
நிதித் திட்டமிடல்
நிதித் திட்டமிடல் என்பது பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம், சொந்த வீடு, moபணி ஓய்வுக்கால தொகுப்பு நிதி போன்றவற்றை சுலபமாக நிறைவேற்ற உதவுகிறது.

நிதித் திட்டமிடல் என்பது நெருக்கடிகளைச் சமாளித்து பணத்தைப் பெருக்குவது மட்டு மல்ல, சரியான திட்டங்களில் முதலீடு செய்யவும் உதவுகிறது. மேலும், வருமான வரியை மிச்சப்படுத்தவும், கடன்கள் இல்லாத கவலையில்லா வாழ்க்கையை வாழவும் உதவுகிறது.
போதிய விழிப்புணர்வு இல்லாததால், முதலீடுகள், கடன்கள் மற்றும் காப்பீடு ஆகிய வற்றில் நம்மவர்கள் அதிகமாகத் தவறு செய்கிறார்கள். இவற்றை சரியாகச் செய்ய நிதித் திட்டம் மூலம் நிதி ஆலோசகர் உதவி செய்வார்.
நிதித் திட்டமிடல் என்பது ஒருவரின் செல்வத்தை ரிஸ்க்குக்கு எதிராகப் பாதுகாப் பானதாக வைத்திருக்க உதவுகிறது. சுருக்கமாகச் சொல்வதெனில், வேலை இழப்பு, திடீர் இறப்பு, உடல்நலக் குறைவு, இயற்கைப் பேரழிவு கள் மற்றும் நிதி நெருக்கடிகள் ஆகிய பாதிப்பு களுக்கு எதிராக ஒருவரின் சொத்துகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கிறது.
இந்த நிதித் திட்டமிடல் கீழ்க்காணும் 8 காரணங்களால் தோல்வியடைகிறது.
1. எதையும் தள்ளிப்போடும் பழக்கம்...
சிலர் வாழ்க்கையில் பல விஷயங்களைத் தள்ளிப்போடும் பழக்கத்தைக் கொண்டிருக் கிறார்கள். இதில் நிதித் திட்டமிடலும் ஒன்றாக இருக்கிறது. இந்தத் தள்ளிப்போடும் பழக்கம் தான் நிதித் திட்டமிடல் தோல்வியடைய முதல் முக்கியமான காரணமாகும்.
பெரும்பாலானவர்கள் பணத்தைச் சேமிக்கத் தொடங்குவதைத் தாமதப்படுத்து கிறார்கள். இறுதியில், என்ன நடக்கிறது? ஒருபோதும் சேமிப்பைத் தொடங்குவதில்லை. முதலீட்டைத் தொடங்குவதன் முக்கியத் துவத்தை ஒருவர் உணரும் நேரத்தில் அதிக கால நேரம் கடந்திருக்கும். செல்வம் சேர்ப்பது என்பது ஒரு தொடர்ச்சியான செயலாகும். எனவே, இன்றே பணத்தைச் சேமிக்கத் தொடங்க வேண்டும்.
பெரும்பாலான முதலீட்டாளர்கள் நிதித் திட்டத்தை நிதி ஆலோசகர் வழங்கிய உடனேயே சேமிக்கத் தொடங்குவதில்லை. சீக்கிரமாக முதலீடு செய்ய ஆரம்பிப்பது விரைவாக செல்வம் சேர்க்க உதவும் என அவர்கள் உணர்வதில்லை.
பணவீக்கம் (விலைவாசி) ஆண்டுக்கு ஆண்டு அதிவேகமாக வளர்ந்து வரும்போது, பணத்தின் மதிப்பும் வேகமாகக் குறைந்துவரும். இதைத் தடுக்க முதலீடுகளின் வருமானமும் அதிகரிக்க வேண்டும். அதற்கு எந்தத் தாமதமும் இன்றி உடனே முதலீட்டைத் தொடங்குவது அவசியம்.

2. பண விஷயத்தில் சுயகட்டுப்பாடு இல்லாமை...
