நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குச் சந்தை... லாபம் தரும் எஸ்.ஐ.பி முதலீடு!

பங்குச் சந்தை... லாபம் தரும்  எஸ்.ஐ.பி முதலீடு!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை... லாபம் தரும் எஸ்.ஐ.பி முதலீடு!

சோ.கார்த்திகேயன்

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்றாலே மியூச்சுவல் ஃபண்ட் என்பது நம்மில் பலருக்கும் சட்டென்று ஞாபகத்துக்கு வரும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் மட்டுமல்ல, பங்குச் சந்தையிலும் எஸ்ஐபி முறை மூலம் முதலீடு செய்து பல மடங்கு லாபம் சம்பாதிக்க முடியும். எப்படி என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன் சேமிப்புக்கும், முதலீட்டுக்கும் உள்ள சின்ன வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது அவசியம்.

பங்குச் சந்தை... லாபம் தரும்  எஸ்.ஐ.பி முதலீடு!

  சேமிப்பு, முதலீடு

ரமேஷ், மாதந்தோறும் 100 ரூபாயை உண்டியலில் போடுகிறான். விவேக், மியூச்சுவல் ஃபண்ட் மூலம் மாதம் 100 ரூபாய் போடுகிறான். இருவரும் ஒரு வருட காலத்துக்குச் சேர்க்கும் பணம் ரூ.1,200. உண்டியலில் போட்ட பணம் அப்படியே இருக்கும்.

ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் போட்ட பணம் குறைந்த சதவிகிதம் எடுத்துக்கொண்டால்கூட, கூட்டு வட்டிக் கணக்கில் 1,245 ரூபாயாக வளர்ந்திருக்கும். அதாவது, கூடுதலாக 245 ரூபாய் கிடைக்கும். ரமேஷ், செய்தது வெறும் சேமிப்புதான். ஆனால், விவேக் செய்தது ‘முதலீடு’. இப்போது புரிந்ததா, சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை?

பங்குச் சந்தை... லாபம் தரும்  எஸ்.ஐ.பி முதலீடு!


இன்றைய சூழ்நிலையில் சேமிப்பு எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமாக மாறியிருக்கிறது முதலீடு. மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீட்டுத் திட்டத்தில் 1,200 ரூபாய்க்கு, ஒரு வருட முதலீட்டுத் திட்டத்துக்கே 245 ரூபாய் கூடுதலாக வருமானம் கிடைக்கும்போது, நீண்ட கால நோக்கில் மாதந்தோறும் 1,000, 5,000, 10,000 ரூபாய் என மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு மேற்கொண்டால், எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று யோசித்துப் பார்த்தீர்களா? மாதந்தோறும் குறிப்பிட்ட  தொகையை மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்து, இன்று பல கோடி அளவுக்கு லாபம் சம்பாதித்தவர் பலர்.

இந்த நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுபோல, பங்குச் சந்தையில் எஸ்ஐபி (சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்) முறையில் முதலீடு செய்வது லாபமா என்பது குறித்து பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் பேசினோம்.

  இரண்டு வகை முதலீடு

“பங்குச் சந்தையில் எஸ்ஐபி முறையில் இரண்டு விதமாக முதலீட்டை மேற்கொள்ளலாம். ஒன்று, திறமையும் நேரமும் இருந்தால் குறிப்பிட்ட சில நிறுவனப் பங்குகளைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பங்குகளில் மாதந்தோறும் முதலீட்டை மேற்கொள்வது. இது அதிக வருமானத்தைத் தரும். இரண்டாவது, நிஃப்டி, சென்செக்ஸ், வங்கி என இண்டெக்ஸ் சார்ந்த ஃபண்டுகளில் முதலீட்டை மேற்கொள்வது. இதன் மூலம் கிடைக்கும் லாபம் குறைவாக இருந்தாலும், இதிலுள்ள ரிஸ்க்கும் குறைவே. இதில் நீண்ட காலமாக முதலீட்டை மேற்கொண்டால், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியைவிட அதிகமான வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

