நடப்பு
Published:Updated:

ஷேர்லக்: நான்கு ஆண்டுகளில் சந்தை இருமடங்கு வளர்ச்சி!

ஷேர்லக்: நான்கு ஆண்டுகளில் சந்தை இருமடங்கு வளர்ச்சி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: நான்கு ஆண்டுகளில் சந்தை இருமடங்கு வளர்ச்சி!

ஓவியம்: அரஸ்

ஷேர்லக் வந்ததும் வராததுமாக, “ஆதார் எண்ணை இணைச்சாச்சா?” என்றோம். “எதனுடன்...” என்று எதிர்கேள்வி அவர் கேட்கும் போதே, ஆதார் எண் விஷயத்தில் அவரும்  குழம்பிப்போயிருக்கிறார் என்று புலப்பட்டது. “வங்கிக் கணக்குடன்தான்...” என்றோம். ‘‘அதுவா, எப்பவோ முடிச்சுட்டேனே!’’ என்றபடி நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாரானார்.    

ஷேர்லக்: நான்கு ஆண்டுகளில் சந்தை இருமடங்கு வளர்ச்சி!

“ஆதார் எண்ணைப் பங்கு மற்றும் ஃபண்ட் முதலீட்டுக் கணக்குடன் இணைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறதாமே’’ என்று கேட்டோம். 

“ஆதார் எண்ணைப் பங்குச் சந்தை முதலீட்டுடன் இணைக்க வேண்டிய கட்டாயம் விரைவில் வரலாம். பங்குகளை வாங்க வேண்டும் என்றாலும், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலும் ஆதார் எண் கட்டாயம் ஆகலாம். வரி ஏய்ப்பையும் கறுப்புப் பண உருவாக்கத்தையும் கட்டுப்படுத்த பான் எண் மட்டுமே போதாது என்று நிபுணர்கள் சொன்னபிறகு மத்திய அரசு இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துவருவதாகச் சொல்லப்படுகிறது. காஸ் கனெக்‌ஷன், ரேஷன் கார்டு, வங்கி என பலவற்றுடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டோம். இனி பங்கு மற்றும் ஃபண்டு முதலீடு செய்யும்போதும் சொல்லிவிட வேண்டியதுதானே!’’ என்றபடி அடுத்த கேள்விக்குப் பதில் சொல்லத் தயாரானார். 

“காலாண்டு முடிவுகள் எப்படி வந்துகொண்டிருக்கிறது?” என அடுத்த கேள்வியைக் கேட்டோம்.


“வாராக்கடனுக்கான ஒதுக்கீடு அதிகரித்ததால்,  யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் முதல் காலாண்டில் 30% குறைந்துள்ளது. வாராக் கடன் வசூல் மேம்பட்டுள்ளதால், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிகர இழப்பு குறைந்து வருகிறது. 2016-17-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த வங்கியின் நிகர இழப்பு ரூ.1,450 கோடியாக இருந்தது. இது நடப்பு 2017-18-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.499 கோடியாகக் குறைந்துள்ளது. நிகர வட்டி வரம்பு அதிகரித்ததால் சிட்டி யூனியன் பேங்கின் நிகர லாபம் 14% அதிகரித்து, ரூ.140 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட்டின் நிகர லாபம் 17.58% அதிகரித்துள்ளது.  ஜிண்டால் ஸ்டீலின் நிகர லாபம் 50% உயர்ந் துள்ளது. 2016-17-ம் நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.49.43 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்த இந்த நிறுவனம், இந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.74.38 கோடி நிகர லாபம் ஈட்டியிருக்கிறது. இந்த வளர்ச்சிக்குக் காரணம்,  இதன் வருவாய் 47% வளர்ச்சி அடைந்ததே. இதன் தயாரிப்புகளில் வித்தியாசத்தையும், விற்பனையில் டைவர்சிஃபிகேஷனையும் செயல்படுத்தியதன் மூலம் இதன் வருவாய் வளர்ச்சிகண்டிருக்கிறது.

டாடா ஸ்டீல் நிறுவனம் இந்த ஜூன் காலாண்டில் ரூ.921 கோடி நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. ஆனால், முந்தைய நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.3,183 கோடி நிகர நஷ்டம் அடைந்திருந்தது. இதன் விற்பனை 19% உயர்ந்து, ரூ.30,803 கோடி வருவாய் வந்ததன்மூலம் இந்த நிகர லாப வளர்ச்சியை டாடா ஸ்டீல் அடைந்து உள்ளது. மேலும், சுரங்கம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் டாடா ஸ்டீல் உள்பட சில ஸ்டீல் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்திருந்தது. அந்த வழக்கு இந்தக் காலாண்டில் முடிவுக்கு வந்ததை அடுத்து ரூ.617 கோடி நிறுவனத்துக்கு லாபமாக மாறியதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.”

“இந்தியப் பங்குச் சந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று சொல்லப்படுகிற நிலையில், வெளிநாட்டு முதலீடுகள் குறைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே?”

