டால் சொந்த வீடு வாங்குவது ஒன்றும் கஷ்டமான காரியமில்லை.

என்.விஜயகுமார் 
நிதி ஆலோசகர், 
https://www.vbuildwealth.com/
என்.விஜயகுமார் நிதி ஆலோசகர், https://www.vbuildwealth.com/

இரு வாய்ப்புகள்...

சொந்த வீடு என்கிறபோது ஒருவரின் முன்பு இரு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று சற்று காலம் எடுத்து, முழுப் பணத்தையும் முதலீடு மூலம் சேர்த்து வைத்துக் கொண்டு வீடு வாங்குவது. அண்மை ஆண்டுகளில் நாட்டில் ரியல் எஸ்டேட் மந்த நிலையில் விலை அதிகரிக்காமல் காணப்பட்ட நிலையில் காசு சேர்த்து வீடு வாங்குவது லாபகரமாக இருக்கும்.

அதேநேரத்தில், எதிர்காலத்தில் ரியல் எஸ்டேட் விலை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துவரும் என்றால் பணத்தை மொத்தமாகச் சேர்த்துக்கொண்டு சொந்த வீடு வாங்குவது லாபமாக இருக்காது. இந்த நிலையில், வீட்டுக் கடன் வாங்கு வதற்கான முன் பணத்தை (டவுன் பேமென்ட்) முதலீடு மூலம் திரட்டிக்கொண்டு மீதித் தொகையை வீட்டுக் கடன் மூலம் பெற்று வீட்டைச் சொந்தமாக்கிக்கொள்ளலாம்.

சொந்த வீடு கனவு... சுலபமாக நிறைவேற சூப்பர் டிப்ஸ்!

சொந்த வீடு வாங்க முதலீடு...

சிலர் வாழ்க்கையில் கடனே வாங்க மாட்டேன் என்ற கொள்கையுடன் இருப்பார்கள். சிலர் எதற்கு வீணாகக் கடனுக்கு வட்டி கட்ட வேண்டும்; அதுவும் வாழ்நாள் முழுக்க கட்ட வேண்டும் என்பார்கள். இவர்கள் முதலீடு மூலமே வீட்டைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம், தவறில்லை. ஆனால், அதற்கு 10, 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

உதாரணமாக, ஒருவர் 10 அல்லது 15 ஆண்டுகள் கழித்து வீடு வாங்கத் திட்டமிடுகிறார் என வைத்துக் கொள்வோம். எத்தனை அறை வீடு, எவ்வளவு சதுர அடி, எந்த இடத்தில், பிள்ளைகளின் பள்ளிக் கூடம் மற்றும் அலுவலகத்திலிருந்து எவ்வளவு தூரம், பழைய வீடா, புது வீடா, தனி வீடா, அடுக்குமாடிக் குடியிருப்பா என்பது போன்ற விஷயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.இன்று அந்த வீடு வாங்க எவ்வளவு செலவாகும், விலை உயர்வால் (பணவீக்கம்), 10 அல்லது 15 ஆண்டுகள் கழித்து எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதைக் கணக்கிட வேண்டும்.

மனை விலை பெரிதாக உயரவில்லை என்றாலும் சிமென்ட், மணல், கூலி போன்ற கட்டுமானப் பொருள்களின் விலை உயர்ந்து வருவதால் ரியல் எஸ்டேட் விலைவாசி உயர்வு ஆண்டுக்கு 10% என்றால் இன்றைய ரூ.30 லட்சம் என்பது 10 ஆண்டுகள் கழித்து ரூ.70 லட்சமாக இருக்கும். இந்தத் தொகையைத் திரட்ட ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் எதிர் பார்க்கும் பங்குச் சந்தை சார்ந்த டைவர்சிஃபைடு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றால்கூட மாதம் சுமார் ரூ.30,000 தேவைப்படும். இந்த அதிக தொகையிலான முதலீட்டை எத்தனை பேரால் செய்ய முடியும் என்று தெரியவில்லை.

இந்தத் தொகையை தங்களால் முதலீடு மூலம் குறிப்பிட்ட ஆண்டுக்குள் திரட்ட முடியாத நிலையில் இருப்பவர்கள், முதலில் மனையை வாங்கத் திட்டமிடலாம். அதற்கு வீடு வாங்கத் திட்டமிட்டிருக்கும் தொகையில் பாதி இருந்தால் போதும். மனை வாங்கிவிட்டால் வீடு கட்டுவது சுலபம். வீட்டுக் கடனும் எளிதாகக் கிடைக்கும். ஆரம்பத்தில் ஒரு படுக்கை அறை வீட்டைக் கட்டிக்கொண்டு, அதன் பிறகு இரண்டு படுக்கை அறை வீடாக விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.

மனையா, வீடா என்பதற்கு ஏற்ப முதலீடு செய்து வர வேண்டும். முதலீட்டுக் காலம் அதிகமாக இருப்பதால் டைவர்சிஃபைடு ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம். ஒரே ஃபண்டில் முதலீடு செய்யாமல் ஒன்றுக்கு மேற்பட்ட ஈக்விட்டி ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்துவரலாம். முதலீட்டு மீதான ரிஸ்க்கை குறைக்க சுமார் 25 - 30% தொகையை ஹைபிரிட் ஃபண்டு களில் முதலீடு செய்து வரலாம்.

