நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

ஷேர்லக்: கரெக்‌ஷனுக்கு காத்திருக்கும் சந்தை..?

ஷேர்லக்: கரெக்‌ஷனுக்கு காத்திருக்கும் சந்தை..?
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: கரெக்‌ஷனுக்கு காத்திருக்கும் சந்தை..?

ஓவியம்: அரஸ்

ழக்கமான கெட்டப்பைத் தவிர்த்து, புதிய கெட்டப்பில் வந்திருந்தார் ஷேர்லக்.   “நிஃப்டி 10000 புள்ளிகளைத் தொட்டபின் இன்னும் சந்தை ஏறுமா, இல்லை இறங்குமா என்று கேட்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அவர்களிடமிருந்து தப்பிக்கவே இந்த கெட்டப்’’ என்று சொல்ல, ‘‘நாங்கள் கேட்க நினைத்த கேள்வியும் அதுதானே!’’ என்றோம். ‘‘உமக்குப் பதில்  சொல்வதன் மூலம் ஊருக்கே  சொல்கிறேன்’’ என்று பேச ஆரம்பித்தார் ஷேர்லக்.     

ஷேர்லக்: கரெக்‌ஷனுக்கு காத்திருக்கும் சந்தை..?

“சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் முதலீடுகள் குவிந்ததே குறுகிய காலத்தில் சந்தை, 10,000 புள்ளிகளைத் தொட்டதற்குக் காரணம். உலகின் மற்ற சந்தைகளைக் காட்டிலும் இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்வதில் சர்வதேச முதலீட்டாளர்கள் தீவிரமாக உள்ளனர். இதனால் கடந்த புதன்கிழமை அன்று  வர்த்தக முடிவில், 54 புள்ளிகள் ஏற்றமடைந்து 10,020 புள்ளிகளில் நிறைவடைந்தது.

நிஃப்டி குறியீட்டில் உள்ள நிறுவனப் பங்குகளின் மதிப்புகள் உச்சத்தில்  உள்ளன. பெரும்பாலான பங்குகள் பிரீமியம் விலையில் உள்ளன. வெளிநாட்டு முதலீடுகள் அதிகமாக இருப்பதாலும், சந்தை நன்றாகச் செயல்படுவதாலும் உள்நாட்டு முதலீடுகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், சர்வதேச அளவில் திடீரென ஏதேனும் மாற்றம் வந்து, அது சந்தையைப் பாதிக்கிற மாதிரி அமைந்தால், வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற வாய்ப்புள்ளது. அதனால் சந்தையில் இறக்கம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனவே, முதலீட்டாளர்கள் நீண்ட கால அடிப்படையில் முதலீடுகளைத் திட்டமிடுவது நல்லது என்று அனலிஸ்ட்டுகள் தெரிவிக்கிறார்கள்.”

“பல பங்குகளின் விலை அவற்றின் 200 நாள் விலையின் சராசரிக்குக் கீழே இருக்கிறதே, இது சந்தை  இறக்கத்துக்கான அறிகுறியா?” என்று கேட்டோம்.


“பங்குச் சந்தைக் குறியீடுகள் வரலாற்று உச்சத்தில் இருந்தாலும், பங்குகளின் நகர்வுகளைக் கூர்ந்து கவனிக்கும்போது, பல பங்குகளின்  விலை அவற்றின் 200 நாள்கள் சராசரி விலைக்குக் கீழே வர்த்தகமாகி வருவதை காண முடிகிறது. பல பங்குகளின் விலை 200 நாள்கள் சராசரி விலைக்கு மேலே வர்த்தகமாவது, கடந்த மார்ச் காலாண்டில் 82 சதவிகிதமாக இருந்தது. இது, கடந்த ஜூன் காலாண்டில் 70 சதவிகிதத்துக்குக் குறைந்துள்ளது. பங்குச் சந்தையின் வரலாற்றில், 200 நாள்கள் சராசரி விலைக்குக் கீழ் பங்குகளின் விலை அல்லது குறியீட்டுப் புள்ளிகள் குறைவது  உடனடி இறக்கத்துக்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

