
பங்குச் சந்தை முதலீட்டில் லாபம் பார்க்கும் சூட்சுமம்!
சர்க்கரை விலை உயர்ந்தால், அதன் பயன்பாட்டை வீட்டில் குறைத்து, பர்ஸின் கனம் குறைவதைக் காப்பாற்ற வேண்டும். அந்த சமயம், சர்க்கரை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தால், அது லாபகரமாக அமையும். காரணம், சர்க்கரை விலை உயர்வால் சர்க்கரை ஆலை நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும். அது பங்கின் விலையை அதிகரிக்கும்.

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தைக் குறைத்தது. இது நல்ல விஷயம்தான். 2017 ஆகஸ்ட் 2-ம் தேதி, ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை 0.25% குறைத்தது. ஆனால், பிஎஸ்இ-ன் சென்செக்ஸ் 98 புள்ளிகள் குறைந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதியும் சந்தை இறக்கத்தில் வர்த்தகமானது. ஒரு நல்ல விஷயத்துக்கு ஏன் சந்தை இறக்கம் கண்டது.
ஆர்பிஐ ரெப்போ வட்டியைக் குறைத்ததால், வங்கிகள் வீட்டுக் கடன், கார் கடன் போன்றவற்றுக் கான வட்டியைக் குறைக்க வேண்டி வரும். இதனால் அவற்றின் லாபம் குறையும். இதைத் தொடர்ந்து அவற்றின் பங்கு விலை குறையும். இதனால்தான் வங்கிப் பங்குகளின் விலை குறைந்து சந்தை, சென்செக்ஸ் புள்ளிகள் இறக்கம் கண்டன.
அண்மையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), அதன் சேமிப்புக் கணக்கில் ரூ.1 கோடிக்குக் கீழ் வைத்திருப்பவர்களுக்கான ஆண்டு வட்டியை 4 சதவிகிதத்திலிருந்து 3.5 சதவிகிதமாகக் குறைத்தது. எஸ்.பி.ஐ வங்கியில் 90% சேமிப்புக் கணக்குகளில் ரூ.1 கோடிக்குக் கீழ் இருப்பு இருப்பதால், அவர்களுக்கு 0.5% வட்டி குறைவாகக் கிடைக்கும். இது வாடிக்கையாளர் களுக்குப் பாதகமான செய்தி. ஆனால், வங்கிக்குச் சாதகமான செய்தி. இந்த 0.5% வட்டி குறைப்பு மூலம் எஸ்.பி.ஐ.க்கு ஆண்டுக்கு சுமார் ரூ.4,200 கோடி மிச்சமாகும். இதனால் அந்த வங்கியின் பங்கு விலை ஒரே நாளில் 4.5% அதிகரித்தது.
இதுபோல, தினம் தினம் நடக்கும் விஷயங்கள் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொண்டால், பங்குச் சந்தையில் லாபம் பார்ப்பது பெரிய விஷயம் இல்லை.
- சேனா சரவணன்