நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஷேர்லக்: உச்சத்தில் ரியல் எஸ்டேட் பங்குகள்... முதலீட்டாளர்கள் உஷார்!

ஷேர்லக்: உச்சத்தில் ரியல் எஸ்டேட் பங்குகள்... முதலீட்டாளர்கள் உஷார்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: உச்சத்தில் ரியல் எஸ்டேட் பங்குகள்... முதலீட்டாளர்கள் உஷார்!

ஓவியம்: அரஸ்

‘‘பிக்பாஸுக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் அறிக்கைப் போர் நடந்துகொண்டிருக்கிறதே... கமல் தனிக்கட்சி தொடங்கிவிடுவாரா?’’ என சீரியஸாகக் கேட்டபடியே வந்தார் ஷேர்லக். “அந்த அக்கப்போர் நமக்கெதுக்கு பாஸ்... நம்ம சப்ஜெக்ட்டுக்கு வாங்க’’ என்று சொல்லிவிட்டுக்  கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

ஷேர்லக்: உச்சத்தில் ரியல் எஸ்டேட் பங்குகள்... முதலீட்டாளர்கள் உஷார்!

‘‘மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீட்டைக் குவித்துள்ளனவே?’’

‘‘மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், கடந்த 25 வர்த்தக நாள்களிலும் பங்குச் சந்தையில் தனது முதலீட்டைக் குவித்துள்ளன. சந்தைகள் உச்சத்தில் வர்த்தகமாகும் நிலையிலும், பங்குகளின் மதிப்பு அவற்றின் அடக்க விலைக்கெல்லாம் மேல் உச்ச கட்டமாக உயர்ந்திருக்கும்போதும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், பங்குகளை வாங்கிக் குவித்திருக்கின்றன. ஜூன் 7-ம் தேதியிலிருந்து சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.500 கோடி வீதம் மொத்தமாக ரூ.12,435 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில் செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் ரூ.6,565 கோடி மட்டுமே. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், முதலீட்டாளர்களின் பணத்தை பல மாதங்களுக்கு இருப்பில் வைத்திருக்க முடியாது. அவர்கள் முதலீட்டுக்கான வழிகளை முயற்சி செய்தே ஆகவேண்டும் என்பதால், தொடர்ந்து முதலீடு செய்துள்ளார்கள்.’’

‘‘பிஎஸ்இ, என்எஸ்இ பங்குச் சந்தைகளில் சில பங்குகள் கட்டுப்பாட்டு வர்த்தகத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனவே?’’

‘‘பி.எஸ்.இ, என்.எஸ்.இ ஆகிய இரண்டு சந்தையிலும் சில பங்குகள் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தகப் பிரிவுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. கேப்பிட்டல் சந்தையின் பாதுகாப்பை முன்னிட்டும் ஸ்பெகுலேஷன், செயற்கையான வர்த்தகம் போன்றவற்றைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.இ-ல் ஸ்ரீராம் அஸெட் மேனெஜ்மென்ட் கம்பெனி, சஹாரா ஒன் மீடியா உள்ளிட்ட 28 பங்குகளும், என்.எஸ்.இ-ல் 12 பங்குகளும் ஜூன் 20 முதல் குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்குள்தான் வர்த்தகம் ஆகும். இந்தப் பங்குகளின் வர்த்தகம் கூர்ந்து கண்காணிக்கப்பட இருக்கின்றன. இந்தப் பங்குகளை வாங்குவதிலும், விற்பதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.”

“முதல் காலாண்டு முடிவுகள் எப்படி?”

“கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு லாப வரம்பு, கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்ததால், முதல் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸின் நிகர லாபம் 28% அதிகரித்து ரூ.9,108 கோடியாக உயர்த்துள்ளது. தவிர, 1:1 போனஸ் பங்குகளை அறிவித்ததால், பங்கின் விலை 4% ஏற்றம் கண்டிருக்கிறது.

கனரா பேங்க், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 10 சதவிகித நிகர லாப வளர்ச்சி  அடைந்திருக்கிறது. முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.229 கோடி நிகர லாபம் கண்டிருந்த கனரா பேங்க், தற்போது ரூ.251.60 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. டெபாசிட் செலவுகளைக் குறைத்தது, வட்டி வருமானத்தில் ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் வட்டி அல்லாத வருமானம் அதிகரித்தது போன்றவையே கனராவின்  நிகர லாப வளர்ச்சிக்குக் காரணங்கள்.

