நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஷேர்லக்: மிட் கேப், லார்ஜ் கேப்... எது பெஸ்ட்?

ஷேர்லக்: மிட் கேப், லார்ஜ் கேப்... எது பெஸ்ட்?
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: மிட் கேப், லார்ஜ் கேப்... எது பெஸ்ட்?

ஷேர்லக்: மிட் கேப், லார்ஜ் கேப்... எது பெஸ்ட்?

“நான் அவசர வேலையாக பெங்களூருக்கு வந்துவிட்டேன். மாலை ஆறு மணிக்கு உமக்கு போன் செய்யவா’’ என்று வாட்ஸ்அப்பில் கேட்டிருந்தார் ஷேர்லக். ‘‘யெஸ் பாஸ்’’ என்று அவருக்குப் பதில் சொல்லிவிட்டுக் காத்திருந்தோம். சரியாக மாலை ஆறு மணிக்கு போன் செய்தார். ‘‘மேட்டர்களைக் குறித்துக்கொள்ள ரெடியா?’’ என்று கேட்டார். ‘‘டபுள் ரெடி’’ என்று சொல்லிவிட்டுக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

ஷேர்லக்: மிட் கேப், லார்ஜ் கேப்... எது பெஸ்ட்?

“ஐசிஐசிஐ லொம்பார்ட் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஐபிஓ வருவது குறித்த செய்திகள் மீண்டும் பரபரப்பாக அடிபட ஆரம்பித்திருக்கிறதே’’ என்று முதல் கேள்வியைக் கேட்டோம்.

“கடந்த வருடம் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் புதிய பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் பங்குச் சந்தையில் பட்டியலானது. தற்போது அடுத்த அதிரடியாக ஐசிஐசிஐ லொம்பார்ட் பொதுக் காப்பீடு நிறுவனம் ஐபிஓ வெளியிட இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அதன் இயக்குநர் குழு, ஐபிஓ செல்வதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறது.

ஆனால், விற்பனைக்கு விடப்படும் பங்குகளின் விலைப்பட்டை மற்றும் அவற்றின் மொத்த மதிப்பு எவ்வளவு என்பது போன்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. தோராயமாக 25 சதவிகிதப் பங்குகள் விற்பனை மூலம் ரூ.5,075 கோடி திரப்பட்ட உள்ளதாகக் கூறப்படுகிறது.”     

“நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனமும் ஐபிஓ வரப் போவதாகத்  தகவல் சொல்லப்படுகிறதே” என்று வினவினோம்.

“மத்திய அரசுக்குச் சொந்தமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஐபிஓ வருவதன் மூலம்  ரூ.8,000 கோடி நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய பொதுக் காப்பீடு நிறுவனம் இது. இந்த நிறுவனம் தனது 15 சதவிகிதப் பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்யவிருக்கிறது. அடுத்த ஆறு மாதங்களில் இந்தப் பங்கு விற்பனை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ஐபிஓ குறித்து இறுதி முடிவுகள் எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்று அதன் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜி. சீனிவாசன் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனம் ஐபிஓ-வுக்கு வரும்பட்சத்தில், அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒன்று ஐபிஓ வருவது இதுவே முதல்முறை ஆகும்.” 

“ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டும் ஐபிஓ வரத் தயாராகி வருகிறதே’’ என்று ஆச்சர்யம் காட்டினோம்.

“உண்மைதான். அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் புதிய பங்கு வெளியீட்டுக்குத்  தயாராகி வருகிறது. இதற்கான ஒப்புதலை அதன் இயக்குநர் குழு வழங்கியிருக்கிறது. தனது 10 சதவிகிதப் பங்குகளை ஐபிஓ மூலம்  விற்பனைக்கு விட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரூ.2,000 கோடி நிதி  திரட்டப்படும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த நிதியாண்டுக்குள் ஐபிஓ வர வாய்ப்பிருக்கிறது.

ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் மூன்றாவது பெரிய நிறுவனமாக உள்ளது. கிட்டத்தட்ட ரூ. 2.11 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டாளர் சொத்துகளை இந்த நிறுவனம் நிர்வகித்து வருகிறது” என்ற ஷேர்லக்,  ரிலையன்ஸ் தொடர்பான இன்னொரு தகவலையும் சொன்னார்.   

“கடன் சுமை அதிகமாக இருப்பதாலும், போட்டி நிறுவனங்களைச் சமாளிக்க முடியாத நிலையில் இருப்பதாலும், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் தரக் குறியீட்டை, மூடிஸ், ஃபிட்ச் உள்ளிட்ட ரேட்டிங் நிறுவனங்கள் குறைத்துள்ளன.

ஆனால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், இந்தத் தரக்குறியீட்டை மறுத்துள்ளது. தங்கள் நிறுவனத்தின் கடந்த காலச் சேவையின் அடிப்படையில் இந்த ரேட்டிங் வழங்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தியிருக்கிறது.

