நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

டாப் கியரில் சந்தை... எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்துவது சரியா?

டாப் கியரில் சந்தை... எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்துவது சரியா?
பிரீமியம் ஸ்டோரி
News
டாப் கியரில் சந்தை... எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்துவது சரியா?

சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

ங்குச் சந்தை ஏறக்குறைய உச்சத்தில் இருக்கும் நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் புதிய முதலீட்டை மேற்கொள்ளலாமா, எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடரலாமா, இப்போது நிறுத்திவிட்டு, சந்தை இறங்கியபின் மீண்டும் தொடரலாமா என்கிற கேள்விகளைப் பலரும் இப்போது கேட்டு வருகின்றனர்.   

டாப் கியரில் சந்தை... எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்துவது சரியா?

பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும்போதெல்லாம் முதலீட்டாளர்களிடம் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படுவது இயல்பே. இந்தக் கேள்விகளுக்கான சரியான பதிலைக் கண்டடைவதே இப்போதுள்ள சூழ்நிலையின் முக்கியமான விஷயம்.

தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) நிஃப்டி 50 குறியீடு 10000 புள்ளிகள் என்கிற புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.  சென்செக்ஸ் 32000-த்தைத் தாண்டி பயணம் செய்து கொண்டிருக்கிறது. நிஃப்டியின் சில குறியீடுகளின் மதிப்பீடுகள், பக்கம் எண் 12-ல் உள்ள அட்டவணை 1-ல் தரப்பட்டுள்ளது.

இந்த மதிப்பீடுகள் (நிஃப்டி 50) முந்தைய சந்தை உச்சத்தைவிட (பார்க்க பக்கம் எண் 12-ல் உள்ள அட்டவணை 2) அதிகம் இல்லையென்றாலும், இன்றைய நிலையில் சந்தை சற்று அதிக மதிப்பீட்டில்  உள்ளது. இங்கிருந்து நிறுவனங்களின் லாபம் அதிகரித்தால், இந்த மதிப்பீடானது நியாயமாக இருக்கலாம் அல்லது இன்னும் அதிகரிக்கலாம். இல்லை என்றால், சந்தையில் இறக்கமும் இருக்கலாம். இந்தச் சூழ்நிலையை எவ்வாறு சமாளிக்கலாம்?

டாப் கியரில் சந்தை... எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்துவது சரியா?தற்போது எஸ்.ஐ.பி மூலம் ஒவ்வொரு மாதமும் மக்கள் முதலீடு செய்யும் தொகை ரூ.4,744 கோடியாகும். மாதந்தோறும் முதலீடு செய்பவர்கள், சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதே பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களைத் தவிர்க்கத்தான். மேலும், நமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது இந்த முதலீட்டு முறை.
 
சில சமயங்களில் நாம் சந்தை உச்சத்தில் இருக்கிறது என்று நினைப்போம். ஆனால், அது மேலும் மேலும் முன்னேறிக் கொண்டே செல்லும். அதுபோல் சந்தை அதிகபட்சமாக இறங்கிவிட்டது என்று நினைப்போம். அது மேலும் மேலும் கீழ்நோக்கிகொண்டே செல்லும். ஆகமொத்தத்தில், நாம் ஏற்றத்திலும் முதலீடு செய்யமாட்டோம்; இறக்கத்திலும் முதலீடு செய்ய மாட்டோம். இந்த ஏற்ற இறக்கத்துக்குப்  பயந்து, பணத்தை எடுத்துச் சென்று 20 அல்லது 30 வருட இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் மொத்தமாகப் போட்டு, முடக்கிவிடுவோம். அல்லது ஊருக்கு வெளியே கடைக்கோடியில் ஒரு பிளாட்டை வாங்கிப் போட்டுவிடுவோம்.  

டாப் கியரில் சந்தை... எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்துவது சரியா?

கடந்த ஒரு வருடமாக முதலீடு செய்துகொண்டிருக்கும் ஒருவர், சந்தை உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று கூறி தனது எஸ்.ஐ.பி முதலீடு அனைத்தையும் ஓரிரு வாரங்களுக்குமுன் நிறுத்தினார்; சந்தை விழப்போகிறது என்று நினைத்து முதலீடு செய்திருந்த பணம் அனைத்தையும் எடுத்துவிட்டார். பணம், அவரின் தனியார் வங்கிக் கணக்குக்குச் சென்றது.

டாப் கியரில் சந்தை... எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்துவது சரியா?சில தினங்களுக்குமுன் அவரே எனக்கு போன் செய்தார். ‘‘மியூச்சுவல் ஃபண்டில் போட்ட பணம் அனைத்தையும் ரிஸ்க் இல்லாத பாலிசி ஒன்றில் போட்டுவிட்டேன். அடுத்த 10 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என எனது வங்கி ஊழியர் சொன்னார்.  மியூச்சுவல் ஃபண்டிலிருந்து எடுத்த பணம் அனைத்தையும் எடுத்து அதில் போட்டுவிட்டேன்’’ என்றார். நான் ‘‘மகிழ்ச்சி’’ என்றேன். வேறு என்ன சொல்ல? அந்த பாலிசியில் அவருக்கு ஆண்டுக்கு 5–6% கிடைத்தால் அதிசயம். மேலும், போட்ட பணத்தைப் பல ஆண்டுகளுக்குத் திரும்ப எடுக்க முடியாது!