பண விஷயத்தில் சுயகட்டுப்பாடு இல்லாமல் இருப்பது நிதித் திட்டத்தின் தோல்விக்கு வழி வகுக்கும். நிதித் திட்டத்தில் இல்லாத விஷயங் களுக்கு அதிகமாக செலவு செய்வதைத் தவிர்ப்பது அவசியமாகும். பண விஷயத்தில் சுயகட்டுப்பாடு இல்லாமல் இருப்பது உங்களை மோசமான நிதி முடிவு எடுக்க வைப்பதுடன், இறுதியில் நிதித் திட்டத் தோல்விக்குக் காரணமாகவும் அமையும்.
மோசமான நிதி முடிவுகளில் இருந்து விலகி இருந்தாலே போதும், செல்வம் தானாகவே உருவாகும் என்பது எந்தவொரு புத்திசாலித்தனமான முதலீட் டாளருக்கும் தெரியும்.
3. மிகவும் அதிகமாகச் சேமிப்பது…
சில முதலீட்டாளர்கள் சம்பளம் மற்றும் வருமானத்தை மிக அதிகமாகச் சேமிப்பார்கள். சிலர் நிதித் திட்டமிடலை ஆரம்பிக்கும்போது மிக அதிக ஆர்வக் கோளாறால் தேவைக்கு அதிகமாகச் சேமித்து, முதலீடு செய்வார்கள். இது குறுகிய காலத்தில் பிரச்னையாகத் தெரியாது.
ஆனால், நீண்ட காலத்தில் பல்வேறு செலவுகள் குறிப்பாக, பொழுதுபோக்குச் செலவுகளைக் குறைத்து சேமிப்பது சலிப்பை ஏற்படுத்தும். இதனால், தொடர்ந்து சேமிப்பது குறைந்து, வீண்செலவுகள் அதிகரித்து, ஒருகட்டத்தில் நிதித் திட்டம் தோல்வி அடையும் சூழல் உரு வாகக்கூடும். எனவே, ஆரம்பம் முதலே நிதானமாக போதிய அளவுக்கு சேமித்து வருவதுதான் சரியாகும்.
4. மிகவும் அதிகமாகச் செலவு செய்வது...
சிலர் நிதித் திட்டமிடல் எல்லாம் செய்துவிடுவார்கள். அது வெற்றி பெற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற அடிப்படை விஷயம் தெரியாமல் மிக அதிகமாகச் செலவு செய்து வருவார்கள். விளைவு, நிதித் திட்டம் தோல்வியில் முடிந்து விடும்.
ஒரு நிதித் திட்டம் வெற்றிகர மாகச் செயல்பட, நிதி ஒழுக் கத்தை ஒருவர் வளர்த்துக் கொள்ள வேண்டும். மிக அதிகமாகச் செலவு செய்து, நிதித் திட்டத்தின்படி முதலீடு செய்வதற் குத் தேவையான தொகையில் துண்டுவிழ வைத்துவிடக் கூடாது.
நிதி ஆலோசர்கள் போதிய அளவுக்கு பொழுதுபோக்கு, கேளிக்கை உள்ளிட்டவற்றுக்கு செலவு செய்யும் விதமாகத்தான் நிதித் திட்டத்தை வகுத்துத் தந்திருப் பார்கள். அதற்கேற்ப சேமிப்பும் செலவும் இருந்தாலே குடும்பத்தில் நிம்மதி நிலவுவதுடன், நிதித் திட்ட மும் சரியாக நிறைவேறும்.
5. முதலீட்டில் நீண்ட கால கண்ணோட்டம் இல்லாதது...
ஒருவர் சம்பாதிப்பதைவிட குறைவாகச் செலவு செய்வது என்பது இனிமையான கனிகளை தரும் மரம் போன்றது; தாமதமாகும். பணத்தைச் சேமிப்பது என்பது ஒரு தியாகம் அல்ல. மாறாக, 20 - 30 ஆண்டுகள் என நீண்ட காலத்தில் நிதி இலக்குகள் நிறைவேறும்போது கிடைக்கும் சந்தோஷம், மன நிம்மதிக்கு ஈடு இணை எதுவும் கிடையாது.
