
டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்
நீண்ட நாள்களாகவே இந்தியப் பங்குச் சந்தையின் போக்கில் மாற்றம் இருக்கும் என்று தெரிந்தது. குறைந்தபட்சம், அந்த மாற்றம் நடக்கும் என்பதற்கான அறிகுறியைப் பார்க்க முடிந்தது. ஜூன் 6-ம் தேதி, நிஃப்டி 9705 என்ற உச்ச நிலையை அடைந்த பிறகு சந்தை கரெக்ஷனுக்கு உள்ளானது. ஆனால், அதன்பிறகு மீண்டும் ஏற்றமடைந்து, புதிய உச்சமாக 9716 என்ற நிலையை ஜூன் 22-ம் தேதி அடைந்தது. அந்த உச்சத்திலிருந்து ஏற்பட்ட திருப்பமானது உடனடியாக இருந்ததோடு, மிகக் குறைவாகவும் இருந்தது. ஆனால், கடந்த வாரத்தின் கடைசி இரு தினங்களில், சமீபத்திய இறக்கமான 9584 புள்ளிகள் என்ற நிலையிலிருந்து அடைந்த ஏற்றத்தை முழுவதுமாக இழந்தது.

மேலும், இந்த நிலையையும் தாண்டி கீழே இறங்கியது. இது வழக்கமான கிளாசிக் ரிவர்சல் பேட்டர்ன் இல்லை. ஆனால், அட்வான்ஸ் உச்ச நிலையில் அதைப்போன்றே உருவாகியிருப்பது, முந்தைய நிலைகளில் இருந்த காரணிகளில் சில மாற்றங்கள் நடந்திருக்கலாம் என்ற அறிகுறியைத் தெரியப்படுத்துகிறது. தொடர்ச்சியாக 2-3 நாள்களின் இறக்க நிலைகளுக்குக் கீழே செல்லாமல் அடைந்து வந்த ஏற்றமானது தற்போது உடைந்துபோயிருக்கிறது. இந்தத் தருணத்தில் சற்றுக் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
பேங்க் நிஃப்டியும் கடந்த வாரத்தில் புதிய உச்சத்தை அடைந்தது. ஆனால், நிஃப்டியில் ஏற்பட்ட மாற்றத்தினால் பேங்க் நிஃப்டியும் வாரத்தின் இறுதி நாள்களில் இறக்கத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனாலும், நிஃப்டி அளவுக்கு பேங்க் நிஃப்டியின் நகர்வுகள் மோசமாக இல்லை.
எதிர்பார்த்ததுபோலவே, இந்த இறக்கம் மிட்கேப் பிரிவில்தான் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரிவுதான் சந்தையின் லாபம் தரக்கூடிய பிரிவாகவும், சிறு முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் அதிகம் வர்த்தகம் செய்யும் பிரிவாகவும் இருப்பதால், இறக்கத்தின்போது அதிகம் பாதிக்கப்படும் பிரிவாகவும் இருக்கிறது. வரும் நாள்களிலும் இந்தப் பிரிவின்மீது இறக்கத்தின் அழுத்தம் தொடரும் என்றே எதிர்பார்க்கலாம். இந்த வாரத்தில் விடுமுறை நாள்கள் அதிகமாக இருந்த காரணத்தினால், இந்த இறக்கம் பல பங்குகளின் விலையை சப்போர்ட் நிலைக்குக் கொண்டுவந்த நிலையிலும் புதிய லாங் பொசிஷன்களை எடுக்க பெரும்பாலானவர்கள் தயாராக இல்லை. வரும் வாரத்தில் எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி இருக்கிறது. இது சந்தையின் போக்கில் இறக்கத்தை ஏற்படுத்தலாம். இந்த நிலையில், சந்தைக்குப் பாசிட்டிவான செய்திகள் எதுவும் வராதபட்சத்தில் ஏற்றத்துக்கான போக்கு உருவாவது கடினமாகவே தெரிகிறது.
எனவே, வரும் வாரத்தில் வர்த்தகர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. உச்ச நிலைகளைத் தங்களின் பொசிஷன்களைக் குறைத்துக்கொள்ளப் பயன்படுத்திக்கொள்ளலாம். நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்பவர்கள் இறக்கமடையும்போது வாங்குவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இந்த நேரத்தில் பங்குகளை வாங்குவதைத் தவிர்ப்பது (அடக்கி வாசிப்பது) நல்லது.
ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் (JPASSOCIAT)
தற்போதைய விலை : ரூ.18.75
வாங்கலாம்
ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனப் பங்கை ஒருவர் ஏற்றமடையும் பங்காகக் கருதி நீண்ட காலம் ஆகிவிட்டது. ஆனால், தற்போது இந்தப் பங்கு மீண்டும் ஏற்றமடையும் பங்காக மாறியிருப்பதைக் கடந்த சில வாரங்களில் பார்க்க முடிந்தது. இந்த நிறுவனத்துக்குத் தடையாக இருந்து வந்த கடன்சுமை, தற்போது கடன் சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாக இருக்கிறது என்ற செய்தி வெளியானதையடுத்து, சந்தையில் இந்தப் பங்குக்கு வரவேற்பு உருவாகியுள்ளது. இந்தப் போக்கு இந்தப் பங்கின் விலையில் நல்ல பிரேக் அவுட் நிலையை நீண்ட கால வரம்பில் உருவாக்கியுள்ளது. எனவே, இந்தப் பங்குக்கான வரவேற்பு தொடரும்பட்சத்தில் இதன் விலை அடுத்த சில வாரங்களில் ரூ.30 வரை உயர வாய்ப்புள்ளது. எனவே, தற்போதைய விலையிலும், இறக்கமடைந்தால் ரூ.15 வரையிலும் வாங்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ.12-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.
ஐசிஐசிஐ பேங்க் (ICICIBANK)
தற்போதைய விலை : ரூ.291.85
வாங்கலாம்
கடன் சுமையில் உள்ள நிறுவனங்கள், கடன் சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவது, அவற்றுக்குக் கடன் கொடுத்த வங்கிகளுக்கு நல்ல செய்திதான். இது ஐசிஐசிஐ வங்கிக்குச் சாதகமாக உள்ளது. கடந்த வாரத்தில் இதன் பங்கு எக்ஸ்-போனஸ் நிலையில் வர்த்தகமானது.
சந்தை சற்று இறக்கமடைந்த நிலையிலும் இந்தப் பங்கு இறக்கத்திலிருந்து மீண்டு, தனது சமீபத்திய ஏற்றத்தைத் தக்கவைத்துக்கொண்டது. இந்த நிலையில் இந்தப் பங்கின் விலை அடுத்த சில வாரங்களில் ரூ.325 என்ற நிலையை எட்டும் வாய்ப்புள்ளது.
எனவே தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ.282 வைத்துக்கொள்ளலாம்.
மைண்ட் ட்ரீ (MINDTREE)
தற்போதைய விலை : ரூ.532.00
வாங்கலாம்
வழக்கமாக சந்தை இறக்கத்தைச் சந்திக்கும்போது ஐ.டி மற்றும் பார்மா துறை பங்குகள்தான் வர்த்தகர்களைப் பாதுகாப்பவையாக இருக்கும். ஆனால், சமீப காலமாகவே பார்மா துறை அழுத்தத்தில் இருப்பதால் வர்த்தகர்களின் பாதுகாவலர் என்ற நிலையை இது இழந்து, ஐ.டி துறை மட்டுமே மிஞ்சி இருக்கிறது. மைண்ட் ட்ரீ ஒரு ஐ.டி துறை நிறுவனம். ஐ.டி துறையின் முன்னணி நிறுவனப் பங்குகளைக் காட்டிலும் இதன் நகர்வுகள் சற்று நன்றாக இருக்கின்றன.
இந்தப் பங்கு முன்பு அடைந்த உச்சங்களை எட்டிய நிலையில், தொடர்ந்து ஏற்ற இறக்கமில்லாத நிலையில் இருந்துவருகிறது. இந்த ஏற்ற இறக்கமில்லாத நிலை தற்போது முடிவுக்கு வந்து, ஏற்றத்தின் போக்கில் நகர்வதற்கான அறிகுறிகளுடன் இருக்கிறது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.550 என்ற நிலைக்கு உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.522 வைத்துக்கொள்ளவும்.
தொகுப்பு : ஜெ.சரவணன்
டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.