நடப்பு
தொடர்கள்
Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... குறைகளை யாரிடம் தெரிவிக்கலாம்?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... குறைகளை யாரிடம் தெரிவிக்கலாம்?
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... குறைகளை யாரிடம் தெரிவிக்கலாம்?

சோ.கார்த்திகேயன்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைப் பலரும் தேடி வருவது மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், அதுகுறித்த முதலீட்டாளர்களின் புகார் கடந்த 2016 - 17-ம் ஆண்டில் 40% அதிகரித்திருப்பது வருத்தத்துக்குரிய விஷயம். இதற்கு என்ன காரணம், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு மேற்கொள்பவர்கள் தங்கள் குறைகளை யாரிடம், எப்படித் தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து ஃபண்ட்ஸ் இந்தியா.காம் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் மீனாட்சியிடம் கேட்டோம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... குறைகளை யாரிடம் தெரிவிக்கலாம்?

   1.50 கோடி முதலீட்டாளர்கள்!

“மியூச்சுவல் ஃபண்ட் மீதான புகார்களின் எண்ணிக்கை  அதிகரித்ததற்கு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததே காரணம். ஏனெனில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளுக்குமுன் 90 லட்சமாக இருந்தது. இப்போது அது 1.50 கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது.

  மூன்று வகை புகார்கள்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் குறைகளைப் பல வகையாகப் பிரிக்கலாம். சில நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் தராமல் இருக்கலாம்.  அல்லது முதலீட்டாளருடைய முகவரி மாறியதால், வந்து சேராமல் இருக்கலாம். இவையெல்லாம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மீதான புகார்களாக இருக்கலாம்.இதுவே மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் அல்லது ஆலோசகர் என்று எடுத்துக்கொண்டால், ‘விநியோகஸ்தர் என்னிடம் இருந்து பணத்தை வாங்கிவிட்டார். ஆனால், பணத்தை எங்கும் முதலீடு செய்யவில்லை’ என்கிற மாதிரியான புகார்களும் வருகின்றன.

பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர்கள் பற்றிய புகார்களும் வருகின்றன. ஆர்.ஐ.ஏ எங்களுக்குத் தவறான திட்டங்களை வழங்கிவிட்டார். சரியாக ஃபைனான்ஷியல் பிளானிங் தரவில்லை அல்லது எங்களுக்குச் சரியான சேவையை வழங்க மறுக்கிறார் எனப் பலதரப்பட்ட புகார்களும் வருகின்றன.

   என்ன செய்ய வேண்டும்?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... குறைகளை யாரிடம் தெரிவிக்கலாம்?



முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மீது புகார் செய்ய வேண்டும் எனில், செபியின் http://scores.gov.in/ இணையதளத்துக்குச் சென்று புகாரைப் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர்மீது புகார் செய்ய வேண்டும் எனில், அதையும் இதே இணையதளத்தில் சென்று பதிவு செய்யலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்மீது புகார் செய்ய வேண்டுமெனில், அதை ஆம்ஃபி (AMFI) எனும் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின்மீதும் ஆம்ஃபி-யில் புகார் செய்யலாம். ஆர்.ஏ.ஐ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின்மீது புகார் இருந்தால், அதை ஸ்கோர்ஸில் (SCORES -Sebi Complaints    Redress System) மட்டுமே பதிவு செய்ய முடியும். இந்தப் புகார்களை ஆன்லைனில்கூட பதிவு செய்யலாம். 

  என்ன நடைமுறை?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் தங்களது புகார்களைக் கடிதம் மூலமாகவும் தெரியப்படுத்தலாம். புகாரில் என்ன விஷயங்களை அவசியமாகச் சொல்ல வேண்டும் என்பது முக்கியம். ஆர்.ஏ.ஐ பற்றிப் புகார் சொல்கிறீர்கள் எனில், அவர்களுடைய ரிஜிஸ்ட்ரேஷன் நம்பரைக் குறிப்பிட வேண்டும். இதுவே ஒரு மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்மீது புகார் சொல்கிறீர்கள் எனில், அந்த விநியோகஸ்தரின் ஏ.ஆர்.எம் (ARM) கோட் நம்பரைக் குறிப்பிட வேண்டும்.

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மீது புகார் சொல்கிறீர்கள் எனில், முதலீடு செய்துள்ள அந்த மியூச்சுவல் ஃபண்ட் பெயர் மற்றும் ஃபோலியோ நம்பரைக் குறிப்பிட வேண்டும். புகார் விவரங்களை எந்த அளவுக்குத் தெளிவாகக் குறிப்பிட முடிகிறதோ, அந்த அளவுக்குப் புகாரை ஏற்று, அதன்மீது விரைந்து நடவடிக்கை எடுக்க  அது உதவும். 

   மேல் நடவடிக்கை..?

முதலீட்டாளர்களின் புகார் ஏற்றுக்கொள்ளப் படும்பட்சத்தில் 14 நாள்களுக்குள் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம். ஒரு விநியோகஸ்தர்மீதோ, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மீதோ புகார் எனில், அந்தப் புகாருக்கு அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதை, குறிப்பிட்ட நாளுக்குள் செபியிடம் தெரியப்படுத்த வேண்டும். முதலீட்டாளர் யார் மீது புகார் சொல்லி யிருக்கிறாரோ, அவரே சம்பந்தப்பட்ட முதலீட்டாளருடன் தொடர்புகொண்டு பிரச்னையைத் தீர்க்க வேண்டும். பிரச்னையைத் தீர்க்கவில்லையெனில், குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது செபி அபராதம் விதிக்கும்” என்றார் அவர்.

முதலீட்டாளர்கள் சொல்லும் புகார்கள்மீது இத்தனை வேகமாக நடவடிக்கை எடுக்கும்போது, அதில் துணிந்து முதலீடு செய்யலாமே!