
ஓவியம்: அரஸ்
“உங்கள் ஆபீஸ் கேன்டீனில் வெயிட் பண்றேன். சீக்கிரம் வாங்க...” என ஷேர்லக் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பவே, அடுத்த இரண்டே நிமிடங்களில் அவர்முன்பு ஆஜரானோம். நமக்கும் சேர்த்தே சுண்டல் ஆர்டர் செய்திருந்தார்.கொஞ்சமாக எடுத்துக்கொண்டு, கேள்விகளைக் கேட்கத் தொடங்கினோம். நம் கேள்விகளுக்குப் பளிச் பளிச்சென பதில் சொன்னார்.

“வெளிநாட்டு முதலீடுகள் இந்தியப் பங்குச் சந்தையில் அதிகரித்து வருகின்றனவே?”
“சந்தையின் நகர்வுகளைப் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறீர்கள். மேலும், இந்தியாவின் மீதான பார்வை, சர்வதேச அளவில் மிகவும் பாசிட்டிவாக இருக்கிறது. அரசு எடுத்துவரும் நிலைப்பாடுகள் அனைத்துமே இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றத்தின் பாதையில் கொண்டு செல்லத்தக்கவை என்று நம்பப்படுகிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாட்டு முதலீடுகள் இந்தியப் பங்குச் சந்தைகளில் அதிகரித்து வருகின்றன. 2017-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து தற்போது வரை இந்தியப் பங்குச் சந்தைகளில் செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளின் மதிப்பு 825 கோடி டாலரை (ரூபாய் மதிப்பில் 53,625 கோடி) தொட்டிருக்கிறது. கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு, சர்வதேச அளவில் பணப்புழக்கம் அதிகரித்திருப்பதும், அதே சமயம் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து நிலையான போக்கில் இருந்து வருவதும் காரணமாகும்.”
“கார்ப்பரேட் நிறுவனங்கள், அவற்றின் பங்குகளை பைபேக் செய்வது அதிகரித்திருக்கிறதே?”
“சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்திய நிறுவனங்கள் பலவும் இந்த வருடம் தங்களின் பங்குகளை பைபேக் செய்துள்ளன. கடந்த ஆறு மாதங்களில் பைபேக் செய்யப்பட்ட பங்குகளின் மொத்த மதிப்பு, சுமார் ரூ.25,000 கோடியாக உள்ளது. இது, கடந்த வருடத்தில் இதே காலத்தில் பைபேக் செய்யப்பட்டதைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமாகும். அதுமட்டுமல்லாமல், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பங்குகள் அதிக விலையில் பைபேக் செய்யப்பட்டு உள்ளன. வழக்கமாக பைபேக் நடவடிக்கைகள், விலை சரியும்போது அதனைத் தடுப்பதற்காக நிறுவனங்களால் எடுக்கப்படும். நிறுவனங்களின் இந்தத் திடீர் பைபேக் நடவடிக்கைகளுக்குக் காரணம், சந்தையின் அதிரிபுதிரி ஏற்றம்தான். கிட்டதட்ட சென்செக்ஸ் 25% உயர்ந்திருக்கிறது. வழங்கப்படும் டிவிடெண்ட் ரூ.10 லட்சத்தைத் தாண்டும்போது, அதனைப் பெறுபவர்கள் 10% வருமான வரி கட்ட வேண்டும். இதனைத் தவிர்க்க, பெரிய நிறுவனங்கள் இந்த பைபேக் வழியைத் தேர்ந்தெடுத்து, பங்குதாரர்களுக்கு வருமானம் கிடைக்க ஏற்பாடு செய்கின்றன.”
“இந்திய பங்குச் சந்தை புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறதே?”
“வியாழக்கிழமை அன்று சென்செக்ஸ் 232 புள்ளிகள் அதிகரித்து, 32000 புள்ளிகளைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. நடப்பு 2017-ம் ஆண்டில் இதுவரைக்கும் இந்திய பங்குச் சந்தை சுமார் 25 சதவிகித வருமானம் தந்திருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் டாடா ஸ்டீல் பங்கின் விலை 23%, ஹெச்.யூ.எல் 21%, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் மற்றும் மாருதி சுஸூகி பங்குகள் 18% விலை அதிகரித்துள்ளன” என்றவர், சந்தையின் ஏற்றத்துக்கான காரணங்களைக் குறிப்பிட்டார்.
“ஜூன் மாத சில்லறைப் பணவீக்க விகிதம் 1.54% ஆக குறைந்துள்ளது. கடந்த மே-யில் இது 2.18 சதவிகிதமாக இருந்தது. இதேபோல், மொத்த விலைக் குறியீடு கடந்த ஜூனில் 0.9 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.இப்படிப் பணவீக்க விகிதங்கள் குறைந்திருப்பதால், ஆகஸ்ட் மாதம் நடக்கும் ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் ஆய்வு கூட்டத்தில், கடனுக்கான வட்டி குறைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. அமெரிக்க ஃபெடரல் சேர்மன் ஜேனட் யெல்லன், இப்போதைக்கு வட்டியை அதிகரிக்கத் தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார். இதனால் அமெரிக்க சந்தை ஏற்றம் கண்டு வருகிறது. இந்தக் காரணங்களால் நமது சந்தைப் புதிய சாதனை படைத்திருக்கிறது.”