   குறைந்தது ஐந்து வருடம்

குறிப்பிட்ட சில பங்குகளில் எஸ்ஐபி மூலம் முதலீட்டை மேற்கொள்ளும்போது முதலீட்டாளர்களுக்கு ஓரளவு அறிவும், நேரமும், மனப்பக்குவமும் இருக்க வேண்டும். சந்தையின் அதிக ஏற்ற, இறக்கங்களைப் பார்த்துப் பயப்படாமல் இருக்க வேண்டும். சந்தை இறங்கும்போது அதிகமான பங்குகளைக் குறைந்த விலைக்கு வாங்க ஒரு வாய்ப்புக் கிடைத்திருப்பதாக உணர்ந்து சந்தோஷமடையக்கூடிய மனப்பக்குவம் இருக்க வேண்டும்.

சந்தையில் முதலீடு மேற்கொள்ளப் போகும் நிறுவனப் பங்கின் கணக்குவழக்கு, பேலன்ஸ்ஷீட் எனப் பங்குகளின் சாதக பங்கின் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து முதலீடு செய்யக்கூடிய பக்குவம் வேண்டும். இவ்வாறு எஸ்ஐபி முறை மூலம் முதலீட்டை மேற்கொண்டால், நிச்சயம் அதிக வருமானத்தை ஈட்டலாம். குறைந்தது ஐந்து வருடங்களாவது, தொடர்ந்து எஸ்ஐபி முறையில் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.

பங்குச் சந்தை... லாபம் தரும்  எஸ்.ஐ.பி முதலீடு!


குறைந்த அளவு பணம் இருப்பவர்கள், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய்தான் முதலீடு செய்ய முடியுமெனில், நிஃப்டி போன்ற இண்டெக்ஸ் சார்ந்த ஃபண்டுகளில் முதலீட்டை மேற்கொள்வது நல்லது. இதுவே மாதந்தோறும் 25,000 ரூபாய் எஸ்ஐபி முறையில் முதலீட்டை மேற்கொள்ள முடியும் எனில், பல்வேறு துறை சார்ந்த நிறுவனப் பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீட்டை மேற்கொள்வது நல்லது.

சந்தை இறங்கியிருக்கும் சமயத்தில், தீபாவளி போனஸ் போன்று கூடுதலாகப் பணம் ஏதாவது கிடைத்தால், அந்தப் பணத்தையும் முதலீடு செய்யும்போது அதிக வருமானத்தைப் பெறலாம்’’ என்றவர், இப்படிச் செய்யும்போது என்ன செய்யக்கூடாது என்பதையும்  விளக்கமாகச் சொன்னார்.

  என்ன செய்யக் கூடாது?

``எஸ்ஐபி முதலீட்டில், அதிக அளவிலான டெக்னலாஜி சார்ந்த துறைகளில் முதலீட்டை மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், ஒரு காலத்தில் டைப்ரைட்டர் இருந்தது. இன்று அது காணாமலே போய்விட்டது. டெக்னலாஜி என்பது காலத்துக்கேற்ப மாறக்கூடியது. ஆகையால், அன்றும் இன்றும் என்றும் பயன்படுத்தக்கூடிய டூத்பேஸ்ட் போன்ற     எஃப்.எம்.சி.ஜி துறைகளில் முதலீட்டைத் தாராளமாக மேற்கொள்ளலாம். இதுமட்டுமின்றி, வங்கி மற்றும் நிதி சார்ந்த துறைகள், உள்கட்டமைப்பு, சிமென்ட், ஸ்டீல் போன்ற துறை சார்ந்த பங்குகளிலும் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

எஸ்ஐபி முலம் மேற்கொள்ளப்படும் முதலீட்டை, அவசரத் தேவைகளுக்கு எடுக்கக் கூடாது. நல்ல நிறுவன பங்குகளைத் தேர்ந்தெடுத்து, பத்து வருடங்கள் இலக்கு நிர்ணயித்து, முதலீட்டை முழுவதுமாக மேற்கொண்டால், அதிக லாபம் பெறலாம். பத்து வருடங்களுக்கு முதலீடு என்றாலும்கூட, வருடத்துக்கு ஒருமுறையாவது அந்தப் பங்குகளை ஆய்வு செய்வது அவசியம்” என்றார் வ.நாகப்பன்.