ஜூன் காலாண்டில், ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் நிகர லாபம் 9% அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.1,174 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்த ஹிந்துஸ்தான் யுனிலிவர், இந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில், ரூ.1,283 கோடி நிகர லாபத்தை ஈட்டியிருக்கிறது. இந்த உயர்வுக்குக் காரணம், ஜி.எஸ்.டி வருவதற்கு முன்பே எச்சரிக்கையுடன் தனது வர்த்தகத்தைத் திட்டமிட்டுச் செயல்படுத்தியதுதான்.     

அல்ட்ராடெக் சிமென்ட்,  இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 15 சதவிகித நிகர லாப வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.780 கோடி நிகர லாபம் கண்டிருந்த அல்ட்ராடெக் சிமென்ட், இந்த நிதியாண்டில் ரூ.898 கோடி நிகர லாபத்தை ஈட்டி இருக்கிறது. இதன் வருவாயும் 6% உயர்ந்து ரூ.7,928 கோடியாக உள்ளது. சந்தையில் டிமாண்ட் வலுவாக இருந்ததே இதற்கு முக்கியக் காரணம். ஜி.எஸ்.டி-யில் சரக்குப் போக்குவரத்துக் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. அதுவும் இதற்குச் சாதகமாக இருக்கும்.

தனியார் நிதி நிறுவனமான சுந்தரம் ஃபைனான்ஸ், முதல் காலாண்டில் 30 சதவிகித நிகர லாப வளர்ச்சி அடைந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.90.17 கோடி நிகர லாபம் அடைந்திருந்த சுந்தரம் ஃபைனான்ஸ், இந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.117 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் இந்த நிறுவனம் வழங்கிய கடன் மதிப்பு 6% உயர்ந்திருக்கிறது. மேலும் கார், டிராக்டர் மற்றும் கட்டுமான உபகரணங்களுக்கான கடன்களில் வளர்ச்சியைக் கண்டுள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் கடன் தரம் வலுவாக இருப்பதும் பாசிட்டிவாக உள்ளது."

‘‘ரியல் எஸ்டேட் பங்குகள் விலை உயர்ந்திருக்கிறதே?’’

‘‘பி.எஸ்.இ ரியாலிட்டி குறியீடு மூன்று வருட உச்சத்தில் வர்த்தகமாகிறது. இதற்கெல்லாம் முக்கியமான காரணங்களாக இருப்பவை, ரியல் எஸ்டேட் கட்டுப்பாடுகள் மற்றும் மேம்பாடுகள் சட்டமான ரெரா  2016 மற்றும் அரசு அறிவித்துள்ள எல்லோருக்கும் வீடு திட்டம் ஆகியவை ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது. இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட், யுனிடெக் நிறுவனப் பங்குகள், நடப்பு 2017-ம் ஆண்டில் இது வரைக்கும் 200% ஏற்றம் அடைந்துள்ளன. மேலும், டி.எல்.எஃப், கோத்ரேஜ் பிராப்பர்டீஸ் மற்றும் ஃபீனிக்ஸ் மில்ஸ் ஆகியவை முறையே 82%, 69% மற்றும் 45% வளர்ச்சி அடைந்துள்ளன. பல மாநிலங்களில் ரெரா சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை என்பதால், ரியல் எஸ்டேட் பங்குகளில் குறுகிய கால முதலீடு செய்பவர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்கிறார்கள் அனலிஸ்ட்கள்."   

‘‘ஹெச்.டி.எஃப்.சி லைஃப்பும் ஐபிஓ வரவிருக்கிறதே?’’

