
ஷேர்லக்: குறுகிய காலத்தில் சந்தை இறங்குமா?
“இரவு 8 மணிக்கு முக்கியமான ஒரு விஐபி-யைச் சந்திக்க வேண்டும். எனவே, மாலை 6 - 7 வரை மட்டுமே உமக்கு அப்பாயின்ட்மென்ட்’’ என்று காலையிலேயே கறாராக ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார் ஷேர்லக். எனவே, ஆறு மணிக்கு அவர் வருகைக்காகக் காத்திருந்தோம். சரியான நேரத்தில் அவர் வந்தவுடன், அவருக்குப் பிடித்த வெங்காய பஜ்ஜியும், ஏலக்காய் டீயும் தந்தோம். அதை அவர் ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்க, நாம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் சொன்ன பதில்களும்...

“ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு தொடர்ந்து நன்றாக இருக்கிறதே, சந்தை தொடர்ந்து மேலே செல்லுமா?”
“உண்மைதான். கடந்த 2016 ஜூன் முதல் 2017 மே வரையிலான காலத்தில் இந்தியாவில் மொத்தம் ரூ.83,469 கோடி ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முறையே ரூ.10,880 கோடி மற்றும் ரூ.10,737 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இதை வைத்து மட்டுமே பங்குச் சந்தை தொடர்ந்து மேலே செல்லும் என்று சொல்வதற் கில்லை. எனவே, குறுகிய காலத்தில் எச்சரிக்கையாக இருக்கும்படி பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, சிறு முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. காரணம், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) அமல், வங்கிகளின் வாராக் கடன் பிரச்னை போன்றவற்றால் சந்தையில் குறுகிய காலத்தில் இறக்கம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள் முன்னணி அனலிஸ்ட்கள்.
ஆனால், பங்குச் சந்தை புரோக்கிங் நிறுவனங்கள், சந்தைகளின் எதிர்காலம் பற்றி அதீத நம்பிக்கையில் இருக்கின்றன. 2025-ல் சென்செக்ஸ் 1 லட்சம் புள்ளிகளைத் தாண்டும் எனப் பங்குச் சந்தை தரகு நிறுவனமான மோதிலால் ஆஸ்வால் சொல்லியிருக்கிறது. ‘‘நமது பங்குச் சந்தையின் வேல்யூவேஷன், 2007-ல் காணப்பட்டதைவிட இப்போது குறைவான அளவிலேயே இருக்கிறது. எனவே, நம் சந்தையின் எதிர்காலத்தை நினைத்துக் கலங்க வேண்டாம். என்றாலும் எந்தக் காரணமும் இல்லாமல் சந்தையானது 5 - 10% இறங்க வாய்ப்புண்டு. இதை ஆரோக்கியமான கரெக்ஷனாகவே பார்க்க வேண்டும் என்கிறார் சந்தையின் பிரபல புள்ளி ராம்தியோ அகர்வால். நீண்ட காலத்துக்கு முதலீடு செய்பவர்கள் இந்த ஏற்ற இறக்கங்களையெல்லாம் கண்டுகொள்ள வேண்டியதில்லை என்பதே என் கருத்து.’’
“பல மிட்கேப், ஸ்மால் கேப் பங்குகள் இறக்கம் கண்டிருக்கிறதே, என்ன காரணம்?”
“சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் அதன் வரலாற்று உச்சங்களில் இருக்கிறபோதிலும், பல மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகள் பெரிய அளவில் இறக்கத்தைச் சந்தித்திருக்கின்றன. கடந்த மே மாதத்தில் மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் 10% வரை இறக்கம் அடைந்திருக்கின்றன. குறிப்பாக, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஐ.டி.பி.ஐ பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா, க்ளென்மார்க் ஆகியவை ஏறக்குறைய 17 முதல் 44% வரை இறக்கம் அடைந்திருக்கின்றன. வீடியோகான், ஷில்பி கேபிள் மற்றும் நிதின் ஃபயர் உள்ளிட்ட ஸ்மால்கேப் பங்குகள் 58 முதல் 74% வரை இறக்கம் அடைந்திருக்கின்றன. இந்தப் பிரிவுகளில் சில பங்குகள், தனிப்பட்ட காரணங்களினால் இறக்கம் அடைந்திருந்தாலும், பெரும்பாலான பங்குகள் கடந்த ஆறு மாத காலமாகவே நெகட்டிவ் செய்திகளால் விலை இறங்கியிருக்கின்றன. எனவே, இந்தப் பிரிவு பங்குகளில் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் அனலிஸ்ட்டுகள். அவற்றின் பிசினஸ் மாடல் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புகள் சாதகமாக இருந்தால் மட்டுமே இனி இந்தப் பங்குகளின் விலை உயரும்.’’
