விர்ச்சுவல் நாணயங்கள் என்று சொல்லப்படுகிற கிரிப்டோ கரன்சிகளின் விளம்பரங்களில் பிரபலங்கள் நடிக்கக் கூடாது என்று செபி அமைப்பு தெரிவித்துள்ளது.
கிரிப்டோகரன்சிகளின் வர்த்தகம் சூடுபிடித்து வரும் நிலையில் சமீப காலமாக அவற்றின் மதிப்பு குறைந்து வர்த்தகம் ஆகி வருகின்றன. அதிக ரிஸ்க் உள்ளதாகவும், நிலையற்றதாகவும் இருக்கும் இந்த கிரிப்டோகரன்சிகளில் கவனமாக இருக்க வேண்டுமென தொடர்ந்து மத்திய அரசு, தமிழக போலீஸ், செபி, ரிசர்வ் வங்கி ஆகிய அமைப்புகளும் கூறிவருகின்றன.

இந்நிலையில், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டவர்கள் கிரிப்டோகரன்சி விளம்பரங்களில் நடிக்கக் கூடாது என்று செபி அமைப்பு தெரிவித்துள்ளது. அவ்வாறு நடித்தால் கிரிப்டோகரன்சிகளுக்கு உத்தரவாதம் அளிப்பதாக அமையும். இது விதிமீறல் நடவடிக்கையாகக் கருதப்படும் பிரபலங்களைப் பின்பற்றுபவர்கள் கிரிப்டோகரன்சிகளில் கண்மூடித்தனமாக முதலீடு செய்யும் வாய்ப்புள்ளது.
இப்போதுவரை கிரிப்டோகரன்சிகளுக்கு எந்தவித ஒழுங்குமுறை விதிகளும் வகுக்கப்படவில்லை. வரி விதிப்புக்குள் மட்டுமே இவை கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து எந்தவித உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. அப்படியிருக்கும்போது பிரபலங்கள் கிரிப்டோகரன்சிகள் தொடர்பாகக் கருத்து தெரிவிக்கவோ, விளம்பரங்களில் தோன்றவோ வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி தவறாக வழிநடத்தும் விளம்பரங்களுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான விளம்பரங்களில் நடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.