கட்டுரைகள்
Published:Updated:

பணி ஓய்வுக்காலத்துக்கு... பக்கா ப்ளான்!

பணி ஓய்வுக்காலத்துக்கு... பக்கா ப்ளான்!
பிரீமியம் ஸ்டோரி
News
பணி ஓய்வுக்காலத்துக்கு... பக்கா ப்ளான்!

கணக்கிட்டு நிர்ணயம் செய்த தொகுப்பு நிதி, கோடியில் நிற்கிறது என்றால், திகைக்கத் தேவையில்லை.

இந்தியாவில் ஓய்வூதியம் நாளுக்கு நாள் சிக்கலாகிவருகிறது. எனவே, மாதச் சம்பளக்காரர்கள் வேலைபார்க்கும் காலத்திலேயே பணி ஓய்வுக்காலத்துக்காகப் பணத்தைச் சேமிப்பது அவசியம். அதற்கான திட்டமிடல் குறித்துப் பார்க்கலாம்.

எவ்வளவு தொகை தேவை?

பணி ஓய்வுக்குப் பின்னர் செலவுகள் அதிகமான நகர வாழ்க்கையா, எளிமையான கிராம வாழ்க்கையா என்பதை முடிவு செய்யுங்கள். விலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு, பணி ஓய்வுக்காலத்தில் மாதம் எவ்வளவு பணம் தேவை என்பதை ஆன்லைன் கால்குலேட்டர்/நிதி ஆலோசகர் மூலம் கணக்கிடுங்கள். மேலும், மருத்துவச் செலவு, மற்ற செலவுகள், கோயில், சுற்றுலா செல்ல ஆகும் செலவுகளையும் கணக்கில் வைத்து தொகுப்பு நிதியை (Corpus) நிர்ணயம் செய்து, அதற்கு ஏற்ப முதலீடு செய்து வாருங்கள்.

ஓய்வுக்காலப் பலன்களையும் கணக்கில் சேருங்கள்

கணக்கிட்டு நிர்ணயம் செய்த தொகுப்பு நிதி, கோடியில் நிற்கிறது என்றால், திகைக்கத் தேவையில்லை. பணி ஓய்வு பெறும்போது கிடைக்கும் பிராவிடெண்ட் ஃபண்ட், விடுமுறை சம்பளம், பணிக்கொடை (கிராஜுவிட்டி) ஆகியவை பெரிய தொகையாக இருக்க வாய்ப்புள்ளது. அந்தத் தொகையை மொத்தத் தொகையிலிருந்து கழித்துவிட்டு மீதி இருக்கும் தொகைக்குக் கணக்கிட்டு முதலீட்டை ஆரம்பித்தால் போதும்.

பணி ஓய்வுக்காலத்துக்கு... பக்கா ப்ளான்!

முதலீட்டுத் தேர்வு

சிலர் வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டு, அந்த வருமானத்தின் மூலம் ஓய்வுக்காலச் செலவுகளை சமாளிக்கத் திட்டமிடுவார்கள். வீட்டின் மதிப்பில் வாடகை வருமானம் என்பது 3% தான். பதிலாக, வர்த்தகக் கட்டடங்களை வாங்கி/கட்டி வாடகைக்கு விடும்போது 8% கிடைக்க வாய்ப்புள்ளது. அடுத்ததாக, வங்கி/தபால் அலுவலக ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமானத்தைத் தேர்வு செய்யலாம். ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பென்ஷன் திட்டங்களைப் பரிசீலிக்கலாம். மேலே சொன்ன முறைகளில் வருமானம் ஆண்டுக்கு 6% - 8% கிடைக்கும். மியூச்சுவல் ஃபண்ட்களில் அதிக ரிஸ்க் இல்லாத கன்சர்வேட்டிவ் ஹைபிரிட் ஃபண்ட்கள், பேலன்ஸ்ட் அட்வான்டேஜ் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம். அதிலிருந்து சிஸ்டமேட்டிக் வித்டிராயல் பிளான் முறையில், பெருகும் தொகையைவிடக் குறைவான தொகையை மாதம்தோறும் எடுக்கும்பட்சத்தில் தொகுப்பு நிதி ஓய்வுக்காலச் செலவுக்கு நீண்ட காலம் வரும். ஏதாவது ஒரு முறையைத் தேர்வுசெய்வதைவிட, மேற்கண்ட முறைகளில் கலவையாகப் பணம் பெற ஏற்பாடு செய்துகொள்வது வருமானத்தை அதிகரிப்பதோடு, ரிஸ்க்கையும் குறைக்கும்.

முதலீட்டை சீக்கிரம் ஆரம்பியுங்கள்

ஓய்வுக்காலச் செலவுக்கான முதலீட்டை சீக்கிரம் ஆரம்பிக்கும்போது அதிக காலம் கிடைக்கும். குறைவான தொகையை முதலீடு செய்துவந்தால் போதுமானது. மேலும், கூட்டு வளர்ச்சி முறையில் அதிக தொகுப்பு நிதி சேரும்.

குழு பாலிசியை தனி பாலிசியாக மாற்றுங்கள். பணிபுரியும் நிறுவனத்தில் குழுக் காப்பீட்டின் கீழ் மருத்துவக் காப்பீடு இருக்கும் பட்சத்தில் அதனைப் பணி ஓய்வுக்குச் சில ஆண்டுகளுக்கு முன் தனிப்பட்ட பாலிசியாக மாற்றிக்கொள்ளுங்கள். மேலும், அதில் துணைவர் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். மூத்த குடிமக்கள் வயதை எட்டிய பிறகு தனியாக மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது பிரீமியம் மிக அதிகமாக இருக்கும். மேலும், காத்திருப்பு காலமும் உண்டு. ஏற்கெனவே இருக்கும் பாலிசியை இப்படி மாற்றுவதன் மூலம் பலன் பெறலாம்.

சிவகாசி மணிகண்டன், 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன், நிதி ஆலோசகர், Aismoney.com

பணி ஓய்வுக்குப் பின் எவ்வளவு தொகை தேவைப்படும்?

பொதுவான விதிமுறையின்படி, பணியின்போது ஒருவர் செய்யும் மாதச் செலவில் 70% தொகை பணி ஓய்வுக்குத் தேவைப்படும். உதாரணமாக, பணிபுரியும்போது மாதச் செலவு ரூ. 20,000 எனில், ஓய்வுக்காலத்தில் அதே வாழ்க்கைத் தரத்தில் வாழ ரூ. 15000 தேவைப்படலாம். ஓய்வுத்தொகையை எப்படிக் கணக்கிடுவது என்ற உதாரணம் இதோ...

பணி ஓய்வு பெறும் வயது - 60

தற்போதைய வயது - 58

எதிர்பார்க்கும் ஆயுள் - 83

ஓய்வுக்குப் பின் உள்ள ஆண்டுகள் - 23

பணி ஓய்வின்போது ஆண்டுச் செலவு - ரூ. 1.8 லட்சம் (12*15,000)

முதலீட்டில் கிடைக்கும் லாபம் (ஆண்டுக்கு) - 12%

பணவீக்கம் - 5%

பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்

கொண்ட பின் கிடைக்கும் லாபம் - 7%

தேவையான மொத்த ஓய்வுத் தொகை - ரூ.15 லட்சம்

ஓய்வுக்காலத்தில் பணவீக்கத்தால் செலவு அதிகரிக்கலாம் என்பதால் முடிந்தவரை கூடுதல் தொகையைச் சேர்த்து வாருங்கள். ஹேப்பி ஓல்டு ஏஜ்!