“ஓ.என்.ஜி.சி நிறுவனம், ஹெச்.பி.சி.எல் நிறுவனத்தை வாங்குவது சாதகமா, பாதகமா?”
“ஓ.என்.ஜி.சி எண்ணெய் நிறுவனம், ஹெச்.பி.சி.எல் நிறுவனத்தில் அரசு வைத்திருக்கும் 51% பங்குகளை ரூ. 28,000 கோடிக்கு வாங்கவிருக்கிறது. ஆனால், இரண்டு நிறுவனங்களும் இணைக்கப்படப் போவதில்லை. தனித்தனியாகத்தான் செயல்பட இருக்கின்றன. இருந்தபோதிலும் இந்த டீலில் ஹெச்.பி.சி.எல்-ன் செயல்பாடுகளில் எந்தப் பிரச்னையும் இருக்காது. மாறாக, ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்குப் பாதகமே ஏற்படும். ஏனெனில், இந்த நிறுவனத்தை வாங்குவதன் மூலம் ஓ.என்.ஜி.சி-யின் கடன் உயரும். மேலும், அதன் பங்கு மதிப்பு 2% குறைவதற்கும் வாய்ப்புள்ளது.”
“கீதாஞ்சலியின் நக்ஷத்ரா உள்பட பல நிறுவனங்கள் ஐபிஓ வருகிறதே?”
“கீதாஞ்சலில் ஜெம்ஸ் நிறுவனத்தின் பகுதி நிறுவனமான நக்ஷத்ரா வேர்ல்டு ஐபிஓ வெளியிடுவதற்கான ஒப்புதலை செபியிடம் பெற்றிருக்கிறது. இதன் மூலம் 1.8 கோடி பங்குகளைப் பொதுப் பங்கு வெளியீட்டில் விற்பனை செய்வதன் மூலம் ரூ. 650 கோடி நிதி திரட்டப் போகிறது.
கேபாசிட் (Capacit) இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ் நிறுவனமும் ஐபிஓ வெளியிடுவதற்கான ஒப்புதலைப் பெற்றிருக்கிறது. இந்த ஐபிஓ மூலம் ரூ.400 கோடி திரட்டி அதனை நிறுவனத்தின் செயல்பாடு களுக்காகவும், நிறுவனத்தின் பிற வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் பயன்படுத்திக்கொள்ளப் போகிறது.
ஏற்கெனவே நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்ட் உள்ளிட்ட ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடத் தயாராக இருக்கும் நிலையில், அந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனமும் இப்போது சேர்ந்திருக்கிறது. இந்த நிதியாண்டுக்குள் ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் ஐபிஓ வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் 100 சதவிகிதப் பங்குகளை ரிலையன்ஸ் கேபிட்டல் வைத்துள்ளது. அவற்றில் 10 சதவிகிதப் பங்குகளை ஐபிஓ மூலம் வெளியிட்டு, பங்குச் சந்தையில் பட்டியலிட முடிவு செய்துள்ளது. ஐபிஓ வெளியீட்டு மதிப்புக் குறித்த தகவல் ஏதுமில்லை. செபியின் நிபந்தனைப்படி, 25 சதவிகிதப் பங்குகளை மூன்றாண்டுகளில் சந்தையில் வர்த்தகமாவதுபோல் ஏற்பாடுகள் செய்யப்படும் என அது தெரிவித்துள்ளது.
ஜி.டி.பி.எல் ஹாத்வே என்பது முன்னணி கேபிள் டிவி டிஸ்ட்ரிபூஷன் நிறுவனம் ஆகும். இதற்கு இந்தியாவில் 80 லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். வரும் ஜூன் 21 - 23 வரை பொதுப் பங்கு விற்பனை செய்கிறது. ரூ.167-170 என்ற விலைப்பட்டையில், 1.44 கோடி பங்குகள் விற்பனைக்காக வெளியிடப்படுகின்றன. குறைந்த பட்சம் 88 பங்குகளும், 88 பங்குகளின் மடங்கு களிலும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வெளியீட்டின் மூலம் மொத்தமாக ரூ.485 கோடி நிதித் திரட்டப்படுகிறது.”
“கிராம்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலெக்ட்ரிக்கல் பங்கு, கடந்த ஆறு மாதங்களில் 56% உயர்ந்திருக்கிறதே?”
