
சிறப்புப் பேட்டி
எஸ்.பி.ஐ என சுருக்கமாக அழைக்கப் படும் பாரத ஸ்டேட் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் தலைமைப் பொது மேலாளராக இருக்கிறார் ஆர்.ராதாகிருஷ்ணா. தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு நிறைய கடனுதவி அளிக்க வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயல்பட்டு வரும் இவர், கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கும் பல வகையான கடனுதவிகளைத் தர வேண்டும் என்பதிலும் ஆர்வத்துடன் செயல்படுகிறார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.ஐ தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிராந்தியத் தலைமை அலுவலகத்தில் நாம் அவரை சந்தித் தோம். அவர் நமக்களித்த பேட்டி இனி...
கோவிட் 19 பெருந்தொற்றுக்குப் பின் நம் நாட்டின் கிராமப்புற மக்கள் சந்திக்கும் சவால்கள் என்னென்ன?
‘‘இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் ஏறக்குறைய 50% பங்கையும் வேலைவாய்ப்புகளில் சுமார் 70% பங்கையும் கொண்டிருக்கிறது நமது இந்திய கிராமப்புறப் பொருளாதாரம். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அதிலும் குறிப்பாக, கொரோனா இரண்டாவது பேரலையின்போது கிராமப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப் பட்டது. நகர்ப்புறப் பகுதிகளில் வேலைவாய்ப்பு களை இழந்த கிராமப்புற மக்கள், தமது சொந்த ஊர்களுக்குத் திடீரெனத் திரும்ப நேரிட்டதால், வேலையின்மை பெருமளவு அதிகரித்தது. கொரோனாவுக்குப் பிறகு, நகர்ப்புற பகுதிகளில் நிலைமை ஓரளவுக்கு சீரடைந்தாலும், கிராமப் புறங்களில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்க உயர்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு ஆகியவை பெரும் சவால்களாகவே உள்ளன.
அதே சமயம், விவசாயத் துறையின் சமீப கால சாதனைகள் நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளன. அரசின் சிறப்பான கொள்கை முடிவு களின் விளைவாக, இந்திய வேளாண் பொருள் களின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 50 பில்லியன் டாலராக (ரூபாய் மதிப்பில் 4 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. தனிநபர் வருமான உயர்வு, உணவுப் பழக்க வழக்க மாற்றங்கள் மற்றும் ஊட்டச் சத்துமிக்க உணவுகள் மீதான நாட்டம் ஆகிய காரணங்கள் விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன. கடந்த இரு நிதியாண்டுகளாக ஒட்டுமொத்த இந்தியப் பொருளா தாரத்தில் விவசாயத்தின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருவது பாசிட்டிவ்வான வளர்ச்சிகள் ஆகும்.’’

ஊரகப் பகுதி மக்கள் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி கஷ்டப்படுகிறார்கள். இந்தப் பிரச்னையை எப்படித் தீர்ப்பீர்கள்?
‘‘ஊரகப் பகுதியில் வாழும் மக்களுக்காகப் பல்வேறு திட்டங்களின் வாயிலாக மிகக் குறைவான வட்டி விகிதத் தில் பெருமளவு கடன் உதவிகளை வழங்கி வருகிறோம். மேலும், மக்களிடையே நிதி சார்ந்த விழிப்புணர்வை அதிகப்படுத்த பல நிதி விழிப்புணர்வு முகாம்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். விவசாய உற்பத்திக்காக மட்டுமன்றி, விவசாய உற்பத்திப் பொருள்களை சந்தைப் படுத்தத் தேவையான வேளாண் கடன் உதவிகளையும் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கி வருகிறோம். ஊரகப் பகுதிகளில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான கடன் உதவிகளையும் பெருமளவு வழங்கி வருகிறோம். ஊரகப் பகுதி மக்களுக்குக் கடன் வழங்கும் நுண்நிதி நிறுவனங்களுக்கும் கடன் உதவி செய்து வருகிறோம்.’’