2017-ல் இந்தியப் பங்குச் சந்தை இதுவரை 22% லாபம் தந்திருக்கிறது. இந்த உச்சத்தில் இறக்கம் ஏற்படும்பட்சத்தில் அதன் இழப்பு அதிகமாகக்கூட இருக்க வாய்ப்புண்டு என்கிறார்கள் அனலிஸ்ட்டுகள். ஆனால், இறக்கம் என்பது தற்காலிகமானதாகவே இருக்கும். எனவே, சிறு முதலீட்டாளர்கள் சற்றுக் கவனமாக இருப்பது அவசியம்.” 

“வியாழக்கிழமை எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி எப்படி?”

“கடந்த ஜனவரிக்குப் பிறகு ஜூலைதான் சிறந்த டெரிவேட்டிவ் மாதம் என்கிற அளவுக்கு சிறப்பாக எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி நிறைவு பெற்றுள்ளது.  ஜூலை டெரிவேட்டிவ் சீரிஸில் நிஃப்டி 5.4%, சென்செக்ஸ் 4.9% அதிகரித்துள்ளன. நிஃப்டி ரோல் ஓவர் 67 சதவிகிதமாகவும்  சந்தையின் ரோல் ஓவர் 79 சதவிகிதமாகவும்  உள்ளது. இவை இரண்டும் கடந்த மூன்று மாதங்களில் இருந்தது போலவே இருக்கின்றன.கடந்த வியாழன் அன்று நிஃப்டி 10115 புள்ளி களாகவும், சென்செக்ஸ் 32773 புள்ளிகளாகவும் அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டின. ஆனால், முதலீட்டாளர்கள் லாபம் கருதிப் பங்குகளை விற்றதால், சந்தை இறங்கியது.” 

‘‘வெளிநாட்டு முதலீடுகளை ரிசர்வ் வங்கி தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறதே?’’

‘‘வெளிநாட்டு முதலீடுகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்திருப்பதோடு, தினசரி அடிப்படையில் வெளிநாட்டு முதலீடு களைக் கண்காணிக்கவும் தீர்மானித்து உள்ளது. எஃப்ஐஐ/எஃப்பிஐ ஆகியவற்றின் மூலம் செய்யப் பட்டுள்ள முதலீடு ‘பெய்ட் அப் கேபிட்டல்’ முதலீட்டில் 24% என்ற வரம்பைக் கடந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 25.5 பில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடு வந்துள்ளது. இதற்கு மேலும் வெளிநாட்டினர் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வங்கி அல்லாத நிதி நிறுவனங் களின் பங்குகளில் இதற்கு மேலும் முதலீடு செய்ய முடியாது என ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது

“காலாண்டு முடிவுகள் எப்படி?”

“கலவையாகவே வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பிறகு டெலிகாம் துறையில் போட்டி அதிகரித்து விட்டது. இந்தப் போட்டியில் ஓரளவுக்கு வாடிக்கையாளர்களைத்  தக்க வைத்துக்கொண்ட  டெலிகாம் நிறுவனம் எனில், அது ஏர்டெல்தான். ஆனாலும், ஜியோவின் அதிரடி ஆஃபர்களால் ஏர்டெல் பாதிக்கப்படாமல் இல்லை. ஏர்டெல்லின் வாய்ஸ் மற்றும் டேட்டா இரண்டின் வருமானமும் முதலாம் காலாண்டில் குறைந்திருக்கிறது. முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.1,462 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்த ஏர்டெல், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 75% குறைந்து, ரூ.367 கோடியாக மட்டுமே உள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி-யின் நிகர லாபம் இந்த நிதி யாண்டின் முதல் காலாண்டில் 16.8%  குறைந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.1,871 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்த ஹெச்.டி.எஃப்.சி, இந்த ஜூன் காலாண்டில் ரூ.1,556 கோடி நிகர லாபம் ஈட்டியிருக்கிறது. செலவுகள் அதிகரித்ததே இதன் நிகர லாப வளர்ச்சி குறையக் காரணம்.

