நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த சில வாரங்களில், இந்தியப் பங்குச் சந்தை முதலீட்டாளர்களைச் சற்று பயமுறுத்தும் படி இறக்கம் அடைந்தது. ஆனால், அந்தப் போக்கு ஒருவழியாக முடிவுக்கு வந்து சந்தைக் குறியீடுகள் மீண்டும் புதிய ஏற்றத்தை நோக்கி நகரத் தொடங்கின. சந்தை மீண்டுவந்த வேகத்தில் நிஃப்டி, மீண்டும் ஒருமுறை 9700-ஐ நோக்கி விரைவாக நகர்ந்தது. இந்த நிலையில், பங்குகளின் விலை, தாங்கள் அடைந்த உச்சத்துக்கு அருகில் தங்களைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதால், வரும் வாரங்களில் மேலும் உயர்ந்து வர்த்தகமா வதற்குத் தயாராக உள்ளன. 

இதில் கவனிக்கத்தக்க சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சர்வதேச சந்தைகளின் போக்குக்கு எதிராக இந்தியப் பங்குச் சந்தைகள் தங்களைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றன என்பதே. இந்தியச் சந்தைகள் சர்வதேச சந்தைகளின் நகர்வுகளுக்கேற்ப தன்னை சிறப்பாக ஒருங்கிணைத்துக்கொள்வதால், கடந்த சில மாதங்களாகச் சந்தையில் நிலவிய போக்கிலிருந்து, மேலும் முன்னோக்கி நகர தற்போது தயாராகி இருக்கிறது. இதன் பலனாக, சந்தையின் போக்கானது செய்திகள் மற்றும் அறிவிப்புகள் போன்றவற்றினால் தாக்கத்துக்குள்ளாகும் பங்குகளின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டதாக மாறியிருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!



கடந்த வாரத்தில், பெரும்பாலான லார்ஜ் கேப் பங்குகளும், சில மிட்கேப் பங்குகளும் சிறப்பாகச் செயலாற்றின. இவற்றின் தற்போதைய நகர்வுகள், மேலும் புதிய உச்சங்களை அடைவதற்கான போக்கில் இருப்பதாகவே தெரிகின்றன.

வங்கிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகள், சொல்லிக்கொள்ளும் அளவில் ஏற்றமடையவோ அல்லது நிஃப்டியின் ஏற்றத்துக்கு பங்களிக்கவோ இல்லை. வரும் வாரத்தில் ஒருவேளை இவை நன்றாகச் செயலாற்றினால், நிஃப்டி தனது புதிய உச்சங்களை அடைவதில் பெரிய சிரமம் இருக்காது; எளிதில் அது தனது அதிகபட்ச இலக்கை எட்டிவிட முடியும். இது நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன.

சந்தையின் போக்கு மீண்டுவந்திருப்பதால், சந்தையில் லாங் பொசிஷன் எடுப்பதற்கு அர்த்தமுள்ள வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. எனவே இன்ட்ராடே, இன்ட்ராவீக் நகர்வுகளில் இறக்கம் ஏற்பட்டால் அதை வாங்குவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்ளலாம். நிஃப்டி 9450-க்குக் கீழே ஸ்டாப்லாஸ் வைத்துக்கொண்டு, 9600 என்ற நிலையில் ஏற்படும் இறக்கங்களில் வாங்கலாம். புதிய உச்சங்களை அடைய வாய்ப்பிருக்கிறது.

குஜராத் ஃப்ளூரோகெமிக்கல்ஸ் (GUJFLUORO)

தற்போதைய விலை: ரூ.837.65

வாங்கலாம்

பங்குச் சந்தையில் வாங்கும் ஆர்வம் மீண்டும் வந்திருப்பதால், தரமான மிட்கேப் பங்குகள் மீண்டும் ஒருமுறை நன்றாக ஏற்றமடைய ஆரம்பித்திருக்கின்றன. அவற்றில் குஜராத் ஃப்ளூரோகெமிக்கல்ஸ் பங்கும் ஒன்று. இது, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஏற்ற இறக்கமில்லாத நிலையில் தொடர்ந்துகொண்டிருந்தது.  தற்போது இந்தப் பங்கின் விலை சிறப்பான மொமென்டம் சப்போர்ட்டுடன் நல்ல வால்யூம்களில் வர்த்தகமாகி வருவதோடு, புதிய உச்சங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. புதிய பிரேக் அவுட் நிலைகளையும் தனது சார்ட்டில் உருவாக்கி உள்ளது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.750 வைத்துக்கொள்ளவும்.  பங்கின் விலை அடுத்த மூன்று மாதங்களில் ரூ.1,000 வரை உயர வாய்ப்புள்ளது.

சன்ஃப்ளாக் அயர்ன் அண்ட் ஸ்டீல் (SUNFLAG)

தற்போதைய விலை: ரூ.41.45

வாங்கலாம்

கடந்த வாரத்தில் மெட்டல் நிறுவனப் பங்குகளுக்கு நல்ல டிமாண்ட் உருவானது. முன்னணி நிறுவனப் பங்குகளுக்கான காலம், தற்போது ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளுக்கு வாய்த்துள்ளது. அவற்றில் சன்ஃப்ளாக் அயர்ன் அண்ட் ஸ்டீல் பங்கின் சார்ட் பேட்டர்ன் கவரும் வகையில், வார சார்ட்டில் நல்ல ரவுண்டிங் பேட்டர்னாக உருவாகியுள்ளது. இந்த நிலையில், இந்தப் பங்கு தனது ஏற்ற, இறக்கமில்லாத நிலையிலிருந்து பிரேக் அவுட் ஆகி, ஏற்றமடைவதற்கான வாய்ப்புடன் உள்ளது. எனவே, தற்போதைய விலையிலும் ரூ.38 வரையிலும் வாங்கலாம். ஸ்டாப்லாஸ்    ரூ.35 வைத்துக்கொள்ளவும். அடுத்த சில வாரங்களில் ரூ.50 என்ற நிலை வரை உயர வாய்ப்புள்ளது.     

ஸ்டெர்லைட் டெக்னாலஜீஸ் (STRTECH)

தற்போதைய விலை: ரூ.158.95

வாங்கலாம்

ஸ்டெர்லைட் டெக்னாலஜீஸ் பங்கின் சார்ட்டைப் பார்க்கும்போது, அதன் நகர்வுகள் சில காலத்துக்கு நன்றாக இருக்கும் என்று தெரிகிறது. இதுதான் சமீபத்தில் அடைந்த உச்சத்தில் சில காலம் ஏற்ற, இறக்கமில்லாத நிலையில் இருந்து, பின்னர் அதிலிருந்து மீண்டும் மேல்நோக்கி நகர்ந்து புதிய உச்சங்களை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சில வாரங்களில் இதுவே நிகழ்ந்திருக்கிறது.

மேலும், கடந்த வார இறுதியில் இந்தப் பங்கு, தனது ஏற்றத்தின் போக்கில் புதிய உச்சங்களை அடைவதற்கான மொமென்டத்தை உருவாக்கியிருக்கிறது. அனைத்து ஆப்டிக்கல் கேபிள் நிறுவனப் பங்குகளுக்கும் தற்போது டிமாண்ட் இருப்பதால், சில செய்திகள் இந்தப் பங்குக்குச் சாதகமாகவே இருக்கின்றன. எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். சில வாரங்களில்      ரூ.180 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.145 வைத்துக்கொள்ளவும்.  

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.