பணக்காரர்கள், ஏழைகள்... அதிகரிக்கும் இடைவெளி..! ஆக்ஸ்ஃபேமின் அதிர்ச்சி அறிக்கை சொல்வதென்ன?

ஆய்வறிக்கை
கடந்த வாரம் இந்தியா முழுக்க உள்ள ஊடகங் கள் அதிக முக்கியத்துவம் தந்து பேசிய விஷயம், ஆக்ஸ்ஃபேம் வெளியிட்ட அறிக்கைதான். இந்தியாவில் பணக்காரர் மற்றும் ஏழைகள் இடையே நிலவும் சமத்துவ மின்மை குறித்த இந்த அறிக்கை பல அதிர்ச்சிகர மான தகவல்களை எடுத்துச் சொல்வதாக இருந்தது.
உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பின் வருடாந்தரக் கூட்டம் கடந்த வாரத்தில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பிரிட்டனை சேர்ந்த ‘ஆக்ஸ்ஃபேம் இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு ‘இந்தியாவின் வருடாந்தர சமத்துவமின்மை அறிக்கை’யை வெளியிட்டது.

இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள சில அதிர்ச்சித் தகவல்கள் இதோ...
* இந்தியாவில் டாப் 1% பணக்காரர்களிடம் நாட்டின் 40% சொத்துகள் குவிந்துள்ளன.
* அடித்தட்டு மக்களிடம் வெறும் 3% சொத்துகள் மட்டுமே உள்ளன.
* 50% அடித்தட்டு மக்கள் 64% ஜி.எஸ்.டி வரியைக் கட்டுகின்றனர்.
* டாப் 10% பணக்காரர்கள் வெறும் 3% ஜி.எஸ்.டி வரியைக் கட்டுகின்றனர்.
மேலும், இந்த அறிக்கையில், இந்தியாவில் உள்ள டாப் 10 பணக்காரர்களுக்கு ஒரே ஒரு முறை 5% வரி விதிப்பதன் மூலம் ரூ.1.39 லட்சம் கோடி யைத் திரட்ட முடியும். இந்தப் பணத்தைக் கொண்டு படிப்பில் இருந்து இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வர முடியும்.
கெளதம் அதானியின் குழும நிறுவனங்களுக்கு 2017-2021-ம் ஆண்டுக் காலத்தில் விற்காமல் இருக்கும் சொத்தின் மீதான லாபத்தின் மீது வரி விதிப்பதன் மூலம் ரூ.1.79 லட்சம் கோடியைப் பெற முடியும். இந்தப் பணத்தை வைத்து இந்தியா வில் உள்ள 50 லட்சம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் களுக்கு ஓர் ஆண்டு முழுவதும் சம்பளம் கொடுக்க முடியும்’’ என்று இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

கோவிட் தொற்றுக்குப் பிறகு, பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையிலான இடைவெளி வேகமாக அதிகரித்து வருகிறது. காரணம், கடந்த இரு ஆண்டு களில் பெரும் பணக்காரர் களின் சொத்து மதிப்பு 121% அதிகரித்திருக்கிறது. அதாவது, ஒவ்வொரு நாளும் ரூ.3,608 கோடி என்கிற அளவில் அவர்களின் சொத்து மதிப்பு அதிகரித் திருக்கிறது.
கோவிட் வந்தபிறகான இரண்டு ஆண்டுகளில் அதாவது, 2020-ல் 102-ஆக இருந்த பெரும் பணக்காரர் களின் எண்ணிக்கை, 2022-ல் 166-ஆக உயர்ந்திருக்கிறது என பணக்காரர் - ஏழைகளுக்கு இடையே இருக்கும் சமத்துவமின்மையைத் துல்லியமாக எடுத்துச் சொல்லியிருக்கிறது ஆக்ஸ்ஃபேம் நிறுவனம்.
அது மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள ஒரு ஆண் ஒரு ரூபாயை சம்பாதித்தால், ஒரு பெண் 63 காசுகளை மட்டுமே சம்பாதிக்கிறார் என்கிற புள்ளிவிவரத்தையும் அளித்திருக்கிறது. 2018 - 19-ம் ஆண்டில் இந்தியாவில் மற்ற சமூகத்தினர் சம்பாதிக்கும் பணத்தில் 55% அளவுக்கு மட்டுமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சம்பாதிப்பதாகவும், கிராமப்புறத்தைச் சேர்ந்த மக்கள் நகர்ப்புறத்தைச் சேர்ந்த மக்கள் சம்பாதிப்பதில் பாதியளவுக்கே சம்பாதிப்பதாகவும் இந்த அறிக்கை சொல்லி யிருக்கிறது.
இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்று பலரும் உரக்கப் பேசிவரும் இந்தச் சமயத்தில், ஆக்ஸ் ஃபேமின் இந்த அறிக்கை பலரையும் புதிய கோணத்தில் சிந்திக்க வைத்திருக்கிறது. தற்போதுள்ள பொருளாதாரச் சூழல், பணக்காரார்களுக்கு சாதகமாகவும், ஏழைகளுக்கு பாதகமாகவும் இருக்கிறதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த இடைவெளியே இப்போதே பூதாகரமாக இருக்கிறது. இதை இனியும் சரிசெய்யாமல் போனால், இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பலரும் எச்சரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மத்திய அரசு என்ன செய்கிறது என்று பார்ப்போம்!