யெஸ் பேங்க் நிகர லாபம் 32%  உயர்ந்திருக்கிறது.  யெஸ் பேங்க், முந்தைய  நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.731.80 கோடி நிகர லாபம் ஈட்டியது. ஆனால், இந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.965.52 கோடி நிகர லாபம் ஈட்டி யிருக்கிறது. இதற்கு யெஸ் பேங்க் தனது வாராக் கடனைக் குறைத்துக் கொண்டதே காரணம்.

வருமானம் குறைந்துபோனதால், டாடா காபி நிறுவனத்தின் நிகர லாபம் முதல் காலாண்டில் 30% குறைந்துள்ளது. அமெரிக்கச் சந்தையில் மருந்துகளின் விலை இறக்கம் கண்டதால், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 53% குறைந்துள்ளது. வாராக் கடனுக்கான ஒதுக்கீடு அதிகரித்ததால், இதன்  நிகர லாபம் 8% குறைந்துள்ளது.’’

“மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யாமல் அதிகத் தொகை கையிருப்பாக உள்ளதே?” 

“சந்தை உச்சத்தில் இருப்பதால், மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர்கள் புதிய முதலீட்டை மேற்கொள்ள சற்றுத் தயங்குகிறார்கள். அடுத்து சந்தை இறங்க வாய்ப்புண்டு என்று நினைத்து, அப்போது முதலீடு செய்யலாம் என ஃபண்ட் மேனேஜர்கள் காத்திருக்கிறார்கள். இப்போது மியூச்சுவல் ஃபண்ட் துறையின் ஈக்விட்டி போர்ட் ஃபோலியோவில் சராசரி பணக் கையிருப்பு 5.7 சதவிகிதமாக உள்ளது. பங்குகளின் விலை அதிகமாக இருப்பதால், அவசரப்பட்டு முதலீடு செய்ய வேண்டாம் என ஃபண்ட் நிறுவனங்கள் நினைக்கின்றன.’’

‘‘இந்தியப் பொருளாதாரம் அடுத்த வருடம் வேகமாக வளரும் என்கிறதே ஐ.எம்.எஃப்?’’ 

‘‘சீனாவைக் காட்டிலும் வேகமாக வளரும்  நாடாக இந்தியா மாறியிருக்கிறது என்றும், நடப்பு நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவிகிதமாக இருக்கும் என்றும், 2018-19 நிதியாண்டில் இது 7.7 சதவிகிதமாக வளர்ச்சி அடையும் என்றும் ஐ.எம்.எஃப் கூறியுள்ளது.’’

“கவனிக்க வேண்டிய பங்குகள்...?

“ஹீரோ மோட்டோகார்ப், கிரிசில், எல் அண்ட் ஃபைனான்ஸ், மஹிந்திரா ஃபைனான்ஸ்.”

IPO : செக்யூரிட்டி அண்ட் இன்டலிஜென்ஸ் சர்வீசஸ்

விலை எல்லை வரம்பு: ரூ.805 - ரூ.815

பங்கு வெளியீடு ஆரம்பம் :  ஜூலை 31

முகமதிப்பு ரூ.10.

குறைந்தபட்ச விண்ணப்பம்:  18 பங்குகள்

பங்கு விற்பனை நிறைவு : ஆகஸ்ட் 2 

ஒதுக்கீடு: சிறு முதலீட்டாளர்களுக்கு 10% பங்குகள்.

பங்குகள் பட்டியலாகும் சந்தை: பிஎஸ்இ, என்எஸ்இ 

ஷேர்லக்: கரெக்‌ஷனுக்கு காத்திருக்கும் சந்தை..?