“ஆமாம், இந்தியாவின் முன்னணி சீலிங் ஃபேன் தயாரிப்பு நிறுவனமான இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம், நன்றாக வளர்ச்சி அடைந்ததே இதற்குக் காரணம். இதன் பிசினஸில் விற்பனையாளர்களுடனான உறவு மற்றும் கான்ட்ராக்ட்டுகளில் முன்னேற்றம் போன்ற வற்றினால் அதன் லாபம் அதிகரித்தது. இதன் பிரீமியம் பிரிவு விற்பனை 2016-17-ம் நிதியாண்டில் 23% வளர்ச்சியடைந்துள்ளது. நிதிநிலையில் இப்படிச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதால், அடுத்த இரண்டு வருடங்களில் வருவாய் 20% வரை வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. எனவே, இந்தப் பங்கில் ஏற்பட்டுள்ள மொமென்டம் மேலும் தொடரும் என அனலிஸ்ட்டுகள் தெரிவிக்கிறார்கள்.”
“சந்தை உச்சத்தில் இருக்கும் நிலையில் ஃபண்ட் மேனேஜர்களின் டாப் லிஸ்ட் பங்குகள் என்னென்ன?”
“சந்தைக் குறியீடுகள் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து புதிய உச்சங்களை அடைந்தவண்ணம் இருக்கின்றன. சென்செக்ஸ் அதன் 10 வருட சராசரியைக் காட்டிலும் 18-20% பிரீமியத்தில் வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில், ஃபண்ட் மேனேஜர்கள், தேர்ந்தெடுத்த பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யும் அணுகுமுறையைப் பின்பற்றி வருகின்றனர். இந்த அணுகுமுறையின்படி, கடந்த மே மாதத்தில் டாப் 10 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் இடம்பிடித்த டாப் 5 பங்குகள் அப்போலோ டயர்ஸ், வோல்டாஸ், ஹேவல்ஸ் இந்தியா, டாபர் மற்றும் டெல்டா கார்ப் ஆகியவை ஆகும். இந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்படக் காரணம், இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதும், தற்போதைய மற்றும் எதிர்கால பிசினஸ் வாய்ப்புகள் நன்றாக இருப்பதும், அரசு எடுத்துவரும் கொள்கை முடிவுகள் சாதகமாக இருப்பதும்தான்.”
“ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் குறைந்திருக்கிறது. ஆர்பிஐ வட்டியைக் குறைக்குமா?”
“நுகர்வோர் பணவீக்கம், கடந்த மே மாதத்தில் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவாக 2.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ஆனால், தொழில் துறை வளர்ச்சி விகிதம் 3.1 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. இரண்டையும் வைத்துப் பார்க்கும் போது, ரிசர்வ் வங்கி வட்டிவிகிதத்தைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் தொழில் துறை வளர்ச்சியை அதிகரிக்க முடியும்.
பருவநிலை வளர்ச்சிக்குச் சாதகமாக உள்ள நிலையில், வட்டி விகிதத்தைக் குறைத்தால், தொழில் துறை வளர்ச்சி விகிதத்தைக் கணிசமாக அதிகப்படுத்தலாம். கடந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பண மதிப்பு நீக்க நடவடிக்கை யால் குறைந்திருக்கிறது. எனவே, வட்டி விகிதத்தைக் குறைக்க முன்வந்தால், அந்த இழப்பை இந்த நிதி யாண்டில் ஈடுகட்ட முடியும். கேர் ரேட்டிங் ஏஜென்சி தரப்பில் 0.25% வட்டி விகிதம் குறைக்கப் படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.”
“செபி பல்வேறு அதிரடி மாற்றங்களைத் தொடர்ந்து செய்து வருகிறதே?”
“எதிலுமே மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாது. முக்கியமாக, பங்குச் சந்தையில் காலம், சூழல் மற்றும் தேவைகளுக்கேற்ப மாற்றங்கள் அவசியம். அதனால்தான் அவ்வப்போது சந்தையைக் கூர்ந்து நோக்கி, தேவையான மாற்றங்களை செபி எடுத்து வருகிறது. வரும் ஜூன் 21-ம் தேதி நடக்கும் இயக்குநர்கள் குழு கூட்டத்தில், ஐபிஒ பங்கு பட்டியிடும் கால அளவை ஆறு நாள்களிலிருந்து நான்கு நாள்களாகக் குறைக்கவும், மாற்று முதலீட்டு நிதியை (அல்டர்நேட் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட்) கமாடிட்டி வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கவும், பி-நோட்ஸ் முதலீடுகளில் நிபந்தனைகளை மேலும் கடுமையாக்கவும் திட்டமிட்டுள்ளது.”
“ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட், நிஃப்டி இடிஎஃப் ஃபண்ட் வெளியிடப்பட்டு இருக்கிறதே?”
“இது ஒரு ஓப்பன் எண்டட் ஃபண்ட். ஒரு யூனிட் மதிப்பு ரூ.100. இந்த ஃபண்ட் வெளியீடு ஜூன் 13 முதல் ஜூன் 21 வரை நடக்கிறது. இந்த ஃபண்ட், 95 - 100 சதவிகித சொத்துக்களை நிஃப்டி 50-ல் உள்ள ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்போகிறது. ஐந்து சதவிகித சொத்துகளைக் கடன் மற்றும் ரொக்கச் சந்தையில் முதலீடு செய்யும். இதில் குறைந்த பட்சமாக ரூ.5,000 முதலீடு செய்ய வேண்டும். இந்த வெளியீட்டில் குறைந்தபட்சம் ரூ.10 கோடி வரை திரட்டத் திட்டமிட்டுள்ளது. ஆஷிஷ் நாய்க் இதன் ஃபண்ட் மேனேஜர் ஆவார்.”
“வாராக் கடனும் வங்கிச் சீர்திருத்தமும் எந்த நிலையில் இருக்கிறது?”
“வாராக் கடன் சுமையினால் வங்கிகளின் செயல்பாடு அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. குறிப்பாக, பொதுத்துறை வங்கிகள் தனியார் வங்கிகளைக் காட்டிலும் பல மடங்கு வாராக் கடனில் இருக்கின்றன. வங்கிகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவையாக இருப்பதினால், அரசே முன்வந்து அவற்றின் வாராக் கடன் பிரச்னைகளைத் தீர்க்கவும், வங்கித் துறையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. வங்கிகள் பணத் தட்டுப்பாட்டினால் சீர்குலையக் கூடாது என்பதனால், அவற்றுக்கு ஒவ்வொரு நிதியாண்டும் கணிசமான நிதியை ஒதுக்கி வருகிறது அரசு.
அதேபோல், இந்த நிதியாண்டில் ரூ.25,000 கோடி ஒதுக்கப்படும் என வங்கிகள் எதிர்பார்க்கின்றன. வழக்கமாக, வாராக் கடனில் 30% தருவதற்குப் பதிலாக 60% தரப்படும் என்று வங்கிகள் எதிர்பார்க்கின்றன. மேலும், வங்கிகளின் வாராக் கடன்களில் டாப் 12 நிறுவனங்களின் வாராக் கடன் கணக்குகள் தீவிரமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட இருக்கின்றன. இவை மட்டுமே ரூ.2 லட்சம் கோடி வாராக் கடனுக்குப் பங்கு வகிப்பதால், இவற்றை முதலில் சரிசெய்வதற்கான வேலைகள் தீவிரமாக எடுக்கப்படுகின்றன.”
“கவனிக்க வேண்டிய பங்குகள் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்?”
“நீண்ட கால முதலீட்டுக்கு: ஐசிஐசிஐ புரூடென்சியல் லைஃப் இன்ஷூரன்ஸ், பாரத் ஃபைனான்சியல் (முந்தைய பெயர் எஸ்கேஎஸ் மைக்ரோ ஃபைனான்ஸ்)” என்று அவர் பேசிக் கொண்டிருக்கவும் வெளியில் மழை தொடங்கு வதற்கான அறிகுறியும் தெரியவே, உடனே நமக்கு ‘பை’ சொல்லிவிட்டு, வி.ஐ.பி.யைச் சந்திக்கப் புறப்பட்டார் ஷேர்லக்!
திருத்தம்
கடந்த இதழில் ‘பங்குச் சந்தை எஸ்ஐபி முதலீடு’ கட்டுரையில் முதலீட்டு மூலமான லாபம் ரூ.45 என இருப்பதற்குப் பதிலாக ரூ.245 என வந்துள்ளது.
இதேபோல், ரொக்கப்பண கட்டுப்பாடுகள் கட்டுரையில், ‘ரூ.10,000 வரை மட்டுமே ரொக்கமாகப் பரிவர்த்தனை செய்ய முடியும்’ என பிரசுரமாகி உள்ளது. இது’ வணிகப் பயன்பாட்டுக்கு’ என வந்திருக்க வேண்டும். தவறுகளுக்கு வருந்துகிறோம்.
-ஆர்