நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஃபண்ட் முதலீடு... மாற்றியமைக்க வேண்டிய 7 சூழ்நிலைகள்!

ஃபண்ட் முதலீடு... மாற்றியமைக்க வேண்டிய  7 சூழ்நிலைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபண்ட் முதலீடு... மாற்றியமைக்க வேண்டிய 7 சூழ்நிலைகள்!

அனில் ரெகோ, சி.இ.ஓ, Right Horizons Financial Services

`பங்குச் சந்தை முதலீட்டில் யார் வேண்டுமானாலும் நுழைய முடியும்; அதிலிருந்து  சரியான நேரத்தில் வெளியேற, புத்திசாலித்தனமான முதலீட்டாளர்களால் மட்டுமே முடியும்’ என்று சொல்வார்கள். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் நீண்ட கால முதலீடுகளாக இருந்தாலும், குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் அவற்றை விற்றுவிட்டு வெளியேற வேண்டியிருக்கும். அது மாதிரியான ஏழு சூழ்நிலைகள் பற்றி இப்போது பார்ப்போம். 

ஃபண்ட் முதலீடு... மாற்றியமைக்க வேண்டிய  7 சூழ்நிலைகள்!

1. தொடர்ந்து மோசமான செயல்பாட்டில் இருக்கும் ஃபண்டுகள்

இறக்கம் என்பது இயல்பானது. ஆனால், ஒரு ஃபண்ட் மோசமான செயல்பாட்டைத் தொடர்ச்சியாகக் கொண்டிருந்தால், அந்த ஃபண்டிலிருந்து வெளியேறுவது தவிர வேறு வழியில்லை. உதாரணமாக, உங்களுடைய ஃபண்ட் தவறான துறையில், தவறான நேரத்தில் முதலீடு செய்யப்பட்டு இருக்கலாம். இதனால் குறைந்த வருமானமே உங்களுக்குக் கிடைப்பதாக இருக்கலாம். அல்லது  நெகட்டிவ் வருமானம்கூட உங்களுக்குக் கிடைக்கலாம். ஃபண்ட் வருமானங்கள் அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் இருப்பது வழக்கம் என்றாலும், அது  மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கான காரணத்தையே சிதைத்துவிடக் கூடாது. எனவே, இதுபோன்ற ஃபண்டுகளிலிருந்து வெளியேறி, வேறு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

2. ஃபண்ட் மேனேஜரின் செயல்பாடுகளில் திருப்தியின்மை


நீங்கள் முதலீடு செய்திருக்கும் ஃபண்டின் மேனேஜர், அந்த  ஃபண்டின் நோக்கங்களை மாற்ற முடிவு செய்திருக்கலாம். லார்ஜ் கேப் ஃபண்ட் ஒன்று, மிட் கேப் ஃபண்டாக மாற்றப்படவோ அல்லது அவற்றின் துறை சார்ந்த செயல்பாடுகள் அடிப்படையில்  பங்கு முதலீடு  மாற்றி அமைக்கப்படவோ வாய்ப்பு இருக்கிறது. இது மாதிரியான சமயங்களில், அந்த ஃபண்ட் மேனேஜரின் முடிவுகளினால் அந்த ஃபண்டின் செயல்பாடு மோசமடைகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். ஃபண்ட் மேனேஜரின் முடிவுகள் உங்கள் நோக்கத்துக்கு எதிர்மாறாக இருக்கிறது எனில்,  நீங்கள் அந்த ஃபண்டிலிருந்து தாராளமாக வெளியேறிவிடலாம்.

3. பொருளாதார மாற்றங்களால் ஏற்படும் விளைவுகள்


இது உங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லாத நிகழ்வு. அவ்வப்போது உங்கள் ஃபண்ட் மேனேஜர் எடுக்கும் முடிவுகள் பரந்துபட்ட பொருளாதார முடிவுகளுக்கு எதிரானதாக இருக்கலாம். அதாவது, மூலதனப் பொருள்களின் தேவை  குறைந்திருக்கும் நிலையில், நீங்கள் முதலீடு செய்துள்ள ஃபண்டின்  மேனேஜர் மட்டும் மூலதனப் பொருட்களை  பொருள்களை உற்பத்தி செய்யும் பங்குகளில் தொடர்ந்து முதலீட்டை அதிகரிப்பது. சமீபத்தில் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்புகளால் ஐ.டி மற்றும் பார்மா துறைகள், குறுகிய கால ரிஸ்க்குகளைச் சந்தித்தன. ஆனால், உங்கள் ஃபண்ட் மேனேஜர் தொடர்ந்து அந்தத் துறைகளில் அதிக முதலீடு செய்யும்போது, நீங்கள் அந்த ஃபண்டிலிருந்து வெளியேறுவதே சரி.

4. எதிர்பார்த்த இலக்கை அடைந்துவிட்டால் அல்லது அடைய முடியாது என்பது தெரிந்தால்...

