
டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்
நாம் மிகவும் எதிர்பார்த்திருந்த நிஃப்டி, 10000 புள்ளிகள் என்ற நிலையைக் கடந்த வாரத்தில் எட்டியதை மகிழ்ச்சியோடு பார்த்தோம்.
நிஃப்டி புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்திருக்கிறது. இதனால் இதுவரை பொறுமை காத்து வந்தவர்களும் சந்தையில் களமிறங்கி இருக்கின்றனர். இந்தியச் சந்தைகளின் வளமான எதிர்காலம் குறித்த சர்வதேச நாடுகளின் பார்வை மேலும் வலுவடைந்திருக்கிறது. இதனால் மேலும் நம் சந்தையில் முதலீடுகள் குவிவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், உள்நாட்டு முதலீடுகளும் நன்றாக உயர்ந்து தொடர்ந்து சந்தையின் நகர்வுகளை உச்சத்தை நோக்கி நகர்த்தி செல்வதாக உள்ளன. இதுதான் தற்போதைய ஏற்றப் போக்கில் ரியாக்ஷன்கள் இல்லாததற்குக் காரணம்.

இந்த நிலையில், முதல் காலாண்டு முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. சந்தையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக வரும் நிலையில், இந்த ஏற்றப் போக்கு தொடர்ந்து தன்னைத் தக்கவைத்துக்கொண்டு, மேலும் புதிய உச்சங்களை அடைவதற்கான வாய்ப்புகளைச் சந்தைக் குறியீடுகளுக்கு வழங்கலாம்.
பேங்க் நிஃப்டியும் 25000 என்ற நிலையை நெருங்கியிருக்கிறது. ஆனால், இப்போது பெரும்பாலான தனியார் வங்கிகளின் காலாண்டு முடிவுகளும் வெளி வந்திருப்பதால் மேலும் ஏற்றமடைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. ஆகஸ்ட் 2-ம் தேதி ரிசர்வ் வங்கிக் கூட்டம் நடக்கவுள்ளது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், பேங்க் நிஃப்டியில் புதிய நகர்வுகளை ஏற்படுத்தும் காரணிகளாக மாற வாய்ப்புள்ளது. இந்தக் கூட்டத்தில் 0.25% வரை வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் நிலவுகிறது. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறினால் வங்கிப் பங்குகள் மேலும் ஏற்றமடைய வாய்ப்புண்டு. அதுவரையிலும் வங்கிப் பங்குகள் ஒரு வரம்புக்குள்தான் வர்த்தகமாகும்.

தகவல் தொழில்நுட்பத் (ஐடி) துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளும் சற்று ஏற்றமடைந்து வர்த்தகமாயின. சந்தையின் தற்போதைய காளைப் போக்கும், முதல் காலாண்டு முடிவுகளும் இதற்கு உதவியிருக் கின்றன. ஐடி பங்குகளின் ஏற்றமும் சந்தைக் குறியீடுகளின் ஏற்றத்துக்குப் பங்களித்திருக் கின்றன.
நடப்பு வாரத்தில், சந்தைக் குறியீடானது 10350 என்ற நிலையை நோக்கித் தொடர்ந்து ஏற்றமடையும் சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, வாரத்தின் இடையே இறக்கம் ஏற்பட்டால், அதை வாங்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நவபாரத் வென்சர்ஸ் (NBVENTURE)
தற்போதைய விலை: ரூ.141.40
வாங்கலாம்
இந்த நிறுவனத்திடமிருந்து நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த, ஜாம்பியா புராஜெக்ட் தொடங்கப்படுவதற்கான செய்தி இந்த வாரத்தில் வெளியிடப்பட்டது. இந்தச் செய்தி வெளியானதும் இதன் தாக்கம், இந்த நிறுவனப் பங்கின் விலையில் எதிரொலித்தது.
இந்தப் பங்கின் ஒட்டுமொத்த பேட்டர்னைப் பார்க்கும்போது ஊக்கமளிப்பதாக உள்ளது. இந்தப் பங்கு, தற்போதைய விலையிலிருந்து மெள்ள ஏற்றமடைந்து, அடுத்த 12 மாதங்களில் ரூ.200 வரை உயரும் என்று எதிர்பார்க்கலாம். தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ. 130 வைத்துக் கொள்ளவும்.

கிராபைட் இந்தியா (GRAPHITE)
தற்போதைய விலை: ரூ. 193.75
வாங்கலாம்
கிராபைட் இந்தியா நிறுவனத்தின் பங்கை முன்பே பரிந்துரைத்திருக்கிறேன். அதன்படி இந்தப் பங்கும் நன்றாகச் செயலாற்றியது. தற்போது சர்வதேச சந்தைகளில் கிராஃபைட் எலெக்ட் ரோடுகளில் விலை சரிவைச் சந்தித்திருப்பதால், இந்த நிறுவனப் பங்கின் விலையில் பிரகாசமான போக்கு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்தப் போக்கு, வரும் காலங்களில் அதன் விலையில் மேலும் எதிரொலிக்கும். இந்தப் பங்கில் உருவான பாசிட்டிவ் சிக்னல்கள் தொடர்வதால், ரூ.195 என்ற நிலையில் வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.230 வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. ஸ்டாப் லாஸ் ரூ.180 வைத்துக்கொள்ளவும்.

டிவிஎஸ் மோட்டார் (TVS MOTOR)
தற்போதைய விலை: ரூ.582.95
வாங்கலாம்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனப் பங்கின் விலையில், சமீப காலமாக நல்ல போக்கு உருவாகியிருக்கிறது. இந்தப் போக்கு, இந்தப் பங்கை புதிய உச்சங்களை நோக்கிக் கடந்த வாரத்தில் கொண்டு சென்றது.
இந்த நிறுவனத்தின் மீதான அனலிஸ்ட்டுகள் பார்வையில் பெரும்பாலும் நம்பிக்கையின்மை நிலவுகிறது. ஆனாலும், இந்தப் பங்கின் செயல்பாடு தொடர்ந்து சிறப்பாகவே இருக்கிறது.
இந்தப் பங்கின் சார்ட் பேட்டர்னைப் பார்க்கும்போது, நாம் நினைப்பதற்கு மாறாக இந்தப் பங்கு செயலாற்றுவதைப் பார்க்க முடிகிறது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ. 565க்கு கீழே வைத்துக்கொள்ளவும்.
தொகுப்பு: ஜெ.சரவணன்
டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.