நடப்பு
தொடர்கள்
Published:Updated:

தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!

தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!

தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!

வ்வளவுதான் முயன்றாலும் கோட்டைகளைத் தகர்க்க முடியாது. பல நூறு ஆண்டுகள் தாங்கி நிற்கும் கோட்டைகளைப்போல, சில நிறுவனங்கள் பல ஆண்டு காலத்தைத் தாண்டி நிற்கும். இது மாதிரியான நிறுவனங்கள் வெளியிட்டுள்ள பங்குகளைக் ‘கோட்டைப் பங்குகள்’ (Moat stocks) என்கிறார் வாரன் பஃபெட். ‘‘உங்களுடைய ஆய்வைப் பொறுத்தவரை, எந்த நிறுவனத்தின் பங்குகளைக் கோட்டைப் பங்குகள் என்பீர்கள், அந்தப் பங்குகளைக் கோட்டைப் பங்குகள் என்று சொல்ல என்ன காரணம்’’ எனப் பங்குச் சந்தை நிபுணர்கள் மூன்று பேரிடம் கேட்டோம். அவர்கள் சொன்ன கோட்டைப் பங்குகளும், அதற்கான காரணங்களும் இனி...    

தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!

ஏ.கே.பிரபாகர், தலைவர், ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் ஆராய்ச்சிப் பிரிவு  

பவர் கிரிட் (POWER GRID)

பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம், மத்திய மின் பகிர்வு அமைப்பாகும். மின் பகிர்மானம் தொடர்பான பணிகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் முக்கியப் பணியே மின் பகிர்வுதான். 2011 - 2012-ம் நிதியாண்டில் ரூ.10,000 கோடியாக இருந்த இந்த நிறுவனத்தின் வருவாய், 2015 - 2016-ம் நிதியாண்டில் ரூ.20,000 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர லாப வரம்பு 30 சதவிகிதமாக இருக்கிறது. 2016 - 2017-ம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய், இதுவரை ரூ.24,000 கோடியைத் தாண்டியுள்ளது. இது, இந்த நிறுவனம் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வருவதை காட்டுகிறது.

இன்றைய நிலையில், 200%  வளர்ச்சியடையக் கூடிய நிறுவனங்கள் மிகவும் குறைவு. சந்தையில் இந்த நிறுவனத்தைப்போல, அதிக வளர்ச்சி அடையக்கூடிய நிறுவனம் வேறு எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.

அதேமாதிரி, மற்ற நிறுவனங்களைவிட 30% குறைந்த விலையில் டெலிகாம் நிறுவனத்துக்கு கேபிள்களை வழங்குவதாக இந்த நிறுவனத்தின் நிர்வாகம் சொல்லியிருக்கிறது. பவர் கிரிட் நிறுவனம், மின்சாரத்தை மட்டும் பகிர்வதில்லை, டெலிகாம் நிறுவனங்களுக்கான டவர்களையும் அமைத்துத் தருகிறது. 

பவர் கிரிட் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகளின் அனுமதி வேண்டும். இதனால் இந்தத் தொழிலில் அவ்வளவு எளிதாக யாரும் நுழைந்து விட முடியாது.

இதனால், சந்தையில் இந்த நிறுவனம் ஏகபோக (Monopoly) நிறுவனமாக  செயல்பட்டு வருகிறது. மின்சாரம் விநியோகம் அதிகமாகும்போது இந்த நிறுவனத்தின் வணிகமும் அதிகரிக்கும்.  

தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!

ரிலையன்ஸ் (Reliance)

இந்த நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வணிகம் நிலையானது. உலகிலேயே பெரிய சுத்திகரிப்பு நிலையம் ரிலையன்ஸ் நிறுவனத்திடம்தான் உள்ளது.

இந்த நிறுவனத்தின் பெட்ரோகெமிக்கல் வணிகமும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டில் 21  இடங்களில் கூட்டு முயற்சியுடன் எண்ணெய் கிணறுகள் வாங்கி வைத்திருந்தது. இதற்குமுன் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 150, 160 டாலர் என இருந்தது. இன்று 50 டாலருக்கும் கீழ் வந்துவிட்டது. இதனால் எண்ணெய் கிணறு வணிகத்திலிருந்து பல இடங்களில் வெளியேறி விட்டது இந்த நிறுவனம். இன்னும் இரண்டு இடங்களில் மட்டுமே வெளியேறாமல் இருக்கிறது.

இப்போது டெலிகாம் துறையிலும் நுழைந்து கலக்கி வருகிறது இந்த நிறுவனம். புதியதாக ரூ.1,500-க்கு 4ஜி மொபைல் போனை அறிமுகப்படுத்தப் போகிறது. இந்த போன் சுமார் 11 கோடி மக்களைச் சென்று, அவர்கள்  சந்தாதாரர்களாக மாறினால், ரிலையன்ஸின் வணிகம் மேலும் வலுவடையும். அதன்பின் இந்த  நிறுவனத்தின் பங்கு, தற்போதைய விலையில் இருந்து இரண்டு மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது. ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனமும் மளமளவென வளர்ச்சியடைந்து லாபத்தை ஈட்ட ஆரம்பித்துள்ளது.

மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra)

மஹிந்திரா ஹோல்டிங், டெக் மஹிந்திரா, மஹிந்திரா ஹாலிடே ரிசார்ட், மஹிந்திரா சிஐஇ, சுவாராஜ் இன்ஜின், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்ஸ் உள்பட  பல நிறுவனங்கள் மஹிந்திரா & மஹிந்திரா-வின் கீழ் வருகிறது. 
இதுமட்டுமின்றி, கொரியாவில் சங்யாங் மோட்டார் நிறுவனத்தை புதியதாக வாங்கியிருக்கிறது. சங்யாங் நிறுவனம், முன்பு நஷ்டத்தைச் சந்தித்து வந்தது. மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், இதை வாங்கி இப்போது லாபத்துக்கு மீட்டுக்கொண்டு வந்துள்ளது.

தவிர, அமெரிக்காவில் சில இடங்களில் ஆலைகளையும் அமைத்து  வணிகத்தை விரிவுபடுத்தி வருகிறது.  நீதிமன்ற உத்தரவால் மஹிந்திரா டீசல் வாகனங்கள் விற்பனைக் கொஞ்சம் குறைந்திருந்தது. ஆனால், இப்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.  இதில் வெற்றி அடையும்பட்சத்தில் இந்த நிறுவனத்தின் நிலைமை மேலும் பல மடங்கு உயரும். இந்த ஆண்டு பருவமழை நன்றாக இருக்கும் என்பதால் டிராக்டர் விற்பனை அதிகரிக்கும்.’’
 
ஜி.சொக்கலிங்கம், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், ஈக்னாமிக்ஸ் ரிசர்ச் & அட்வைஸரி (Equinomics Research & Advisory Pvt Ltd)

ஹெச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank)

‘‘கடந்த பல வருடங்களாக இந்த வங்கி தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வருகிறது. இந்தியாவில் மற்ற வங்கிகளைவிட இந்த வங்கியின் செயல்பாட்டு வணிகம் சிறப்பாக இருக்கிறது. இ்ந்தத் துறையிலேயே, இந்த வங்கியின் சொத்துகளின் தரம் மிகவும் நன்றாக இருக்கிறது.

நம் நாட்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுடன், கிரெடிட் கார்டு துறையில் முதன்மையான நிறுவனமாகத் திகழ்கிறது. வங்கித் துறை மட்டுமின்றி,  ஒட்டுமொத்த நிறுவனங்களில் இந்த வங்கி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

எம்.ஆர்.எஃப் (MRF)

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிறுவனம் நிலையாக வளர்ச்சி அடைந்து வருகிறது. டயர் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாகச் செயல்படுகிறது. இந்த நிறுவனத்துக்கான வருவாயில் நான்கில் மூன்று பங்கு, ரீப்ளேஸ்மென்ட் மார்க்கெட் மூலமே வருகிறது. ஏனெனில் வாகனங்களின் உற்பத்தி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை டயர்களை மாற்ற வேண்டியதாக உள்ளது. இதனால் இந்த நிறுவனம் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வருகிறது.

சந்தையில் இருக்கும் டயர் நிறுவனங்களில் இந்த நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட் வலிமையாக இருக்கிறது. இப்போது புதியதாக 4,000 கோடி ரூபாய்க்கு வணிகத்தை விரிவுபடுத்துகிறது.  இதனால் இந்த நிறுவனம் மேலும் வளர்ச்சியடைய அதிக வாய்ப்புண்டு.     

தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!

தற்போதைய சூழ்நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் ரப்பர் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை. அமெரிக்கா தொடர்ச்சியாகக் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதால், விலை சரிவடைய அதிக வாய்ப்பிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை சரிவடையும் போது, ரப்பர் விலையும் குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த நிறுவனத்தின் வருவாயும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பால்மர் லாறி  (Balmer Lawrie)

இந்த 150 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இந்த நிறுவனம் டிவிடெண்ட் வழங்கியுள்ளது. பல ஆண்டுகளில் அதிக டிவிடெண்ட் வழங்கி உள்ளது.  

இந்த நிறுவனத்தின் 50% லாபம் லாஜிஸ்டிக் மற்றும் உள்கட்டமைப்பு மூலமே வருகிறது. இந்த நிறுவனத்துக்கு உள்ள  சொத்துபோல், வேறெந்த  தனியார் நிறுவனத்திடமும் இல்லை. இப்போது இந்த நிறுவனமும் அதிரடியாகத் தனது வணிகத்தை விரிவுபடுத்தி வருகிறது. டிராவல் பிசினஸிலும் இந்த நிறுவனம் நல்ல டேர்ன் ஓவரைக் காட்டி வருகிறது. ஜி.எஸ்.டி அமலானதால் லாஜிஸ்டிக் வணிகத்தில் அதிக வாய்ப்பு இருக்கும். எனவே, இந்த நிறுவனம் மேலும் வளர்ச்சியடையும் என  எதிர்பார்க்கலாம்.’’ 

