நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஷேர்லக்: வங்கிப் பங்கு முதலீடு லாபகரமாக இருக்குமா?

ஷேர்லக்: வங்கிப் பங்கு முதலீடு லாபகரமாக இருக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: வங்கிப் பங்கு முதலீடு லாபகரமாக இருக்குமா?

ஷேர்லக்: வங்கிப் பங்கு முதலீடு லாபகரமாக இருக்குமா?

ழக்கம்போல பரபரப்பாகவே நம் கேபினுக்குள் வந்தார் ஷேர்லக். “என்ன, இன்னிக்கும் முக்கியமான விஐபி-யைச் சந்திக்கப் போகணுமா” என்றோம். ‘‘இல்லை, கோவையில் நாளைக்கு ஒரு முக்கியமான மீட்டிங்.  9 மணிக்கு டிரெயினைப் பிடிக்கணும்” என்றவர், நம் கேள்விகளுக்குப் படபடவெனப் பதில் சொன்னார்.   

ஷேர்லக்: வங்கிப் பங்கு முதலீடு லாபகரமாக இருக்குமா?

‘‘சிடிஎஸ்எல் ஐபிஓ-வுக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறதே?”

“சிடிஎஸ்எல் நிறுவனம், ஐபிஓ மூலம் ரூ.493 - 507 கோடி நிதியைத் திரட்டத் திட்டமிட்டது. கடந்த வாரத்தில் இதன் 2.48 கோடி பங்குகள் ரூ.145-149 விலைப்பட்டையில் பொதுப் பங்கு விற்பனைக்கு விடப்பட்டது. இந்த ஐபிஓ-வுக்கு முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட 170 மடங்கு கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கப்பட்ட பங்குகளின் அளவு 421.43 கோடி. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 62,500 கோடி. இதில் நிறுவன முதலீட்டாளர்கள் 148.7 மடங்கும், அதிக சொத்துடைய தனிநபர்கள் 563 மடங்கும், சிறு முதலீட்டாளர்கள் 22.3 மடங்கும் கூடுதலாக விண்ணப்பம் செய்திருக்கிறார்கள்” என்றவருக்கு, ஒரு தட்டில்  சூடான சுண்டலைத் தந்தோம். அவர் ஆர்வத்துடன் வாங்கிச் சாப்பிட ஆரம்பிக்க, நாம் கேள்விகளைத் தொடர்ந்தோம். 
 
“பார்மா துறை அழுத்தத்தில் இருந்தும், ஃபண்ட் மேனேஜர்கள் இதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்களே!’’

“பார்மா துறைக்குத் தற்போது சாதகமான சூழல் இல்லை. என்றாலும், ஃபண்ட் மேனேஜர்கள் இந்தத் துறை பங்குகளில் மே மாதத்தில் அதிக ஆர்வத்துடன் முதலீடு செய்திருக்கிறார்கள். அவற்றில் சன் பார்மா நிறுவனப் பங்குதான் ஃபண்ட் மேனேஜர்களின் டாப் தேர்வாக இருக்கிறது. சன் பார்மாவின் 15 மில்லியன் பங்குகளை ஃபண்ட் மேனேஜர்கள் வாங்கியிருக்கிறார்கள். ஆனால், சன் பார்மா பங்கு சமீப காலத்தில் ரூ.600-லிருந்து ரூ.500-க்கு இறங்கி வர்த்தகமாகி வருகிறது. சன் பார்மாவுக்கு அடுத்து, ஃபண்ட் மேனேஜர்களின் டாப் பட்டியலில் டாக்டர் ரெட்டீஸ், சிப்லா மற்றும் அரபிந்தோ பார்மா ஆகியவை உள்ளன. லூபின் தவிர்த்து எந்த பார்மா பங்கும் மே மாதத்தில் விற்கப்படவில்லை.”

“ஃபண்ட் நிறுவனங்கள் வங்கிப் பங்குகளில் அதிகமாக முதலீடு செய்துள்ளனவே?”

“மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர்கள் தொடர்ந்து வங்கிப் பங்குகளில் முதலீட்டை மேற்கொண்டு வருகிறார்கள். 2016 மே இறுதி நிலவரப்படி, வங்கிப் பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ரூ.90,014 கோடியை முதலீடு செய்திருந்தன. இது 2017 மே இறுதியில் ரூ.1.44 லட்சம் கோடியாக அதிகரித்தது. இதற்குக் காரணம், வாராக் கடன் பிரச்னை மற்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இறக்கம் கண்ட வங்கிப் பங்குகளின் மதிப்பீடு (வேல்யூவேஷன்) கவர்ச்சிகரமாக இருப்பதுதான்.

விரைவில் வாராக் கடன் பிரச்னை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை, வங்கியில் கடன் வாங்கி, அதனைத் திரும்பச் செலுத்தாத, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை வங்கிகள் கையகப் படுத்தும் விதிமுறைகளை செபி எளிமையாக்கி இருப்பது போன்றவை வங்கிகளுக்குச் சாதகம்.

அதே நேரத்தில், 2017-18-ம் நிதியாண்டு இறுதி வரைக்கும் வங்கிகளின் சொத்து தரம், பிரச்னையாக இருக்கும் என்கிற இக்ராவின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்வதும் அவசியம்.2017, மார்ச் மாதத்தில் 9.5 சதவிகிதமாக  இருந்த வாராக் கடன், 2018 மார்ச் மாதத்தில் 9.9%-10.2 சதவிகிதமாக அதிகரிக்கும் என இக்ரா குறிப்பிட்டுள்ளது.”

ஷேர்லக்: வங்கிப் பங்கு முதலீடு லாபகரமாக இருக்குமா?

“சென்செக்ஸ் புதிய உச்சத்துக்குச் சென்று இறங்கி இருக்கிறதே!’’

“வியாழக்கிழமையன்று சென்செக்ஸ், சாதனை அளவாக 31522.87-க்கு உயர்ந்தது. அன்றைய வர்த்தகத்தின்போது 239 புள்ளிகள் அதிகரித்தது. அதே நேரத்தில், கச்சா எண்ணெய் விலைக் குறைவு என்கிற சர்வதேசக் காரணம் மற்றும் லாப நோக்கம் கருதிப் பங்குகளை விற்றதால், வர்த்தக முடிவில் வெறும் 7.1 புள்ளிகள் மட்டுமே ஏற்றம் கண்டது. நிறுவனங்களின் வளர்ச்சி, மத்திய அரசின் துணிச்சலான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள், வலிமையாக இருக்கும் இந்திய ரூபாயின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை இறக்கம், இந்தியாவில் நிலையான ஆட்சி போன்ற காரணங்களால் நீண்ட காலத்தில் இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றம் காணும் என அனலிஸ்ட்கள் கருதுகிறார்கள். அந்த வகையில், நல்ல, பாரம்பர்யம்மிக்க பங்குகளின் விலை இடையில் இறங்கினால் முதலீட்டுக்காக வாங்கலாம்.”

“எஸ்.பி.ஐ வங்கியின் 2.34 சதவிகிதப் பங்குகளை எல்.ஐ.சி வாங்கியிருக்கிறதே?”


“நாட்டின் மிகப் பெரிய லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி,  பங்குகளில் அதிக அளவில் முதலீடு செய்வது வழக்கம். பெரும்பாலான முன்னணி நிறுவனங்களின் பங்குகளை எல்.ஐ.சி நிச்சயம் தன்வசம் வைத்திருக்கும். ஆனால், சமீப காலமாக பங்குச் சந்தையில் அதிக அளவில் முதலீடு செய்வதைக் குறைத்துக்கொண்ட எல்.ஐ.சி, மீண்டும் தனது அத்தியாயத்தைத் தொடங்கி இருக்கிறது. எஸ்.பி.ஐ வங்கியின் 20.19 கோடி பங்குகளை வாங்கியிருப்பதன் மூலம் அதன் 2.34% பங்குகளுக்கு உரிமையாளராக மாறியுள்ளது எல்.ஐ.சி.  தற்போது மொத்தமாக எஸ்.பி.ஐ வங்கியின் 10.42% பங்குகளை தன் வசம் வைத்திருக்கிறது எல்.ஐ.சி. இதையடுத்து, எஸ்.பி.ஐ பங்கு விலை சற்று ஏற்றமடைந்து வர்த்தகமானது.”

“இந்தியப் பங்குச் சந்தையைப் பற்றி பஃபெட் என்ன சொல்கிறார்?”