தற்போது விவசாயிகள் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு உங்கள் வங்கி எந்த வகையில் உதவப்போகிறது?
‘‘சமீப காலமாக வேளாண் உள்ளீட்டுப் பொருள்களின் விலை 12 - 25% வரை உயர்ந்துள்ளது. அதற்கேற்றவாறு வேளாண் திட்ட அளவையும் அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். எங்களது வேளாண் திட்ட அலுவலர்கள், விவசாயிகளுக்குத் தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். வேளாண்மைக் கடன் தேவைகளைக் கணித்து, வங்கிக் கடன் உதவி அளவை நிர்ணயித்து வருகிறோம். மேலும், அரசு வழங்கும் பல்வேறு மானிய உதவிகளை விவசாயிகள் பெறவும் உதவி செய்கிறோம். சமீபத்தில், வேளாண் மின்னணுத் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். யோனோ கிருஷி (Yono Krishi) மற்றும் யோனோ சஃபல் (Yono SAFAL) போன்ற செல்போன் செயலிகள் மூலம் விவசாயிகளுக்குப் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்கி வருகிறோம்.’’
கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சிக்கு உங்கள் வங்கி என்ன மாதிரியான உதவிகளைச் செய்து வருகிறது?
‘‘இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள எங்களது 14,500 கிளைகளின்மூலம் வேளாண் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன் உதவிகளும் வழங்கப்படுகின்றன. இந்திய வேளாண் துறைக்கு வழங்கப் பட்டுள்ள ஒட்டுமொத்த கடனில் எங்கள் வங்கியின் பங்கு 20% ஆகும். எங்களது வங்கியில் சுமார் 3.2 கோடி விவசாயிகள் கணக்கு வைத்துள்ளனர். அவர்களில் சுமார் 1.5 கோடி விவசாயிகள் எங்களது வங்கியில் கடன் உதவி பெற்றுள் ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிப் பகுதிகளை உள்ளடக்கி யுள்ள எங்களது சென்னை வட்டாரத்தில் மட்டும் நாங்கள் ரூ.31,153 கோடி அளவுக்கு வேளாண் கடன் உதவி வழங்கியுள்ளோம். பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங் களில் 99% விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளன.’’
சுய உதவிக் குழுக்களின் வாயிலாக பெண்கள் நிதிச் சுதந்திரம் அடைய எப்படி உதவுகிறீர்கள்?
‘‘உற்பத்தி, வியாபாரம் போன்ற வணிகம் சார்ந்த தேவைகள் மற்றும் கல்வி, திருமணம், கடன் மாற்று போன்ற சமூகத் தேவைகள் உள்ளிட்ட அனைத்து வகையான தேவைகளுக்கும் சுயஉதவி குழுக் களின் வாயிலாக வங்கிக் கடன் உதவி வழங்கப்படுகிறது. தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் வாயிலாக வழங்கப்படும் அதிக பட்ச வங்கிக் கடன் அளவு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் வரையிலான கடன்களுக்குப் பிணை (சொத்து அடமானம்) எதுவும் கேட்பதில்லை. கடந்த 31.03.2022 அன்று பாரத ஸ்டேட் வங்கி சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கியுள்ள கடனின் அளவு ரூ.24,023 கோடி. சென்னை வட்டாரத்தில் மகளிர் சுயஉதவிக் கடன் திட்ட அளவு ரூ.254 கோடி. இதில் கடந்த வருடத்தில் மட்டும் ரூ.125 கோடி அளவுக்குக் கடன் உதவி அதிகரிக்கப்பட்டுள்ளது.’’
ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்கு உட்பட நிதி ஆதாரங்களைத் தரும் நிதி உள்ளடக்க முன்னெடுப்பில் (Financial inclusion) எஸ்.பி.ஐ-யின் பங்கு என்ன?
