நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வாரத்தில் நடந்த முக்கிய நிகழ்வு, ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்டமும் வட்டி விகிதக் குறைப்பும்தான். இது குறித்த எதிர்பார்ப்புகள் ஏற்கெனவே சந்தையின் நகர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ரெப்போ விகிதத்தை 0.25 சதவிகிதத்துக்குப் பதிலாக 0.50% குறைத்திருந்தால் சந்தை மேலும் ஏற்றத்தை நோக்கி நகர்ந்திருக்கும். இந்த முடிவு, இந்த நிகழ்வுக்காகக் காத்திருந்தவர் களின் மனநிலையைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை என்றாலும், ஓரளவுக்கு பங்குகளை விற்று வெளியேறவே செய்தார்கள். 

ஆனால், பங்குகள் விற்பனை பெரிய அளவில் இல்லாததால் இறக்கமானது கட்டுக்குள் இருந்தது. வெள்ளிக்கிழமை மாலை நேர வர்த்தகத்தின் போது, சந்தை மீண்டும் ஏற்றத்தின் போக்கை எட்டிப் பிடித்தது. பேங்க் நிஃப்டியும் ஏற்றம் கண்டது. இது, கடந்த வாரத்தில் எடுக்கப்பட்ட ஷார்ட் பொசிஷன்கள் அனைத்துமே வாரத்தின் இறுதி நாளில் மீண்டும் லாங் பொசிஷன்களாக மாறி, சமன் செய்யப்பட்டு இருப்பதையே காட்டுகிறது. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!



இப்படிக் கடந்த வாரத்தில் நடந்த இரண்டு வழிநகர்வுகளும் நிஃப்டியின் கேண்டில் பேட்டர்னை, பேங்க் நிஃப்டியின் கேண்டில் பேட்டர்னிலிருந்து வித்தியாசப்படுத்தியிருக்கிறது. தற்போதைய பேட்டர்ன், அதிக நிச்சயமற்றத் தன்மையைக் கொண்டுள்ளதோடு, டோஜி பேட்டர்னையும் உருவாக்கியுள்ளது. ஆனால், முந்தைய பேட்டர்ன், கணிசமான அளவு கொண்ட வீக்லி கேண்டிலாக இருந்தது.

ஆனாலும், பேங்க் நிஃப்டி இந்த வாரம் நிறைவு செய்த நிலையிலிருந்து தொடர்ந்து ஏற்றம் அடையுமானால், சந்தையில் காளையின் போக்கு வரும் வாரங்களிலும் தொடரும் என்று உறுதியாக நம்பலாம்.

மேலும், பெரும்பாலான முன்னணி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளிவந்து விட்டதுடன், அவை சந்தையின் போக்கில் கணிசமான பாசிட்டிவ் நகர்வுகளை ஏற்படுத்தி இருக்கின்றன. ஏனெனில் மொத்தத்தில் 60 சதவிகித நிறுவனங்களின் முடிவுகள் எதிர்பார்த்தபடியோ அல்லது எதிர்பார்த்ததைவிட நன்றாகவோ வந்திருக்கின்றன. இவை சந்தையின் சென்டிமென்டை பாசிட்டிவாக தக்கவைத்துக் கொண்டது. மேலும், சர்வதேச சந்தைகளும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாலும் சந்தையில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் சந்தையின் பாசிட்டிவ் போக்கில் இருக்கும் உற்சாகம், இப்போதைக்குக் குறைவதற்கு வாய்ப்பில்லை. 

எனவே, ஒருவர் காளையின் போக்கில் இருந்து தன் முதலீட்டு முடிவுகளை எடுக்கலாம். வரும் வாரத்தில் இன்ட்ரா வீக் இறக்கங்கள் ஏதேனும் ஏற்பட்டால், அதனை வாங்குவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்ளலாம். ஏதேனும் இறக்கங்கள் ஏற்பட்டாலும்கூட, நிஃப்டி 9000 என்ற நிலையை உடைக்க வாய்ப்பு இல்லை.

கல்யாணி ஸ்டீல்ஸ் (KSL)

தற்போதைய விலை: ரூ.447.05

வாங்கலாம்

பாரத் ஃபோர்ஜ் குழும நிறுவனமான கல்யாணி ஸ்டீல்ஸ், உருக்கு வணிகத்தில் முன்னணி நிறுவனமாக உள்ளது. மேலும், இது தற்போது ராணுவத் தளவாடங்கள்  துறையிலும் களமிறங்கி உள்ளது. கடந்த வாரத்தில் இந்த நிறுவனமானது இஸ்ரேலுடனான ஒருங்கிணைந்த டிஃபென்ஸ் புராஜக்ட்டுக்கான ஆர்டர்களைப் பெற்றிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இந்தச் செய்தி, இந்தப் பங்கின் விலையில்  புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தப் பங்கின் சார்ட்டிலும் ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்த நகர்வுகள், தற்போது மீண்டும் ஏற்றத்தின் போக்கில் நகரத் தொடங்கியிருக்கின்றன. எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கினை வாங்கலாம். மூன்று மாதங்களில் ரூ.530 என்ற நிலைக்கு உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ. 425 வைத்துக் கொள்ளவும்.

முத்தூட் ஃபைனான்ஸ் (MUTHOOTFIN)


தற்போதைய விலை: ரூ.461.75

வாங்கலாம்

தற்போதைய சந்தையின் போக்கு நிதி சார்ந்த நிறுவனப் பங்குகளுக்குச் சற்று சாதகமாக இருக்கிறது. மேலும், இந்தத் துறையின் பெரும்பாலான பங்குகள் நன்றாக ஏற்றம் கண்டுள்ளன. அவற்றில் கேரளாவைச் சேர்ந்த வங்கி அல்லாத நிதி நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ், அதன் கடைசி உச்ச நிலையில் ஏற்ற இறக்கமில்லாத நிலையில் நகர்ந்துகொண்டு இருக்கிறது.

தற்போது ஏற்ற இறக்கமில்லாத நிலை முடிவுக்கு வந்து, இந்தப் பங்கின் விலை ஏற்றமடைய தயாராக இருக்கிறது. இதன் சப்போர்ட் நிலை வலுவாக இருப்பதால், கரடியின் போக்கு இந்தப் பங்கின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். வரும் வாரங்களில் ரூ.500 வரை செல்ல வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.445 வைத்துக்கொள்ளவும்.  

அர்ரோ க்ரீன்டெக் (ARROWGREEN)


தற்போதைய விலை: ரூ.461.75

வாங்கலாம்

சிறப்பு வகை ரசாயனம் தயாரிப்பு நிறுவனம் இது. சில தனித்துவமான பிரிவுகளில் இந்த நிறுவனம் பிசினஸ் செய்து வருகிறது. இதன் தயாரிப்புகளின் மூலம் நல்ல லாபமும் பார்க்கிறது. இந்த நிறுவனப் பங்கின் விலை சமீப மாதங்களாக நல்ல போக்கில் உள்ளது. தற்போது, சமீபத்தில் அடைந்த உச்ச நிலையில் ஏற்ற இறக்கமில்லாத நிலையில் நகர்ந்துகொண்டு இருக்கிறது. இந்த நிலையில், பிரேக் அவுட்டானால் நன்றாக ஏற்றம் அடைய வாய்ப்புள்ளது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.625 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.535 வைத்துக் கொள்ளவும். 

தொகுப்பு: ஜெ.சரவணன்