ரெஜி தாமஸ், துணைத் தலைவர், கார்வி.

வக்ராங்கி லிமிடெட்  (Vakrangee Limited)

இந்த நிறுவனம், ஒரு ஐ.டி சேவை மேலாண்மை நிறுவனம். இந்த நிறுவனம் நாடு முழுவதிலும் உள்ள வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் இன்ஷூரன்ஸ் (BFSI), நுகர்வோருக்கான வணிகம் (B2C), அரசிடம் சேவை பெறும் பொதுமக்கள் (G2C), இ-கவர்னன்ஸ் எனப் பல சேவைகளை வழங்கி வருகிறது.

நிதியுதவி, டிஜிட்டல் இந்தியா, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, அரசு திட்டங்கள் மற்றும் அடிப்படைப் பொருள்கள் மற்றும் சேவைகள் எனப் பலதரப்பட்ட சேவைகளை இந்த நிறுவனம்  செய்து வருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய நெட்வொர்க்கை உருவாக்கும் நோக்கில் இந்த நிறுவனம் தற்போது செயல்பட்டு வருகிறது. மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சேவை என மத்திய அரசின் பல இ-கவர்னன்ஸ் திட்டங்களையும் செய்கிறது.

2013- ஐ விட, 2017-ல் இந்த நிறுவனத்தின் வருவாய் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ரூ.83-க்கு வர்த்தகமாகி வந்த இந்த நிறுவனத்தின் பங்கு, இப்போது ரூ.445-ல் இருக்கிறது. இன்டர்நெட் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் வளர்ச்சியால் இந்த நிறுவனத்தின் பங்கு மிக வலுவானதாக இருப்பதாகவே தோன்றுகிறது.

பயோகான் (BIOCON)

பயோகான், ஆசியாவின் முதன்மையான உயிரி மருந்து நிறுவனம் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் முழுமையாக ஒருங்கிணைக்கப் பட்ட உயிரி மருந்தியல் நிறுவனம். இந்த நிறுவனம், நீரிழிவு நோயாளிகளுக்கு உயிர் வாழும் உயிரி மருந்துகள், புற்று நோய்களுக்கான மருந்துகளை உற்பத்தி செய்துவருகிறது. நீரிழிவு, புற்றுநோய் மற்றும் ஆட்டோஇம்யூனிடி என மனித ஆரோக்கியம் தொடர்பான மூன்று மிக முக்கியமான பிரச்னைகள்மீது அதிகமாக கவனம் செலுத்தி வருகிறது.
 
உயர்தர ஆராய்ச்சிக்கான பயோகானின் அர்ப்பணிப்புக் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், பிரான்ஸ், பிரேசில், மெக்ஸிகோ, துருக்கி மற்றும் ஜி.சி.சி உள்பட 25-க்கும் மேற்பட்ட சர்வதேச ஒழுங்குமுறை முகமைகளிலிருந்து  ஒப்புதல்களைப் பெற்றுள்ளது. 2013-ல் ரூ.1,938 கோடியாக இருந்த வருவாய், 2017-ல் ரூ.2,618-ஆக அதிகரித்துள்ளது. 2008-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் முதலீட் டாளர்களுக்கு டிவிடெண்ட் தொகையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
 
வபாக் (WABAG)

இது,  மிகப் பெரிய நீர் தொழில்நுட்ப நிறுவனம்.இந்த நிறுவனம் உலக அளவில் 25 நாடுகளில் 1,200 தொழிற்சாலைகளை நிறுவியுள்ளது. இது 160 மில்லியன் மக்களுக்கும், 440 நிறுவனங்களுக்கும் நீர் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குகிறது. உலகளாவிய மதிப்பீடு களின்படி, சராசரியாக தினசரி 10 பில்லியன் டன் தண்ணீர் நுகரப்படுகிறது. ஆனால், தேவை மற்றும் விநியோகத்துக்கும்  இடையில் பற்றாக்குறைப் பெரிதாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீர் பற்றாக்குறை இன்று ஒரு பெரிய பிரச்னை. புவி வெப்பமடைதல் சிக்கலைக் கூட்டுகிறது.இந்தச் சிக்கலுக்கான தீர்வை இந்த நிறுவனம் தருகிறது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஆண்டுக்கு ரூ.80 கோடி என்றளவில் நிலையாக
இருக்கிறது. 2011-ம் ஆண்டி லிருந்து, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிவிடெண்டுகளை அறிவித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் வருவாய் 170% உயர்ந்து, 2017-ல் ரூ.1,800 கோடியாக அதிகரித்துள்ளது.

எச்சரிக்கை: இந்தப் பங்குகளில் முதலீடு செய்யும் முன், முதலீட்டாளர்கள் மற்றும் ஆலோசகருடன் கலந்து பேசி, சொந்தமாக முடிவெடுக்கவும்.

- சோ.கார்த்திகேயன்