‘‘பொதுமக்களிடையே நிதித் திட்டமிடலை ஊக்குவிக்கும் வகையிலும், டெபாசிட், இன்ஷூ ரன்ஸ், ஓய்வூதியத் திட்டம், மின்னணுப் பயன்பாடு ஆகிய வற்றின் மீதான நிதி சார்ந்த விழிப்பு உணர்வை அதிகரிக்கும் வகை யிலும் நாங்கள் நிதி விழிப்பு உணர்வுக் கூட்டங்களை நடத்தி வருவதுடன் அனைத்து வகையான கடன் தேவைகளுக்கான வங்கி ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம். கடந்த நிதியாண்டில் சென்னை வட்டாரத்தில், பிரதம மந்திரி ஆயுள் காப்பீட்டுத் திட்டத் தில் 1,87,468 பயனாளிகளையும், பிரதம மந்திரி விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் 4,71,435 பயனாளிகளை யும் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் 1,07,803 பயனாளிகளையும் எங்கள் வங்கி மூலம் இணைத்துள்ளோம்.’’
நிதி சார் விழிப்புணர்வை எப்படி உருவாக்கப்போகிறீர்கள்?
‘‘இந்த நிதியாண்டில் இதுவரை 341 நிதி விழிப்புணர்வு முகாம்களை நடத்தியுள்ளோம். வேளாண் கடன் வசதி குறித்த விளக்கக் கூட்டங்களும் எங்களது கிளைகளால் நடத்தப்படுகின்றன. ஒரு புதிய முன்னெடுப்பாக, இந்தியா முழுவதும் தேர்ந்தேடுக்கப்பட்ட 600 கிராமங்களில் இரவு முகாம்கள் நடத்த உத்தேசித்துள்ளோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 23 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த இரவு முகாம்களில் வங்கியின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு மக்களுடனும் விவசாயிகளுடனும் கலந்துரை யாடுவார்கள். இந்த முயற்சி, ஊரகப் பகுதி மக்களுடனான எங்களது உறவை மேலும் பலப்படுத்த உதவும். மேலும், கிராமப் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் தேவைகள் குறித்தும் எதிர்பார்ப்புகள் குறித்தும் நன்கு புரிந்துகொள்வ துடன், ஏற்கெனவே உள்ள சிக்கல்களுக்கு நல்ல தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கிறோம்’’ என்று பேசி முடித்தார் ஆர்.ராதாகிருஷ்ணா.

பாப்பாபட்டியில் கிராமியத் திருவிழா... வேஷ்டியில் வந்த வங்கி அதிகாரிகள்!
பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் கிராமியத் திருவிழா ஒன்றை சமீபத்தில் நடத்தியது எஸ்.பி.ஐ வங்கி. இந்த திருவிழாவின் தொடர்ச்சி யாக பாப்பாபட்டி மற்றும் சுற்றுவட்டார மக்களின் பயன்பாட்டுக்காக புதிய ஏ.டி.எம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. பாப்பாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பயன் பாட்டுக்காக ஐந்து கணினிகள் வழங்கப்பட்டன. கடன்களை சரியாகத் திருப்பிச் செலுத்திய 12 பால் சங்கங்களுக்குப் பால் கேன்கள் பரிசாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றினார் எஸ்.பி.ஐ வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிராந்திய தலைமைப் பொது மேலாளர் ஆர்.ராதாகிருஷ்ணா. இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய மதுரை மாவட்ட ஆட்சியர், டாக்டர் அனீஷ் சேகர், பெண்களின் நிதி சுதந்திரத்தில் சுய உதவிக் குழுக்களின் பங்கு குறித்து பேசினார். மதுரை மகளிர் மேம்பாட்டுத் திட்ட அலுவலர் காளிதாஸ், பாப்பாபட்டி பஞ்சாயத்து தலைவர் முருகானந்தம், வாலந்தூர் பஞ்சாயத்து தலைவர் கணபதி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பேசினர். நிகழ்ச்சியின் முடிவில் 89 சுயஉதவிக் குழுக்களுக்கும் மாடு, ஆடு வளர்ப்பவர்களுக்கும் என மொத்தம் ரூ.7 கோடி கடனுதவி வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்.