நிதித் திட்டமிடலின் முக்கியமான நோக்கம், நம்முடைய இலக்குகளை அடைய வேண்டும் என்பதே. நீங்கள் வீடு வாங்குவதற்குத்  தேவையான பணத்தை ஈட்ட முதலீடு செய்கிறீர்கள் எனில்,  அந்தப் பணத்தைச் சம்பாதித்ததும் மியூச்சுவல் ஃபண்டிலிருந்து வெளியேறி, அந்தப் பணத்தை வைத்து உங்களுடைய தேவையை நிறைவேற்றிக் கொள்ளலாம். சில சமயங்களில் உங்களுடைய இலக்குகளைச் சமரசம் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். அதாவது, உங்கள் முதலீடு ஆண்டுக்கு 12% வருமானம் தருவதாக இருந்து, ஐந்து ஆண்டுகள் கழித்து அதன் வருமானம் 2 சதவிகிதமாகக் குறையும்பட்சத்தில், அந்த முதலீட்டிலிருந்து வெளியேறி வேறு ஒரு முதலீட்டில் முதலீடு செய்து உங்கள் இலக்கை அடையலாம்.’’

5. போர்ட்ஃபோலியோவை மறுசீரமைக்கும்போது...

உங்கள் போர்ட்ஃபோலியோவை மறுசீரமைக்க நீங்கள் விரும்பும்போது, அதற்கு நியாயமான காரணங்கள் இருந்தால் தாராளமாகச் செய்யலாம். உதாரணமாக, உங்கள் வயது 50-ஐ கடந்திருக்கலாம். எனவே, உங்களுடைய பெரும்பான்மையான முதலீடுகள், பங்குகளில் இருப்பதைக் குறைக்க வேண்டிய தேவையிருக்கிறது.

ஃபண்ட் முதலீடு... மாற்றியமைக்க வேண்டிய  7 சூழ்நிலைகள்!


அதேபோல், சில பொருளாதார நிகழ்வுகள் மிட் கேப் பங்குகளைக் காட்டிலும் லார்ஜ் கேப் பங்குகளுக்குச் சாதகமாக மாறியிருக்கலாம். இதுபோன்ற நிகழ்வுகளின்போது நீங்கள் உங்களுடைய போர்ட்ஃபோலியோவை மறுசீரமைப்பு செய்யவேண்டியது அவசியம். அப்படி உங்கள் போர்ட்ஃபோலியோவை மாற்றி அமைப்பதன் மூலம் நீண்ட கால இலக்குகளுக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.

6. ஃபண்டுகளில் மாற்றங்கள் நடந்தால்...

ஃபண்டுகளில் பல்வேறு காரணங்களால் மாற்றங்கள் நடக்கலாம். உதாரணமாக, உங்களுடைய தற்போதைய ஃபண்ட், புதிய ஃபண்ட் நிறுவனத்துக்கு கைமாறலாம். புதிய குழுமத்தின் முடிவுகள் உங்களுக்குச் சரிவராமல் போகலாம். அல்லது உங்களுடைய ஃபண்ட்  டைவர்சிஃபைடு என்பதிலிருந்து,  இன்ஃப்ராஸ்ட்ரக்சர் செக்டார் ஃபண்டாக மாற்றப்படலாம். இந்த மாற்றங்கள் உங்களுடைய தேவைகுக்கு ஏற்ப இல்லை என்றால், நீங்கள் அந்த ஃபண்டிலிருந்து வெளியேற முடிவுசெய்யலாம்.

7. நெகட்டிவ் செய்திகள்

ஒரு ஃபண்ட் பற்றி அல்லது ஃபண்ட் நிறுவனம் பற்றி நெகட்டிவ் செய்திகள் வரும்போது, அவற்றைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து, உங்களிடம் உள்ள அந்த ஃபண்டுகளை விற்க முயல வேண்டும். நீங்கள் முதலீடு செய்திருக்கும் ஃபண்ட் குறித்துத் தொடர்ந்து எதிர்மறையான செய்திகள் வந்தால் மற்றும் ஃபண்ட் மேனேஜர் களின் செயல்பாடுகள் குறித்து அடிக்கடி விசாரணைகளும் கண்காணிப்புகளும் நடக்குமானால், அந்த ஃபண்டிலிருந்து வெளியேற முடிவெடுக்கலாம்.

மீண்டும் நினைவில் கொள்ளுங்கள், ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது எப்படிப் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டுமோ, அதைப்போலவே முதலீடுகளில் இருந்து வெளியேறும்போதும் புத்திசாலித்தனமாக முடிவெடுப்பது அவசியம்.

எப்போதெல்லாம் சந்தேகமான சூழல்கள் ஏற்படுகின்றனவோ, அப்போதெல்லாம் அதன் அடிப்படை விஷயங்களிலிருந்து யோசிப்பது நல்ல முடிவுகளை எடுக்க உதவியாக இருக்கும்.

தொகுப்பு: ஜெ.சரவணன்