ஆரம்ப ஆண்டுகளில் குறைந்த தொகையை முதலீடு செய்து வந்தாலும் சம்பள உயர்வுக்கு ஏற்ப முதலீட்டை அதிகரித்தால் சொந்த வீட்டை சுலபமாக உரிமையாக்கிக்கொள்ள முடியும்.

அதேநேரத்தில், இந்தத் தொகையைச் சேர்க்க முதலீட்டில் ரிஸ்க்கைச் சந்திக்க விரும்பாதவர்கள் கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம். மிதமான ரிஸ்க்கைச் சந்திக்கத் தயாராக இருப்பவர்கள் ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்துவரலாம்.

அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்டவர்கள் மல்டிகேப், லார்ஜ்கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் கலந்து முதலீடு செய்துவரலாம்.

வீட்டுக் கடன் மூலம் சொந்த வீடு வாங்க...

வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கத் திட்டமிடும்பட்சத்தில் டவுன் பேமென்டுக்குத் தேவைப் படும் பணத்துக்கு முதலீடு செய்வது அவசியம். வீட்டின் மதிப்பில் சுமார் 15 - 20 சதவிகித தொகையை முன்பணமாகக் கையிலிருந்து போட வேண்டி யிருக்கும். உதாரணத்துக்கு, ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீட்டை வாங்கும்போது, 20% தொகையைக் கையிலிருந்து போடுவது என்றால் ரூ.12 லட்சம் கையிலிருந்து போட வேண்டி வரும்.

உங்களுக்குத் தேவைப்படும் தொகைக்கு ஏற்ப சுமார் 3 அல்லது 5 ஆண்டுகளில் இதைச் சேர்க்கலாம். இந்தத் தொகையைச் சேர்க்க முதலீட்டில் ரிஸ்க்கைச் சந்திக்க விரும்பாதவர்கள் வங்கி ஆர்.டி, தபால் அலுவலக ஆர்,டி, கடன் சார்ந்த ஃபண்டுகளில் மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து வரலாம். மிதமான ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்கள் ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்துவரலாம். முதலீட்டுக் காலம் குறுகியதாக இருப்பதால் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் வேண்டாம்.

சொந்த வீடு கனவு... சுலபமாக நிறைவேற சூப்பர் டிப்ஸ்!

முன்பணத்துக்குத் தேவையான தொகையை வைத்திருப்பவர்கள், இப்போதே வீட்டுக் கடன் மூலம் வாங்கிக்கொள்ளலாம். கடனுக்கான வட்டியும் சுமார் 6.5% அளவுக்குக் குறைவாக இருக்கிறது. மாதத் தவணையும் குறைவாக இருக்கும். உதாரணத்துக்கு, ரூ.50 லட்சம் வீட்டுக் கடனை 7% வட்டியில் வாங்கி, 15 ஆண்டுகளில் திரும்பச் செலுத்துவதாக இருந்தால் மாதத் தவணை சுமார் 45,000 ஆகும்.

சொந்தமாக மொத்தப் பணத்தையும் சேர்த்து வீடு வாங்க வேண்டும் என்றால் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இதற்கான மாத முதலீட்டுத் தொகையும் அதிகமாக இருக்கும். இதனால், இடையில் தடைபட வாய்ப்பு இருக்கிறது. மேலும், நீண்ட காலத்தில் வீட்டின் விலை கணிசமாக உயர அதிக வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், முன் பணத் தொகையை முதலீடு மூலம் சேர்த்துக்கொண்டு வீட்டுக்கடன் மூலம் வீடு வாங்குவது பல வகையில் லாபகரமாக இருக்கும். மேலும், திரும்பக் கட்டும் வீட்டுக் கடன் மாதத் தவணையில் அசல் தொகையில் நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும், வட்டியில் ரூ.2 லட்சம் வரைக்கும் வருமான வரிச் சலுகையும் இருக்கிறது.

சொந்த வீடு அமைய வாழ்த்துகள்..!

இரண்டாவது வீடு வேண்டாம்..!

குடியிருக்க ஒரு வீடு போதும். இரண்டாவது வீட்டை கையிலிருந்து மொத்தப் பணம் போட்டோ அல்லது வருமான வரிச் சலுகைக்காக வீட்டுக் கடன் மூலமோ வாங்குவது புத்திசாலிதனம் அல்ல. இன்றைய நிலையில், வீட்டின் மதிப்பில் ஆண்டுக்கு சுமார் 2 - 3 சதவிகிதம்தான் வாடகை வருமானமாகக் கிடைக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம். உதாரணமாக, வீட்டின் விலை ரூ.30 லட்சம் என்றால் ஆண்டு வாடகை ரூ.60,000 மட்டுமே கிடைக்கும். மாதத்துக்கு 5,000 ரூபாய்தான். ரூ.30 லட்சம் வீட்டுக் கடனை 15 வருடத்தில் திரும்பக் கட்டுவதாக இருந்தால் மாதத் தவணை ரூ.31,415. இந்தத் தொகையை 15 ஆண்டுகளுக்கு ஆண்டுக்குச் சராசரியாக 12% வருமானம் எதிர்பார்க்கும் ஈக்விட்டி டைவர்சிஃபைடு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், முதலீட்டு தொகை சுமார் 1.58 கோடியாகப் பெருகியிருக்கும். ரூ.30 லட்சம் வீடு மதிப்பு இந்த அளவுக்கு உயர்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான்!