நடப்பு
Published:Updated:

கொஞ்சம் தங்கம்... கொஞ்சம் ஃபண்ட்! - ஒரு தொழிலதிபரின் முதலீட்டு வாக்குமூலம்

கொஞ்சம் தங்கம்... கொஞ்சம் ஃபண்ட்! - ஒரு தொழிலதிபரின் முதலீட்டு வாக்குமூலம்
பிரீமியம் ஸ்டோரி
News
கொஞ்சம் தங்கம்... கொஞ்சம் ஃபண்ட்! - ஒரு தொழிலதிபரின் முதலீட்டு வாக்குமூலம்

ஏ.ஆர்.குமார்

தொழில் செய்கிறவர்கள், தாங்கள் சம்பாதிக்கும் லாபத்தில் பெரும்பகுதியைத் தாங்கள் செய்துவரும் தொழிலில் மட்டுமே முதலீடு செய்வது வழக்கம். ஆனால், கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ராம்குமார், தன் தொழில் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை மியூச்சுவல் ஃபண்டில் தவறாமல் முதலீடு செய்துவருகிறார். அவரைச் சந்தித்தோம்.

‘‘என் அப்பா ஃபைனான்ஸ் பிசினஸ் செய்துவந்தார். 19 வயதில் நான் பி.காம் படித்து முடித்தவுடன் சொந்தத் தொழில் செய்வதென்று முடிவெடுத்தேன். தொழில் தொடங்கும்முன் அனுபவம் வேண்டும் என்பதற்காக, ஒரு நகைக்கடையில் நான்கைந்து ஆண்டுகள் பார்ட்னராக இருந்தேன். அங்கு ஒவ்வொரு விஷயத்தையும் ஆழமாகத் தெரிந்துகொண்டேன். பிற்பாடு நானே நகைகளைத் தயாரிக்கும் தொழிலில் இறங்கினேன். கடந்த இருபது ஆண்டுகளில் ஒரே இடத்தில் உட்காராமல் ஓடியாடி உழைத்ததன் விளைவு, நாடு முழுக்க உள்ள நகைக் கடைகளுக்கு நகைகளைச் செய்து தருவதுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறேன்.

கொஞ்சம் தங்கம்... கொஞ்சம் ஃபண்ட்! - ஒரு தொழிலதிபரின் முதலீட்டு வாக்குமூலம்

பொதுவாக, சேமிப்பையும் முதலீட்டையும் நாம் சிறுவயது முதலே செய்வதில்லை. நமக்கென்று ஒரு குடும்பம் உருவாகி, நம் குழந்தைகள் ஓரளவுக்கு வளர்ந்தபிறகுதான், நம் எதிர்காலம் பற்றித் தீவிரமாக யோசிக்க ஆரம்பிப்போம். நானும் அப்படித்தான். 35 வயதுக்குப் பிறகுதான்  சேமிப்பின் அவசியத்தை உணர்ந்தேன்.

சரி, சேமிக்கலாம் என்று நினைத்தபின், நான் முக்கியமாக நினைத்தது, முதலுக்கு மோசம் வரக்கூடாது என்பதே. முதலில் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், என்.எஸ்.சி பத்திரங்களில் பணத்தைப் போட்டேன். அதிலிருந்து கிடைத்த வருமானம் பாதுகாப்பானதாக இருந்தாலும், லாபம் என்பது பெரிய அளவில் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை. ஓர் ஆண்டுக்கு விலைவாசி ஏற்றம் (பணவீக்கம்) 6% என்று வைத்துக்கொண்டால், இந்தச் சேமிப்புகளிலிருந்து கிடைக்கும் வருமானம் அந்த அளவுக்கு மட்டுமே இருந்தது. இதனால் பெரிய நன்மை எதுவும் எனக்குக் கிடைத்த மாதிரி தெரியவில்லை. எனவே, வேறு என்ன வகையில் அதிக லாபம் அடைய முடியும் என்று தேடிய போதுதான் பங்குச் சந்தை பற்றித் தெரிந்துகொண்டேன்.

நான் 2005 முதல் 2007 வரை பங்குச் சந்தையில் நான் பல பங்குகளை வாங்கி முதலீடு செய்தேன். எனக்கு அருமையான லாபம் கிடைத்து, மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்தேன். அப்போதுதான் அமெரிக்காவில் பொருளாதாரச் சரிவு உருவாகி, அதனால் இந்திய பங்குச் சந்தையும் கணிசமாக இறங்கியது. நல்ல லாபத்தில் இருந்த எனக்கு, பெரிய நஷ்டம் ஏற்பட்டது.