“இந்தியச் சந்தைகள் மீதான சர்வதேச முதலீட்டாளர்களின் பார்வை பாசிட்டிவாக இருப்பது உண்மைதான். ஆனால், ஜூன் மாதத்தைத் தொடர்ந்து கடந்த ஜூலையிலும் வெளிநாட்டு முதலீடுகள் குறைந்திருக்கின்றன. ஜூன் மாதத்தில் ரூ.3,940 கோடி முதலீடு செய்யப் பட்டிருந்தநிலையில், ஜூலையில்  முதலீடுகள் குறைந்து, ரூ.2,461 கோடியாக மட்டுமே பதிவாகி இருக்கிறது. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் இதுவரையில் வெளிநாட்டு முதலீடுகள் ரூ.1,349 கோடி வெளியேறி இருக்கிறது. வெளிநாட்டு முதலீடுகள் குறையக் காரணம், பங்குகளின் மதிப்புகள் அதிக பிரீமியத்தில் வர்த்தகமாவதும்,  நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் அதன் பங்கு களில் தாக்கத்தை ஏற்படுத்துவது குறைந்ததும்தான்.’’
 
“இரண்டு பெரிய இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்    ஐ.பி.ஓ வர இருக்கிறதே?’’

“அரசுக்குச் சொந்தமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய பொதுக் காப்பீட்டு நிறுவனமான இது, 14.56 சத விகிதப் பங்குகளை விற்பனைக்கு வெளியிட இருக்கிறது. இதில் அரசு வசம் உள்ள 96 மில்லியன் பங்குகளும், இந்த நிறுவனத்தின் வசமுள்ள 24 மில்லியன் பங்குகளும் அடங்கும். இந்த வெளியீட்டின் மூலம் ரூ.7 ஆயிரம் கோடி வரை  திரட்டவிருப்பதாகத் தெரிகிறது. ஒட்டுமொத்த வெளியீட்டின் மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அரசு நிறுவனமான ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஐ.பி.ஓ வெளியிட முடிவு செய்துள்ளது. முகமதிப்பு ரூ.5 கொண்ட மொத்தம் 124.7 மில்லியன் பங்குகளைப் பொதுப் பங்கு மூலம் வெளியிட்டு சுமார் ரூ.6,000 கோடி நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது. இது இந்த நிறுவனத்தின் 14.22 சதவிகிதப் பங்குகளாகும்.  2016-17-ம் நிதியாண்டில் ரூ.3,140.6 கோடி, வரிக்குப் பிந்தைய நிகர லாபத்தை இந்த நிறுவனம் பதிவு செய்துள்ளது. இது, அதற்கு முந்தைய நிதியாண்டைக்காட்டிலும் 11.2% அதிகம்.”

“இன்னும் நான்கு வருடங்களில் நிஃப்டி புள்ளிகள் இரு மடங்காகும் என்கிறாரே மார்க் மொபியஸ். இது சாத்தியமா?”

“ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் இன்வெஸ்மென்ட்ஸ் நிறுவனத்தின் ஃபண்ட் மேனேஜரான மார்க் மொபியஸ் இன்னும் 3-4 வருடங்களில் நிஃப்டி இரண்டு மடங்காக வளர்ச்சியடையும் என்று சொல்லியிருக்கிறார். இப்படி அவர் தெரிவிக்கக் காரணம், இந்திய ஜி.டி.பி வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்பு மற்றும் இந்தியாவில் இருக்கும் வட்டி விகிதம்தான்.  இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கான சாதகமான காரணிகள் நன்றாக உள்ளதாகவும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் சந்தைக்குச் சாதகமான வட்டி விகிதம் நிர்ண யிக்கப்படுவதாகவும் அவர் சொல்லியிருக்கிறார். அதனால்தான் அவரது நிறுவனம் சந்தை உச்சத் தில் இருக்கும் நிலையிலும்,  இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடுகளைக் குறைக்கவே இல்லை. குறிப்பாக, ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்கு களில் அதிக கவனம் செலுத்திவருகிறது’’ என்றார்.

‘‘டயர் கம்பெனிகளின் பங்குகள் விலை உயர்ந்திருக் கின்றனவே என்ன காரணம்?’’


‘‘சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ட்ரக் மற்றும் பேருந்து டயர்கள்மீது சரக்கு குவிப்புக்கு எதிரான வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, டயர் நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. அப்போலோ டயர், சியட், எம்ஆர்எஃப், பால கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜேகே டயர் உள்ளிட்ட டயர் நிறுவனப் பங்குகள் திடீரென்று விலை உயர்ந்து வர்த்தகமாயின. இதில் அப்போலோ டயர் 9 சதவிகிதமும் பிற பங்குகள் 2 முதல்
4% வரையிலும் விலை உயர்ந்து வர்த்தகமாயின. இந்த வரி விதிப்பினால் சீனாவில் இருந்து டயர்கள் இறக்குமதியாவது குறையும். இதனால் டயர் நிறுவனங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. டயர் நிறுவனப் பங்குகளும் சிறப்பாகச் செயல்படும் என்று நம்பலாம்’’ என்றவர், வெளியே இடிச்சத்தத்தைக் கேட்டுக் கிளம்பத் தயாரானார். 
 
‘‘கவனிக்க வேண்டிய பங்குகள் ஏதாவது..?” என்று இழுத்தோம்.

“நீண்ட கால முதலீட்டுக்கு... காவேரி சீட்ஸ், ஃபோர்டீஸ், அர்விந்த், நாகார்ஜூனா கன்ஸ்ட்ரக்‌ஷன்.”