நடப்பு
Published:Updated:

ஷேர்லக்: சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும் இந்தியர்கள்!

ஷேர்லக்: சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும் இந்தியர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும் இந்தியர்கள்!

ஷேர்லக்: சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும் இந்தியர்கள்!

ரபரப்பாக நம் கேபினுக்குள் நுழைந்த ஷேர்லக்கை நாம் கவனிக்காமல் வேலையில் மூழ்கியிருக்க, அவரே நம்மை அழைத்தார். புதுப்பொலிவுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தவர், “சூப்பர்...’’ எனப் பாராட்டிவிட்டு, “கடைசி கட்ட வேலையில் மும்முரமாக இருப்பீர்கள்.எனவே, சீக்கிரமா கேள்விகளைக் கேளுங்கள். பதில் சொல்லி முடித்துவிடுகிறேன்’’ என்றார். நாம் அவருக்குச் சாத்துக்குடி ஜூஸை கிளாஸில் ஊற்றிக் கொடுத்துவிட்டு, கேள்விகளைக் கேட்கத் தொடங்கினோம்.  

ஷேர்லக்: சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும் இந்தியர்கள்!

“இந்தியச் சந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது வருடமாக மே மாதத்தில் ஏற்றம் அடைந்து வருகிறதே?”

“ பங்குச் சந்தையைப் பொறுத்தவரையில், ‘மே மாதம், விற்பவர்களுக்கான மாதம்’ என்பார்கள். இது நம் சந்தைகளுக்கு அவ்வளவாகப் பொருந்தவில்லை. தொடர்ந்து, ஐந்தாவது வருடமாக மே மாதத்தில் இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றமடைந்து வந்திருக்கின்றன. இதற்குக் காரணம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்ற சந்தைகளில் முதலீடுகளை விற்றாலும் இந்தியச் சந்தைகளில் தொடர்ந்து முதலீடு செய்வதுதான். கடந்த 10 வருடங்களில், ஆறு வருடங்கள் மே மாதத்தில் சந்தைகள் ஏற்றமடைந்திருக்கின்றன. 2009-ல் அதிகபட்சமாக சென்செக்ஸ் 28%  உயர்ந்தது. 2008, 2010, 2011, 2012 ஆகிய நான்கு ஆண்டுகளின் மே மாதத்தில்  சந்தைகள் இறக்கமடைந்தன. இந்த வருடத்தின் மே மாதத்தில் ரூ.10,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.  மே மாதத்தில் இந்தியச் சந்தைகள் புதிய உச்சங்களை அடைய இதுவும் ஒரு காரணம். இதுவரை இந்த வருடத்தில் சென்செக்ஸ் சுமார் 4 சதவிகிதமும், நிஃப்டி 3.5 சதவிகிதமும் உயர்ந்திருக்கின்றன.

அதேபோல், வால்யூம் அளவிலும் இந்த மே மாதத்தில் வரலாற்று உச்சத்தை அடைந்திருக்கிறது. மே மாதத்தில் டெரிவேட்டிவ் பிரிவுகளில் ஒரு நாள் சராசரி வர்த்தகம் ரூ.5.31 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. ஒரு நாள் சராசரி கேஷ் டேர்ன் ஓவர் ரூ.34,800 கோடியாக உள்ளது. இது முந்தைய மாதத்தைக் காட்டிலும் 21 சதவிகித உயர்வாகும். நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரித்ததன் காரணமாகவே இந்த வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது.”

“டிசிஎஸ் பைபேக் நடவடிக்கைக்கு வரவேற்பு எப்படி?”

“டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், 5.6 கோடி பங்குகளை பைபேக் செய்வதாக அறிவித்து, அது கடந்த புதன்கிழமை யுடன் முடிவடைந்தது. இதற்கு ஏகோபித்த வரவேற்பு முதலீட்டாளர்களிடையே கிடைத்தது. 221% கூடுதலாக விண்ணப்பம் செய்யபட்டுள்ளது. இந்த பைபேக் அறிவிப்பு வெளியிட்டதிலிருந்து இதுவரை, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனப் பங்கு விலை 10%  உயர்ந்துள்ளது.”

“இந்தியப் பங்குச் சந்தையில் புதிதாக 1,000 நிறுவனப் பங்குகள் சேரும் என பி.எஸ்.இ-யின் ஆஷிஷ் சொல்லி இருக்கிறாரே?’’


“சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) நடைமுறைக்கு வந்தபின், சிறு நிறுவனங்களும்கூட ஜிஎஸ்டி-யின் கீழ் வந்துவிடும் என்பதால், அவை தங்களுக்குள் மறைத்து வைக்க எதுவுமே இருக்காது. இந்தியா முழுக்க 51 மில்லியன் சிறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவை அனைத்தும் ரொக்கத்தில் பிசினஸ் செய்யாமல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் செய்ய வேண்டியிருக்கும். அவற்றின் பிசினஸ் என்பது வெட்டவெளிச்சமாகிவிடும். வருவாயை மறைத்துக்காட்ட வேண்டிய நிலைமை இல்லை. இதனால் அவை தாராளமாகச் சந்தையில் பட்டியலிட முன்வரும். இதன் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில் மும்பை பங்குச் சந்தையில் 1,000 நிறுவனங்கள் பட்டியலாக வாய்ப்பிருப்பதாக அதன் சி.இ.ஓ ஆஷிஷ்குமார் சவுஹன் தெரிவித்துள்ளார். அதற்காக பிஎஸ்இ தயாராக இருக்கிறது. நிறுவனங்கள் 100 பில்லியன் டாலர் வரை நிதித் திரட்ட திட்டமிட்டுள்ளன. இது, தற்போது 30 பில்லியன் டாலராக மட்டுமே இருக்கிறது. இதன் மூலம் தற்போது 34 மில்லியன் முதலீட்டாளர்களைக் கொண்டிருக்கும் பிஎஸ்இ, ஐந்து ஆண்டுகளில் 100 மில்லியனாக உயரும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நிறுவனங்கள் அதிகரிக்கும்போது சந்தையின் செயல்பாடும் சிறப்பாக இருக்க வாய்ப்பிருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.”

“காலாண்டு முடிவுகள் எப்படி?”

“ஜெட் ஏர்வேஸின் நான்காம் காலாண்டு முடிவுகள் மோசமாக வந்துள்ளன. விமான நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவிவரும் நிலையில், அனைத்து நிறுவனங்களின் நிதிநிலையும் சற்று தடுமாற்றத்தில்தான் இருக்கின்றன. இந்த நிலையில், எரிபொருள்களின் விலை மற்றும் குறைந்த கட்டணம் ஆகியவற்றால் ஜெட் ஏர்வேஸின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 91%  குறைந்திருக்கிறது. 2015-16-ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில், ரூ.397 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. ஆனால், கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் ரூ.37 கோடி மட்டுமே லாபம் ஈட்டியிருக்கிறது.

எல் அண்ட் டி நிகர லாபம் நான்காம் காலாண்டில் 29%  உயர்ந்துள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் பொறியியல் துறையின் ஜாம்பவானான எல் அண்ட் டி நிறுவனம், கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் ரூ.3,025 கோடி நிகர லாபம் அடைந்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.2,335 கோடி நிகர லாபம் அடைந்திருந்தது. வருவாய் ஈட்டும் வகையிலான ஆர்டர் கிடைத்த வகையில், இதன் வருவாய் மற்றும் நிகர லாபம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில், பங்குக்கு ரூ.21 டிவிடெண்ட் அறிவித்துள்ளது. அதோடு இரண்டு பங்குகளுக்கு ஒரு பங்கு என போனஸ் பங்கும் அறிவித்துள்ளது.

எம் அண்ட் எம், நான்காம் காலாண்டில் 26 சதவிகித நிகர லாப வளர்ச்சியை அடைந்துள்ளது. பிஎஸ் 3 வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், எம் அண்ட் எம் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கிவிட்டன. இருந்தபோதிலும் எம் அண்ட் எம் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியை, டிராக்டர் பிரிவு விற்பனை காப்பாற்றி இருக்கிறது. டிராக்டர்களின் விற்பனை அதிகரித்ததால், மற்ற வாகனங்களின் விற்பனை பாதிக்கப்பட்டபோதிலும் வருவாய் உயர்ந்து நிகர லாப வளர்ச்சியை அடைந்துள்ளது. அடுத்த மூன்று வருடங்களில் இந்த நிறுவனம், ரூ.12,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. அதில் ரூ.8,000 கோடி விரிவாக்கப் பணிகளுக்காகவும், புராடெக்ட் டெவலப்மென்ட் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட இருக்கிறது. மீதத்தை புதிய பிசினஸ்களில் முதலீடு செய்ய உள்ளது.”

“ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்கு புதிய இறக்கத்தைக் கண்டுள்ளதே?”

