நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த இதழில், இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் என்று சொல்லி இருந்தோம். அதன்படியே, கடந்த வாரம் சந்தைக் குறியீடுகள் ஏற்றமடைந்தன. நிஃப்டி 9700 என்ற நிலையை நெருங்கி வர்த்தகமானது. ஆனால், வார இறுதி நாள் வர்த்தகத்தின் நகர்வுகள், மற்ற நான்கு நாள்களின் நகர்வுகளின் போக்கிலேயே தொடராமல் சுருங்கியது. நிஃப்டி 9700 என்ற நிலையை உடைப்பதற்கான சாத்தியங்கள் இருந்த போதிலும், காளையின் போக்கில் இருந்த நகர்வுகள் அதற்குத் தயாராக இல்லை. ஒருவேளை, காலாண்டு முடிவுகளின் தாக்கம் விரைவிலேயே முடியும் நிலைக்கு வந்திருக்கலாம் அல்லது நகர்வுகளைத் துரிதப்படுத்தக்கூடிய அளவிலான செய்திகளும் பெரிதாக இல்லாமல் போயிருக்கலாம். சர்வதேச அளவிலான செய்திகளும் பெரிய அளவில் இல்லை.

நிஃப்டியானது ஏழு வாரங்களாகத்  தொடர்ந்து  ஏற்றமடைந்து, புதிய உச்சங்களை எட்டியுள்ளது. ஆனால், இந்த வாரத்தில் சிறு அளவிலான கேண்டிலின் தாக்கம், சந்தையில் சில நிலையற்ற தன்மையை உருவாக்கியிருப்பதைப் பார்க்க முடிந்தது. ஆனால், சந்தையிலிருந்து பெரிய அளவிலான வெளியேற்றங்களோ அல்லது பங்கு விற்பனையோ நடக்காததைப் பார்க்கும்போது, இந்த கேண்டிலின் உருவாக்கத்துக்குப் பங்குகளை வாங்குவதில் பின்வாங்கியதுதான் காரணம். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!


பேங்க் நிஃப்டி கேண்டிலைப் பார்க்கும்போது, நன்றாகவே இருக்கிறது. இந்தத் துறை தொடர்ந்து ஏற்றமடைவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. மேலும் நிஃப்டி, வரும் வாரங்களில் புதிய உச்சங்களை அடையவும், அவற்றின் பங்களிப்பு உதவியாக இருக்கும்.

ஐ.டி துறை பிரிவில் நெகட்டிவான செய்திகள் வந்தததால், அதன் நகர்வுகள் பாதிப்படைந்தன.  நிஃப்டியில் வங்கிகளுக்கு நிகராக ஐ.டி துறையும் பங்கு வகிப்பதால், நிஃப்டியின் போக்கிலும் சிறு தாக்கத்தை ஏற்படுத்தியது.

இருந்தாலும், சந்தையில் நிலவும் காளையின் போக்குத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது, லார்ஜ் கேப் பங்குகள் சிறப்பாக உள்ளன. வங்கிப் பங்குகள், தொடர்ந்து ஏற்றமடைவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளன. எனவே, வரும் வாரத்தில் குறியீடுகளில் ஏற்படும் இறக்கத்தை, வாங்குவதற்கான வாய்ப்பாகவே பார்க்கலாம். 9600 என்ற நிலை வலுவாக உள்ளது. அந்த நிலை வரை தாராளமாக வாங்கலாம். 9700 என்ற நிலையை உடைத்து ஏறினால், புதிய ஏற்றங்களுக்கான மொமென்டம் உருவாகும்.

மிர்சா இன்டர்நேஷனல்
(MIRZAINT)


தற்போதைய விலை: ரூ.155.65

வாங்கலாம்

தோல் பொருள்கள் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை சந்தையில் நன்றாக ஏற்றமடைந்து வருகின்றன. மேலும்,   ஜி.எஸ்.டி.யினால் பலனடையப் போகும் ஒரு துறையாகவும் இது உள்ளது. கடந்த சில வாரங்களாகவே மிர்சா இன்டர்நேஷனல் நிறுவனப் பங்கை வாங்குவதில் முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இந்த ஏற்றப் போக்கில் இந்தப் பங்கில் நல்ல மொமென்டம் உருவாகி, மேலும் ஏற்றமடைவதற்கான வாய்ப்புகள் உருவாக்கியிருக்கின்றன. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். இந்தப் பங்கு ரூ.170 வரை உயர வாய்ப்புள்ளது.

இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட்
(IBREALEST)


தற்போதைய விலை: ரூ.176.75

வாங்கலாம்

ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டுச் சட்டம் (ரெரா)அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்து முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகளுக்கு நல்ல டிமாண்ட் உருவாகி இருக்கிறது. இவற்றில் டிஎல்எஃப், இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் போன்றவை நன்றாக ஏற்றமடைந்து உள்ளன. இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் பங்கு, தற்போது அடைந்துள்ள ஏற்ற நிலையில் வலுவாக நிலைத்திருப்பதைப் பார்க்கும்போது, அதன் இறக்கத்தில் பங்கை வாங்கியவர்கள் வலுவான கைகள் என்பது தெரிகிறது. இந்தப் பங்கு மேலும் ஏற்றமடைவதற்கான வாய்ப்புகளைக் கொண்டு இருப்பதால், தற்போதைய நிலையில் வாங்கலாம். ரூ.190-195 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.160 ஸ்டாப் லாஸ் வைத்துக்கொள்ளவும்.

சோனா கோயோ ஸ்டீரிங் சிஸ்டம்ஸ் (SONASTEER)

தற்போதைய விலை: ரூ.83.00


வாங்கலாம்


ஆட்டோ உதிரிபாக நிறுவனப் பங்குகளுக்கு எப்போதுமே டிமாண்ட் நன்றாகவே இருக்கும். இந்த வருடத் தொடக்கத்தில், சோனா ஸ்டீரிங் நல்ல ஏற்றத்தைக் கண்டது. ஆனால், அதிகபட்சமாக ரூ.85 என்ற நிலையை அடைந்தபிறகு, ஏற்ற இறக்க மில்லாத நிலையிலேயே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து இருந்து வந்தது இந்தப் பங்கு. இந்த ஏற்ற இறக்கமில்லாத நிலை தற்போது முடிவுக்கு வந்ததுடன், இதற்கு இருந்த பலவீனங்களும் விலகி இருப்பதால், தற்போதைய விலையில் வாங்கலாம். விரைவில் ரூ.105 வரை உயர வாய்ப்புள்ளது.
  
தொகுப்பு : ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.