மேலும், நிறுவனத்துக்கு வரவிருக்கும் நான்கு பில்லியன் டாலர் (ஏர்செல் நிறுவனத்துடனான இணைப்பு, டவர் விற்பனை) தொகையைப் பற்றிய விவரங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வில்லை என்று ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தெரிவித்துள்ளது.

ரேட்டிங் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்கு விலை மேலும் குறைந்து வர்த்தகமானது. கடந்த வியாழக்கிழமை அன்று மட்டும் ஒரேநாளில் 4% அந்தப் பங்கின் விலை இறக்கம் கண்டது குறிப்பிடத்தக்கது.”  

“பார்மா பங்குகள் மீண்டு வந்திருக்கிறதே, இந்தப் போக்குத் தொடருமா” என்று கேட்டோம்.


“பொதுவாக, பார்மா பங்குகளைப் பாதுகாப்பான பங்குகள் என்பார்கள். இந்திய பார்மா பங்குகள் கடந்த மே மாதத்தில் இறக்கத்தைச் சந்தித்து வந்தன. அதற்கு முக்கியக் காரணம், அவற்றுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் போட்ட நிபந்தனைகள்தான். அப்போது அவற்றில் சில பங்குகள், 52 வாரக் குறைந்தபட்ச விலைக்குக்கூட இறங்கின.

ஆனால், சமீப நாள்களில் பார்மா பங்குகளுக்கு அமோக வரவேற்பு இருந்து வருகிறது. 52 வாரக் குறைந்தபட்ச விலைக்கு இறங்கிய பங்குகளில் பல 5 முதல் 10%  விலை உயர்ந்து வர்த்தகமாயிருக்கின்றன.

இந்த ஏற்றமானது பார்மா துறையில் உள்ள பங்குகளுக்கு பாசிட்டிவான அம்சம்தான்.  அதே சமயம், பார்மா பங்குகளுக்கான நெகட்டிவ் காரணிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எனவே, பார்மா பங்குகளில் ஏற்பட்டுள்ள இந்த ஏற்றமானது தொடருமா என்பது சந்தேகமே.  இறக்கங்கள் வரலாம். ஆகவே, பார்மா பங்குகளில் கவனமாக இருக்கவும்” என்று எச்சரித்தவர், பார்மா பங்குகள் பற்றிய இன்னொரு முக்கியத் தகவலைச் சொன்னார்.

“பார்மா நிறுவனங்களில் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் அடிப்படையில் முதல் இடத்தில் சன் பார்மா (ரூ.1,22,650 கோடி) உள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த லூபின் பார்மாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த இடத்தை மூன்றாவது இடத்தில் இருந்த கெடிலா ஹெல்த்கேர் பிடித்துள்ளது. தற்போதைய நிலையில், கெடிலாவின் மார்க்கெட் கேப்பிட்டலை சேஷன் சுமார் ரூ.55,000 கோடி.  லூபின் நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் சுமார் ரூ.43,400 கோடி. இந்த மாற்றத்தினை அடுத்து அண்மைக் காலத்தில் கெடிலா பங்கின் விலை அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.”

“சந்தைக் குறியீடுகள் புதிய உச்சங்களை அடைந்தாலும், நிறையப் பங்குகள் 52 வார இறக்கத்தை அடைந்துள்ளதே?’’ என்றோம் கொஞ்சம் கவலையுடன். 

“இந்த நிதியாண்டு தொடங்கியதிலிருந்து சந்தைக் குறியீடுகள் ஏற்றமடைந்து புதிய புதிய உச்சங்களைத் தொட்டபோதிலும் பிஎஸ்இ 500 பங்குகளில் 40 பங்குகள் 52 வாரக் குறைந்தபட்ச விலைக்கு இறங்கியுள்ளன. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், கோல் இந்தியா, சன் பார்மா, லூபின் உள்பட 16 பார்மா பங்குகள், வீடியோகான் உள்ளிட்டவை அவற்றில் அடக்கம். பார்மா பங்குகளுக்குச் சர்வதேசச் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி, வீடியோகான் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு அதிகக் கடன் சுமை என இந்தப் பங்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்துக்காக விலை இறக்கம் கண்டுள்ளன.’’ 

“மார்கன் ஸ்டான்லி  நிறுவனம் அடுத்த 12 மாதங்களுக்குச் சந்தை நன்றாக இருக்கும் என்கிறதே” என்றோம் மகிழ்ச்சியுடன்.

“மார்கன் ஸ்டான்லி உட்பட பெரும்பாலான நிதிசார் ஆய்வு நிறுவனங்களும் அடுத்த ஒரு வருடத்துக்கு இந்திய பங்குச் சந்தையின் செயல்பாடு நன்றாக இருக்கும் என்றுதான் சொல்கின்றன. அறிகுறிகளும், சூழல்களும் அதற்கேற்ப இருப்பதையும் பார்க்க முடிகிறது.

இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உள்ள விஷயங்கள் விலகி, வளர்ச்சி அடைந்து வருவதாகவும், அதற்கான அறிகுறிகளை இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டிலிருந்து (ஜூலை முதல்) பார்க்க முடியும் என்று மார்கன் ஸ்டான்லி கூறியுள்ளது.