“இந்தியப் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை தற்போது எந்தப் பயமும் இல்லை என்று வாரன் பஃபெட் சொல்லியிருக்கிறார்.  மேலும், அவருடைய முதலீட்டுத் திட்டங்களுக்குப் பொருந்தும் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளதாகவும் குறிப்பிடுகிறார். மொத்தத்தில், இந்தியச் சந்தைகள் பாசிட்டிவ் போக்கில் தொடர்வது தெளிவு.”

“மோசமான நிதி நிலையுள்ள பொதுத்துறை நிறுவனங்களை மூட, அரசு நடவடிக்கை எடுக்கிறதே?”

‘‘பி.இ.சி, பாரத் வேகன், எல்கின் மில்ஸ் உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை மூடிவிட மோடி அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனங்களுடன் சேர்த்து மேலும் பல லாபம் ஈட்டும். அதே நேரம் நஷ்டமடையும் நிறுவனங்களை விற்பதற்கான ஆரம்ப அனுமதியை அமைச்சரவை, கடந்த வருடம் அக்டோபரில் வழங்கியது. இதற்கான வேலையைத் தற்போது அரசு துரிதப்படுத்தி உள்ளது. பி.இ.சி, நிதியாண்டு 2016-ல் ரூ.1,142 கோடி நஷ்டமடைந்துள்ளது.

மற்றொரு நிறுவனமான அந்தமான் நிகோபர் காடு வளர்ப்பு மேம்பாட்டு நிறுவனமும் மூடப்பட உள்ளது. இது ரூ.49 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. இப்படி நஷ்டமடையக்கூடிய நிறுவனங்களை அல்லது அவற்றின் உற்பத்திப் பிரிவுகளை விற்க அரசு முடிவு எடுத்துள்ளது.

இந்தப் பட்டியலில் ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ், டயர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் கேபிள்ஸ், ஹெச்.எம்.டி வாட்சஸ், ஹிந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் ஆகியவை உள்ளன.’’

“மொத்தமாக ஐபிஓ டிரெண்ட் இந்த வருடம் எப்படியிருக்கிறது?”


‘‘பெரும்பாலும் எல்லா ஐபிஓ வெளியீடுகளுமே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளதுடன்,  குறிப்பிட்ட அளவைவிட கூடுதலாகவே விண்ணப்பங்களைப் பெற்றுள்ளன. 2017-ம் வருடம் தொடங்கி, கடந்த ஆறு மாதங்களில் இதுவரை ரூ.11,783 கோடி அளவுக்கு ஐபிஓ மூலம் திரட்டப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ரூ.10,000 கோடியைத் தாண்டியிருப்பது இது மூன்றாவது முறை. 2007-ல் முதன்முறையாக 54 ஐபிஓ வெளியீடுகள் மூலம் ஆறு மாதங்களில் ரூ.20,833 கோடி திரட்டப்பட்டது. 2008-ல் 30 வெளியீடுகள் மூலம் ரூ.16,441 கோடி திரட்டப்பட்டது. அதன்பிறகு இப்போதுதான் ரூ. 10,000 கோடியைத் தாண்டியிருக்கிறது. சந்தை நன்றாக இருக்கும் போதுதான் நிறுவனங்கள் அதிக அளவில் ஐபிஓ வெளியிடும். முதலீட்டாளர்களும் ஐபிஓ வெளியீடுகளில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை ஈட்டுகிறார்கள். இந்த ட்ரெண்ட், வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது” என்றவர் புறப்படத் தயாரானார்.

“கவனிக்க வேண்டிய பங்குகள் ஏதாவது...’’ என இழுத்தோம். துண்டுச் சீட்டை நம் கையில் திணித்துவிட்டு அவரசரமாகப் புறப்பட்டார். அதில் இருந்த பங்குகள்...   

“நீண்ட கால முதலீட்டுக்கு: மயூர் யூனிகோட்டர்ஸ், நாராயண ஹிருதயாலயா, அரபிந்தோ பார்மா, சத்பவ் இன்ஜினீயரிங், பார்தி இன்ஃப்ராடெல்

குறுகிய கால முதலீட்டுக்கு: இமாமி, லஷ்மி விலாஸ் பேங்க்.”