‘‘ஹெச்.டி.எஃப்.சி லைஃப் நிறுவனம், ஹெச்.டி.எஃப்.சி மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டாண்டர்டு லைஃப் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவானதாகும். இந்த நிறுவனம் தற்போது ஐபிஓ வெளியிடுவதற்குத் திட்டமிட்டு உள்ளது. இதற்கான ஒப்புதலை வழங்குமாறு இந்திய இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் கோரியுள்ளது. தனது 20 சதவிகிதப் பங்குகளைப் பொதுப் பங்கு வெளியிட (ஐபிஓ) ஹெச்.டி.எஃப்.சி லைஃப் முடிவு செய்துள்ளது. ஹெச்.டி.எஃப்.சி லைஃப் மற்றும் மேக்ஸ் லைஃப் இணைப்பு நடப்பதற்கு முன், இந்த ஐ.பி.ஓ வெளியீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.’’

‘‘ஐ.டி.சி பங்கு 13% சரிவைச் சந்தித்துள்ளதே?’’

‘‘ஜி.எஸ்.டி வரியால் புகையிலை நிறுவனங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அந்தத் துறையில் முன்னணியில் இருக்கும் ஐ.டி.சி-தான்  அதிகமாக அடி வாங்கியிருக்கிறது. கடந்த திங்கள் அன்று சிகரெட்டுகளின் மீதான செஸ் வரியை உயர்த்தியதால், ஐ.டி.சி நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும், சிகரெட்டுகளின் விலை அதிகரிக்கும் என்பதால், நுகர்வு அளவு குறையும் நிலையும் உள்ளது. இதன் காரணமாக, ஐ.டி.சி பங்கின் விலை செவ்வாய் அன்று 13% சரிவைச் சந்தித்தது. ஐ.டி.சி மட்டுமல்ல, பிற சிகரெட் உற்பத்தி நிறுவனங்களான காட்ஃப்ரே பிலிப்ஸ், வி.எஸ்.டி இண்டஸ்ட்ரிஸ் ஆகியவையும் சரிவைச் சந்தித்தன.’’

‘‘பொதுத்துறை வங்கிகளில் வெளிநாட்டு முதலீடுகளும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் அதிகரித்திருக்க என்ன காரணம்?’’


 ‘‘பொதுத்துறை வங்கிகளான எஸ்பிஐ, பிஎன்பி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா பேங்க் மற்றும் ஆந்திரா பேங்க் உள்ளிட்டவற்றின் பங்குகளில் வெளிநாட்டு முதலீடுகளும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் இந்த நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அதிகரித்திருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம், வாராக் கடன்கள்மீது எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் மீதான நம்பிக்கைதான். திவால் சட்டம் மூலம் வங்கிகளின் வாராக் கடன்களை மீட்டெடுக்கும் அரசின் முயற்சியானது பொதுத்துறை வங்கிகள் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. இதனால்தான் அவற்றின் பங்குகளில் முதலீடுகளை அதிகரித்துள்ளனர்.’’

‘‘சென்செக்ஸ், கடந்த வாரத்தில் திடீரென்று ஒரே நாளில் 360 புள்ளிகள் சரிந்ததே... என்ன காரணம்?’’

‘‘கடந்த வாரத்தில் சீனச் சந்தையில் ஏற்பட்ட சரிவினால் தாக்கத்துக்கு உள்ளாகி நம்முடைய பங்குச் சந்தையும் சரிவைச் சந்தித்தது. அதன் காரணமாகவே சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் ஒரு சதவிகித சரிவைச் சந்தித்தது. சென்செக்ஸ் 360 புள்ளிகள் சரிந்து 31710 என்ற நிலையில் வர்த்தகமானது. இந்த வருடத்தில் அதிகப்படியான சரிவு இதுதான். இந்தச் சரிவில் அதிகமாக விலை இறங்கிய பங்குகள் என்றால், ஐ.டி.சி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் ஆகிய இரண்டும் தான். ஐ.டி.சி 12.5% விலை குறைந்தது. பங்குகளின் மதிப்புகள் உச்சங்களில் இருப்பதால், அவற்றின் போக்கைத் தீர்மானிப்பதென்பது சற்று கடினம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.”

‘‘ஏதாவது கவனிக்க வேண்டிய பங்குகள்..?’’


‘‘ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீட்டுக்கு: பஜாஜ்  ஃபைனான்ஸ், சோலார் இண்டஸ்ட்ரிஸ், வோல்டாஸ், டிசிபி பேங்க், ஏசிசி.”