நிதித் திட்டமிடல் என்பது இரண்டு முக்கியமான விஷயங் களை முதலீட்டாளர்களுக்கு செய்கிறது.
முதல் விஷயம், எதிர்காலம் குறித்த நிதி அழுத்தம் இல்லாமல் செய்கிறது. இரண்டாவதாக, ஒருவரைக் குறைவாகச் செலவு செய்ய வைத்து கூடுதலாகச் சேமிக்க வைக்கிறது.
பெரிய நிதி இலக்குகள் என்றா லும், நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யும்போது சிறிய தொகை இருந்தாலே போதும்.
முதலீட்டில் நீண்ட கால கண்ணோட்டம் இல்லாதது, நிதித் திட்டம் தோல்வி அடைய ஒரு காரணமாக அமைகிறது.
6. முதலீட்டில் அறியாமை
‘அறியாமையே பேரின்பம்’ என்று ஒரு பழமொழி சொல்கிறது. ஆனால், அது முதலீட்டில் இருந்தால், நிதித் திட்டமிடல் தோல்வியில் முடிய காரணமாக அமைந்து விடும். நிதித் திட்டங்கள் பற்றித் தெரிந்து வைத்திருப்பது, ஒருவரின் நிதி இலக்கை சரியாக அடைய உதவுகிறது.
முதலீடு செய்யும் திட்டம் அல்லது முதலீட்டுக்குத் தேர்வு செய்யப்போகிற திட்டம் குறித்து உங்களுக்கு எதுவும் தெரியாது; அது குறித்து தெளிவில்லை எனில், நிதித் திட்டம் தோல்விக்கு வழிவகுக்கும்.
முதலீடு குறித்த பயம் மற்றும் சந்தேகங்களை நிதி ஆலோசகரிடம் கேட்டு நிவர்த்தி செய்யும்பட்சத்தில், சரியான நிதித் திட்டத்தைத் தேர்வு செய்ய முடியும். அப்படி செய்யும்பட்சத்தில் நிதித் திட்டத்தின்படி, நிதி இலக்குகளை மிக எளிதாக அடையலாம்.

7. இலக்கற்ற அணுகுமுறை...
ஒரு சிலர் நீண்ட கால நிதித் தேவைகளைக் கணக்கில் எடுக்காமல் வருமானத்தைக் கண்டபடி செலவு செய் கிறார்கள். இந்த இலக்கற்ற செலவு அணுகுமுறையால் நிதித் திட்டமிடல் தோல்வியைத் தழுவுகிறது.
முதலில், ஒருவர் நிதிரீதியாக எங்கே இருக்கிறார் என்பது அவருக்குத் தெரிய வேண்டும். அடுத்து, நிதி ரீதியாக எங்கே செல்ல வேண்டும் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் தேவை இல்லாத செலவுகள் தவிர்க்கப்படும். கூடவே, தவறான முதலீட்டுத் திட்டங்களை வாங்குவதும் தவிர்க்கப்படும்.
8. சிறிது கூட முதலீட்டு திறமை இல்லாதது...
நிதித் திட்டத்தை மிகச் சரியாக நிறைவேற்ற மற்றும் மேற்கொள்ள முதலீட்டாளருக்கு சிறிதளவாவதுமுதலீடு சார்ந்த அறிவு மற்றும் திறமை இருப்பது அவசியமாகும்.
இந்தியாவில் எந்தப் பள்ளிக்கூடமும் கல்லூரியும் தனிநபர் நிதி பற்றிக் கற்றுக்கொடுக்கவில்லை. ஒருவர் தனிப்பட்ட முறையில்தான் முதலீட்டு திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அனுபவம் வாய்ந்த நிதி ஆலோசகர்கள் கூறும் விஷயங்களைக் காதுகொடுத்து கேட்டாலே முதலீட்டில் ஓரளவுக்கு விவரமாகிவிட முடியும்.
மேலே கண்ட 8 விஷயங்களைக் கவனத்தில் கொண்டாலே நிதித் திட்டத்தை நிச்சயம் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!