
ஓவியம்: அரஸ்
“தக்காளி விலை ஏறினதுக்கு ஜி.எஸ்.டி-தான் காரணம்னு சிலபேர் பேசிக்கிறாங்களே... அது நிஜம்தானா..?” எனக் கிண்டலாகக் கேட்டுக் கொண்டே நம் கேபினுக்குள் நுழைந்த ஷேர்லக்குக்குச் சூடாகத் தக்காளி சூப் கொடுத்து வரவேற்றோம். அவர் அதை ருசித்துக் குடிக்க ஆரம்பிக்கவே, நாம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினோம்.

“ஐ.பி.ஓ சந்தைக்கு வரவேற்பு குறைந்ததுபோல் இருக்கிறதே” எனக் கொஞ்சம் வருத்தத்துடன் விசாரித்தோம்.
“அண்மைக் காலத்தில் புதிய பங்கு வெளியீடுகளுக்குச் (ஐ.பி.ஓ) சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால், கடைசியாக வெளியான எரிஸ் லைஃப் சயின்சஸ், தேஜஸ் நெட்வொர்க் மற்றும் ஜி.டி.பி.எல் ஹாத்வே ஆகிய மூன்று ஐபிஓ வெளியீடுகளுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை. இதற்கு, சந்தையில் நிலவிய நெகட்டிவ் சென்டிமென்ட்தான் காரணம்.
ஐ.பி.ஓ வெளியீடுகளைப் பொறுத்தவரை,இந்தச் சுணக்கம் தற்காலிகமானதே. வரும் மாதங்களில் பல நிறுவனங்கள் ஐ.பி.ஓ வெளியீடுகளுக்காகக் காத்திருக்கின்றன. இந்தியப் பங்குச் சந்தை இன்னும் ஏற்றத்தின் போக்கிலிருந்து விலகவில்லை என்பதால், அவற்றுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்’’ என்று தெளிவான விளக்கம் தந்தார்.
“பி.எஸ்.இ-யில் பட்டியலிட்டுள்ள கம்பெனிகளின் புரமோட்டர்களின் அடமானப் பங்கு மதிப்பு உயர்ந்திருக்கிறதே’’ என்று கேட்டோம்.
“மும்பைப் பங்குச் சந்தையில் பட்டியலிட்டுள்ள நிறுவனங்களில் புரமோட்டர்கள் அடமானம் (ப்ளெட்ஜிங்) வைத்த பங்குகளின் மதிப்பு ஜூன் மாத நிலவரப்படி, 1.64% உயர்ந்திருக்கிறது. மே மாத இறுதியில் ரூ. 2.45 லட்சம் கோடியாக இருந்த இந்தப் பங்குகளின் மதிப்பு, ஜூன் மாத இறுதியில் ரூ.2.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பி.எஸ்.இ-யில் பட்டியலிடப்பட்டுள்ள 5,275 நிறுவனங்களில் 3,072 நிறுவனங்கள் தங்கள் பங்குகளை அடமானம் வைத்துள்ளன. வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் மட்டும் ரூ.38,899 கோடிக்கு, பங்குகள் அடமானம் வைக்கப்பட்டு உள்ளன’’ என்றவர், மீண்டும் கொஞ்சம் தக்காளி சூப்பைக் குடித்தார்.
“வாராக் கடன்களால் பேங்க் நிஃப்டி பாதிக்கப்பட்டிருக்கிறதே’’ என்றோம்.
‘‘கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு பேங்க் நிஃப்டி குறியீட்டில், முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைந்து காணப்படுகிறது. இதற்கு வங்கிகளின் வாராக் கடன் மற்றும் அவற்றின் சொத்துகளின் தரத்தின்மீது எழுந்துள்ள நிலையற்ற தன்மையே காரணம். இதனால் வர்த்தகர்கள் பெரும்பாலும் பேங்க் நிஃப்டியில் வர்த்தகம் செய்வதைத் தவிர்த்து உள்ளார்கள். இந்த நிலையில், பேங்க் நிஃப்டி 23000 புள்ளிகளைத் தாண்டி இறங்கு மானால், இந்தக் குறியீடு பெரிய வீழ்ச்சிக்கு ஆளாகும்’’ என்று எச்சரித்தார்.
“பிஎஸ்இ-யில் 2014-க்குப் பிறகு ஐ.பி.ஓ வெளியிட்டுப் பட்டியலான பங்குகள் பல நன்றாக உயர்ந்திருக்கின்றனவே?”
“முதலீட்டாளர்கள் மத்தியில் ஐ.பி.ஓ வெளியீடுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளில் ஐ.பி.ஓ-க்களின் எண்ணிக்கை அதிகமானது. மேலும், 2014-க்குப்பிறகு ஐ.பி.ஓ வெளியிட்டு பிஎஸ்இ-யில் பட்டியலான 64 பங்குகளில், 48 பங்குகள் வெளியீட்டு விலையைக் காட்டிலும் உயர்ந்து வர்த்தகமாகின்றன. இதனால் பி.எஸ்.இ ஐ.பி.ஓ குறியீடானது கடந்த மூன்றரை ஆண்டுகளில், சென்செக்ஸ் அடைந்த வளர்ச்சியைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது. ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் நல்ல வருமானத்தை ஈட்டியிருக்கிறார்கள். அவற்றில், சார்தா கார்ப்கெம் 215 சதவிகிதமும், குவெஸ்கார்ப் 189 சதவிகிதமும், வொன்டர்லா ஹாலிடேஸ் 185 சதவிகிதமும் உயர்ந்திருக்கின்றன” என்று சொன்னார்.
“பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசின் பங்கு இருப்பு குறித்து மீண்டும் விவாதம் எழுந்திருக்கிறதே” என்று கேட்டோம்.
‘‘சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் பங்குகளில் குறைந்தபட்சம் 25 சதவிகிதத்தைப் பொதுமக்கள் வைத்திருக்க வேண்டும் என்பது நிதி அமைச்சகத்தின் விதிமுறை. ஆனால், அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பான விவாதம் எழுந்துள்ளது. அரசு, டிஸ்இன்வெஸ்ட்மென்ட் மூலம் நிதி திரட்ட இலக்கு வைத்துள்ள நிலையில், இந்த விவாதம் எழுந்துள்ளது. இதற்குப் பதில் அளித்துள்ள செபி, இதில் மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது” என்று விளக்கம் தந்தார்.
“யெஸ் பேங்க் பங்குப் பிரிப்பு செய்ய என்ன காரணம்” என்று வினவினோம்.
“கடந்த திங்கள் அன்று, யெஸ் பேங்க் பங்குப் பிரிப்பு செய்யவிருப்பதாக அறிவித்தது. இந்தப் பங்குப் பிரிப்பு, ஜூலை 26-ம் தேதி செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில், யெஸ் பேங்க் பங்கின் விலை ரூ.1,100-ஆக இருந்தது. தற்போது அந்தப் பங்கின் விலை ரூ.1500-க்கு மேல் உள்ளது. இதனால் இந்தப் பங்குகளின் மீதான வர்த்தக அளவு குறைய வாய்ப்பு ஏற்படக்கூடும். மேலும், சிறு முதலீட்டாளர்கள் இந்தப் பங்கில் முதலீடு செய்யும் ஆர்வம் குறையக்கூடும். இதனால்தான் பங்கின் முகமதிப்பு குறைக்கப்பட இருக்கிறது.
இன்னொரு முக்கியக் காரணமும் இருக்கிறது. பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கு இந்த வங்கி ஒதுக்கிக் கொடுத்த 3.27 கோடி பங்குகளின் விலை, கிட்டத்தட்ட ரூ.1500 என்பதும், ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்குகள், ரூ.5 முகமதிப்பு கொண்ட இரண்டு பங்குகளாகவோ, ரூ. 2 முகமதிப்பு கொண்ட 5 பங்குகளாகவோ அல்லது ரூ.1 முகமதிப்பு கொண்ட 10 பங்குகளாகவோ பிரிக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள்’’ என ரகசியத் தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
“ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ், இந்த நிதியாண்டில் (2017-18) நிஃப்டி 10400-ஐ தொடும் என்கிறதே” என்றோம்.
“சந்தையின் தற்போதைய போக்கு, முதலீட்டாளர்கள், குறியீடுகளில் அதிகக் கவனம் செலுத்தும் வகையில் இருக்கிறது. அளவான எதிர்பார்ப்புகளோடு அவை சிறப்பாகச் செயலாற்றுகின்றன. ஜி.எஸ்.டி அமல்படுத்தப் பட்டுள்ள நிலையில், சந்தை மிகக் கவனமாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது. முதலீட்டாளர்களும் பங்குகளை வாங்கிக் குவிப்பதில்லை, பொறுமையுடன் காத்திருக்கிறார்கள். காரணம், ஏற்கெனவே இந்த ஆண்டில் இதுவரை 18% அளவுக்குச் சந்தை வளர்ந்துவிட்ட நிலையில் மீண்டும் ஒரு பெரிய ஏற்றத்துக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன. இந்த நிலையில், ஜி.எஸ்.டி-யின் பாசிட்டிவ் தாக்கம் சந்தையில் வெளிப்பட சில காலம் ஆகலாம். ஆனால், இந்தியச் சந்தை இன்னமும் ஏற்றத்தின் போக்கிலிருந்து சற்றும் விலகாமல் இருப்பதால் தான், இந்த நிதியாண்டில் நிஃப்டி 10300 முதல் 10400 வரை உயர வாய்ப்புள்ளதாக ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் தெரிவிக்கிறது” என்று விவரித்தார்.
“இந்தியச் சந்தையில் இந்திய முதலீட்டாளர்களின் கை ஓங்குகிறதே” என்றோம் மகிழ்ச்சியாக.
“இந்தியச் சந்தைகள் நிதானமாக உயர்ந்து வருவதால், சந்தையின் மீதான ஈடுபாடு இந்திய முதலீட்டாளர்களிடையே அதிகரித்து வருகிறது. முன்பு இந்தியப் பங்குச் சந்தையில் அதிகளவு பங்களிப்பு ,வெளிநாட்டு முதலீட்டாளர்களிடத்தில் தான் இருந்தது. இந்த நிலையில், தற்போது இந்தியப் பங்குச் சந்தைகளில் இந்தியர்களின் கை ஓங்கி வருகிறது. இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நிகராக இந்தியர்களும் முதலீடு செய்திருக்கின்றனர். நேரடியாகப் பங்குச் சந்தைகளில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், மியூச்சுவல் ஃபண்டில் அதிக ஆர்வத்துடன் முதலீடு செய்து வருவதே இதற்குக் காரணம்.
ஜனவரி 2017-லிருந்து இதுவரை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.39,726 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. பேலன்ஸ்டு ஃபண்டுகளில் ரூ.27,617 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது” என்றவர் புறப்படத் தயாராக, அவரிடம் ‘‘கவனிக்க வேண்டிய பங்குகள் ஏதாவது...” என்று இழுத்தோம். அவர் ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார். அந்தச் சீட்டில் இருந்தவை:
ஓராண்டு கால முதலீட்டுக்கு: டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப்.