“என்ன செய்வது அண்ணனுக்கு வாய்த்த கொடுப்பினைத்  தம்பிக்கு வாய்க்கவில்லை. இருவருமே ஒன்றிணைந்து தொழில் செய்தாலும் ஜியோவுக்குதான் வரவேற்பு கிடைக்கிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷனைக் கண்டுகொள்ள ஆள் இல்லை. இந்த நிலையில், மூடீஸ், இக்ரா மற்றும் கேர் உள்ளிட்ட ரேட்டிங் நிறுவனங்களும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் ரேட்டிங்கைக் குறைத்துள்ளன. இதனால் அந்தப் பங்கு ஏற்கெனவே இறக்கத்தில் இருந்த நிலையில் மேலும் இறங்கி, புதிய இறக்க நிலையை அடைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் கடன் ஒருபக்கம், மறுபக்கம் போட்டி நிறுவனங்களைத் தாண்டி வளர்வதற்குத் தன்னைத் தயாராக வைத்திருக்காத நிலை. இந்த நிலையில், ஏர்செல்லுடன் இணைவதற்கான திட்டம் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. அப்படி அந்தத் திட்டம் நடந்தால், அதன் பிறகாவது வளர்ச்சி காண்கிறதா என்று பார்க்கலாம்.” 

“சிடிஎஸ்எல் ஐபிஓ பற்றி வாட்ஸ் அப்பில் பல தகவல்கள் உலா வருகிறதே!’’

“செபியின் அனுமதி எல்லாம் நிறைவு பெற்றுவிட்டது.  நடப்பு ஜூன் மாதத்தில், இந்தப் பங்கு விற்பனை நடக்க இருக்கிறது. சுமார் 3.5 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. பங்கு ஒன்றின் விலை ரூ.200-க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.”

“வாராக் கடன் மிக அதிகமாக உள்ள 50 நிறுவனங்களின்  கடன் கணக்குகளில் அரசு கவனம் செலுத்த   இருக்கிறதே?”

“இந்திய வங்கித் துறைக்கு உள்ள வாராக் கடன்களில் 80-85%  டாப் 50 நிறுவனங்களைச் சார்ந்ததாக இருக்கிற  கணக்குகளில் உள்ளன. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் கோடி இருக்கலாம். இவற்றில் பெரும்பாலான கடனைப் பொதுத்துறை வங்கிகள்தான் தந்துள்ளன. இந்த 50 வாராக் கடன் கணக்குகளில், அரசு தனிக் கவனத்துடன் நடவடிக்கை எடுக்க இருக்கிறது. அவற்றில் வீடியோகான், ஜிண்டால் குழும நிறுவனங்கள், புஞ்ச் லாய்ட், ஜேபி (Jaypee), மொன்னட் இஸ்பத், எஸ்ஸார் மற்றும் பூஷண் ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் அவற்றில் அடக்கம். வாராக் கடன் பிரச்னையைத் தீர்ப்பதில் தொடர்ந்து தீவிரமாக இருப்பது நல்ல விஷயம்.”

“கடந்த 12 மாதங்களில் இந்தியர்கள்தான் சந்தையைத் தீர்மானித்திருக்கிறார்களாமே?”

“மே மாதத்துடன் முடிந்த 12 மாதங்களில் இந்திய முதலீட்டாளர்களால்தான் பங்குச் சந்தையின் போக்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்று தாராளமாகச் சொல்லலாம். ஏனெனில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எப்போதும் போலவே, முதலீடு செய்திருக்கிறார்கள். ஆனால், இந்திய முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவித்திருக்கிறார்கள். வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் காட்டிலும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் சந்தையில் அதிகம் முதலீடு செய்திருப்பது இதுவே முதன்முறை. இதில் தனிநபர்களுடன் சேர்த்து மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஆகியவற்றின் முதலீடும் அடங்கும்’’ என்றவர், ‘‘புதிய நாணயம் விகடன், வாசகர்களுக்கு விருந்தாக அமையட்டும்’’ என்று வாழ்த்திவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்.

ஜி.டி.பி வளர்ச்சி குறையுமா?

பண மதிப்பு நீக்கம் ஏற்படுத்திய சுணக்கத்தால் இந்திய ஜி.டி.பி வளர்ச்சி 7.1 சதவிகிதம் இருக்கும் எனக் கணித்துள்ளார்கள். இதைவிடக் குறையும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், தாக்கம் அவ்வளவாக இல்லை என்பதுதான் உண்மை.  மூடீஸ் அமைப்பு, 2017-18-ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜிடிபி வளர்ச்சி 8 சதவிகிதம் என்ற அளவுக்கு உயரும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் 2016-17-ம் நிதியாண்டின் ஜிடிபி வளர்ச்சி, 7.6 சதவிகிதமாக மாற்றி கணிக்கப்பட்டுள்ளது. புதிய ஐஐபி மற்றும் ஜிடிபி வரிசைகளைப் பொறுத்து பார்க்கும்போது, 2015-16 மற்றும் 2016-17-ம் நிதியாண்டுகளின் ஜிடிபி வளர்ச்சி, 8.3% மற்றும் 7.6 சதவிகிதமாக மாற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.