“சென்செக்ஸ் 30000-லிருந்து 32000 புள்ளிகளுக்கு 79 நாள்களில் நகர்ந்திருக்கிறது. அதேநேரத்தில், இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து மேலே போகும் என்பதற்கு ஃபண்டமென்டல் மற்றும் டெக்னிக்கல் உத்தரவாதம் இல்லை என அனலிஸ்ட்கள் தெரிவித்திருக்கிறார்கள். தற்போதைய சந்தையின் ஏற்றம், கடந்த 2000-ம் ஆண்டின் சில காலாண்டுகளில் நடந்த டாட் காம் பப்பிள்போல் இருக்கிறது. இதனால் சந்தை கணிசமாக இறங்குவதற்கு வாய்ப்புள்ளது எனவும் சில அனலிஸ்ட்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
தற்போதைய நிலையில், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமான வளர்ச்சி மேம்படவில்லை. ஆனாலும், சந்தை ஏறிக் கொண்டே போகிறது. இந்திய நிறுவனங்களின் வருமான வளர்ச்சி இன்னும் 18 மாதங்களுக்குப் பிறகுதான் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தற்போதைய உச்ச நிலையில் சிறு முதலீட்டாளர்கள், புதிய முதலீட்டை மேற்கொள்வதில் பொறுமை காக்கும்படி உஷார்படுத்தி இருக்கிறார்கள்.”
“டி.சி.எஸ், இன்ஃபோசிஸ் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எப்படி?”
“பெரிதாகச் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்தியாவின் மிகப் பெரிய சாஃப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ்-ன் நிகர லாபம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 5.9% குறைந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்திருப்பது, பணியாளர் சம்பள உயர்வு போன்றவை இதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன. இதேபோல் இன்ஃபோசிஸ் நிகர லாபம், முதல் காலாண்டில் 3.3% குறைந்துள்ளது.”
“டிவிஸ் லேப் பங்குகள் விலை 20% உயர்ந்துள்ளதே,என்ன காரணம்?”
“டிவிஸ் லேப் நிறுவனத்தின் விசாகப்பட்டினம் நிலையத்தின்மீது விதித்திருந்த இறக்குமதித் தடையை, அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் நீக்கியிருக்கிறது. இந்தச் செய்தியை டிவிஸ் லேப் நிறுவனம் அறிவித்ததும் அதன் பங்கு விலை உயர்ந்தி ருக்கிறது. கடந்த திங்களன்று இந்தப் பங்கு 19.99% உயர்ந்து, ரூ.816.15-க்கு வர்த்தகமானது. அன்று மட்டும் இந்த நிறுவனத்தின் 71.14 லட்சம் பங்குகள் வர்த்தகமாகின.’’
எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸின் பங்குகளை விலக்கிக்கொள்ள, எஸ்.பி.ஐ வங்கி இயக்குநர் குழு அனுமதித்துள்ளதே!
‘‘எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் தனது பங்குகளை விலக்கிக்கொள்ள முடிவெடுத்து அதற்கான ஒப்புதலை வழங்க, எஸ்.பி.ஐ வங்கியின் மத்திய இயக்குநர் குழுவிடம் கேட்டிருந்தது. இயக்குநர் குழுவும் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ், பொதுப் பங்கு வெளியீட்டுக்கான வேலைகளில் இறங்கவுள்ளது. தனது 8 கோடி பங்குகளை விற்பனைக்கு வெளியிட முடிவு செய்துள்ளது. இதில் எஸ்.பி.ஐ வங்கியும் (70.10%), பிஎன்பி பரிபாஸ் கார்டிஃபும் (26%) பெரும்பான்மை பங்குதாரர்களாக உள்ளன.”
“எப்படி இருந்தது ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி பங்கின் என்ட்ரி?”
‘‘கடந்த திங்கள் அன்று ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி பட்டியலானது. பொதுப் பங்கு வெளியீட்டில் ஒரு பங்கு ரூ.358 என்று விற்பனை செய்யப்பட்ட இதன் பங்குகள், சந்தையின் முதல் நாள் என்ட்ரியிலேயே 48% உயர்ந்து வர்த்தகமானது. ரூ.530-க்கு அதன் வர்த்தகம் ஆரம்பித்து, ரூ.531.5 வரை தனது முதல் நாள் வர்த்தகத்தில் உயர்ந்து வர்த்தகமானது. ஆனால், வெள்ளிக்கிழமை அன்று ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ், சி.டி.எஸ்.எல், ஹட்கோ ஆகிய பங்குகளின் விலை சுமார் 10 வரை இறக்கம் கண்டன. எனவே, உஷார்’’ என்ற ஷேர்லக், “சந்தை உச்சத்தில் இருப்பதால் இப்போதைக்குக் கவனிக்க வேண்டிய பங்குகள் ஏதும் இல்லை” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்!