இந்த நஷ்டத்தைக் கண்டு நான் கவலைப்படவில்லை. ஆனால், முக்கியமானதொரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன். பங்குச் சந்தை என்பது 24 மணி நேரமும் கண்கொத்திப் பாம்பாக இருந்து கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் என்பது எனக்குத் தெளிவாகப் புரிந்தது.
நானோ பிசினஸ் செய்பவன். பிசினஸ் என்று வந்துவிட்டால், அதற்குத்தான் நான் முக்கியத்துவம் தந்தாக வேண்டும். எனவே, சந்தையில் என்ன நடக்கிறது, நம் பங்குகளின் விலை ஏறுகிறதா, இல்லையா என்பதை அனுதினமும் என்னால் பார்க்க முடியாது என்பதால், இனி பங்குச் சந்தையைத் தவிர, மற்றவற்றிலும் முதலீடு செய்ய முடிவெடுத்தேன்.

இப்படி ஒரு முடிவெடுத்ததற்காக நான் பங்குச் சந்தை முதலீட்டை முழுக்கத் தவிர்த்துவிட முடியாது. பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதற்குப் பதிலாக, மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக முதலீடு செய்ய முடிவெடுத்தேன். அதிலும் எஸ்.ஐ.பி திட்டத்தின் மூலம் முதலீடு செய்யலாம் என்று முடிவெடுத்து, என் குழந்தைகளின் உயர்படிப்புக்கு, என்னுடைய ஓய்வுக்காலத்துக்கென மாதந்தோறும் இவ்வளவு என்று முதலீடு செய்ய ஆரம்பித்தேன். கடந்த எட்டு, ஒன்பது ஆண்டுகளில் நான் செய்த முதலீட்டைத் திரும்பப் பார்க்கும்போது, எனக்கு மிகவும் திருப்தியாக உள்ளது.

எனக்கு நெருக்கமான பிசினஸ் நண்பர்களிடம் இந்த முதலீட்டைச் சொல்வேன். ‘அதிகபட்சம் 15% கிடைப்பதெல்லாம் ஒரு லாபமா? பிசினஸில் இதைவிட அதிகம் கிடைக்குமே’ என்பார்கள். சில பிசினஸில் சிலருக்கு 15 சதவிகிதத்துக்கு மேல் லாபம் கிடைக்கலாம். ஒரு காலத்தில் 30, 40% கூட லாபம் கிடைத்தது உண்மைதான். ஆனால், இன்றைக்கு போட்டி மிகுந்துவிட்டது. லாபம் கணிசமாகக் குறைந்து விட்டது. அப்படியிருக்க,  தொழில் மட்டுமே நிரந்தரம் என  நினைக்காமல், கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்வதுதான் புத்திசாலித்தனம்.

இன்றைக்கு, வங்கி எஃப்.டி மூலம் கிடைக்கும் வட்டி அநியாயத்துக்குக் குறைந்துவிட்டது. ரியல் எஸ்டேட் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஒரு வீட்டைக் கட்டி வாடகைக்குவிட்டால், வெறும் 0.25% மட்டுமே வருமானமாகக் கிடைக்கிறது. எனவே, என் முதலீட்டை எஃப்.டி, என்.எஸ்.சி, பங்குகள், தங்கம் மற்றும் ஃபண்ட் முதலீடு என அஸெட் அலோகேஷன் அடிப்படையில் பிரித்து முதலீடு செய்திருக்கிறேன். அப்படி செய்யும்போதுதான் நம் முதலீடுகள்  பாதுகாப்பாக இருக்கும். தங்கமும், ஃபண்ட் முதலீடும் உடனே பணமாக்க முடியும்
என்பதால், சாதாரண மக்களுக்கேற்ற முதலீடாக இருக்கும்.

இப்போதெல்லாம் என்னைச் சுற்றி இருப்பவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ, நீண்ட காலத்துக்கு (15, 20 ஆண்டுகளுக்கு) எஸ்.ஐ.பி மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்படி  சொல்லி வருகிறேன். சிலர் கேட்கிறார்கள்; சிலர் அது பற்றி யோசிக்கத் தொடங்குகிறார்கள். நான் சொன்னதைக் கேட்டு என்னிடம் வேலை பார்ப்பவர்களே முதலீடு செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். நான் கற்றறிந்ததை மற்றவர்களிடம் எடுத்துச் சொல்வதுதானே சரி’’ என்று பேசி முடித்தார் ராம்குமார்.

பிசினஸ் செய்கிறவர்கள் ராம்குமார் சொன்னதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

படம் : தி.விஜய்