  கவனிக்க வேண்டிய விஷயங்கள்

எஸ்ஐபி முறை மூலம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து முதலீட்டு ஆலோசகர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.

“எஸ்ஐபி முதலீட்டைப் பொறுத்தவரை, ஒரு பங்கின் விலை அதிகமாகக்கூட இருக்கலாம். எனினும், மாதந்தோறும் இரண்டு, மூன்று, நான்கு பங்கு என வாங்கும்போது, நீண்ட கால நோக்கில் சராசரியாக வாங்கிய விலை குறைந்து, நமக்கு நல்ல லாபத்தைத் தரும். பல புரோக்கிங் நிறுவனங்களில் எஸ்ஐபி மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை ஒரு திட்டமாகவே வைத்திருக்கின்றனர். ஆனாலும், குறிப்பிட்ட சில முதலீட்டாளர்கள் மட்டுமே இந்த முறையில் முதலீட்டை மேற்கொள்கின்றனர்’’ என்றவரிடம், ‘‘எஸ்.ஐ.பி. முறையின் மூலம் எந்தப் பங்குகளில் முதலீடு செய்யலாம்’’ என்றோம்.

``எஸ்ஐபி முறையில் முதலீட்டை மேற்கொள்ளும்போது, முதலில் ஒரு பங்கைத் தேர்ந்தெடுக்கும்முன் அலசி ஆராய்ந்து அதன்பிறகு முதலீடு செய்ய வேண்டும். நிறுவனத்தின் கடந்த காலச் செயல்பாடு மற்றும் நிர்வாகம் எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

நிறுவனத்தின் வளர்ச்சி, விற்பனை அதிகரித்து வருகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். இவ்வாறு இருந்தாலே அந்த நிறுவனத்தின் லாபமானது அதிகரித்துக் கொண்டே வரும்.

இப்போதிருக்கும் நிலையைப் பொறுத்தவரை, ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு, விமானப் போக்குவரத்து, பொழுதுபோக்கு, ஆட்டோமொபைல் மற்றும் அதன் உதிரிப்பாகங்கள், எஃப்.எம்.சி.ஜி, ரீடெய்ல் சார்ந்த துறை நிறுவனப் பங்குகள் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்கும். மாருதி, டி.வி.எஸ் மோட்டார், எக்ஸைட் பேட்டரி, அமரராஜா பேட்டரீஸ், அப்போலோ டயர்ஸ்,     பி.வி.ஆர், ஐநாக்ஸ், சன் டிவி,  ஐ.ஓ.சி., ஹெச்.பி.சி.எல், ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ போன்ற பங்குகளில் எஸ்ஐபி முறையில் முதலீட்டை மேற்கொண்டு லாபம் ஈட்டலாம்” என்றார்.

இனியும் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய பணமில்லை எனப் புலம்புவதை விட்டுவிட்டு, இருக்கும் கொஞ்ச பணத்தில், நல்ல பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிப்போடுவதன் மூலம், நல்ல லாபம் பெற முயலுங்கள்.

படம்: மீ.நிவேதன்

எதிர்பார்த்ததைவிட அதிக வருமானம் கிடைத்தது!

பங்குச் சந்தை... லாபம் தரும்  எஸ்.ஐ.பி முதலீடு!

வாசுதேவன், கோவை.

“வங்கி எஃப்.டி-யில் வட்டி விகிதம் குறைந்துள்ளது. முதலீடு செய்தாலும் வருமானத்துக்கு வரி விலக்குக் கிடைப்பதில்லை. இதுவே பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், ஓராண்டுக்கு மேல் வருமானத்துக்கு 100% வரி விலக்குக் கிடைக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக எஸ்ஐபி மூலமாக சந்தையில் விவசாயம், ஆட்டோமொபைல், உள்கட்டமைப்பு போன்ற துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீட்டை மேற்கொண்டு வருகிறேன். ஆண்டுக்கு 20% வருமானத்தை எதிர்பார்த்தேன். ஆனால், 25% முதல் 30%  வரை வருமானம் கிடைத்தது.’’