இதுபோல், புத்திசாலித்தனம் என்று நினைத்து, நன்கு லாபம் ஈட்டிவரும் எஸ்.ஐ.பி-யைச் சந்தை உச்சத்தில் இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக நிறுத்திவிடாதீர்கள். உங்களின் முதலீட்டுக்கு ஓர் இலக்கு / காரணம் இருக்கும். அந்த இலக்கை அடைவதற்குச் சில ஆண்டுகள் முன்னதாக, உங்களின் ஃபண்டுகளைக் கவனித்து வெளியேறும் திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.

உதாரணத்துக்கு, இப்போது உங்களின் வயது 40 எனில், நீங்கள் உங்களது ஓய்வுக் காலத்துக்காக மியூச்சுவல் ஃபண்டு களில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறீர்கள் எனில், இன்னும் 18 வருடங்களில் வரப்போகும் உங்கள் இலக்குக்காக, தற்போதைய சந்தை நிலையைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. உங்களுக்கு 53/54 வயதாகும்போது, உங்களது முதலீட்டைப்  பரிசீலனை  செய்து, ரிஸ்க் குறைந்த முதலீட்டுக்கு மாற்றிக்கொண்டாலே போதும். ஆகவே, இப்போதைய நிலையில், உங்களது எஸ்.ஐ.பி முதலீட்டை எவ்விதக் கவலையுமின்றித் தொடருங்கள். வாழ்க்கையில் சில சமயங்களில் செயல்படுவதைவிட  செயல்படாமல் இருப்பதே  புத்திசாலித்தனம். அதை உங்கள் எஸ்.ஐ.பி முதலீட்டில் கடைப்பிடியுங்கள்!   

டாப் கியரில் சந்தை... எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்துவது சரியா?

எஸ்.ஐ.பி முதலீடுகூட அவ்வளவு பிரச்னையில்லை. மொத்த முதலீடு செய்பவர்களின் கவலை இன்னும் அதிகமாக இருக்கும். ஏனென்றால், சந்தை உச்சத்தில் இருக்கும்போது முதலீடு செய்தால், பிந்தைய ஆண்டுகளில் வருமானம் குறைவாக இருக்கும். ஆகவே, பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்புகிறவர்கள்  பேலன்ஸ்டு அல்லது டைனமிக் ஈக்விட்டி ஃபண்டுகளை நாடலாம். ஏனென்றால், பேலன்ஸ்டு ஃபண்டுகள் தங்களது போர்ட்ஃபோலியோவில் மூன்றில் ஒரு பகுதியை பாண்டுகளில் முதலீடு செய்கின்றன.

அதேபோல், டைனமிக் ஈக்விட்டி ஃபண்டுகள் சந்தையின் நிலையைப் பொறுத்து, தங்களது பங்கு சார்ந்த முதலீட்டின் சதவிகிதத்தை மாற்றி அமைத்துக்கொள்கின்றன. ஆகவே, இவற்றின் ரிஸ்க் அளவு, பங்கு சார்ந்த  ஃபண்டுகளைவிடக் குறைவு.
 
வங்கி எஃப்.டி-யைவிட சற்றுக் கூடுதலான வருமானம் இருந்தால் போதும் என நினைப்பவர்கள், ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டுகளை நாடலாம். இந்த வகை ஃபண்டுகளில் மூன்றில் ஒரு பகுதிதான் பங்கு சார்ந்த முதலீடாகும். பங்குச் சந்தையில் பெரிய வீழ்ச்சி இருந்தாலும், இது போன்ற ஃபண்டுகளில் வீழ்ச்சி மூன்றில் ஒரு பங்காகத்தான் இருக்கும்.

இதுபோன்ற சமயங்களில் மொத்தமாக முதலீடு செய்ய விரும்புபவர்கள், எஸ்.டி.பி (Systematic Transfer Plan) முறையைப் பயன்படுத்தலாம். ஒரே நாளில் சென்று மொத்தப் பணத்தையும் முதலீடு செய்துவிட்டு, சந்தை இறங்கினால் வருத்தப்படுவதை இந்த முறையின் மூலம் தடுக்கலாம். அல்லது சந்தை இறக்கங்களைப் பயன்படுத்தி அவ்வப்போது முதலீட்டை மேற்கொள்ளலாம்.

இதுபோல் சந்தை உச்சத்தைச் சமாளிக்க எவ்வளவோ வழிகள் உள்ளன. அந்த வழிகளைக் கடைப் பிடிப்பதை விட்டுவிட்டு, முதலீட்டை நிறுத்துவது சரியல்ல. (முதலீட்டுக்கேற்ற ஃபண்டுகளை அட்டவணையில் தந்துள்ளோம். உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப முதலீடு செய்யுங்கள்!)