வரும் 2018-19-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய நிறுவனங்களின் வளர்ச்சி முழு அளவிலானதாக இருக்கும் என மார்கன் ஸ்டான்லி கருத்துத் தெரிவித்துள்ளது. உயர்  மதிப்பிலான ரூ.500, ரூ.1,000 ஆகியவற்றின் பண மதிப்பு நீக்கத்தினால் குறைந்த வளர்ச்சி முடிவுக்கு வந்துள்ளது. இந்தியப் பொருளாதாரத்தில் வேகமான வளர்ச்சி நிச்சயம் இருக்கும் என்று மார்கன் ஸ்டான்லி அறிக்கை சொல்கிறது.

 சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மற்றும் வங்கிச் சீரமைப்பு நடவடிக்கைகள் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவையாக இருக்கும். எனவே, அடுத்த ஓராண்டில் பங்குச் சந்தை சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பெரிய சர்வதேச நிகழ்வுகள் எதுவும் சந்தையைப் பாதிக்காமல் இருந்தால் போதும்.

மேலும், மார்கன் ஸ்டான்லி அடுத்த ஓராண்டு காலத்தில் மிட் கேப் பங்குகளைக் காட்டிலும் லார்ஜ் கேப் சிறப்பாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறது. வங்கிகளின் வாராக் கடன் பிரச்னை, வங்கிகளின் மூலதன தன்னிறைவு விகிதம் போன்றவற்றுக்குக் கூடிய விரைவில் தீர்வு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018-ம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில்தான் ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்கும் என எதிர்பார்க்கலாம்.”

“ரிசர்வ் வங்கி, முக்கிய வட்டி விகிதங்களைக்  குறைக்கவில்லையே! இது தொடர்பாக நிதி அமைச்சகத்துக்கும் ஆர்.பி.ஐ அதிகாரிகளுக்கும் ஒரே கருத்து இருக்கிற மாதிரி தெரியவில்லை!’’ என்றோம்.

‘‘வட்டி விகிதத்தைக் கொஞ்சம் குறைக்கலாம் என்பது நிதி அமைச்சக அதிகாரிகளின் எதிர்பார்ப்பு. ஆனால், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்றுகிற நிலையில் இல்லை. இது தொடர்பாக நிதி அமைச்சகம் ஏற்பாடு செய்த  கூட்டத்தில் ஆர்.பி.ஐ அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.  இந்தச் செய்திகளால் கடந்த  புதன்கிழமை அன்று பங்குச் சந்தை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. பேங்க் குறியீடு, ஆட்டோ குறியீடு, ரியல் எஸ்டேட் குறியீடு அன்று சிறிது ஏற்றம் கண்டன. பொதுத் துறை பங்குகளில் பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, தனியார் துறை பங்குகளில் ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ்இந்த் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் போன்றவற்றின் பங்கு விலை ஏற்றம் கண்டன. ரியல் எஸ்டேட் துறையில் இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் பங்கின் விலை 4.11% அதிகரித்தது.”  

“பிஎஸ்இ, பங்கு விலைகளைக் கண்காணிக்க புதிய செயல்முறையைக் கொண்டு வருகிறதே?” என்று கேட்டோம் அவர் புறப்படுவதற்கு முன்பு.


“மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) தனது தளத்தில் வர்த்தகமாகும் பங்குகளின் விலையைத் தொடர்ந்து கண்காணிக்க இருக்கிறது. இதற்காக எஸ்+ என்கிற செயல்முறையை வகுத்துள்ளது. இதன்படி பங்குகளில் மோசமான நகர்வுகள் இருந்தால், அவற்றைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், நிறுவனங்களின் நிதி நிலை மற்றும் வருவாய் உள்ளிட்ட அடிப்படை களைக் கூர்ந்து கண்காணிக்கவும் இருக்கிறது. பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்ட எல்லா நிறுவனங்களும் இனி உஷாராக இருப்பது நல்லது” என்றவர் புறப்படும்முன் கவனிக்க வேண்டிய பங்குகளைக் கேட்டோம். அவர் தந்த துண்டுச் சீட்டில் எழுதப்பட்டிருந்த பங்குகள் இதோ...

“நீண்ட கால முதலீட்டுக்கு: கோல் இந்தியா,  ஐசிஐசிஐ பேங்க், ஹீரோ மோட்டோகார்ப், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா.’’ 

தேஜஸ் நெட்வொர்க்ஸ் ஐபிஓ

ஐபிஓ ஆரம்பத் தேதி: ஜூன் 14

விலைப்பட்டை : ரூ.250-257

மொத்தப் பங்குகள் விற்பனை: 1.27 கோடி

ஒதுக்கீடு: 75% - அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு நிறுவனங்கள், 15% - நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளர்கள், 10% -  சிறு முதலீட்டாளர்கள்.

குறைந்தபட்ச விண்ணப்பம்: 55 பங்குகள்

(55 பங்குகளின் மடங்குகளில்தான் வாங்க முடியும்.)